கேள்வியாளர்: காத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் கேட்க விரும்புவது, இது எதற்காக? ஏன் இப்படி காத்திருக்க வேண்டும்? எதனால் இப்படி காத்திருக்க நேர்கிறது? நீண்ட காலம் காத்திருக்காமலேயே ஒருவர் இதை அடைய முடியாதா? நன்றி!

சத்குரு:

நீண்ட காலம் காத்திருப்பதைப் பற்றி நாம் பேசவில்லை. நான் பேசுவது காத்திருக்கும் குணத்தைப் பற்றி, காலத்தைப் பற்றி இல்லை. காத்திருப்பது உங்களுக்குள் இருக்கவேண்டிய ஒரு குணமாக குறிப்பிட்டேன். நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று பேசவில்லை. நீங்கள் கையை பிசைந்துகொண்டே இருக்கிறீர்கள். இப்படி பரபரவென்று நீங்கள் ஆயிரம் வருடங்கள் காத்திருக்கலாம், அது பிரயோஜனம் இல்லை. நீங்கள் பரபரப்போடும் பதற்றத்தோடும் பத்தாயிரம் வருடங்கள் காத்திருக்கிறீர்கள், அதில் என்ன அர்த்தம் இருக்கும்? அதில் அர்த்தமே இருக்காது. நீங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்றே அர்த்தம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் போய் அதை அடைய முடியும் என்றால், போய் சாதித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லியிருப்பேன். நீங்கள் போய் அதை அடைய முடியாது, அதனால் காத்திருப்பது தான் நல்லது.

காத்திருப்பது ஒரு குணமாக உங்களில் இருக்க வேண்டும், நீங்கள் சும்மா காத்திருக்கிறீர்கள். நீங்கள் யாரோ ஒருவருக்காக, ஏதோ ஒன்றிற்காக எப்போது காத்திருக்க முடியும் என்றால், உங்களைப் பற்றி நீங்கள் பெரிதாக நினைக்காதபோது தான். நீங்கள் முழுமையாக ஒன்றுமில்லாதவராக இருந்தால் நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் காத்திருக்க முடியும். நீங்கள் உங்களை பெரிதாக நினைத்துக்கொண்டால் எதற்கும், யாருக்கும் காத்திருக்க முடியாது. மக்கள் அதிகமாக படிக்கபடிக்க, மக்கள் அதிக வசதியானவர்களாக ஆகஆக, அவர்களால் காத்திருக்க முடியாது. இதை கவனித்திருக்கிறீர்களா?

யாரால் காத்திருக்க முடியும்?

அவர்களைப் பற்றி பெரிதாக நினைத்துக்கொள்ளாத மக்களிடம், நீங்கள் ஒரு கிராமத்தாரிடம், "கொஞ்சம் காத்திருங்கள்" என்று சொன்னால், அவர் அங்கேயே நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பார். அதையே ஒரு படித்தவரிடம் சொல்லுங்கள். அவர் ஒரு நிமிடத்தில் ஐந்து தடவை கடிகாரத்தைப் பார்ப்பார், அவரால் காத்திருக்க முடியாது. அவருக்கு அவர் மிகப்பெரிய ஆள் என்று நினைப்பு.

தன்னைப் பற்றி ரொம்பப் பெரிதாக நினைக்காத ஒருவரால்தான் சும்மா காத்திருக்க முடியும். அதோடு, இந்த பிரபஞ்சத்துடைய பிரம்மாண்டத்தின் முன் நீங்கள் எவ்வளவு சிறியதாக இருக்கிறீர்கள் என்று புரிந்துவிட்டால் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று உங்களுக்கே புரியும். சிறியது என்று நான் சொல்லும்போது இந்த அண்டத்தோடு ஒப்பிட்டால் நீங்கள் ஒரு தூசு தானே? எனவே நீங்கள் காத்திருந்தே ஆகவேண்டும்.

எப்படி காத்திருப்பது?

எப்படி காத்திருப்பது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், எதையுமே தெரிந்துகொள்ள மாட்டீர்கள். ஏனென்றால் பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டால் நீங்கள் மிக சிறியதாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? நீங்கள் மேலேயும் கீழேயும் குதித்தீர்கள் என்றால், என்ன கிடைக்கும்? ஒன்றும் கிடைக்காது. ஹைப்பர் டென்ஷன் வேண்டுமானால் வருமே தவிர, உங்களுக்கு வேறு ஒன்றும் கிடைக்காது.

நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதில் நீங்கள் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை. நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து இல்லை. நீங்கள் போய் அதை அடைய முடியும் என்றால், போய் சாதித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லியிருப்பேன். நீங்கள் போய் அதை அடைய முடியாது, அதனால் காத்திருப்பது தான் நல்லது.

ஆனந்தமாக காத்திருங்கள்

நீங்கள் ரொம்பப் பணக்காரராகவும் திறமையானவராகவும் இருந்தால் நீங்கள் கடைக்கு போய் வேண்டியதை வாங்குவீர்கள். நீங்கள் ஏழை என்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் போய் ரேஷன் கடை முன்னால் காத்திருப்பீர்கள். அவர்கள் 10 மணிக்கு திறப்பதாக சொல்வார்கள், ஆனால் 12:30க்கு தான் திறப்பார்கள். ஆனாலும் நீங்கள் கையில் பையோடு காத்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் காத்திருக்கவில்லை என்றால், உங்களுக்கு பின்னால் 100 பேர் நிற்கிறார்கள், நீங்கள் கடைசிக்கு போய்விடுவீர்கள். பிறகு நீங்கள் நாள் முழுக்க காத்திருக்க வேண்டும், அதனால் நீங்கள் முன்னதாகவே வந்து காத்திருப்பீர்கள். எதற்கு? ஏனென்றால், உங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்போது இந்த பிரபஞ்சத்தில் உங்கள் இடத்தைப் பாருங்கள், காத்திருப்பதைத் தவிர உங்களால் வேறு ஏதாவது செய்ய முடியுமா? நான் கேட்கிறேன், பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டால் காத்திருப்பதைத் தவிர உங்களால் வேறு ஏதாவது செய்ய முடியுமா? நீங்கள் அவ்வளவு தான் செய்ய முடியும். அதை ஆனந்தமாகவாவது செய்யுங்களேன். சும்மா காத்திருங்களேன்.

இயல்பாக இருந்தால் காத்திருக்க முடியும்

அதனால் காத்திருப்பது நேரத்தைப் பற்றியது இல்லை, காத்திருப்பது ஒரு குணம். அது நீங்கள் இருக்கும் ஒரு தன்மை. பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டால், நீங்கள் எவ்வளவு சிறியது என்று புரிந்தால்தான், அது முடியும். உங்கள் தலையில் முட்டாள்தனமான நினைப்பு இருந்தால் உங்களால் காத்திருக்க முடியாது.

நீங்கள் யார் என்கிற உணர்வை நீங்கள் மிகைப்படுத்தி இருந்தால் உங்களால் காத்திருக்க முடியாது. நீங்கள் ஒரு ராஜா என்று நினைத்துக்கொண்டால் உங்களால் காத்திருக்க முடியாது. பிரபஞ்சத்தில் நீங்கள் யார் என்கிற நிஜத்தை நீங்கள் பார்த்தால்தான் உங்களால் காத்திருக்க முடியும். உண்மையை உள்ளபடியே நீங்கள் உணர்ந்திருந்தால் தான் காத்திருக்கிற குணம் வரும். உங்கள் மனம் முழுக்க கற்பனையில் நிறைந்திருப்பதால் உங்களால் காத்திருக்க முடியவில்லை. உண்மையை உணர்ந்தால் இயல்பாகவே காத்திருப்பீர்கள்.