பள்ளிகளில் புதிய பருவம் துவங்குவதால், ​​மாணவர்கள், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் ஒரு முறை கல்விச் சுமையை எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமுதாயம் மற்றும் தங்களது சொந்த எதிர்பார்ப்புகளின் சுமையத் தாங்க முடியாமல், 9000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர். சர்வதேச யோகா தினத்தன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் பேசியபோது, சத்குரு அவர்கள் வழங்கிய செய்தி இதுதான். அவர் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம், ஒரு இணக்கமான உடல் மற்றும் சமநிலையான மனத்தைப் பெற தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்வதில் செலவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சத்குரு:

அன்பான பெற்றோர்களே...

நீங்கள் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் பயத்திலிருந்து வந்தவையே. உங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெறவில்லை என்றால், அவர்கள் வீதிக்கு வந்துவிடுவார்கள் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். ஒரு பெற்றோராக, உங்கள் கவலை சரியானது என்பதை நான் அறிவேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சமூகமாக, வாழ்க்கையில் யாரும் நசுக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு வலை இன்னும் நம்மிடம் இல்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று விஷயங்கள் மேம்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பொருளாதாரத்தில், 8-10 சதவீத வளர்ச்சியில் இருக்கிறோம். இதன் பொருள் என்னவென்றால், அடிப்படைத் தேவைகளுக்கு எப்படிச் சம்பாதிப்பது என்பது பற்றிய உங்கள் கவலைகள் அனைத்தும் குறைந்துவிடும். ஒரு நிறைவான வாழ்க்கையை எப்படி உருவாக்குவது என்பதைத்தான் இப்போது நீங்கள் பார்க்க வேண்டும். ஒருவர் தனது இதயத்தையும், உயிரையும் தான் செய்யும் செயலில் ஈடுபடுத்த முடியாவிட்டால், அந்த செயல் மூலம் யாராலும் ஒரு நிறைவான வாழ்க்கையை உருவாக்க முடியாது. எனவே பொருளாதார ரீதியாக அது எவ்வளவு நம்பிக்கையற்றதாகத் தெரிந்தாலும் அதைப்பற்றிக் கவலையுறாமல், ஒரு மாணவர் தான் செய்ய விரும்புவதைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

உங்களது குழந்தை எப்படி அமர்கிறார், நிற்கிறார், சிந்திக்கிறார், சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கிறார் என்பதில் நீங்கள் உண்மையிலேயே கவனம் செலுத்தினால், அவர்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நண்பர்களாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் நட்பு, நீங்கள் விரும்புவதை அடைவதற்கான ஒரு தந்திரம் தான் என்றால், நீங்கள் ஒரு நல்ல நண்பர் அல்ல.

நீங்கள் உண்மையான நண்பராக இருந்தால், நீங்கள் உங்கள் குழந்தையின் வாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பீர்கள், நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் உண்மையிலேயே உங்கள் குழந்தை எப்படி அமர்ந்திருக்கிறது, நிற்கிறது, சிந்திக்கிறது, சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கிறது என்பதில் கவனம் செலுத்தினால், அவருக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இப்போதைக்கு, உங்களிடம் இருப்பது ஒரு வழக்கமான சூத்திரம் – மருத்துவம் மற்றும் பொறியியல்! உண்மையிலேயே ஒருவருக்கு இது தேவை தானா என்பதைக் கூட அறியாமல், நீங்கள் இந்த சூத்திரத்தை அந்த உயிரின் வாழ்வில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறீர்கள்.

இதை முயற்சி செய்யுங்கள்: உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்களை யோகாவில் முதலீடு செய்யட்டும். யோகா என்பது குழந்தைகள் கல்விப் பந்தயத்திலும் சிறப்பாக செயல்பட உதவும் ஒரு கருவி. இது உள் சமநிலை, மிகக் கூர்மையான அறிவு, மேம்பட்ட கவனம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஷாம்பவி மஹாமுத்ரா (ஒரு சக்திவாய்ந்த கிரியா) செய்தவர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, அதில் மூன்று மாதங்களில், மூளையில் நரம்பியல் மீளுருவாக்கம் வழக்கமாக மனிதர்களுக்கு இருப்பதைவிட 241% அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. எனவே, சிறிதளவு யோகா செய்வதன் மூலம் உங்கள் குழந்தை மிகவும் புத்திசாலியாகவும் சமநிலையுடனும் இருப்பார் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கவனம் சிதறமாட்டார்கள்; அவர்கள் தங்கள் ஹார்மோன்களை சிறப்பாக நிர்வகிப்பார்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் முதலீடு செய்யுங்கள், ஆறு மாத பயிற்சியில், குழந்தை ஒரு நாளில் குறைந்தது 2 - 2½ மணிநேரம் கூடுதலாகப் பெற்றிருப்பார். மற்றும் ஒரு வருடப் பயிற்சியில், ஒரு நாளைக்கு 4 - 5 மணிநேரம் கூடுதலாகப் பெற்றிருப்பார், ஏனென்றால் அவர்கள் விஷயங்களை மிகவும் திறனுடன் செய்வார்கள். இது நிகழும்போது நீங்களும் கொஞ்சம் யோகாவை முயற்சி செய்யுங்கள். இது உங்கள் பதற்றத்தைக் குறைக்கவும், சக பெற்றோரின் அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவும்.

ஒவ்வொரு குழந்தையும் தன்னைக் கொன்றுகொள்ள நினைக்காமல் தனது முழுத் திறனுக்கும் உழைக்க வாய்ப்புள்ள ஒரு உலகத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அர்ப்பணிப்பு தேவை. பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிடுவதால் மட்டும் இது நிகழ்ந்துவிடாது. அப்படி ஒரு உலகத்தைச் சாத்தியப்படுத்தும் நோக்கில் நாம் செயல்படுவோம்.

அன்புக் குழந்தைகளே...

நான் ஒரு உண்மையைச் சொல்லி ஆரம்பிக்கலாமா? நீங்கள் உங்களது பிரச்சனைகளை கொஞ்சம் அளவுக்கதிகமான விதத்தில் தான் சித்தரித்துக் கொள்கிறீர்கள். உங்களது பெற்றோர்கள் எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரிவதில்லை. உங்களுக்கு வேண்டியதை வழங்கவும், உங்கள் வாழ்க்கை தொடர்ந்து இயங்கவும், அனைத்தையும் நிகழச் செய்யவும், அவர்கள் செய்யவேண்டியிருக்கும் வித்தைகளை நீங்கள் கற்பனை கூட செய்யமுடியாது, அப்படி இருந்தும், அவர்கள் உங்களிடம் இனிமையாக நடந்துகொள்ள முயல்கிறார்கள்.

"நான் ஒரு பொறியியலாளர் ஆகாமல் போகலாம், ஆனால் கவலைப்படாதீர்கள், நான் என் வாழ்க்கையில் நன்றாக இருப்பேன்" என்ற நம்பிக்கையை நீங்கள் உங்கள் பெற்றோருக்குத் தருவது உங்கள் கைகளில் உள்ளது.

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம் பிரச்சனையை உண்டாக்காதீர்கள் - நீங்கள் இதைப் படிக்கிறீர்களோ அல்லது அதைப் படிக்கிறீர்களோ, இதில் என்ன இருக்கிறது? "நான் ஒரு பொறியியலாளர் ஆகாமல் போகலாம், ஆனால் கவலைப்படாதீர்கள், நான் என் வாழ்க்கையில் நன்றாக இருப்பேன்" என்ற நம்பிக்கையை உங்கள் பெற்றோருக்குத் தருவது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் அவர்களுக்கு இந்த உறுதியை கொடுக்க முடிந்தால், அது உடனடியாக விஷயங்களைச் சரிசெய்துவிடாமல் இருக்கலாம், ஆனால் இறுதியில் அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். இப்போது,​​உங்களில் பலரால் அவர்களுக்கு இந்த நம்பிக்கையைக் கொடுக்க முடிவதில்லை. நீங்கள் இறுதியில் தெருவிற்குத்தான் வரப்போகிறீர்கள் என்று நம்புவதால், அவர்கள் பதறுகிறார்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு சிறந்ததாக நினைப்பதை நீங்கள் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் விரும்பும் வேறு ஏதாவது துறையில் உங்கள் திறமையைக் காட்டி, அவர்களிடம், "கவலைப்படாதீர்கள்" என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:

நீங்கள் வணங்கும் சிவனோ, ராமனோ, கிருஷ்ணனோ அல்லது இயேசு கிறிஸ்துவோ இவர்கள் எவரும் IIT அல்லது வேறு எந்த தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை. நீங்கள் அவர்களை வணங்குவதற்குக் காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்தவர்கள் என்பதால் தான். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் - நன்றாக வாழுங்கள். மனித உடல் தான் இந்த பூமியில் இருப்பவற்றில் அதிநவீன இயந்திரம். பிரச்சனை என்னவென்றால், இந்த சிறப்பு கணிப்பொறியின் பயனர் கையேட்டை நீங்கள் படிக்கக்கூட இல்லை. யோகா தான் அந்தப் பயனர் கையேடு. இது நீங்கள் உள்நிலையில் சமநிலையில் இருக்க உதவும், இது இயல்பாகவே உங்களை ஆனந்தமாக வைத்திருக்கும். நீங்கள் செய்வதை சிறப்பாக செய்ய உதவும். செய்வதை சிறப்பாக செய்வதில் ஒரு வெற்றி இருக்கிறது. நீங்கள் மற்றவர்களை விட மேம்பட்டவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களால் இயன்ற அளவு சிறந்தவராக இருப்பீர்கள். இப்படி இருக்கும்போது வாழ்க்கை உங்கள் மீது எறியும் எதையும் உங்களால் நேர்த்தியாக கையாள முடியும்.

அன்புள்ள ஆசிரியர்களே...

நமது கல்வி முறை நீங்கள் சிறந்ததாக நினைப்பதைச் செய்வதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கவில்லை. இந்தக் கல்விமுறை மற்றும் பெற்றோர்கள் வைத்திருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பினால், சில சமயங்களில், மாணவர்களுடன் நீங்கள் கூடுதலாக ஒரு வார்த்தை பேசக்கூட உங்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஆனால் இத்தனை சவால்களிலும் கூட, நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு மனிதனை அவனது முழுத் திறனுக்கும் வளர்த்தெடுத்து ஒரு மாற்றத்தை உருவாக்க உங்களால் முடியும். ஒரு மூன்று நிமிடங்கள் உங்கள் மாணவர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பார்க்க, உண்மையாகப் பார்க்க, நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எந்த ஒரு சிறிய செயலால் அல்லது வார்த்தையால், ஒரு சரியான தருணத்தில் என் முன்னிருக்கும் இந்தக் குழந்தைகளை ஊக்கப்படுத்த முடியும் என்று ஒவ்வொரு ஆசிரியரும் பார்க்க வேண்டும்.

இப்போதிருக்கும் நமது கல்வி முறை, தகவல்களை வழங்கும் விதமாக மட்டுமே உள்ளது. இந்தத் தகவலை நீங்கள் பலவிதமான வழிகளில் வழங்க முடியும். ஆனால் உங்களிடம் கற்றுக்கொள்ள வரும் இந்த இளைஞர்களுக்குள் ஒரு சிறிய உத்வேகத்தை உங்களால் கவனத்தோடு பற்றவைக்க முடிந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கும். தகவல்கள் பயனுள்ளதாக இருக்கலாம், அது அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவோ அல்லது வேலையைத் தேடிக்கொள்ளவோ உதவலாம், ஆனால் அந்த உத்வேகத்தை உங்களால் பற்றவைக்க முடிந்தால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை மதிப்போடு வைத்திருப்பார்கள்.

எந்த ஒரு சிறிய செயலால் அல்லது வார்த்தையால், ஒரு சரியான தருணத்தில் என் முன் இருக்கும் இந்தக் குழந்தைகளை ஊக்கப்படுத்த முடியும் என்று ஒவ்வொரு ஆசிரியரும் பார்க்க வேண்டும். கல்விமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் உங்களால் இந்தளவு நிச்சயம் செய்ய முடியும். ஆனால் இதில் யோகா எப்படி உதவும் என்றால், நீங்கள் மனித நலவாழ்வில் ஆர்வமுள்ளவராக இருந்தால், உள்முகமாக திரும்புவது தான் இதற்கான ஒரே வழி. நீங்கள் ஒவ்வொரு நாளும் வகுப்பைத் துவங்குவதற்கு முன் இரண்டு நிமிடங்கள், அனைவரையும் கண்களை மூடி இருக்க வைத்தால் கூட, ஒரு மாற்றம் நிகழத் துவங்கும். அந்த மாற்றத்தை நீங்கள் முன்னின்று உருவாக்க முடியும். அதுதான் யோகா!