கடந்த கால நினைவுகளில் இருந்து மீள என்ன வழி?
"ச்சே.. நானா அப்படி செஞ்சேன்..", "ஏன்தான் அப்படி நடந்துகிட்டேனோ..", கடந்த காலத்தில் செய்துவிட்ட தவறுகள் நினைவுக்கு வந்தாலே பலருக்கும் வலியை தருகிறது. இந்த வேதனையிலிருந்து வெளிவரும் வழி என்ன என்று ஒருவர் சத்குருவிடம் கேட்க, தன் இயல்பான நகைச்சுவை உணர்விலிருந்து சற்றும் விலகாமல், அதேசமயம் கடந்தகாலத்தின் வருத்தத்திலிருந்து வெளிவரும் வழியையும் காட்டுகிறார் சத்குரு.

கேள்வி:
சத்குரு, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இறந்த காலத்தில் செய்த பிழைகள், தவறுகள் நிகழ்காலத்தில் மீண்டும் நினைவுக்கு வந்து மீள முடியாத வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவற்றிலிருந்து மீள வழி இல்லையா?
மனதில் என்ன ஓடுகிறது?
சத்குரு:ஏன், இப்போது தவறு செய்ய எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று கேட்கிறீர்களா? அப்போது தான் தவறு செய்ய முடிந்தது, இப்போது அப்படி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்.ஒவ்வொரு மனிதருமே, அவரவர் வாழ்க்கையில் எது முக்கியமானது என்று கருதுகிறார்களோ, அதைத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்படித்தானே? அதைதானே நாம் நினைக்க முடியும். நம் வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என்று நாம் நினைத்துக் கொள்கிறோமோ, அதுதானே நம் மனதில் ஓடும். அப்படித்தானே ஓடுகிறது?
Subscribe
இப்போது, நீங்கள் செய்தது ஏதோ ஒருவிதத்தில் தவறு என்று இன்னொருவர் சொல்லிவிட்டார். ஆனால், நீங்கள் ஏன் அதை செய்தீர்கள்? ஏனென்றால், அது உங்களுக்கு நன்றாக இருந்தது. அதற்காகத்தானே அந்த திசையில் சென்றீர்கள்? ஆனால், அதை செய்த பிறகு, இப்போது எல்லோருமே அதை தவறு என்கிறார்கள். வயதும் ஆகிவிட்டது, இன்னும் அதே எண்ணம் ஓடுகிறது. எது முக்கியமானது என்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும் தானே?
எது முக்கியமானது?
"என் வாழ்க்கையில் எனக்கு எது ரொம்ப முக்கியமானது?" - இதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும் தானே? இப்போது நான் உங்களை கேட்கிறேன்... "உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு எது மிக முக்கியமானது?" நீங்கள் ஆனந்தமாக இருப்பது மிக முக்கியமானதா இல்லையா? இப்போது, யாரோ உங்களை குத்திவிட்டார், எப்படியாவது அவரை திருப்பி குத்துவது ரொம்ப முக்கியமா, அல்லது நீங்கள் ஏதோ ஒரு தொழிலோ, வேலையோ ஏதோ ஒன்று செய்கிறீர்கள், அதில் கொஞ்சம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு எது முக்கியம்? எனக்கு எது மிக முக்கியம் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆனந்தமாக இருப்பது முக்கியமா இல்லையா? 'இது தான் எனக்கு முக்கியம்' என்று நீங்கள் உணர்ந்துவிட்டால், உங்கள் மனதில் அதே எண்ணம் தானே ஓடும்? நான் எப்படி ஆனந்தமாக இருப்பது என்பது தானே ஓடும்?
மனதின் வேலை
இது தவறு என்று நீங்களே உணர்ந்திருந்தால், அதை நீங்கள் செய்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு நல்லது என்று நினைத்து தான் நீங்கள் அதை செய்தீர்கள். உங்களை சுற்றிலும் இருக்கும் பத்து பேர் அதை தவறு என்று சொல்லிவிட்டார்கள், அப்படித்தானே? இப்போது அது கொஞ்சம் வலிக்கிறது. "நரகத்துக்குப் போய்விடுவேனோ, வேறு ஏதோ பாதிப்பு வந்துவிடுமோ.." என்னென்னவோ ஓடுகிறது மனதில். இந்த மனதால் சும்மா இருக்க முடியுமா? தானும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டுமே என்பதற்காக, அது ஒரு பக்கம் அதன் வேலையை செய்கிறது.
மனம் பலவிதமாக செயல்படமுடியும். இப்போது உலகத்தில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், இந்த மனத்தை மிக அடிப்படையான ஒரு நிலையில் தான் மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள். அடிப்படையாக, ஞாபகசக்தி, கற்பனைத்திறன் - இந்த இரண்டும் மனம் என்று அழைக்கப்படுவதில் இருக்கிறது. நீங்கள் நேற்று செய்தது எல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது, அதை வைத்து, நாளை என்ன செய்யலாம் என்று ஒரு கற்பனை நடக்கிறது. கற்பனை என்பதில் புதிதாக ஒன்றும் வராது. நம் ஞாபகத்தில் என்ன இருக்கிறதோ, அதை கொஞ்சம் மிகைப்படுத்தினால் கற்பனை நடக்கிறது. ஞாபகசக்தி மீது கொஞ்சம் மேக்-அப் செய்தால் அது கற்பனை. நம் அனுபவத்தில் இல்லாத எதுவும் கற்பனையில் வராது. நம் அனுபவத்தில் இருப்பதை கொஞ்சம் மிகைப்படுத்தி நமக்கு கற்பனை நடக்கிறது.
கற்பனை எனும் சுழல்
இந்த ஞாபக சக்தியும் கற்பனையும் சேர்ந்து உருவாக்கும் சிக்கலில் நீங்கள் சிக்கிவிட்டால், புதிதாக உங்கள் வாழ்க்கையில் எதுவும் நடக்கமுடியாது. அதே பழைய கதை தான்.மனத்தால் எதை வேண்டுமானாலும் மிகைப்படுத்த முடியும் என்பதால் மீண்டும் மீண்டும் அதுவே நடக்கும். நம் ஞாபகத்தில் இருப்பதை கொஞ்சம் மிகைப்படுத்தி நாம் எதை வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளலாம். எப்போது நாம் இந்த சிக்கலில் சிக்கிக்கொண்டோமோ, இப்போது ஞாபக சக்தி, கற்பனை இவ்வளவு தான் வாழ்க்கையில் நடக்கிறது. இப்போது அப்படித்தானே மனம் நடந்துகொள்கிறது? ஞாபகசக்தி என்பது மனதின் மிக அடிப்படையான சக்தி.
இப்போது பிரச்சனை என்னவென்றால், பலரும் அவர்களின் குழந்தையை என்னிடம் அழைத்து வந்து, "சத்குரு, இதுக்கு ஒண்ணும் ஞாபகமே இருக்க மாட்டேங்குது, எதை படிச்சாலும் ஞாபகம் இல்லன்னு சொல்லுது, கொஞ்சம் ஞாபகசக்தி குடுங்க" என்று கேட்கிறார்கள். எல்லாம் மறந்து போனால் நன்றாகத்தானே இருக்கும்? நீங்கள் ஞாபகம் வைத்திருப்பதால் தானே இப்படி கஷ்டப்படுகிறீர்கள். நேற்று நடந்ததை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளாத குழந்தைகள் ஆனந்தமாக இருக்கிறார்களே? நேற்று ஸ்கூலில் என்னென்னமோ சொன்னார்கள், இந்த பையன் இன்று ஆனந்தமாகத்தானே இருக்கிறான். அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு, அதை ஞாபகத்திலும் வைத்திருந்தால், எல்லாம் காணாமல் போயிருக்கும். இவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆனந்தமாக இருக்கிறான்.
ஞாபக சக்தியும், கற்பனையும் மனதின் மிக அடிப்படையான சக்தி. அது வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மிக அடிப்படையான நிலையில் செயல்படுகிறது. அந்த நிலையிலேயே மனதை உபயோகப்படுத்தினால், பழையவை எனும் இறந்தகாலம் நம் வாழ்க்கையில் நிகழ்காலம் போலவே நடக்கிறது. ஏனென்றால், இப்போது உங்களுக்கு தெரிந்தது எல்லாமே ஞாபக சக்தி தானே? உங்கள் அப்பா யார் என்று கேட்டால், இன்னார் என்று சொல்கிறீர்கள். எப்படி? ஞாபகசக்தி தானே? உங்கள் தாய் தந்தையாக இருந்தாலும் சரி, உங்கள் கணவனாகவோ மனைவியாகவோ இருந்தாலும் சரி, உங்கள் குழந்தை, உங்கள் தொழில், அந்தஸ்து, ஜாதி, மதம் என எதுவாக இருந்தாலும் சரி, எல்லாமே ஞாபக சக்தி தானே? அதை மிகைப்படுத்திக் கொள்கிறீர்கள். ஞாபக சக்தியில் என்னென்ன இருக்கிறதோ, அவை எல்லாவற்றையும் கற்பனை மிகைப்படுத்திக் கொள்கிறது. இந்த ஒரு சிக்கல், இந்த ஒரு சுழற்சி அப்படியே தொடர்ந்து நடந்தே இருக்கிறது. எப்போது இது தொடர்ந்துகொண்டே இருக்குமோ, இதை தான் கர்மா என்று அழைக்கிறோம். இறந்தகாலம் நிகழ்காலம் போல செயல்படுகிறது, இது தான் கர்மா.
பயம் கற்பனையில் இருக்கிறது
இப்போது காற்று பிரமாதமாக நல்ல குளுமையாக இருக்கிறது. ஆனால், பத்து நாளுக்கு முன் யாரோ ஏதோ சொல்லிவிட்டார்கள், உள்ளுக்குள் இன்னமும் அதே ஓடிக் கொண்டிருந்தால், இப்போது குளுமையான காற்று வீசுவதே உங்களுக்கு தெரியாமல் போய்விடும். நீங்கள் இந்த க்ஷணத்தில் இருந்தால், இப்போது என்ன இருக்கிறதோ அதில் ஆனந்தமாக இருக்கலாம். இப்போது ஞாபக சக்தியிலும், கற்பனையிலும் இருப்பதால், ஒரு சொட்டு மழைத்துளி விழுந்தாலும், "ஐயோ, இதுல நனைஞ்சா எனக்கு இது வந்துடுமோ, அது வந்துடுமோ, பன்றி காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல் என்று ஏதேதோ சொல்கிறார்களே" என்று கற்பனை நடக்கிறது. இது எல்லாமே ஞாபக சக்தியை மிகைப்படுத்தும் கற்பனையால் நடக்கிறது. சும்மா இங்கே அமர்ந்தால் உங்களுக்கு நன்றாக இருக்கிறதா? கற்பனை நடந்து கொண்டிருந்தால் உங்களால் இந்த க்ஷணத்தில் இருக்க முடியாது. ஏனென்றால், பழைய கர்மா நடக்கிறது. இந்த மனம் என்பதை ரொம்பவும் அடிப்படையான நிலையில் தான் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம். மனதின் மிக முக்கியமான தன்மை என்பது ஞாபக சக்தி அல்ல. இந்த ஞாபக சக்தி, கற்பனை திறன் என்பதையெல்லாம் கொஞ்சம் தள்ளி அப்படி வைத்தீர்கள் என்றால், இந்த மனம் கூர்மையான ஒரு கருவியாக செயல்படும். இப்போது உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்களை உங்கள் அனுபவத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த மனம் ஒரு கூர்மையான கருவியாக இயங்கும். ஆனால், எப்போது இந்த ஞாபக சக்தி-கற்பனை, ஞாபக சக்தி-கற்பனை எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்டோமோ, இப்போது இது ஒரு கூர்மையான கருவியாக இருக்காது. சும்மா அதே பழைய கதை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இப்போது எல்லா இடங்களிலும் இப்படி மாறிவிட்டது. யார் எங்கே சென்றாலும், எதை பார்த்தாலும். யாரை பார்த்தாலும் செல்போனில் போட்டோ எடுத்து கொள்கிறார்கள், ஏன்? வீட்டுக்குப் போய் பார்த்துக்கொள்ள. இங்கே என்னுடன் இருக்கமாட்டர்கள், வீட்டுக்கு போய், "ஓ... சத்குரு பாத்தியா?" என்று எல்லோரிடமும் போட்டோவை காட்டுகிறார்கள். அதிலும், வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ டூரிஸ்டாக போகும் எல்லோருக்கும் இப்போது இது சாதாரணமாகிவிட்டது. ஒரு வீட்டிலிருந்து நான்கு பேர் வந்தால், நான்கு பேருமே ஒரு கேமரா வைத்திருப்பார்கள். நான்கு பேருமே கேமரா வழியாகவே எல்லாவற்றையும் பார்ப்பார்கள். சாதாரணமாக கண்களால் எதையும் பார்க்க மாட்டார்கள். ஒரு மலைச் சிகரமோ, சூரியோதயமோ, சூரியாஸ்தமமோ, அல்லது எதையாவது பாரக்க வேண்டும் என்றாலும் எதையும் நேராக பார்க்க மாட்டார்கள். எல்லாவற்றையும் கேமரா வழியாகவே பார்ப்பார்கள்.
மனம் எப்போது கூர்மையான கருவியாக இருக்கும்?
ஒருமுறை நான் துருக்கி சென்றிருந்த போது, அங்கே பிரபலமான பெரிய மிதவை பலூன்களில் சுற்றுலா அழைத்துச் சென்று காட்டுகிறார்கள், மேலிருந்து வேடிக்கை பார்க்க பிரமாதமாக இருக்கிறது. இதில் ஜப்பானிலிருந்து வந்திருந்த ஒரு சிலரும் இருந்தார்கள். கேமரா லென்ஸ் வழியாகவே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதிலேயே பார்த்தபடி போட்டோ எடுத்துக்கொண்டே இருந்த ஒருவர் திடீரென்று கீழே விழுந்துவிட்டார். தோராயமாக ஒரு 30 - 40 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் தோள்பட்டையிலும், பல இடங்களிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டது.
ஏனென்றால் கேமரா லென்ஸ் வழியாகவே பார்த்துக்கொண்டே இருந்ததால் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் படம்பிடித்து வீட்டுக்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். வீட்டிலேயே பார்த்துக் கொள்வதாக இருந்தால், நமக்கு முன்னால் நிறைய பேர் போய் போட்டோ எடுத்திருக்கிறார்களே, அதை வீட்டிலிருந்தே பார்த்தால் அது புத்திசாலித்தனம். அவ்வளவு தூரம் போய், கேமராவிலேயே பார்ப்பதில் என்ன இருக்கிறது? அங்கே போனதற்காக சில போட்டோ எடுத்துக்கொள்வது சரிதான். ஆனால் எல்லா நேரமும் போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தால், இந்த க்ஷணத்தில் நடப்பதை உங்களால் உணர முடியுமா?
ஏன் இப்படி சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், இந்த ஞாபகம் கற்பனை, ஞாபகம் கற்பனை இதிலேயே வாழ்க்கை போகிறது. இந்த மனம் என்பது ஞாபகம், கற்பனைக்காக மட்டுமே இல்லை. ஞாபகம் என்பது என்ன? இப்போது உங்கள் செல்போனில் போட்டோ, வீடியோ என எதை எடுத்தாலும் அதை சேமித்து வைத்துக்கொள்கிறது. மீண்டும் உங்களுக்கு எப்போது வேண்டுமோ அப்போது அப்படியே திருப்பிக் கொடுக்கிறது - எந்த கற்பனையையும் சேர்க்காமல். ஆனால் நீங்கள் அப்படியில்லை. இங்கே உங்களிடம் ஒன்றை சொன்னால், அங்கே சென்று என்னென்வோ சொல்லிக்கொள்கிறீர்கள். இந்த மனதின் முக்கியமான தன்மை என்னவென்றால், இந்த ஞாபக சக்தி - கற்பனை இந்த இரண்டையும் கொஞ்சம் அப்படி தள்ளி வைத்தீர்கள் என்றால், இது ஒரு கூர்மையான கருவி. இப்போது உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்கள் எல்லாவற்றையும் அனுபவத்திற்குள் நாம் கொண்டுவர முடியும். அதற்காக தான் தியானம்.
தியானம் தரும் இடைவெளி
நீங்கள் தியானம் செய்ய அமர்ந்திருக்கிறீர்கள், குழந்தை ஞாபகத்திற்கு வந்தது, வரட்டும், அழட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கணவன் வந்தார், மனைவி வந்தார், நமக்கு பிடிக்காதவர்கள் வந்தார்கள், கடவுளே வந்தார். சும்மா இருக்க வேண்டியதுதான். ஏன்? உங்கள் மனதில் ஓடுவது எல்லாமே உங்கள் ஞாபகம் தானே? எல்லாமே இறந்த காலம் தானே? இறந்தகாலத்துக்கு தொடர்ந்து உயிர் கொடுத்துக்கொண்டே போனீர்கள் என்றால், உயிரோட்டமில்லாமல் ஆகிவிடுவீர்கள். உயிர் இல்லாத ஒன்றிற்கு உயிர் கொடுக்க முயற்சி செய்தால், உயிரோடு இருப்பது உயிரற்றது போல ஆகிவிடுகிறது.
கடந்த காலத்தின் ஞாபகங்கள் இருப்பதாலேயே நேற்று நீங்கள் செய்த முட்டாள்தனங்களை இன்று மீண்டும் செய்யாமல் இருக்கிறீர்கள். அதனால் கடந்த காலத்தை அப்படியே மறந்துவிடுவதும் சரியல்ல. அந்த ஞாபகங்கள் இப்போது நமக்கு சுமையாக இருக்கிறது என்பதும் உண்மை. ஞாபகங்கள் இல்லாது போனால் உங்களால் சிந்திக்க முடியாது. பிற உயிர்களிடமிருந்து உங்களை தனித்துவமான உயிராக காட்டுவது உங்கள் ஞாபக சக்தியும், கற்பனைத் திறனும்தான். ஆனால் மனதின் அற்புதமான இந்த இரு அம்சங்கள் இப்போது உங்களுக்கு துயரத்தைத் தருகிறது.
ஞாபகங்கள் வரமா? சாபமா?
இப்போது உங்கள் கையில் இரு வாய்ப்புகள் இருக்கிறது. ஞாபகத்தால் காயப்படலாம் அல்லது ஞாபகத்தை பயன்படுத்தி வளரலாம். கடந்த காலம் எத்தனைக்கு எத்தனை கசப்பானதாக இருந்திருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை நீங்கள் பிறரைவிட முதிர்ச்சி அடைந்த உயிராக இருக்க வேண்டும்தானே? ஆனால், நீங்கள் அதனை துன்பமாக பாவிக்கிறீர்கள். நீங்கள் மீளா துயரத்தில் இருந்தால், உங்களைச் சுற்றியுள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்துவீர்கள்.
ஞாபகங்களை வரமாக்கிக் கொள்வதும் சாபமாக்கிக் கொள்வதும் முழுமையாக உங்கள் கைகளில் இருக்கும் வாய்ப்பு. நீங்கள் இப்படி உட்கார்ந்தால், ஞாபக பதிவுகள் என்பது தனியாகவும், 'நான்' என்பது தனியாகவும் இருந்தால், உங்களை எந்த துன்பமும் தொடாது. இதற்காகவே ஒரு எளிமையான, சக்திவாய்ந்த தியானத்தை வழங்கி இருக்கிறோம். வழிகாட்டலுடன் உள்ள இந்த 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியானத்தை வெறும் 7 நிமிடங்கள் பயிற்சி செய்வதிலேயே உங்களுக்கும், உங்கள் ஞாபக பதிவுகளுக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி ஏற்படும். அதன் பிறகு, ஞாபகங்கள் உங்களிடம் இருக்கும், எப்போது வேண்டுமோ அப்போது அதை தொட்டுப் பார்க்கலாம், வேண்டாம் என்றால் சும்மா விட்டுவிடலாம். நீங்கள் பயன்படுத்தும் கருவிகளை தேவையான போதுதானே கையில் எடுக்கிறீர்கள்? தேவையான போது பயன்படுத்தினால் மனம் ஒரு அற்புதமான கருவி.