சத்குரு:

இன்று நம்மால் இத்தனை வகையான உணவுகளை உண்ண முடிகிறது என்றால், அதற்கு அடிப்படை காரணம் நெருப்பை கட்டுப்படுத்தும் நம் திறன் தான். நெருப்பு இல்லையென்றால், சமையல் என்பதே இருந்திருக்காது. இன்றைக்கு உலகில் உள்ள எதை வேண்டுமானாலும் நம்மால் உண்ண முடிகிறது, ஏனென்றால் நெருப்பைப் பயன்படுத்தி அவற்றைப் பக்குவப்படுத்தி நம்மால் உட்கொள்ள முடிகிறது. நாம் நெருப்பை கட்டுப்படுத்த தொடங்கிய கணமே, அது நம் வாழ்க்கைக்குள் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துவிட்டது.

இதன் காரணமாக அக்னி வழிபாடு என்பது உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், ஒவ்வொரு பாரம்பரியத்திலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சில கலாச்சாரங்களில் இது மிக உயர்ந்த நுட்பமான நிலையை எட்டியுள்ளது, மற்றவற்றில் இது ஒரு சக்திவாய்ந்த குறியீடாக மட்டுமே வணங்கப்படுகிறது. நெருப்புக்காக பல கோயில்கள் கட்டப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் அசர்பைஜானில் இருந்தபோது அங்கிருக்கும் அத்தகைய ஒரு நெருப்பு கோயிலுக்கு சென்றிருந்தேன்.

அசர்பைஜானில் அக்னி தலம்

அசர்பைஜான் அக்னி கோயில், Azerbaijan Fire Temple

அசர்பைஜான், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளம் நிறைந்த பூமி. உண்மையில், அசர்பைஜான் என்றால் 'நெருப்பு பூமி' என்று பொருள். அங்கு சில இடங்களில் நிலத்திலிருந்து இயற்கை எரிவாயு தானாகவே கசிந்து வெளியேறி, நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்துகொண்டே இருக்கிறது. இதை சுற்றி ஒரு இந்து அக்னி கோயில் கட்டப்பட்டது. இது பலமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டிருந்தாலும், முதன்முதலாக இருந்த கோயில் சுமார் 8500 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அக்காலத்தில் அசர்பைஜானில் பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் வாழ்ந்து வந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இன்றைய இந்தியா ஆகிய பகுதிகள் அனைத்தும் பொதுவாக 'ஹிந்துஸ்தான்' என்றே குறிப்பிடப்பட்டது. எனவே, மக்கள் இந்த பகுதிகளிலிருந்து பயணம் செய்து, அக்னி கோயிலை சுற்றி வாழ்வதற்கும், அங்கேயே இறப்பதற்கும் வந்தனர். 'இறப்பதற்கு' என்று நான் சொல்லும்போது, இறப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள் என்பதல்ல; ஆனால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லோருமே ஒருநாள் இறக்கிறார்கள். இந்த ஒன்றை பலரும் மறந்துவிட்டார்கள்; மற்றவர்கள் மட்டுமே இறக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் அனைவரும் ஒரு விமான விபத்தில் சிக்கி ஒருசேர இறந்தாலும் கூட, நாம் ஒன்றாக இறப்பதில்லை, தனியாகத்தான் இறக்கிறோம்.

இந்தியாவில் ஒரு பாரம்பரியம் உள்ளது, அதாவது இறக்கும் காலம் வரும்போது, நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடையே இருக்கக்கூடாது, எப்போதும் அவர்களை விட்டு விலகி சென்றுவிட வேண்டும். இது கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றலாம். மேற்கத்திய கலாச்சாரங்களில், உங்கள் முழு குடும்பமும் அங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், மேலும் மறுபுறத்தில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உங்கள் வரவுக்காக ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தபடி காத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இறக்கும் காலம் வரும்போது, நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் இருந்து விலகி சென்றுவிட வேண்டும்; ஏனென்றால் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருந்தால், உங்கள் வாழ்வின் உச்சகட்ட நாடகம் அதுதான் என்று நினைத்துக்கொண்டு, உங்கள் மனதின் நாடகத்தை தொடர்ந்துகொண்டே இருப்பீர்கள்.

உங்கள் மனரீதியான நாடகம் இறுதியானது அல்ல. உங்கள் உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முக்கியமானவை தான், ஆனால் படைத்தலின் அடிப்படையில் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் மனவெளியில் மட்டுமே அவை அர்த்தம் பெறுகின்றன - அதுவும் நமது உருவாக்கத்தின் ஒரு முக்கியமான பகுதிதான். அதை நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. அது உங்களுக்கு முக்கியமே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. நான் கூறுவது என்னவென்றால், படைத்தலின் அடிப்படையில் அதற்கு எந்த முக்கியத்துவம் இல்லை என்பதுதான். நீங்கள் அதை கடந்தால் மட்டுமே உங்களால் நல்ல முறையில் இறக்க முடியும்.

அசர்பைஜான் அக்னி கோயிலின் முக்கியத்துவம்

மக்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டோம் என்பதையும், இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் இறக்கக்கூடும் என்பதையும் உணரும் போது, இறப்பதற்காக ஒரு புனிதமான இடத்திற்கு தாங்களாகவே நடந்து செல்வார்கள். அவர்கள் தங்கள் உறவினர்களோ, குழந்தைகளோ அல்லது வாழ்க்கை துணையோ தங்களைச் சுற்றி இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை; ஏனெனில் இவை அனைத்தும் இங்கே உங்கள் வசதிக்காகவும் சௌகரியத்திற்காகவும் நீங்கள் செய்துகொண்ட ஏற்பாடுகள் மட்டுமே என்பதை அவர்கள் உணர விரும்பினார்கள்; இது உயிரின் இறுதியான இயல்பு அல்ல. உயிரின் உண்மையான இயல்பு என்னவென்றால், நீங்கள் தனியாகவே பிறக்கிறீர்கள், தனியாகவே இறப்பீர்கள். நாம் அனைவரும் ஒரு விமான விபத்தில் சிக்கி ஒருசேர இறந்தாலும் கூட, நாம் ஒன்றாக இறப்பதில்லை. நாம் தனியாகத்தான் இறக்கிறோம். தனிப்பட்ட உயிர் அதன் இயல்புக்கேற்ப தன்னைத்தானே கையாள வேண்டும். கூட்டமாக சேர்ந்து அதை நீங்கள் கையாள முடியாது.

எனவே, மக்கள் தாங்களாகவே விலகிக்கொள்ளும் வகையில் எப்போதும் சக்தியூட்டப்பட்ட தலங்களாகிய காசி அல்லது அசர்பைஜான் அக்னி கோயில் போன்ற புனிதமாக கருதப்படும் இடங்களுக்கு சென்றனர். ஏனெனில், குறைந்தபட்சம் மரணம் வரும் கணத்திலாவது, உடல்ரீதியான மற்றும் மனரீதியான நாடகங்களை கடந்து செல்ல நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் இளமையாக இருக்கும்போது, உங்கள் உடல் ஒரு வகையான நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கலாம்; உக்களுக்கு வயதாகும்போது, அது வேறொரு வகையான நாடகத்தை நடத்தும். இளமையில் அது இன்பங்களின் நாடகமாக இருக்கலாம்; முதுமையில் அது வலிகளின் நாடகமாக இருக்கும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. அவை உங்கள் நரம்பு மண்டலத்தின் இரண்டு பக்கங்கள் மட்டுமே. நீங்கள் அதை ஒரு விதத்தில் தொட்டால், அது இன்பம்; வேறொரு விதத்தில் தொட்டால் அது வலி. ஒரே விஷயம் தான் இரண்டு வெவ்வேறு வழிகளில் நிகழ்கிறது.

வலி மற்றும் இன்பம், துன்பம் மற்றும் பிணைப்பின் நாடகத்தைக் கடந்து செல்வதற்கு, நீங்கள் அதுபோன்ற இடங்களுக்கு விலகி செல்வது முக்கியமானது; ஆகவே இந்த கோயில்கள் உருவாக்கப்பட்டன.

திருவண்ணாமலை - இந்தியாவில் இருக்கும் அக்னி கோயில்

திருவண்ணாமலை, Tiruvannamalai

நெருப்பு தத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான கோயில் தென்னிந்தியாவில் உள்ள அருணாசலம். இது அற்புதமான கட்டிடக்கலையின் தலைசிறந்த ஒரு படைப்பாகும். இந்த கோயில் அறிவுபூர்வமான விதத்தில் புவிசார் பொறியியல் ரீதியாக - அதாவது இந்த பூமி எவ்வாறு சுழல்கிறது என்பதை புரிந்துகொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோடை கதிர்திருப்பத்தன்று மட்டும், சூரிய ஒளி அருணாசலத்தின் முகத்தில் - இங்கு 'அக்னி தெய்வமாக' இருக்கும் சிவனின் திருவுருவத்தின் மீது விழுமாறு அவர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.

தென்னிந்தியாவில் நீங்கள் காணக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். நீங்கள் அங்கு வழிபாடு செய்வதற்காக செல்வதில்லை, மாறாக மூன்று அடிப்படை நெருப்புகளால் உங்களையே தூண்டிக்கொள்ளச் செல்கிறீர்கள்; இதன் மூலம் பொதுவாக பேசப்படாத நெருப்பின் நான்காவது பரிமாணம் - உங்கள் வசப்படுகிறது.

இந்த கோயில் அருணாச்சல மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மிகவும் வியக்கத்தக்க இது ஒரு அழிந்துபோன எரிமலை. இந்த எரிமலையின் புவியியல் சார்ந்த வரலாறு குறித்தோ அல்லது இது எவ்வளவு காலத்திற்கு முன்பு செயலிழந்தது என்பது குறித்தோ எனக்கு தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயலிழந்திருக்க வேண்டும். இருப்பினும், இன்றும் இது ஒரு நெருப்பு மலை என்பதை மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.

இது ஒரு எரிமலை என்ற இந்த நினைவு எப்படியோ தொடர்ந்து கடத்தப்பட்டு வந்துள்ளது. ஏனெனில், மக்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்த பூமியின் மிகச்சில கலாச்சாரங்களில் இந்தியாவும் ஒன்று. அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதை மிகவும் மதித்தார்கள். அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் தன்மையில் இருந்ததில்லை. எங்காவது ஒரு தங்க மலை கிடைப்பதாக இருந்தாலும் கூட, அவர்கள் செல்லமாட்டார்கள். தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்திலேயே அவர்கள் தங்கியிருக்க விரும்பினார்கள். இதன் காரணமாகவே, அவர்கள் இப்போதும் நினைவில் வைத்திருக்கின்றனர். இன்றும் கூட, கோயிலை விட மலையே அதிக வழிபாட்டிற்கு உரியதாக இருக்கிறது. அப்படித்தான் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

குறிப்பு:

மூன்று அடிப்படை நெருப்புகள் மற்றும் நெருப்பின் நான்காவது பரிமாணம் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் படியுங்கள்.