கேள்வி:

விமானப்படையில் விங் கமாண்டராக இருப்பதால், என் வேலையின் இயல்பே மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தச் செயலால் ஏற்படும் கர்மாவால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம்?

சத்குரு:

"இப்போது நான் போர் விமானியாக இருப்பதால், ஒருவேளை போர் வந்தால் நான் செய்ய வேண்டியதைச் செய்தால்..." நிச்சயமாக அது யாரோ ஒருவரை காயப்படுத்தும். ஏனென்றால், போரின் நோக்கமே காயப்படுத்த வேண்டும் என்பதுதான். அவ்வளவு விலையுயர்ந்த போர் விமானத்தில் பறந்து சென்று ஆயுதங்களை வீசுவது அது யாரையும் காயப்படுத்தக்கூடாது என்பதற்காகவா? இல்லை, நீங்கள் சேதம் ஏற்படுத்த விரும்புகிறீர்கள். (சிரிக்கிறார்)

ஆனால் ஒருவேளை ஒரு மோதல் ஏற்பட்டு, நீங்கள் போர் விமானத்தைச் செலுத்தி, எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தாமல் நீங்கள் தூய்மையான கர்மாவுடன் திரும்பி வந்தால், நானும் உங்களால் ஏமாற்றமடைவேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பங்கேற்பாளர்: நிச்சயமாக.

சத்குரு: ஆனால் நீங்கள் சொந்த இன்பத்துக்காகத் தாக்குகிறீர்களா, அல்லது ஏதோ ஒரு காரணத்தால் இப்போது இது தவிர்க்க முடியாமல் போய்விட்டது என்பதால் தாக்குதல் நடத்துகிறீர்களா? நீங்களாகச் சண்டையை ஆரம்பிக்கவில்லையே? இந்த மனித சமுதாயங்கள் சிக்கலாக இருப்பதால், எங்கேயோ உராய்வு ஏற்படுகிறது. உராய்வு ஏற்பட்டால், ஒரு காலத்தில் குச்சியைத் தூக்கிக்கொண்டு போனோம். பிறகு அந்தக் குச்சியைக் கதாயுதமாக மாற்றினோம், பிறகு அதை ஈட்டியாக மாற்றினோம், பிறகு வில் அம்பாக... வில் அம்பு துப்பாக்கியானது, அப்படியே போர் விமானம், ஏவுகணை என்று வளர்ந்து, இப்போது ட்ரோன்கள் வரத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்சம் இனிமேல் நீங்களே போக வேண்டிய அவசியம் இருக்காது... (சிரிக்கிறார்)

பங்கேற்பாளர்: இன்னமும் யாரோ பறந்து சென்று தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...

சத்குரு: யாரோ இன்னமும் பறக்கிறார்கள்... ஆனால் அவர்கள் அதை வீடியோ கேம் என்று நினைக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்கவில்லை. இதுபோன்ற பயங்கரமான விஷயங்களைத் தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்துகொள்கிறார்கள். ஆனால் மனித சமூகமாக, நாம் எல்லோரும் அனைவரையும் அரவணைத்து வாழும் இடத்திற்கு இன்னும் வரவில்லை. நாம் இன்னும் அதை நெருங்கக்கூட இல்லை; நாம் இதில் உண்மையாக இருப்போம்.

கடமையும் கர்மாவும்: ஒரு முரண்பாடான பார்வை

எனவே, நீங்கள் ஒரு நல்ல போர் விமானியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு, உங்கள் போர் விமானம் எல்லாவிதமான மிகச்சிறந்த ஆயுதங்களோடும் தயார்நிலையில் இருப்பதையும் உறுதி செய்துகொண்டு, அரசியல் சக்திகள் ஒரு போரை உருவாக்கக்கூடாது என்ற நம்பிக்கையோடு இருங்கள். இருப்பினும், நீங்கள் நிஜமாகவே தாக்குதலில் ஈடுபடப் போகிறீர்களா இல்லையா என்பது ஒரு பொருட்டே இல்லை; நீங்கள் அந்த நோக்கத்துடன்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் விமானத்தில் பறந்து சென்று தாக்கும்போது, அதிகபட்ச சேதம் ஏற்பட வேண்டும், அப்படித்தானே?

"என்ன இது, ஆன்மீகம் பேசும் சத்குரு இப்படிப் பேசுகிறாரே?" என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஒருவேளை ஒரு மோதல் ஏற்பட்டு, நீங்கள் போர் விமானத்தைச் செலுத்தி, எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தாமல் நீங்கள் தூய்மையான கர்மாவுடன் திரும்பி வந்தால், நானும் உங்களால் ஏமாற்றமடைவேன். நான் மிக மோசமான ஏமாற்றத்தை அடைவேன். எந்த நோக்கமும் இல்லாமல் தேசத்தின் வளத்தை வீணாக்குவது மிக மோசமான கர்மா.

கர்மா என்பது என்ன?

எனவே கர்மா என்பது பரிசோ தண்டனையோ கொடுக்கும் ஓர் அமைப்பு அல்ல. கர்மா என்றால் இதுதான்: நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு மனித உயிராக இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள். மரங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள் என அனைத்தும் இருக்கின்றன; அதுவும் உயிர்தான். ஆனால் அவை ஏன் அந்த வடிவத்தை எடுத்துள்ளன, நீங்கள் ஏன் இந்த வடிவத்தை எடுத்துள்ளீர்கள்? ஏனென்றால், குறிப்பிட்ட அளவு ஞாபகங்கள் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது இப்படிப்பட்ட உருவத்தை மட்டுமே எடுக்கும்.

இப்போது, நீங்கள் இன்னும் சற்று ஆழமாகப் போனால்... ஞாபகங்கள் என்றதுமே, தங்கள் தலைக்குள் என்ன இருக்கிறதோ அதுதான் என்று மக்கள் நினைக்கிறார்கள். உங்களுக்குப் பத்து தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த உங்கள் எள்ளுத் தாத்தா எப்படி இருந்திருப்பார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லை, ஆனால் அவருடைய மூக்கு உங்கள் முகத்தில் உட்கார்ந்து இருக்கிறது. இருக்கிறதா இல்லையா? பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் மூதாதையர்களின் தோல் நிறத்தை உங்கள் உடல் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறதா இல்லையா? இதுதான் ஞாபகம். பரிணாமத்தின் ஞாபகம், மரபணுவின் ஞாபகம் — இப்படி 8 விதமான நிலைகளில் ஞாபகப் பதிவுகள் இருப்பதாகப் பார்க்கிறோம்.

எனவே இந்த ஞாபகங்களை நீங்கள் எப்படிச் சேர்த்தீர்கள்? ஞாபகங்களைக் கட்டமைக்கும் இந்த முறையைத் தான் "கர்மா" என்று அழைக்கிறோம். நீங்கள் ஒருவரைப் பார்க்கிறீர்கள், "ஓ, எனக்கு அவரைப் பிடிக்கவில்லை" - கர்மா. நீங்கள் இன்னொருவரைப் பார்க்கிறீர்கள், "எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது" - கர்மா. இதை நல்ல கர்மா என்றோ கெட்ட கர்மா என்றோ தீர்மானிக்காதீர்கள். என்னுடைய அமைப்பு இதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறது. நான் வெறுமனே, "ஓ, எனக்கு இவரைப் பிடித்திருக்கிறது" என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கினால், பத்து வருடங்கள் கழித்து அவரைப் பார்க்க நேர்ந்தால், என் முகத்தில் புன்னகை மலர்கிறது. அதேவிதமாக, "எனக்கு இவரைப் பிடிக்கவில்லை" என்று நான் எனக்குச் சொல்லும் ஒரு எண்ணம், பத்து வருடங்கள் கழித்து அவரைப் பார்க்க நேர்ந்தால், அப்போதும் அதேதான், இல்லையா? இதுதான் கர்மா. நீங்களே உங்களுக்கான மென்பொருளைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.

நேற்றைய நினைவுகள் இன்றைய வாழ்வை ஆளலாமா?

அதில் பெரும்பாலானவை விழிப்புணர்வு இல்லாமல் உருவாக்கியது. ஆனால் இவை அனைத்தும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வோடும், விழிப்புணர்வு இல்லாமலும் செய்யும் அனைத்தும் பதிவாகின்றன. இப்படிச் சேர்ந்த ஞாபகங்களின் இந்தக் குவியல்களைத் தான் நாம் "கர்மா" என்று அழைக்கிறோம். ஏனென்றால், நீங்கள் எந்த மாதிரியான குவியல்களை வைத்திருக்கிறீர்களோ, அதைப் பொறுத்து சில குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். ஒரே வீட்டில் வாழும் மக்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு அதே விஷயங்கள் தான் நடக்கும். ஏதோ ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; நான் அதைப் பார்த்து, "அருமை, இது அற்புதமாக இருக்கிறது!" என்று சொல்கிறேன்.

வேறொருவர் அதைப் பார்த்து, "கடவுளே, இவ்வளவு மோசமாக இருக்கிறதே!" என்கிறார். ஒரே விஷயம் தான், வேறு வேறு கர்மா. அதனால், கர்மா என்பது பரிசோ அல்லது தண்டனையோ அல்ல. நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் விஷயங்கள் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எந்த அளவிற்கு அனுமதிக்கப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வி. அல்லது இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், உங்கள் ஞாபகங்கள் உங்கள் மீது தாக்கம் செலுத்துகிறது என்றால், உங்களின் இன்றைய தினத்தை ஆள்வதற்கு நீங்கள் உங்களின் நேற்றைய தினத்தை அனுமதிக்கிறீர்கள் என்றே அர்த்தம். எப்போது நீங்கள் உங்களின் நேற்று, உங்களின் இன்றை ஆட்சி செய்ய அனுமதிக்கிறீர்களோ, அப்போதே உங்களுக்கு உண்மையில் எதிர்காலம் என்பதே இல்லை. மீண்டும் அதே முட்டாள்தனத்தின் சுழற்சி மட்டும்தான் நடக்கும். அதனால்தான் நீங்கள் கர்மாவின் வட்டத்திற்குள் இருந்தால் — 'புனரபி ஜனனம், புனரபி மரணம்' என்றோம். அதே விஷயங்கள் மட்டுமே நடக்கும். ஏனென்றால் நீங்கள் உங்கள் ஞாபகங்களுக்கு அடிமையாகி இருக்கிறீர்கள். உங்கள் ஞாபகப் பதிவுகள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

நெறிமுறைகளைத் தாண்டிய மனிதநேயம்

நீங்கள் இதை இப்படிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, என் நேர்மை என்பது என் நெறிமுறைகளால் வரவில்லை. எனக்கு நெறிமுறைகளே இல்லை. நான் கேமராவின் முன் இதைச் சொல்கிறேன் — எனக்கு நெறிமுறைகளே இல்லை. என் நேர்மையின் அடித்தளம் என்னுடைய மனிதநேயம் தான். நான் இந்த நெறிமுறைகளை எல்லாம் நம்புவதில்லை. ஏனென்றால், தங்களின் நெறிமுறைகளின்படி இது சரி என்று நினைத்துக் கொண்டவர்கள் தான் இந்த பூமியில் மிகக் கொடூரமான செயல்களைச் செய்திருக்கிறார்கள். உண்மைதானே? அவர்கள் செய்வது அவர்களின் அறத்தின்படி சரி என்று நினைத்தவர்கள் தான் இந்த உலகத்தில் மிகக் கொடூரமான செயல்களைச் செய்திருக்கிறார்கள். அப்படித்தானே நடந்திருக்கிறது? எனவே, என்னுடைய நேர்மை என் மனிதநேயத்தில் இருந்து பிறக்கிறது.

கர்மா செயலில் அல்ல, நோக்கத்தில்தான் இருக்கிறது

அதனால் நீங்கள் பார்க்க வேண்டியது இதை மட்டும்தான் — நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காக செய்கிறோமா அல்லது நம்முடைய தனிப்பட்ட இன்பத்திற்காகவா? அவ்வளவுதான். நீங்கள் இந்த ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள் — நாம் செய்யும் அனைத்தும், அனைவருக்குமே ஒரு குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தப் போகிறதா அல்லது நீங்கள் போர் விமானத்தில் பறந்து சென்று மக்களைச் சுட்டுத் தள்ளி ரசிப்பதற்கா? இந்த ஒரு விஷயத்தை நீங்கள் தீர்மானித்துவிட்டால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு எது தேவையோ அதைச் செய்கிறீர்கள்; உங்கள் தனிப்பட்ட ஆசையால் அப்படிச் செய்யவில்லை. சூழ்நிலைக்கு அது தேவை என்பதற்காகவும், ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காகவும் நீங்கள் அந்த செயலைச் செய்கிறீர்கள் என்றால், உண்மையில் அது நல்ல கர்மா தான். ஏனென்றால் உங்கள் நோக்கமே உங்கள் கர்மா. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் — நீங்கள் செய்யும் செயல்களால் கர்மா நிர்ணயிக்கப்படுவதில்லை, நோக்கத்தினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போது உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் தேசத்தின் நலனுக்காகப் போர் செய்கிறீர்கள் — தேசம் என்பது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தான். ஆனால் அந்தப் பக்கத்திலும் மக்கள் இருக்கிறார்கள், அந்தப் பக்கம் இருப்பதும் நிச்சயமாக மனிதர்கள் தான்.

தேசமும் அடையாளமும்

நான் ஏற்கனவே கூறியது போல, ஒரு மனிதராக நீங்கள் இந்த பூமியில் தான் வைக்கப்பட்டு இருக்கிறீர்கள்; உங்களை மேலே சொர்க்கத்தில் வைக்கவில்லை. அதனால் நம் வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது. இப்போது, நாம் ஒரு படைவீரராக இருப்பது நம் தேசத்திற்காக. இப்போது உங்கள் படைத்தளம் பெங்காலில் இருப்பதால், நீங்கள் ஒருவேளை தமிழ்நாட்டிற்கு வந்து குண்டு வீசினால் அதை ஏற்க முடியாது. ஏனென்றால், இந்தப் படைகளை நாம் தேசம் என்னும் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஓர் அடையாளம்; அது ஏதோ கடவுள் கொடுத்த சக்தி அல்ல. தேசம் என்பது உங்களுக்கும் எனக்கும் இடையேயான ஓர் உடன்பாடு. நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை ஒப்புக்கொண்டோம், அவ்வளவுதான். அதனால் அது மதிப்புமிக்கதாக இருக்கிறது. சரிதானே? நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு

அதனால், நம் தேசத்தின் நன்மைக்காக நாம் பல விஷயங்களைச் செய்கிறோம். துரதிருஷ்டவசமாக, தேசம் அச்சுறுத்தப்படும் போது நமது படை செயலில் இறங்க வேண்டியிருக்கிறது. நாம் சில மனிதர்களை அழிக்க நேரிடும் — மனித நேயத்தின்படி அது மோசமானது தான். தொடர்ந்து இது நடந்துகொண்டே இருக்கிறது. முதல் உலகப்போருக்குப் பின், எனக்குத் தெரிந்து 1918-ல் 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' (League of Nations) அமைக்கப்பட்டபோது, இனிமேல் ஒருபோதும் போர் வராது என்று மக்கள் நம்பினார்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் நாம் அதைப் பேசி, விவாதித்து, தீர்த்துக் கொள்வதற்கான ஓர் ஏற்பாடு இப்போது நம்மிடம் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் 35 வருடங்களுக்குள் இரண்டாம் உலகப் போர் வந்தது; முதல் உலகப் போரை விட 25 மடங்கு அதிகமான அழிவை அது ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இனி எந்தப் போரும் நடக்காது என்று நாம் நினைத்தோம். ஆனால் உண்மையும் புள்ளிவிவரங்களும் காட்டுவது என்னவென்றால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த உலகில் போர் நடக்காத நாள் என்று ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஏதோ ஒரு போர் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அளவில் பார்த்தால் கூடுதலாகவோ குறைந்தோ இருக்கலாம், ஆனால் எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு திட்டமிட்ட யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது ஏதோ குற்றவாளிகளுக்கு இடையிலான சண்டை அல்ல; சுமார் 80 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாடுகளுக்கு இடையிலான திட்டமிட்ட போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, மனிதர்களாகிய நாம் அந்த இடத்தில்தான் இருக்கிறோம். அங்கேதான் நாம் இருக்கக்கூடாது, ஆனால் நாம் அங்குதான் இருக்கிறோம். அதனால் நாம் அங்கே இருக்கும் வரை, நாம் செய்ய வேண்டிய கர்மா இருக்கிறது. இப்படையின் முன்வரிசை வீரர்களாக நீங்கள் தான் இருக்கிறீர்கள், ஆனால் நாங்களும் இப்படையின் அங்கம் தான். நாங்கள் விமானத்தை இயக்காமல் இருக்கலாம், குண்டு வீசாமல் இருக்கலாம், ஆனால் தேவையான நேரத்தில் நீங்கள் குண்டு வீச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சரிதானே? அதனால் நாங்களும் கர்மாவின் ஓர் அங்கம் தான். எப்படி இதில் அங்கமில்லாமல் இருக்க முடியும்? எங்கள் நோக்கமும் அதேதான். கர்மா என்பது நோக்கத்தைப் பொறுத்தது, செயலைப் பற்றியது அல்ல. கசாப்புக் கடைக்காரர் நீங்கள் சாப்பிடுவதற்காக ஏதோவொன்றை வெட்டுகிறார் என்றால், அது அவருடைய கர்மா அல்ல; அது உங்களுடைய கர்மா, அப்படித்தானே? ஒரு வீரர் கொலை செய்கிறார் என்றால், அது அவருக்கு இன்பமாக இருப்பதால் அல்ல; என்னுடைய நல்வாழ்விற்காக. அதனால், இது என்னுடைய கர்மா தான், அது உங்களுடையது மட்டுமல்ல. அதை நான் எடுத்துக் கொள்கிறேன், அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.