உள்ளடக்கம்
1. அக்னியின் வகைகள்
1.1 ஜடராக்னி
1.2 சித்தாக்னி
1.3 பூதாக்னி
1.4 சர்வாக்னி
2. ஆகாய பூதத்தை நெருப்பின் மூலம் எவ்வாறு அடைவது?
3. நெருப்பிற்கும் ஆகாயத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு
4. ஆரத்தியின் முக்கியத்துவம்
5. யோகக் கலாச்சாரத்தில் நெருப்பு
6. உங்களுக்குள் இருக்கும் பூதங்களுள் நெருப்பைத் தொடுவது

சத்குரு:

எந்தவொரு சமூகத்திலும், "நெருப்பு" என்ற வார்த்தையை சத்தமாக உச்சரிப்பது மிகுந்த ஆர்வத்தை உருவாக்குகிறது. நெருப்பு பொதுவாக ஆபத்தாக கருதப்படுகிறது - நீங்கள் அதை சரியாக கையாளவில்லை எனில்! அக்னி எனப்படும் இந்த நெருப்பின் பஞ்சபூத அடிப்படையிலான பரிமாணத்தைப் பற்றி பார்க்கலாம் - அதன் வெளிப்பாடுகள், அதை கையாள்வதற்கான வழிகள் மற்றும் அனைத்திற்கும் மேலாக, அதை ஆளுமையில் எடுக்கும் வழிகள். பஞ்சபூதங்களில், மனித உடலின் கலவையில் நெருப்பு மிகச்சிறிய விகிதாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், அதன் தாக்கம் மிகப்பெரியது.

பஞ்சபூதங்களில், மனித உடலின் கலவையில் நெருப்பு மிகச்சிறிய விகிதாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், அதன் தாக்கம் மிகப்பெரியது.

பல வழிகளில், நெருப்பு உயிரைக் குறிக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா அல்லது இறந்துவிட்டீர்களா என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறி, நெருப்பு இன்னும் உங்களிடம் இருக்கிறதா, அல்லது உங்கள் உடல் குளிர்ந்துவிட்டதா என்பதுதான். இந்த பூமியிலுள்ள உயிர்கள், அடிப்படையில் சூரிய சக்தியால் இயங்குகின்றன. சூரியன் என்பது இந்த பூமியிலுள்ள உயிர்களுக்கு எரிபொருளாக இருக்கும் ஒரு பெரிய நெருப்பு பந்து. எல்லா இயந்திரமும், அது வேலை செய்யும்போது, எப்போதும் வெப்பத்தை உருவாக்குகிறது. ஏனெனில், அடிப்படையில் நெருப்பு தான் எரிபொருள். நீங்கள் அதை மின்சாரம், பெட்ரோல், மரம், நிலக்கரி அல்லது வேறேதேனும் ஒன்று என்று அழைக்கலாம். ஆனால் அடிப்படையில், உங்கள் உடல் உட்பட எந்த இயந்திரத்தையும் இயக்க அனுமதிப்பது நெருப்புதான்.

அக்னி தேவன், Agni Devan

இந்த கலாச்சாரத்தில், நெருப்பு அக்னி தேவனாக உருவகப்படுத்தப்படுகிறது. இது ஒரு எரியும் ஆட்டுக்கடாவின் மீது சவாரி செய்யும் இரு முகக் கடவுள். இந்த இரண்டு முகங்கள் நெருப்பை உயிர் கொடுப்பவராகவும், உயிர் எடுப்பவராகவும் குறிக்கும் அடையாளச் சின்னங்கள். நமக்குள் எரியும் நெருப்பு இல்லாமல், வாழ்க்கை இல்லை. ஆனால் நீங்கள் கவனம் கொள்ளாவிட்டால், நெருப்பு விரைவாக கட்டுப்பாட்டை இழந்து எல்லாவற்றையும் விழுங்கிவிடும். அது நம் உடலை எரிக்கும்போது, அது தகனம் என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு அம்சம் என்னவென்றால், நாம் சமைக்க நெருப்பைப் பயன்படுத்துகிறோம். இதனால் நாம் உண்ணக்கூடிய நிலையில் இல்லாத அல்லது சுவையாக இல்லாத உணவுகளையும் சமைத்து உண்ண முடியும்.

அக்னியின் வகைகள்

#1 ஜடராக்னி

உள்ளேயும் வெளியேயும் நெருப்பின் பல பரிமாணங்கள் உள்ளன. நமக்குள் எரியும் மூன்று வகையான நெருப்புகளைப் பார்ப்போம். ஒன்று ஜடராக்னி என்று அழைக்கப்படுகிறது. ஜாடரா என்றால் வயிறு அல்லது செரிமான செயல்முறை என்று பொருள். உங்கள் வயிற்றில் சிறிது நெருப்பு இல்லாமல், நீங்கள் உண்ணும் உணவை உங்களால் ஜீரணிக்க முடியாது. உங்களுக்குத் தேவையான சக்தியை வெளியிடுவதற்காக நீங்கள் உடைக்க வேண்டிய ஒரு எரிபொருளாக உணவு செயல்படுகிறது. செரிமான நெருப்பு நன்கு ஊட்டமளிக்கப்பட்டு, எரிபொருளால் நன்கு நிரப்பப்பட்டிருந்தால், அது இனப்பெருக்க நெருப்பாகவும் மாறுகிறது. செரிமானம் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் ஜடராக்னியைச் சார்ந்தவையாக உள்ளன.

#2 சித்தாக்னி

இரண்டாவது வகையான உள்நிலை நெருப்பு சித்தாக்னி என்று அழைக்கப்படுகிறது. இது மனம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பரிமாணம். சித்தம் என்பது உங்களுக்குள் உள்ள புத்திசாலித்தனத்தின் ஒரு பரிமாணம், இது உடல் வடிவத்தின் எல்லைகளைக் கடந்து செல்கிறது. உங்கள் உடல் வடிவம் என்பது, உங்கள் மரபணு மற்றும் உங்கள் கர்ம பதிவுகளின் ஒரு விளைவு. இதற்கு மாறாக, சித்தா என்பது பதிவுகளால் களங்கப்படுத்தப்படாத புத்திசாலித்தனத்தின் ஒரு பரிமாணமாகும். புத்திசாலித்தனத்தின் நெருப்பு பல்வேறு நிலைகளில் வெளிப்படலாம், வெளிப்பாட்டின் முதல் நிலை அறிவாற்றல்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்குள் உள்ள வெவ்வேறு வகையான நெருப்புகளைப் பார்த்தோம் என்றால், உங்கள் செரிமான நெருப்பு நன்றாகச் செயல்பட்டால் மட்டுமே, இனப்பெருக்க நெருப்பு செயலிற்கு வரும். நீங்கள் நன்கு ஊட்டமளிக்கப்படாவிட்டால், இனப்பெருக்க உள்ளுணர்வுகள் மறைந்துவிடும். இதேபோல், உங்கள் சித்தாக்னி போதுமான அளவு எரியவில்லை என்றால், உங்கள் அறிவாற்றல் பலவீனமாகவும் செயலற்றதாகவும் ஆகிவிடும். இருப்பினும், உங்கள் சித்தாக்னி தூண்டப்பட்டால், நீங்கள் புத்திசாலித்தனத்தின் பிற பரிமாணங்களை உணர்வுபூர்வமாக அணுகும் நிலையில் இல்லாவிட்டாலும் கூட, அது புத்திசாலித்தனத்தின் வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். உங்கள் சித்தாக்னி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தால், உணவு, பாலியல் மற்றும் உடலின் பிற விஷயங்களில் நீங்கள் ஆர்வத்தை இழப்பீர்கள். இந்த அடிப்படையில், துரதிருஷ்டவசமாக துறவு என்று பிரச்சாரம் செய்யப்படுவது, உண்மையில் எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்.

புத்திசாலித்தனத்தின் நெருப்பு உங்களுக்குள் எரிவது முக்கியம். புத்திசாலித்தனத்தின் நெருப்பு இல்லாமல் உங்களுக்குள் பொருள்தன்மை சார்ந்த நெருப்பு மட்டுமே எரியும்போது, வாழ்க்கை துயரமாகவும் அசிங்கமாகவும் மாறும். ஜடராக்னி அதிகமாகவும், போதுமான சித்தாக்னி இல்லாமலும் இருந்தால், மக்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வார்கள்.

#3 பூதாக்னி

நெருப்பின் அடுத்த பரிமாணம் பூதாக்னி. உங்கள் பூதாக்னி இயக்கத்தில் இருந்தால், உடல் மற்றும் மனதின் சர்க்கஸ் உங்களுக்கு அதிக அர்த்தம் தராது. உங்கள் ஆர்வமும் கவனமும் உடல் மற்றும் மனதின் கேளிக்கைகளில் இருந்து படைப்பின் மிக அடிப்படை அம்சமான உயிரின் மூலத்திற்கு மாறும். நீங்கள் ஜடராக்னியை சரியாக வைத்திருந்தால், ஆரோக்கியமான மற்றும் வலிமையான உடலைப் பெறுவீர்கள். உங்கள் சித்தாக்னியை சரியாக வைத்திருந்தால், நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு மனது உங்களுக்கு இருக்கும். உங்கள் பூதாக்னியை சரியாக வைத்திருந்தால், வாழ்க்கையின் செயல்முறையில் உங்களுக்கு அடிப்படையான ஆளுமை இருக்கும்.

உடலின் எல்லைகள் மிகவும் தெளிவானவை மற்றும் வரையறுக்கப்பட்டவை. மனதின் எல்லைகள் பெரிதானவை. உதாரணமாக, உலகின் மற்றொரு பகுதியைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால், அது உங்கள் மனதின் எல்லைக்குள் உள்ளது. உங்கள் அறிவு விரிவடையும் போது, உங்கள் மன எல்லைகள் விரிவடையும். ஆனால் பூதாக்னி அல்லது அடிப்படை நெருப்பின் பரிமாணத்தை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு எல்லையற்ற நபராக இருப்பீர்கள், ஏனென்றால் பஞ்சபூதங்களின் செயல்பாடு படைப்பு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கிறது.

#4 சர்வாக்னி

இதற்கு அப்பால், சர்வாக்னி என்ற ஒன்று உள்ளது, ஏனென்றால், நவீன அறிவியலின் படி, இருப்பின் பொருள்நிலையிலான பரிமாணம் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் முழு பொருள்நிலை பரிமாணத்தையும் நீங்கள் அறிந்திருந்தால், இருப்பின் ஐந்து சதவீதம் மட்டுமே உங்களுக்குத் தெரியும். மூலக்கூறுகள் இல்லாத, நீங்கள் அறிந்திருக்கும் படைப்பு இல்லாத, அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொருள்தன்மை இல்லாத பரிமாணத்தை சர்வாக்னி தொடுகிறது.

பொதுவாக, உயிரின் தன்மையை அடைய விரும்பும் ஒரு யோகி ஜடராக்னி, சித்தாக்னி மற்றும் பூதாக்னி ஆகியவற்றில் கவனம் செலுத்தமாட்டார். அவர் சர்வாக்னியில் மட்டுமே கவனம் செலுத்துவார், ஏனென்றால் இது உச்ச நெருப்பு - ஆனால் அது ஒரு குளிர்ந்த நெருப்பு. ஜடராக்னி என்பது மிகவும் வெளிப்படையான நெருப்பு. சித்தாக்னி குறைவான வெளிப்படைத் தன்மையுடையது, ஆனால் மிக அதிகமாக உள்ளது. பூதாக்னி அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை, ஆனால் மிக அதிகமாக இருக்கிறது. சர்வாக்னியை உணர முடியாது, ஆனால் அது இல்லாமல் எதுவும் நடக்காது. அது அடிப்படையான மற்றும் உச்சபட்ச நெருப்பு. இது மற்ற அனைத்து நெருப்புகளையும் உள்ளடக்கியது.

ஆகாஷ் பூதத்தை நெருப்பு மூலம் அடைவது எப்படி?

நெருப்பு என்பது ஆகாஷ் அல்லது ஈதர் எனும் சூட்சும பரிமாணத்திற்கு மிக நெருக்கமான ஒரு அம்சம். நெருப்பு இருக்கும் இடத்தில் ஆகாஷிக் அல்லது எத்திரிக் எனும் பரிமாணம் மிகவும் அணுகக்கூடியதாக உள்ளது - குறிப்பாக சில எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டால். தென்னிந்தியாவில், நாம் ஒரு விளக்கு வைக்க நெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்துகிறோம். இரண்டும் கிடைக்கவில்லை என்றால், கடலை எண்ணெய்; அதுவும் கிடைக்கவில்லை என்றால், தேங்காய் எண்ணெய். இதுபோன்ற எண்ணெய் சார்ந்த தீ ஒரு குறிப்பிட்ட தரத்தைக் கொண்டுள்ளது. அவை மற்ற எரிபொருட்களை விட ஒப்பீட்டளவில் அதிக smoke pointஐ கொண்டுள்ளன. அதனால் தான், நீங்கள் சுடரின் விளிம்பைப் பார்த்தால், நீங்கள் சுடரின் உள்ளே பார்க்கவேண்டியதில்லை - எத்திரிக் பரிமாணம் அதிகமாக அணுகக்கூடியதாக உள்ளது.

நீங்கள் ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்க விரும்பும்போதெல்லாம், முதலில் ஒரு எண்ணெய் அல்லது நெய் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இது இந்தியர்களுடைய வாழ்க்கையின் ஓர் அங்கம். மேலும் விளக்கின் எரிபொருள் அதிகபட்ச நன்மைக்காக, ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்க வேண்டும். மெழுகுவர்த்திகள் பொதுவாக அதே பலனைக் கொண்டிருப்பதில்லை, குறிப்பாக அவை இரசாயன மெழுகால் செய்யப்படுகின்றன. அடிப்படையில், நீங்கள் செய்ய முயற்சிப்பது என்னவென்றால், தன்னைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட ஆராவை உருவாக்கும் ஒரு பொருளைக் கொண்டு நெருப்பை உருவாக்குவதாகும், இதனால் ஆகாஷ் அணுகும் விதத்தில் இருக்கும்.

ஒரு எண்ணெய் விளக்கு மூலம், நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களும் பயனடையக்கூடிய ஒரு ஆகாஷிக் சூழலை உருவாக்குகிறீர்கள். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பொதுவாக ஆரோக்கியத்திற்காக, உங்கள் வீட்டில் எண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பது முக்கியம். அத்தகைய நெருப்பு உடலின் ஆரோக்கியத்தையும் வலிமையையும் அதிகரிப்பதற்காக உங்கள் ஜடராக்னியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சித்தாக்னியையும் மற்றும் ஆகாஷ் தன்மை கிடைக்கப்பெறும் வாய்ப்பையும் மேம்படுத்துகிறது.

பஞ்சபூதங்களில் நெருப்புக்கும் ஆகாஷுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு

இந்த கலாச்சாரத்தில், மக்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்தும் நெருப்பைச் சுற்றியே நிகழ்ந்தன. நெருப்பு இல்லாமல், வழிபாடு இல்லை, திருமணம் இல்லை, குறிப்பிடத்தக்க நிகழ்வு இல்லை. பூஜைகள் மற்றும் ஹோமங்கள் போன்ற அர்ப்பணம் செய்வதற்கான நெருப்பு உட்பட பல்வேறு வெளிப்பாடுகளும் நெருப்பைப் பயன்படுத்துவதற்கான வழிகளும் இந்த கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டன. ஆகாஷ் அல்லது ஈதர் எனும் சூட்சும தன்மையை கூடுதலாக அணுகக்கூடியதாக நெருப்பு மாற்றுகிறது.

நம்மை உருவாக்கியுள்ள பஞ்சபூதங்கள் அனைத்திலும், ஆகாஷ் மிகவும் ஒளி ஊடுறுவும் தன்மையிலும், நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையிலும் உள்ளது. என் உடலிலும் உங்கள் உடலிலும் உள்ள பூமியானது அடிப்படையில் ஒன்றேயாகும். ஆனால் உங்கள் உடல் கொண்டிருப்பதும், எனது உடல் கொண்டிருப்பதும் என்ன என்பதைப் பொறுத்து, அது தனித்துவமானதாகிறது. உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள நீர் தனித்துவமானது - அது இப்போது வெவ்வேறு கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறலாம். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றைப் பிரிக்க முடியாது. இது எல்லா நேரத்திலும் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

நாம் கொண்டுள்ள நெருப்பு அம்சம் இன்னும் பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆகாஷிக் அம்சம் முற்றிலும் பகிரப்படுகிறது. நாம் அனைவரும் ஒரே ஆகாஷில் இருக்கிறோம். எந்தவொரு சூழலிலும் நீங்கள் ஆகாஷிக் அம்சத்தை மேம்படுத்தினால், மனிதர்களிடையே ஒரு குறிப்பிட்ட பிணைப்பு ஏற்படுகிறது. நெருப்பைச் சுற்றி, ஒருங்கிணைப்பும் தொடர்பும் பெரிதும் மேம்படுகின்றன, ஏனென்றால் நெருப்பு இருக்கும் இடத்தில், ஆகாஷ் அம்சம் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆரத்தியின் முக்கியத்துவம்

ஆரத்தி, Arati, நெருப்பு, அக்னி, Agni in Tamil

கேள்வியாளர்: இந்தியாவில், மக்கள் ஒரு குருவின் முன்பாக, ஒரு கடவுளின் புகைப்படம் அல்லது சிலையின் முன்பாக ஆரத்தி அர்ப்பணிக்கிறார்கள். பின்னர் அவர்கள் தங்கள் கைகளை விளக்கைச் சுற்றிக் காட்டி, பின்னர் தங்கள் கைகளால் கண்கள் அல்லது தலையைத் தொடுகிறார்கள். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? ஆரத்திக்குப் பிறகு நெருப்பில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா?

சத்குரு: நெருப்பு மாறுகிறது என்பதல்ல, ஒரு குறிப்பிட்ட வடிவம் குறிப்பிட்ட ஆற்றலை வெளிப்படுத்தினால், அதனுடன் வெறுமனே தொடர்புகொள்ள உங்களுக்குத் தெரியாது அல்லது அந்த திறன் உங்களுக்கு இருப்பதில்லை. நீங்கள் அதனுடன் இணைய விரும்பினால், உங்கள் இருவரையும் ஒன்றிணைக்க நெருப்பு ஒரு நல்ல ஊடகம். நாம் கூறியது போல், பிணைப்பிற்கு நெருப்பு பல வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருப்பு இல்லாமல் இந்தியாவில் திருமணம் இல்லை, ஏனெனில் இது மக்களை ஒன்றிணைக்க ஒரு பிணைப்பாக பயன்படுத்தப்படுகிறது.

உடல்ரீதியாக இருந்தாலும், உணர்ச்சிரீதியாக இருந்தாலும், ஆன்மீகரீதியாக இருந்தாலும், நெருப்பு இல்லாமல் ஒன்றிணைதல் என்பது இல்லை. இதை மேலும் ஆராய்ந்தால், ஒரு குறிப்பிட்ட வடிவம், ஒரு படமாகவோ அல்லது ஒரு தெய்வ வடிவமாகவோ ஒரு குறிப்பிட்ட சக்தியை வெளிப்படுத்தினால், நெருப்பு அதைப் பெறுவதற்கு உங்களைத் திறந்த நிலையில் வைத்திருப்பதற்கான ஒரு நல்ல வழியாக உள்ளது. சிலர் லிங்கபைரவியின் வீற்றிடத்திற்கு சென்று அங்கு நின்றால், அவர்கள் தொடர்புகொள்ள முடியும் என்பதற்காக நெருப்பு வைத்து ஆரத்தி செய்யப்படுவதை நீங்கள் காண்பீர்கள். நெருப்பு இல்லாமல் அவள் தொடர்புகொள்ள மாட்டாள் என்பதல்ல - அவள் செய்வாள் - ஆனால் அது உங்களை உகந்த ஒரு விதமாக மாற்றுகிறது. தெய்வத்தைச் சுற்றி காண்பிக்கப்படும் நெருப்பைச் சுற்றியுள்ள ஆகாஷ் தெய்வீகத்தின் ஒரு தன்மையைப் பெற்றுள்ளது.

எனவே, அது உங்களிடம் வரும்போது, நீங்கள் உங்கள் கையை நெருப்பில் வைக்கவில்லை; நீங்கள் அதைச் சுற்றி உள்ள ஆகாஷை எடுத்து உங்கள் கண்களில் அல்லது உங்கள் தலையின் மேற்புறத்தில் அல்லது உங்கள் இதயத்தில் வைக்கிறீர்கள். நீங்கள் தெய்வீகத்தின் சில கூறுகளை உங்கள் சொந்த நலனுக்காக எடுக்க முயற்சிக்கிறீர்கள், அதை எடுத்து அதை உங்களின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிக்கிறீர்கள். ஆரத்தி செயல்முறை முழுவதும் இந்த திசையிலான ஒரு முயற்சியே. இவை அனைத்தும் ஒரு நபர் மெதுவாக தங்கள் சுய நெருப்பை உருவாக்க உதவக்கூடிய வெவ்வேறு விஷயங்களாகும்.

யோகக் கலாச்சாரத்தில் நெருப்பு

உலகம் முழுவதும் பல கோவில்கள் நெருப்புக்காக கட்டப்பட்டன. மந்திரங்களின் வடிவத்தில் நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த அதிர்வுகளைப் பயன்படுத்தினால், நெருப்பு தோராயமாக அந்த வடிவத்தை எடுக்கும். திடீரென்று உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட சுதந்திரமும் விடுதலையும் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். யோகக் கலாச்சாரத்தில், வெளிப்புற நெருப்பு பற்றவைக்கப்படாமல், உள்நிலை நெருப்புகள் அனைத்தும் பற்றவைக்கப்படும் விதமாக பல்வேறு செயல்முறைகள் உள்ளன, யோகிகள் "தபஸ்" செய்து கொண்டிருந்தார்கள் என்று பண்டைய காலங்களிலிருந்து நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். தபம் என்ற சொல்லுக்கு வெப்பம் அல்லது நெருப்பு என்று பொருள். எனவே, நீங்கள் உங்கள் சொந்த நெருப்பை உருவாக்குகிறீர்கள். உள்நிலை சாத்தியங்கள் அவ்வளவு பெரியதாக இல்லாதபோது வெளிப்புற உதவி தேவைப்படுகிறது, ஆனால் உள்நிலை சாத்தியங்கள் உருவாக்கப்பட்டால், வெளிப்புற உதவி தேவையில்லை.

உங்களுக்குள் இருக்கும் நெருப்பு அம்சத்தைத் தொடுவது

சுருக்கமாகச் சொல்வதென்றால்: அளவின் அடிப்படையில் நெருப்பு உங்களில் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும், தரத்தின் அடிப்படையில், அதன் தனித்துவமான தன்மையால் அது மிகவும் முக்கியமானது. நெருப்பைத் தொடுவதற்கான உங்கள் திறன் மிகச் சிறியது. அதே நேரத்தில், பஞ்சபூதங்களில் நெருப்பில் தான் மிகவும் அதிக உணர்திறனைக் கொண்டுள்ளீர்கள். நெருப்பு என்பது தொடர்பு கொள்வதற்கான சூழலை உருவாக்க, கிரகிப்புத்திறனை உருவாக்க, எல்லைகளைக் கடக்க, மற்றும் தெய்வீகம் அல்லது கடவுள் என்று நீங்கள் அழைக்கக்கூடிய அல்லது படைப்பின் மூலமாக நீங்கள் கருதும் மற்றொரு பரிமாணத்தைத் தொடுவதற்கான ஒரு வழி.

Agni Devan image from Wikimedia

குறிப்பு:

பூதசுத்தி பற்றிய இந்த விரிவான குறிப்பேட்டில், பஞ்சபூதங்களைத் தூய்மைப்படுத்துவது பற்றியும், அது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தும் என்பது பற்றியும் மேலும் அறியுங்கள்.