ஆரோக்கியத்திற்கான 3 டிப்ஸ்
உங்கள் ஆரோக்கியத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள 3 அடிப்படைகளை நீங்கள் கவனிக்க வேண்டும் - உணவு, செயல், ஓய்வு
#1 உணவுப் பழக்கம்
சத்குரு: உணவைப் பொருத்தவரை, நீங்கள் உண்ணும் உணவு எவ்வளவு சீக்கிரமாக செரித்து உங்கள் உடலுடைய ஒரு பகுதியாக மாறுகிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் உண்ட உணவு செரிமானமாக 3 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்கிறது என்றால், அது தவிர்க்க வேண்டிய உணவு அல்லது குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு. ஒரு உணவு உங்கள் வயிற்றிலிருந்து 3 மணி நேரத்திற்குக் குறைந்த நேரத்திலேயே வெளியேறுகிறது என்றால், அது ருசியான உணவாக இல்லாவிட்டாலும் உங்கள் ஜீரண மண்டலம் கையாளக்கூடிய உணவாக இருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே எதுவும் சாப்பிடாமல் ஐந்து முதல் ஆறு மணி நேர இடைவெளி கொடுத்தால், உங்கள் உடலில் உள்ள செல்களின் அளவில் சுத்திகரிப்பு நடக்கிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு செல்களின் அளவில் நடக்கும் இந்த சுத்திகரிப்பு மிகவும் அவசியமானது. உங்களுக்கு 30 வயதைத் தாண்டிவிட்டது என்றால், ஒரு நாளுக்கு இரண்டு வேளை உணவே போதுமானதாக இருக்கும் - காலையில் ஒருவேளை உணவு, மாலையில் ஒருவேளை உணவு.
Subscribe
மாலை உணவிற்குப் பின், தூங்குவதற்கு முன் 3 மணி நேர இடைவெளி இருக்கவேண்டும். இந்த நேரத்தில் மிதமான உடற்பயிற்சி தரக்கூடிய walking போன்ற ஏதோ ஒன்றைச் செய்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் பெரும்பகுதியை இதன்மூலம் கவனித்துக்கொள்வீர்கள். வயிற்றில் உணவு இருக்கும்போதே தூங்கச் சென்றால் இது உடலில் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. உடலியக்கத்தைப் பொறுத்தவரை இந்த மந்தத்தன்மை மரணத்தை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்துவதற்கு சமம். மரணம் என்பது மந்தத்தன்மையின் உச்சம்.
இதில் உள்ள இன்னொரு விஷயம், வயிறு நிறைய உணவு இருக்கும்போது படுத்துக்கொண்டால், இது வயிற்றுப்பகுதியில் உள்ள பிற உறுப்புக்களின் மீது அழுத்துகிறது. இதுவும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இதனால் உறங்கச்செல்வதற்கு முன்பு உணவு வயிற்றுக்கு வெளியே சென்றிருக்கவேண்டும். நீங்கள் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று புரண்டு புரண்டு பட்குக்கும் போது அதைச் சுற்றிலும் உள்ள பிற உறுப்புக்களின் மீது அது எந்த நிலையிலும் அழுத்தக்கூடாது.
#2 உங்கள் உடலை உபயோகியுங்கள்
செயலைப் பொறுத்தவரை, நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நம் உடலால் முன்னோக்கி வளைய முடியும், பின்னோக்கி வளைய முடியும், இறுபுறமும் முறுக்கிக்கொள்ள முடியும். இந்த அளவு உடலை ஏதோவொரு விதத்தில் உபயோகிக்கவேண்டும். பாரம்பரிய ஹடயோகா இதைச் செய்வதற்கு சிறந்த வழி, அறிவியல்பூர்வமான வழியும் கூட. பாரம்பரிய ஹடயோகா இன்னும் உங்கள் வாழ்க்கை முறையின் அங்கமாகவில்லை என்றால், தினமும் உடலை முன்நோக்கியும் பின்நோக்கியும் வளைத்து, இறுபுறமும் முறுக்கி, குந்தி உட்கார்ந்து எழுந்து, முதுகுத்தண்டை நீட்டும் விதமான ஏதோவொரு செயல்முறை செய்திட வேண்டும். உங்கள் உடலமைப்பு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், அதிலும் உங்கள் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இது அனைவருக்கும் தினசரியளவில் நடந்திட வேண்டும். இல்லாவிட்டால் வயதாகும்போது அதில் பிரச்சனைகள் வந்துவிடும்.
#3 தேவையான அளவு ஒய்வு
ஒருவர் எந்த அளவிற்கு உணவு உட்கொள்கிறார் என்பதைப் பொருத்து, அந்த அளவு அவருக்கு ஓய்வின் தேவை மாறுபடும். வெவ்வேறு உணவு உண்டு, உங்களை நீங்களே பரிசோதித்து, எந்த உணவு உங்களை மந்த நிலைக்கு மாற்றுகிறது, எந்த உணவு சுறுசுறுப்பாகவும் இலேசாகவும் வைத்திருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் உண்ணும் உணவில் 40% சாப்பாடு புதிய காய்கறி- பழ வகைகளாக இருந்தால் அவை உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
உடலுக்கு ஓய்வுதான் முக்கியம், தூக்கம் முக்கியமல்ல. தூக்கம் தான் ஓய்வைக் கொடுக்கும் என்பது ஒரு தவறான எண்ணம். நீங்கள் உட்கார்ந்தோ, எழும்புவதிலோ கூட ஓய்வுதன்மையை கொண்டு வரலாம், குழப்பத்துடனோ கலவரத்துடனோ செய்யலாம், அல்லது ஒரு வித மந்தத் தன்மையுடனும் செய்யலாம். நீங்கள் உயிரோட்டமாக அதே சமயம் ஒரு வித ஓய்வு நிலையில் இருந்தால் தூக்கத்தின் தேவை நொடிக்குநொடி குறையும்.
உடலின் ஐந்து கோஷங்கள்
உடலின் ஐந்து - மனம் என்றதையும் கூட - நாம் ஒரு தனி உடலாகப் பார்க்கிறோம். இந்த ஐந்து கூடுகளை நாம் அன்னமய கோஷா, மனோமய கோஷா, பிரணமய கோஷா, விக்யானமய கோஷா, ஆனந்தமய கோஷா என்று கூறுவோம்.
அன்னம் என்றால் உணவு. இந்த உடல் அல்ல அன்னமய கோஷா என்பது அடிப்படையில் நீங்கள் எடுத்துக்கொண்ட உணவே ஆகும் - சிறியதோ அல்ல பெரியதோ என்று இல்லாமல் இது ஒரு சோற்றுக்குவியல் என்பதுதான் நிஜம். நீங்கள் வெளியிலிருந்து சேர்த்த உடலைப் போலவே, மனம் சார்ந்த உடல் என்று ஒன்று உள்ளது. மனம் என்பது உடலின் ஒரே ஒரு பாகத்தில் மட்டுமில்லை. ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு ஞாபக சக்தி உண்டு, ஞானம் உண்டு. இந்த மன-உடலிற்கு மனோமய கோஷா என்று பெயர். பொருள் தன்மை கொண்ட உடல் வன்பொருள் என்றால், மனம் என்பது மென்பொருள் என்று சொல்லலாம்.
இந்த வன்பொருளும் மென்பொருளும், தரமான சக்தி இல்லையென்றால், உபயோகப்படாது. மூன்றாவது கூட்டை நாம் பிராணமய கோஷா அல்லது சக்தி-உடல் என்று சொல்லலாம். உடல், மனம், சக்தி ஆகியவை பொருள்-தன்மை கொண்டவைதான், ஆனால் ஒவ்வொரு பரிமாணமும், முன்னதை விட மென்மையானது. அதாவது உடலை விட மனம் மென்மை வாய்ந்தது. மனத்தை விட சக்தி இன்னும் மென்மையானது. உதாரணத்திற்கு மின்-விளக்கு பொருள் தன்மை கொண்டது. அதில் ஒளிரும் வெளிச்சமும் பொருள் தன்மை கொண்டது, இவ்விரண்டுக்கும் பின்னால் இருக்கும் மின்-சக்தியும் பொருள் தன்மை . எல்லாமே பொருள் தன்மை கொண்டது ஆனால் முன்னதை விட இரண்டாவது மென்மை வாய்ந்தது.
அடுத்த கூடு ஒரு மாற்றும் தன்மை கொண்டது, அதாவது பொருள் தன்மையிலிருந்து பொருள் இல்லா தன்மைக்கு மாற்றும் சக்தி. இதற்கு பொருள் தன்மை என்று ஒன்றும் இல்லை, ஆனால் பொருள் இல்லா தன்மைக்கு முழுதாக மாறவும் இல்லை. ஐந்தாவது கூடு ஆனந்தமய கோஷா. அப்படிஎன்றால் இது ஒரு குமிழி போல உள்ள நிலையா? இல்லை. உங்கள் உள்ளுணர்ச்சியில், ஒவ்வொரு முறையும் சந்தோஷமாக இருக்கும் பொழுது ஏற்படும் ஒரு நிலை தான் அது. இந்த நிலை - பொருள் தன்மைக்கெல்லாம் மூலமாக அமைந்த நிலை ஆகும் இதுதான் பொருள் தன்மைக்கு ஆதாரம்.
இந்த உடல், மனம், சக்தி நிலை ஆகிய மூன்றையும் சமமாக ஒரே நேர் கோட்டில் வைத்து இருந்தால், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்யமற்ற நிலையிலிருந்து வெளியே வந்த ஆயிரக்கணக்கான மக்களை என்னால் உங்களுக்கு காட்ட முடியும், முக்கியமாக நாட்பட்ட வியாதி மற்றும் மனோவியாதிகளுக்கு உள்ளானவர்கள். அவர்களின் உள்ளுணர்வில் ஒரு வித சம நிலையை ஏற்படுத்தினால் போதும். சமமல்லாத நிலை தான் வியாதியின் மூல காரணம்.
முதல் மூன்று கூடுகளை ஒரு நடு-நிலைக்கு கொண்டு வந்தால் மட்டுமே ஆனந்தமய கோஷாவை தொடும் வாய்ப்பு சாத்தியம். அதன் பிறகு அந்த நிலை ஒரு இயற்கையான தன்மையாக மாறும். எதோ ஒரு விஷயத்தை சார்ந்த ஆனந்தம் அல்ல, எதை எடுத்தாலும் ஆனந்தமே, ஏனென்றால் அதுதான் இயற்கையான உயிர்த்தன்மை.