மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்காக உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல்
@மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்கு, மக்கள், பொருட்கள் மற்றும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தேவைப்படும் முதலீடு குறித்து சத்குரு பேசுகிறார்.
செல்வச்செழிப்பு நல்வாழ்வைக் கொண்டுவருமா?
செல்வச்செழிப்பு நல்வாழ்வைக் கொண்டுவரும் என்று சமூகங்கள் எப்போதும் நம்பின. ஆனால் அமெரிக்கா போன்ற நீண்டகாலமாக செல்வச்செழிப்பை அனுபவித்த நாடுகளைப் பார்த்தால், அங்குள்ள வயது வந்தோரில் 70 சதவீதம் பேர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்கின்றனர் என்று என்னிடம் சொல்கிறார்கள். பல தசாப்தங்களாக தொடர்ச்சியான செல்வச்செழிப்பை அனுபவித்த ஐரோப்பாவில், மக்கள்தொகையில் 38 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தையிலிருந்து சில மருந்துகளை மட்டும் நீக்கினால், மக்கள்தொகையின் பெரும்பகுதியினர் பைத்தியமாகிவிடுவர். இது நல்வாழ்வு அல்ல.
வறுமையிலிருந்து செல்வச்செழிப்பிற்கான பயணம் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு சமூகம், நாடு அல்லது உலகின் பெரும் மக்கள்தொகைக்கோ கடினமானது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல. ஆனால் பெரும்பாலும் மக்கள் அதை அடையும்போது, அவர்களால் தங்கள் செல்வச்செழிப்பை அனுபவிக்க முடிவதில்லை.
அவர்களின் வாழ்க்கைத் தரம் அவர்கள் என்ன வாகனம் ஓட்டுகிறார்கள், எங்கு வசிக்கிறார்கள் அல்லது என்ன உடுத்துகிறார்கள் என்பதால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை மனிதர்கள் உணர வேண்டும். ஒருவர் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறார் என்பதில் தான் அது தீர்மானிக்கப்படுகிறது. நல்வாழ்வைத் தேடி, மனிதர்கள் மேலே பார்த்து என்றென்றும் சண்டையிட்டனர். பின்னர் அவர்கள் வெளியே பார்த்து பூமியை சிதைத்தனர். ஆனால் உள்நோக்கித் திரும்பும்போதுதான் நல்வாழ்வு கிடைக்கும். உள்முகமாகத் திரும்புவது ஒன்றே வழி.
ஒருவரின் உடல்ரீதியான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக சாத்தியக்கூறில் முதலீடு செய்வதே இறுதியான தீர்வாகும். நீண்டகால நன்மைகளை விரும்பினால், நீண்டகால முதலீடுகளை செய்ய வேண்டும்.
Subscribe
"உள்கட்டமைப்பு இல்லையெனில், முக்தியடைந்த மனிதர்களை நீங்கள் எவ்வாறு உருவாக்க முடியும்?"
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு இந்திய கிராமத்திற்குள் நுழைந்தால், உள்ளூர் மொழியில் மட்டுமே படிக்கவும் எழுதவும் தெரிந்த ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முழு கிராமத்தையும் தேட வேண்டியிருந்தது. ஆனால் இன்று, குறைந்தபட்சம் 70 சதவிகிதம் மக்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க முடியும், பலருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும். யாரோ பள்ளி அறைகளைக் கட்டி, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்ததால் இந்த திருப்புமுனை நிகழ்ந்தது.
இதேபோல், மனித விழிப்புணர்வை உயர்த்த, தனிமனிதனை மாற்றியமைக்க, உலகில் நடக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவையான மனித வளத்தையும் மற்ற உள்கட்டமைப்பையும் உருவாக்குவதுதான்.
கடந்த காலத்தில், இந்த நாட்டில் உள்நலனுக்கான அற்புதமான உள்கட்டமைப்பு இருந்தது. உதாரணமாக, கிருஷ்ணர் வட சமவெளிகள் மற்றும் மத்திய இந்தியா முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரமங்களை நிறுவினார். கௌதம புத்தர், அவரது ஞானோதயத்திற்குப் பிறகு, பல நகரங்கள் மற்றும் பட்டணங்களுக்கு மன்னர்களாலும், பேரரசர்களாலும் அழைக்கப்பட்டார். ஆனால் அவர், "நான் வர வேண்டுமென்றால், நீங்கள் ஒரு தியான மண்டபத்தையும், ஒரு தோட்டத்தையும் உருவாக்க வேண்டும்" என்றார். இது ஒரு நிலையான விதிமுறையாக மாறியது.
உள்நலனுக்காக உள்கட்டமைப்பை உருவாக்கிய ஒரே சமூகம் இதுதான். ஆன்மீக மலர்ச்சிக்காக உலகின் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் இங்கு அதிக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, ஒவ்வொரு தலைமுறையிலும், முக்தி பெற்ற மனிதர்கள் உருவானது, தற்செயலானதோ அல்லது விபத்தோ அல்ல.
ஆனால் அந்த உள்கட்டமைப்பு இப்போது வளர்வதற்கு பதிலாக சுருங்கி வருகிறது. மனிதனை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு அதிகம் இல்லை. பல்வேறு விஷயங்களுக்கான உள்கட்டமைப்புகள் உள்ளன. மும்பை அல்லது டெல்லியில் எத்தனை மதுபான விடுதிகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? குடிபோதையில் மூழ்க போதுமான உள்கட்டமைப்பு உள்ளது, ஆனால் முக்தி பெற போதுமான உள்கட்டமைப்பு இல்லை. இது உலகைக் கையாளும் மிகவும் ஒருதலைப்பட்சமான முறையாகும். உள்கட்டமைப்பு இல்லையெனில், முக்தி பெற்ற மனிதர்களை எவ்வாறு உருவாக்க முடியும்? முடியாது! இல்லாதது இதுதான். நாம் அதை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
பௌதீக மற்றும் மனித உள்கட்டமைப்பு
இது உலகிற்காக ஈஷா கொண்டுள்ள உறுதிமொழிகளில் ஒன்றாகும்: மனிதனின் உள்நலனிற்கான உள்கட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். உள்கட்டமைப்பு என்று நான் கூறும்போது, வெறும் பௌதீக உள்கட்டமைப்பை மட்டும் குறிப்பிடவில்லை. பௌதீக உள்கட்டமைப்பு என்பது மனித உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கான ஒன்றே. மிக முக்கியமானது என்னவென்றால், எத்தகைய மனிதர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதுதான். சரியான வகையான மனிதர்கள் இல்லாமல், இந்த அறிவியலை பரப்ப முடியாது, ஏனெனில் இது ஒரு அகநிலை அறிவியல். சரியான வகையான மனிதர்கள் இல்லாமல், இது மக்களுக்கு சரியான முறையில் சென்றடையாது.
ஈஷாவின் வகுப்புகளைப் பொறுத்தவரை யோகா, இன்னர் இஞ்சினியரிங் மற்றும் மேல்நிலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரு தொழிலாகக் கற்பிக்க நாங்கள் யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை. ஒருவர் இதனை தனது வாழ்க்கையை விட மேலாகவும், தனது வாழ்க்கையை விட முக்கியமானதாகவும் கருத வேண்டும். அப்போது மட்டுமே அவர்கள் கற்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஒரு அர்ப்பணிப்பாக வழங்கப்படுகிறது, ஒருபோதும் ஒரு தொழிலாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ அல்ல.
எங்களது நோக்கம் சாதி, மதம், இனம், பாலினம் அல்லது மண்டலம் என எந்தவித பாகுபாடும் இன்றி, இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனித உயிருக்கும் ஆன்மீக அறிவியலை வழங்குவதாகும். இதனை நவீன உலகிற்கு வழங்குவதற்கு தேவையான அறிவு, ஆற்றல் மற்றும் திறமை எங்களிடம் உள்ளது. இந்த காலத்தில்தான், ஒவ்வொரு மனிதனும் தங்களின் சொந்த உள்நலனை தாங்களே கையாளத் தேவையான கருவிகள், அதன் பயன்பாட்டிற்கான அறிவு மற்றும் திறன்களால் தன்னைத்தானே வலுப்படுத்த முடியும். அதுவும் வேறு எந்த உயிருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய முடியும்.
மனித வரலாற்றில் முதன்முறையாக, இந்த கிரகத்தில் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகளாகிய ஊட்டச்சத்து, உடல்நலம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை நல்வாழ்வு பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் திறனை இன்று நாம் பெற்றுள்ளோம். இதைச் செய்வதற்கு தேவையான வளம், தொழில்நுட்பம் மற்றும் திறன் நம்மிடம் உள்ளது. அனைவரையும் இணைத்துக்கொள்ளும் விழிப்புணர்வு மட்டுமே தேவைப்படுகிறது. நாம் ஒரு தலைமுறையாக இந்த சாத்தியத்தை பெற்றுள்ளோம் - இதனை நாம் யதார்த்தமாக மாற்றுவோமா என்பதுதான் பெரிய கேள்வி.
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், முழு கிரகத்தையும் பிரதிஷ்டை செய்வதுதான் சிறந்த செயலாக இருக்கும், ஏனென்றால் எந்த மனிதனும் பிரதிஷ்டை செய்யப்படாத இடத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை. பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் என்பது பராமரிக்கப்பட்ட, பண்படுத்தப்பட்ட இடம். ஒரு மனிதன் மலர வேண்டுமென்றால் அவன் இருக்க வேண்டிய இடம் அதுதான். இன்று மிகச் சிலருக்கே அந்த வாய்ப்பு உள்ளது, ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.
என் மனதில், என் புரிதலில், என் வாழ்க்கை அனுபவத்தில், மற்றொரு உயிருக்கு அந்த சாத்தியத்தை வழங்குவதுதான் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்று நான் உணர்கிறேன், ஏனெனில் இறுதியில் அதுமட்டுமே முக்கியமானது.
குறிப்பு: உலகைப் பிரதிஷ்டை செய்வதில் ஆதரவளிக்க விரும்பினால், sadhana@ishafoundation.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.