உலக புத்தக தினம் - சத்குரு வாசித்த 10 புத்தகங்கள்
சத்குரு தனது சிறுவயது வாசிப்பு அனுபவங்கள் மற்றும் தன்னை ஈர்த்த புத்தகங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான நேர்காணல் இது. ஜூல்ஸ் வெர்ன் முதல் தஸ்தயெவ்ஸ்கி வரை பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் அவரது கற்பனைத் திறனை எவ்வாறு செதுக்கின என்பதை இதில் விவரிக்கிறார். வாசிப்பின் மூலம் மற்றவர்களின் வாழ்நாள் அனுபவங்களை ஒரு சில நாட்களில் நாமும் உணர்ந்துவிட முடியும் என்பதை உணர்த்துகிறது இந்த நேர்காணல்.

பேட்டியாளர் 1: உங்க ஆர்வத்தை தூண்டிவிட்ட புத்தகங்கள்
சத்குரு:
ஜூல்ஸ் வெர்னோட அந்த 'ஆக்டோபஸ்' கதைய - நான் மூணாவது படிக்கும்போது படிச்சேன். அதுதான் என்னை அப்படியே மிரள வைத்த முதல் புத்தகம்னு நினைக்கிறேன். அதுல அவர் எல்லாத்தையும் ரொம்ப மிகைப்படுத்தி சொல்லியிருப்பார். உலகத்துல அந்த மாதிரி ஒரு ஆக்டோபஸ் நிஜமாவே கிடையாது. ஆனா அவர் ஒரு பெரிய கப்பலையே உள்ளே இழுக்கும் அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான ஆக்டோபஸை கற்பனை பண்ணியிருப்பார். மூணாவது, நாலாவது படிக்கும்போது அந்த கற்பனை எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த ஆக்டோபஸை பார்க்கறதுக்காகவே எனக்கு கடலுக்கு போகணும்னு தோணும். கிட்டத்தட்ட ஒரு ஆறு, எட்டு மாதத்துக்கு அந்த ஆக்டோபஸ் தான் என் தலைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. என் கற்பனையை முழுசா ஆக்கிரமித்த ஒரு புத்தகம் அது.

Cover: Maple Classics
அடுத்ததா என்னை ரொம்ப கவர்ந்த ஒரு புக் 'கலிவர்ஸ் டிராவல்ஸ்'. எனக்கு அந்த தீவுகளுக்குப் போய் அந்த குட்டி மனுஷங்கள பாக்கணும்னு ஆசை. அவங்கள சும்மா தட்டி விடணும்னு தோணும். ஏன்னா... உங்களுக்கு ஒரு ஏழு, எட்டு வயசா இருக்கும்போது, இந்த உலகத்துல நீங்கதான் ஒரு 'லில்லிபுட்' (குள்ளமானவர்). எல்லாரும் உங்கள விட உயரமா இருப்பாங்க, எல்லாரும் அவங்களைப் பெரியவங்களா நினைத்துக் கொள்வாங்க. என்னால அவங்கள மாதிரி யோசிக்க முடியும், உணர முடியும், ஆனா அவங்க உங்கள எப்பவுமே ஒரு குழந்தையா, லில்லிபுட்டா தான் பார்ப்பாங்க. அதனால அந்த தீவுக்கு போய், என்ன விட சின்னவங்கள பாக்கணும், பெரியவங்க என்னை எப்படி நடத்தறாங்களோ அதே மாதிரி அவங்கள கொஞ்சம் தட்டி விடணும்னு தோணுச்சு (சிரிக்கிறார்). அந்த உணர்வைக் கொடுத்தது 'கலிவர்ஸ் டிராவல்ஸ்' தான்.
தீவு வாழ்க்கையின் மீதான ஈர்ப்பு

Subscribe
இந்த கடல் சம்பந்தப்பட்ட கதைகள் எல்லாமே என்னை ரொம்ப கவர்ந்தது. 'ராபின்சன் குரூசோ’ என்ன அப்படியே கட்டிப் போட்டுவிட்டது.
எனக்கு எங்கேயாவது தூரமா போயிடணும்னு தோணும். நாங்க ஒன்பதாவது படிக்கும்போது, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு படகு செய்து 'தாஹிதி' தீவுக்கு போயிடலாம்னு பிளான் செய்தோம். மூணு, நாலு பேரா சேர்ந்து படகு கட்டி கடல்ல தப்பிச்சு போயிடணும்னு நினைத்தோம். கடல் நீரோட்டம் எப்படி இருக்கும், எந்த சீசன்ல கிளம்பணும்னு எல்லாத்தையும் தெளிவா படிச்சு வெச்சிருந்தோம்.
அப்பறம் இன்னொரு படம், ஏதோ ஒரு கேப்டன்... அந்த காலத்துல இந்த மாதிரி நிறைய ஆங்கில படங்கள் வரும். சின்ன பசங்க யாருக்கும் தெரியாம கப்பல்ல ஒளிஞ்சு ஏறி கடலுக்கு தப்பிச்சு போவாங்க, 'stowaways'னு சொல்லுவாங்க. அந்த மாதிரி கதைகள் என் கற்பனைய ரொம்ப தூண்டுச்சு. நாங்க எப்பவுமே உச்சரிச்சுக்கிட்டு இருந்த மந்திரம் என்னன்னா " நீ ஓடுனா கடலுக்கு தான் ஓடணும், கடலுக்கு தான் ஓடணும்" (சிரிக்கிறார்). ஆனா நல்ல வேளையா நாங்க ஓடல. ஓடற அளவுக்கு போனோம், ஆனா ஓடல.
சூழலால் தீர்மானிக்கப்படும் தகுதியும் அதிகாரமும்
'ராபின்சன் குரூசோ' கதையும் சரி, அதுக்கப்புறம் வந்த மத்த கதைகளும் சரி... அந்த தீவுல தொலைஞ்சு போறதுங்கற விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.

இப்சனோட ஒரு கதை,' அட்மிரபிள் கிரிக்டன்'. அதுல ஒரு இங்கிலாந்து குடும்பம், விக்டோரியன் காலத்துல கப்பல்ல போகும்போது விபத்தாகி ஒரு தீவுல சிக்கிக்குவாங்க. அங்க அப்படியே வாழ்க்கை தலைகீழா மாறிடும். இங்கிலாந்துல சொகுசா வளர்ந்த அந்த மேல்தட்டு மனுஷங்களுக்கு, ஒரு தீவுல எப்படி உயிர் வாழ்றதுன்னே தெரியாது. ஒரு தீக்குச்சிய கூட அவங்களால பத்த வைக்க முடியாது. ஆனா அவங்க வீட்டு சமையல்காரன் 'கிரிக்டன்' மெதுவா அங்க தலைவன் ஆயிடுவான். அந்த பெரிய மனுஷன் அங்க ஒரு கோமாளி மாதிரி ஆகிடுவான். கிரிக்டன் அந்த குடும்பத்தோட பொண்ணையே கல்யாணம் செய்துக்குவான்...
பேட்டியாளர் 2: ஓ!
சத்குரு: ஆமா, ஏன்னா அவங்க அங்க பல வருஷமா இருக்காங்க. அங்க சமூக அமைப்பே தலைகீழா மாறிடுச்சு; கீழ இருந்தவன் மேல வந்துட்டான், மேல இருந்தவன் கீழ போயிட்டான். ஏன்னா இங்கிலாந்துக்கும் அந்த தீவுக்கும் சூழல் வேற. ஒரு எட்டு, பத்து வருஷம் கழிச்சு ஒரு கப்பல் அங்க வருது. இப்போ அவங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல, ஏன்னா இப்ப சமையல்காரன் தான் அங்க பாஸ் (Boss). திடீர்னு கப்பல் வந்தா மறுபடியும் எல்லாம் பழையபடி மாறிடுமேனு பயம் (சிரிக்கிறார்). ஆனா கிரிக்டன் சொல்லுவான், "இது சமூகத்தோட இயல்பு - அங்க அதுதான் முறை, இங்க இதுதான் முறை. நீங்க இங்கிலாந்துக்கு போனா மறுபடியும் பழைய முறைப்படிதான்னு சொல்லிட்டு, புகை உருவாக்கி சிக்னல் குடுப்பான். கப்பல் வந்து அவங்கள கூட்டிட்டு போகும். மறுபடியும் இங்கிலாந்து போனதும் கிரிக்டன் பழையபடி சமையல்காரன் ஆகிடுவான். ஆனா அந்த எஜமானுக்கு இப்ப ரொம்ப தர்ம சங்கடமா இருக்கும். ஏன்னா இவ்வளவு நாள் தீவுல எதுக்கும் உதவாதவனா இருந்தவன், இப்ப திரும்ப பாஸ் ஆயிட்டான். அவங்க எல்லாரும் தீவுல எப்படி கஷ்டப்பட்டு உயிர் பிழைச்சோம்னு கதை கதையா பொய் சொல்லுவாங்க, ஆனா கிரிக்டன் ஒரு வார்த்தை கூட பேசாம "எஸ் சார்"னு சொல்லிட்டு வேலைய பார்ப்பான். அதுதான் 'தி அட்மிரபிள் கிரிக்டன்'.
சிந்தனையைச் செதுக்கிய தத்துவார்த்த இலக்கியங்கள்

ஹை ஸ்கூல்ல நான் படிச்ச ஒரு புக் 'ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்'. நீங்க ரிச்சர்ட் பாக் எழுதின அந்த புத்தகத்த படிச்சிருக்கீங்களா? ஒரே மாசத்துல ஒரு இருபத்தி மூணு தடவை அந்த புத்தகத்த படிச்சிருப்பேன். அது எனக்குள்ள பெரிய தாக்கத்த ஏற்படுத்துச்சு.

'இல்லுஷன்ஸ்' (Illusions) புக்கையும் நிறைய தடவை படிச்சிருக்கேன்.

கலீல் ஜிப்ரானோட 'தி ப்ராஃபெட்' என்னை ரொம்ப ஆழமா தொட்ட ஒரு புத்தகம்.

அதை விட முக்கியமா மிகைல் நைமியோட (Mikhail Naimy) 'தி புக் ஆஃப் மிர்தாத்' ஆஹா, அது ஒரு அற்புதமான புத்தகம்! இதெல்லாம் நான் ஒரு இருபதுல இருந்து இருபத்தி நாலு வயசுக்குள்ள படிச்சேன். ஒண்ணுக்கு மேல இன்னொண்ணு எனக்குள்ள பெருசா ஆக்கிரமிச்சுக்கிட்டு இருந்துச்சு.

'மோபி டிக்' என்ன அப்படியே மிரட்டிடுச்சு. இன்னைக்கும் ஏதோ ஒரு விதத்துல என் மனச ஆக்கிரமிச்சிருக்கிற புத்தகம் அது. அது மறுபடியும் ஒரு திமிங்கலம் கடல் பத்தி... (பேட்டியாளர் சிரிக்கிறார்).
அப்புறம் டால்ஸ்டாய் என்ன ரொம்ப பாதிச்ச ஒரு எழுத்தாளர். தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் - இவங்க ரெண்டு பேரும் என் மேல பெரிய தாக்கத்த ஏற்படுத்தினாங்க.
பேட்டியாளர் 2: 'வார் அண்ட் பீஸ்' (War and Peace) படிச்சிருக்கீங்களா?
சத்குரு:

ஆமாமா. டால்ஸ்டாயோட கிட்டத்தட்ட எல்லா புக்கையும் படிச்சிருக்கேன். அப்போ இந்த ரஷ்ய புத்தகங்கள் எல்லாம் ரெண்டு ரூபாய், மூணு ரூபாய்க்கு கிடைக்கும். நான் மொத்த ரஷ்ய புத்தக லைப்ரரியையுமே வாங்கி படிச்சு முடிச்சிட்டேன்.
பேட்டியாளர் 2: புத்தகங்கள் எந்த விதத்துல நம்ம வாழ்க்கைய மாற்றுது?
சத்குரு: புத்தகங்கள் வாழ்க்கைய மாத்தறதெல்லாம் இல்ல. மத்தவங்க எல்லாரும் வாழ்ற மாதிரி ஒரு வாழ்க்கைய நீங்க வாழணும்னா உங்களுக்கு ஆயிரம் வருஷம் ஆகும். ஆனா அந்த எழுத்தாளர் ரொம்ப உணர்வு பூர்வமானவரா இருந்தா... ஒரு 500 பக்க புத்தகத்துல ஒருத்தரோட வாழ்க்கைய அவ்வளவு ஆழமா எழுதியிருப்பாங்க. நீங்க ரெண்டு நாள்ல அந்த புத்தகத்தை படிக்கும்போது, அவங்க பட்டதெல்லாம் உண்மைல அனுபவிக்காமலே, அந்த வாழ்க்கைய நீங்க வாழ்ந்து முடிச்சிடலாம்.