உள்ளடக்க அட்டவணை
1. விழிப்புணர்வு என்றால் என்ன?
2. விழிப்புணர்வு பற்றிய 6 கட்டுக்கதைகள்
3. விழிப்புணர்வும் மூளையும் தொடர்புடையவையா?
4. விழிப்புணர்வின் 4 நிலைகள்
5. விழிப்புணர்வின் அளவுகள்
6. விழிப்புணர்வை உயர்த்துவது எப்படி?
7. யோகாவும் விழிப்புணர்வும்
8. ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா - விழிப்புணர்வை உயர்த்துவதற்கான தொழில்நுட்பம்
9. மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்கான உள்கட்டமைப்பு
10. விலங்குகளின் விழிப்புணர்வு - விலங்குகளுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா?
11.விழிப்புணர்வை நிரலாக்கம் செய்யமுடியுமா மற்றும் இயந்திரங்கள் விழிப்புணர்வுடையனவாக முடியுமா?
12. விழிப்புணர்வைப் பற்றிய அறிவியல் ஆய்வு

விழிப்புணர்வு என்றால் என்ன? (Consciousness Meaning in Tamil)

சத்குரு:

"விழிப்புணர்வு" என்பது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் சொல். இது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வு என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை வரையறுக்கிறேன். உயிரின் ஒரு அங்கமாக, ஒரு உடலாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஈத்தர் அல்லது ஆகாயம். மேலும் ஒரு அடிப்படை நுண்ணறிவு, இந்த விஷயங்களை ஒரு குறிப்பிட்ட வழியில் ஒன்றிணைத்து அதிலிருந்து உயிரை உருவாக்குகிறது.

மண்ணைப்போல அங்கே கிடக்கும் அதே பொருட்களே இங்கு உங்கள் உயிராக உட்கார்ந்திருக்கிறது. என்ன ஒரு நம்பமுடியாத மாற்றம்! காற்று போன்ற எளிய விஷயங்களை உயிராக்கக்கூடிய ஆழமான மற்றும் கற்பனை செய்ய முடியாத புத்திசாலித்தனம் உள்ளது.

நீங்கள் உயிரையும் உயிரோடு இருப்பதையும் உணர்வதற்கான ஒரே காரணம், நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதால் தான்.

அது மரமாக இருந்தாலும் சரி, பறவையாக இருந்தாலும் சரி, பூச்சியாக இருந்தாலும் சரி, புழுவாக இருந்தாலும் சரி, யானையாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி - அனைத்தும் ஒரே எளிய பொருளால் ஆனவை. வாழ்வை நிகழ்த்தும் இந்த புத்திசாலித்தனத்தை நாம் "விழிப்புணர்வு" என்று அழைக்கிறோம். நீங்கள் விழிப்புணர்வற்று இருந்தால், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா அல்லது இறந்துவிட்டீர்களா என்று கூட உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு அது தெரியாது. நீங்கள் வாழ்க்கையையும், உயிரோட்டத்தையும் உணர்வதற்கான ஒரே காரணம், நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதால் தான்.

விழிப்புணர்வைப் பற்றிய 6 கட்டுக்கதைகள்

பழங்கதைகளை உடைத்தல் #1: விழித்திருப்பது என்பது விழிப்புணர்வல்ல

ஆங்கில மொழியின் இயல்பு என்னவென்றால், வெளிப்புற விஷயங்களை விவரிப்பதற்கும் வரையறுப்பதற்கும் இது மிகவும் நல்ல மொழி, ஆனால் நாம் யார் என்பதன் பல அம்சங்களின் உள்பரிமாணங்களை விவரிக்க மிகவும் குறைவான வார்த்தைகளே உள்ளன. யோகவியல் சொற்களைப் பயன்படுத்தும்போது, பொதுவாக விழிப்புணர்வு என்று குறிப்பிடப்படுவது ஜாக்ருதி - அதாவது விழித்திருப்பது. ஆனால் நாம் விழித்திருப்பதை விழிப்புணர்வாக கருதுவதில்லை. விழித்திருப்பது என்பது உடல், மனம் மற்றும் நமக்குள் உள்ள உயிர்சக்திகளின் ஒரு நிலை, ஆனால் அது விழிப்புணர்வு அல்ல.

பழங்கதைகளை உடைத்தல் #2: சுய உணர்வு என்பது விழிப்புணர்வு அல்ல

விழிப்புணர்வு என்பது சுய உணர்வுடன் இருப்பது என்று அர்த்தமல்ல. சுய உணர்வு என்பது நோய்; விழிப்பற்ற நிலை என்பது மரணம். விழிப்புணர்வாக இருப்பது என்பது நீங்கள் யார் என்பதன் மூலத்துடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் விழிப்புணர்வு என்று அழைப்பது ஒரு செயலோ, ஒரு சிந்தனையோ அல்லது ஒரு தரமோ அல்ல - அதுதான் படைப்பின் அடிப்படை.

பழங்கதைகளை உடைத்தல் #3: விழிப்புணர்வை "செய்ய முடியாது"

விழிப்புணர்வு என்பது நீங்கள் ஏதாவது செய்வதால் நடப்பதல்ல, ஆனால் நீங்கள் அதை அனுமதித்ததால் மட்டுமே நிகழ்கிறது. வாழ்க்கை உங்களுக்கு நடக்கிறது, ஆனால் அது நீங்கள் செய்வது அல்ல. நாம் விழிப்புணர்வு என்று அழைப்பது உங்கள் உயிர் மற்றும் உங்கள் இருப்பின் அடிப்படையாகும். இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய அல்லது செய்ய முடியாத ஒன்று அல்ல. நீங்கள் இந்த உடலில் இருந்தாலும் உடலை விட்டுச் சென்றாலும் விழிப்புணர்வு என்பது இருக்கும். அது உங்களுக்குக் கிடைக்கிறதா இல்லையா என்பது மட்டுமே கேள்வி. நீங்கள் எப்போதும் விழிப்புணர்வு உங்களை அணுகக்கூடியதாக இருக்கிறீர்கள் - அதிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது - ஆனால் அது உங்களுக்குக் கிடைக்கிறதா?

பழங்கதைகளை உடைத்தல் #4: விழிப்புணர்வு என்பது கூர் உணர்வு இல்லை

உங்கள் விழிப்புணர்வு உயர்ந்துள்ளது என்று சொன்னால், உங்கள் ஜெர்மானிய ஷெப்பர்ட் நாய்களை விட நீங்கள் அதிக விழிப்புடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. கூர் உணர்வு என்பது மனதிலிருந்து வருகிறது. விழிப்புணர்வு என்பது மனதில் இல்லை, ஆனால் விழிப்புணர்வு இயக்கத்தில் இருந்தால், அது மனதை தெளிவாக்குகிறது. அது மனம் மற்றும் உடல் வழியாகவும், உங்கள் உயிரின் ஒவ்வொரு செல்கள் வழியாகவும் அது தன்னை வலுவாக வெளிப்படுத்துகிறது.

பழங்கதைகளை உடைத்தல் #5: விழிப்புணர்வு என்பது ஒரு மனதின் புரிதல் அல்ல

விழிப்புணர்வு என்பது எண்ணங்களின் தொகுப்போ அல்லது ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிதலோ அல்ல, இது ஒரு எல்லையில்லா பரிமாணம். நமக்குள் செயல்படும் நுண்ணறிவின் பல்வேறு அம்சங்கள் அல்லது பரிமாணங்கள் உள்ளன; நமது உடலும் செல்களின் கட்டமைப்பும் அதன் சொந்த நுண்ணறிவைக் கொண்டுள்ளன, பகுத்தறியும் இயல்பு கொண்ட விழிப்புணர்வு அளவிலான நுண்ணறிவு உள்ளது, ஒரு உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் ஒரு மரபணு நுண்ணறிவு உள்ளது.

நுண்ணறிவின் இந்த பரிமாணங்கள் அனைத்தும் நாம் சேகரித்த ஞாபக பதிவுகளால் ஆளப்படுகின்றன. நமது மரபியல், புத்திசாலித்தனம், உணர்ச்சிகள் மற்றும் நமது உடல் செயல்படும் விதம் ஆகியவை, அவை சுமந்து கொண்டிருக்கும் ஞாபகங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஞாபகங்கள் என்று நீங்கள் அழைப்பது ஒரு குறிப்பிட்ட வகையான எல்லை. உதாரணமாக, "இது என் நண்பர், இது ஒரு அந்நியன்", இது எப்படி நடந்தது? இந்த நபர் என் ஞாபகத்தில் இருக்கிறார், இந்த நபர் என் ஞாபகத்தில் இல்லை, அதுவே இரண்டையும் வேறுபடுத்துகிறது.

ஞாபகம் சாத்தியங்களை உருவாக்குகிறது, ஆனால் எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஒரு சாத்தியம். விழிப்புணர்வு என்று நாம் குறிப்பிடுவது ஞாபகங்களில் இருந்து விடுபட்ட புத்திசாலித்தனத்தின் ஒரு பரிமாணம். அது அதன் இயல்பில் எல்லையற்றது.

பழங்கதைகளை உடைத்தல் #6: மயக்க மருந்துக்கு விழிப்புணர்வுடன் எந்த தொடர்பும் இல்லை

மயக்க மருந்துக்கு விழிப்புணர்வுடன் எந்த தொடர்பும் இல்லை; இது உடல் மற்றும் உடலின் பல்வேறு செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்புடையது. யாராவது அறுவை சிகிச்சைக்குச் செல்லும்போது முக்கிய விஷயங்களான வலியைப் பரவச்செய்வது போன்ற உடல் செயல்பாடுகளின் சில அம்சங்களை நீங்கள் நிறுத்துகிறீர்கள். இதற்கு விழிப்புணர்வை இழப்பது மற்றும் விழிப்புணர்வைப் பெறுவது ஆகியவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி எதுவும் இல்லை. மருத்துவ சொற்களில் மட்டுமல்லாமல், பொதுவாக ஆங்கில மொழியில், "அவர் விழிப்படைந்துவிட்டார்" என்பதற்கும், பெரிய சாத்தியமான "விழிப்புணர்வு" என்பதற்கும் இடையே ஒரு வேறுபாடு இல்லை.

விழிப்புணர்வும் மூளையும் தொடர்புடையவையா?

யோக அறிவியலில் மூளை என்று எதுவும் இல்லை. மூளை என்பது வெறும் உடல் உறுப்பு. இதயம் மற்றும் கல்லீரல் இருப்பதைப் போல, மூளை உள்ளது. நமது கல்வி முறைகள் முற்றிலும் அறிவு சார்ந்தவையாக மாறிவிட்டதால் மூளை என்றால் என்ன என்பது பற்றிய இந்த மிகைப்படுத்தப்பட்ட உணர்வு வருகிறது என்று நான் நினைக்கிறேன். புத்திசாலித்தனம் தான் எல்லாம் என்று நாம் கருதுகிறோம். யோக முறையில், நாம் மனித மனதை பதினாறு பகுதிகளாகப் பார்க்கிறோம். இந்த பதினாறு பகுதிகள் நான்கு பிரிவுகளாக உள்ளன. முதலாவது புத்தி, அதாவது அறிவு. அறிவு அடிப்படையில் ஒரு கத்தி போன்றது. பொருட்களை வெட்டுவதற்கு நீங்கள் கத்தியைப் பயன்படுத்துகிறீர்கள்.

புத்தி

புத்திசாலித்தனத்தின் இயல்பு இதுதான், நீங்கள் எதைக் கொடுத்தாலும் அதை பகுத்தாயும். நவீன அறிவியல் முழுவதும், மனித புத்திசாலித்தனத்தில் இருந்தே வெளிவருகிறது - எனவே அனைத்தும் பகுத்தாய்தல் மூலமே நடக்கிறது. பகுத்தாய்தல் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடியது வாழ்க்கையின் பொருள் சார்ந்த அம்சம் மட்டுமே. பகுத்தாய்தல் மூலம் நீங்கள் உயிரை அறிய முடியாது.

"நீங்கள் உங்கள் சித்தத்தைத் தொட்டால், கடவுள் உங்கள் அடிமையாக ஆவார்" என்று நாங்கள் கூறுகிறோம், ஏனென்றால் உங்கள் புத்திசாலித்தனம் எல்லையற்றதாக மாறினால், எல்லாம் அணுகக்கூடியதாகிறது.

புத்திசாலித்தனம் ஒரு பிழைத்தலுக்கான கருவி. உங்களிடம் பிரித்துப் பார்க்கும் புத்திசாலித்தனம் இல்லையென்றால், நீங்கள் இந்த கிரகத்தில் உயிர்வாழ முடியாது. இது மிகவும் இன்றியமையாதது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு நினைவு இல்லாவிட்டால் புத்திசாலித்தனம் செயல்பட முடியாது. உங்கள் ஞாபகங்கள் அனைத்தையும் அழித்துவிட்டால், நீங்கள் திடீரென்று முட்டாளாகத் தோன்றுவீர்கள். புத்தியை நீங்கள் தகவலுடன் நிரப்பும் போது மட்டுமே புத்திசாலித்தனமாகத் தெரிகிறது.

இன்று, புத்திசாலித்தனத்தின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுகிறது, நுண்ணறிவின் மற்ற பரிமாணங்கள் முற்றிலும் வளர்க்கப்படாமல் உள்ளன.

அகங்காரம்

மனதின் அடுத்த பரிமாணம் அகங்காரம் என்று குறிப்பிடப்படுகிறது, இதனை நாம் முற்றிலுமாக புறக்கணித்துள்ளோம். அகங்காரம் என்பது பெரும்பாலான மக்கள் நினைப்பது போல வெறும் ஈகோ அல்ல. இது அடையாளத்தைக் குறிக்கிறது. புத்தி என்பது அடையாளத்தைப் பாதுகாக்கும் ஒரு கருவி. அடையாளம் என்பது புத்தி ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட அனுமதிக்கும் ஒரு கருவி. இப்போது நீங்கள், "என் அடையாளம் என் குடும்பம்" என்று சொன்னால், உங்கள் புத்தி அதைப் பாதுகாக்க எல்லாவற்றையும் செய்யும். இனம், மதம், நாடு என்ற பெயரில், முற்றிலும் முட்டாள்தனமான மற்றும் மனிதத்தன்மையற்ற பல விஷயங்களை நாம் செய்துள்ளோம், ஆனால் நாம் அடையாளப்பட்டு இருப்பதால் அவற்றை பெரும் பெருமையுடன் செய்கிறோம். புத்தியை கத்தி என்றால், அதைப் பிடித்திருக்கும் கை அடையாளம் ஆகும்.

மனஸ்

மனதின் அடுத்த பரிமாணம் மனஸ் என்று அழைக்கப்படுகிறது, இது நினைவுகளின் களஞ்சியம். நினைவில் பல நிலைகள் உள்ளன. யோக முறை, நினைவின் வெவ்வேறு பரிமாணங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துகிறது, ஏனெனில் குறுகிய அளவு நினைவுகளுடன், நீங்கள் முதிர்ச்சியற்ற வழிகளில் செயல்பட நேரிடும். உங்கள் புத்தி மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறினால், உங்கள் அடையாளம் பிரபஞ்சம் சார்ந்ததாக அல்லது எல்லையற்றதாக இருப்பதும், உங்கள் நினைவகம் நினைவின் அனைத்து பரிமாணங்களும் செயல்படும் அளவிற்கு மேம்பட்டிருப்பதும் மிக முக்கியமானது.

சித்தம்

அறிவின் நான்காவது பரிமாணம் சித்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஞாபகங்களால் களங்கப்படாத அறிவின் ஒரு பரிமாணம். ஞாபகம் என்பது நிகழ்ந்த அனைத்திற்கும் அடிப்படை. நமது தோலின் நிறத்தை, அல்லது நாம் ஆணா பெண்ணா, மனிதனா அல்லது வேறு உயிரினமா என்பதை தீர்மானிப்பது இந்த உடலில் சேமிக்கப்பட்டுள்ள ஞாபகங்களே. ஞாபகம் என்பது மகத்தான சாத்தியக்கூறு, ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வரம்பும் எல்லையும் ஆகும். நீங்கள் என்பதற்கும் நான் என்பதற்கும் இடையேயான எல்லை, வெறும் ஞாபகக்கூறு மட்டுமே.

ஆனால் சித்தத்திற்கு ஞாபகம் இல்லை. ஞாபகம் இல்லை என்றால் எல்லை இல்லை. இது எல்லைகளற்ற அறிவாகும். யோகக் கலாச்சாரத்தில் இதை விளக்க ஒரு குறும்புத்தனமான வழி உள்ளது. நாங்கள் சொல்கிறோம், "நீங்கள் உங்கள் சித்தத்தைத் தொட்டால், கடவுள் உங்கள் அடிமையாக ஆவார்," ஏனென்றால் உங்கள் அறிவு எல்லையற்றதாக மாறும்போது, எல்லாமே அணுகக்கூடியதாக மாறிவிடும்.

விழிப்புணர்வின் 4 நிலைகள்

ஜாக்ருதி

விழித்திருப்பதற்கு, ஜாக்ருதி என்ற சொல் நம்மிடம் உள்ளது. நீங்கள் ஜாக்ருதி நிலையில் இருந்தால், நீங்கள் விழித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பத்து பேர் தூங்கி விழித்திருந்தால், அவர்கள் விழிக்கும்போது, அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி விழித்திருக்க மாட்டார்கள். ஒரு நபர் உடனடியாக விழித்திருக்கலாம், மற்றொரு நபருக்கு இரண்டு நிமிடங்கள் ஆகலாம், மற்றொரு நபர் எழுந்திருக்க ஒரு மணி நேரம் ஆகும். மற்றொரு நபருக்கு ஒரு காபி தேவை, இல்லையென்றால் அவர்கள் எழுந்திருக்க மாட்டார்கள். இதுபோன்று விழிப்பின் பல்வேறு நிலைகளும் உள்ளன. இது ஜாக்ருதி. இந்த விழிப்பு நிலை விழிப்புணர்வு அல்ல.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
...ஞாபகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புத்திசாலித்தனம் உள்ளது, அதை நாம் துரியம் அல்லது சித்தா என்று அழைக்கிறோம். இதுவே விழிப்புணர்வு.

ஸ்வப்னா

விழிப்புணர்வின் அடுத்த பரிமாணம் ஸ்வப்னா என்று அழைக்கப்படுகிறது, அதாவது ஒரு கனவு நிலை. பெரும்பாலான மனிதர்களுக்கு விழித்திருக்கும் நிலையை விட ஒரு கனவு நிலை மிகவும் தெளிவானது. இது சினிமாவுக்கு செல்வது போன்றது. நீங்கள் ஒரு சினிமாவுக்கு சென்றால், சினிமா உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் முக்கிய காரணி, விளக்குகளை அணைப்பதாகும். நீங்கள் விளக்குகளை அணைக்காவிட்டால், சினிமா எவ்வளவு நன்றாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் நன்றாக இருக்காது.

அதனால் ஒரு கனவு நிலை ஒரு திரைப்படம் போன்றது. நம் அனுபவத்தில் விளக்குகளை அணைப்பது கண் இமைகள். நீங்கள் கண்களை மூடினால், விளக்குகள் அணைக்கப்பட வேண்டும், உலகம் மூடப்பட வேண்டும். இந்த கனவு நிலை ஜாக்ருதியை விட அதிக சக்திவாய்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. உலகில் செயல்படுவதற்கு ஜாக்ருதி அல்லது விழித்திருப்பது முக்கியம், ஆனால் மனித விழிப்புணர்வுக்கு, அனுபவத்தின் ஆழத்தைப் பொறுத்தவரை, ஒரு கனவு எப்போதும் தெருவில் நடந்து போவதை விட ஆழமானது.

சுஷுப்தி

அடுத்த நிலை சுஷுப்தி என்று அழைக்கப்படுகிறது, அதாவது கனவில்லாத நிலை, ஆனால் நீங்கள் அறிந்த விழிப்புணர்வின் பரிமாணங்கள் உள்ளன. இது முற்றிலும் கனவில்லாத தூக்க நிலை, ஆனால் நீங்கள் விழிப்புடன் இருப்பீர்கள். உங்கள் மனதில் எந்த படமோ காணொளியோ இயங்கவில்லை, ஆட்களோ வார்த்தைகளோ இல்லை, ஆனால் உங்கள் தூக்கத்தில் நீங்கள் விழிப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் எதையாவது நடக்க செய்ய விரும்பினால், இது மிகவும் சக்திவாய்ந்த நிலை. இது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று.

துரியம்

கடைசி நிலை துரியம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே எந்த வகையான ஞாபகங்களும் இல்லாத விழிப்புணர்வாகும். யோக அறிவியலில், நாம் அடிப்படையில் விழிப்புணர்வை ஞாபகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புத்திசாலித்தனமாக பார்க்கிறோம். நினைவாற்றல் ஒரு எல்லையாகக் கருதப்படுகிறது. இது ஒரு நபர், அது மற்றொரு நபர், ஏனென்றால் இது ஒரு வகையான ஞாபகப்பதிவை உள்ளடக்கியது மற்றும் அது மற்றொரு வகையான ஞாபகப்பதிவை உள்ளடக்கியது. ஞாபகப்பதிவு என்பது நான் ஞாபகம் வைத்திருப்பதையும் நீங்கள் ஞாபகம் வைத்திருப்பதையும் மட்டும் குறிக்காது. மரபணு ஞாபகப்பதிவு, பரிணாம ஞாபகப்பதிவு, பஞ்சபூதங்களுடனான ஞாபகப்பதிவு, அணுவிலான ஞாபகப்பதிவு, கர்ம ஞாபகப்பதிவு, வார்த்தையால் வெளிப்படுத்தப்படாத ஞாபகப்பதிவுகள் மற்றும் வார்த்தையால் வெளிப்படுத்தப்பட்ட ஞாபகப்பதிவுகள் ஆகியன உள்ளன.

ஞாபகப்பதிவின் இந்த வெவ்வேறு பரிமாணங்கள் தினசரி அளவில் நிகழ்கின்றன. உதாரணமாக, இன்று, நாம் நாய் உணவை சாப்பிட்டால், நாம் நாய்களாக மாற மாட்டோம். நமக்குள் ஏதோ ஒன்று ஞாபகத்தில் உள்ளது, நீங்கள் என்ன சாப்பிட்டாலும், இது ஒரு மனிதனாக மட்டுமே மாற்றப்பட வேண்டும் - பரிணாம ஞாபகப்பதிவு பூரணமானது.

மக்கள் தங்கள் எண்ணங்கள் சுதந்திரமானவை என்று நினைக்கிறார்கள். இது ஒரு நகைச்சுவை, ஏனென்றால் உங்கள் ஞாபகப்பதிவு தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஒரு வார்த்தையில், இதை நாம் கர்மா என்று அழைக்கிறோம். கர்மா என்பது உங்களிடம் உள்ள அனைத்து ஞாபகங்களின் எஞ்சிய தாக்கமாகும். இது உங்கள் ஒவ்வொரு சிந்தனை, உணர்ச்சி மற்றும் செயலை பாதிக்கிறது. நீங்கள் உட்காரும் விதம், நிற்பது, சுவாசிப்பது, வாழ்க்கையை புரிந்துகொள்வது, உணரும் விதம் இந்த ஞாபகப்பதிவால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நினைவுக்கு அப்பாற்பட்ட ஒரு புத்திசாலித்தனம் உள்ளது, அதை நாம் துரியம் அல்லது சித்தம் என்று அழைக்கிறோம். இதுவே விழிப்புணர்வு.

விழிப்புணர்வின் அளவுகள்

நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கிறோம், கேள்வி என்னவென்றால் அதன் அளவு மட்டுமே. ஒரு பாறை, ஒரு நாய் மற்றும் ஒரு பன்றி கூட விழிப்புணர்வுடன் உள்ளது. கேள்வி என்னவென்றால், அவை எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கின்றன என்பது மட்டுமே. நம்மிடையேயும் கூட, நாம் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. இந்த விழிப்புணர்வின் அளவே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

ஒரு உவமையைச் சொல்ல வேண்டுமென்றால், நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோப்புக் குமிழிகளை ஊதியிருப்போம் என்பது உறுதி.

நீங்கள் ஒரு சோப்புக் குமிழியை ஊதும்போது, அதில் சோப்பின் பகுதி மிகக் குறைவு, பெரும்பகுதி அது பிடித்துக் கொள்ளும் காற்று தான். சோப்பின் தன்மையும் அது எப்படி சேர்கிறது என்பதும் உங்கள் ஞாபகங்களைப் போன்றது. அது ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. ஆனால் குமிழி வெடிக்கும்போது, உங்கள் காற்று, என் காற்று என்று எதுவும் இல்லை. உங்கள் உடல், என் உடல், உங்கள் ஞாபகங்கள், என் ஞாபகங்கள், உங்கள் அறிவு, என் அறிவு என்று இருக்கலாம், ஆனால் உங்கள் விழிப்புணர்வு, என் விழிப்புணர்வு என்று எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வைப் பிடித்துக் கொண்டீர்கள் அல்லது உங்கள் குமிழி எவ்வளவு பெரியது என்பது உங்கள் வாழ்க்கையின் தரத்தையும் சாத்தியங்களையும் தீர்மானிக்கும்.

விழிப்புணர்வை எவ்வாறு உயர்த்துவது?

உங்களால் விழிப்புணர்வை உயர்த்தவோ அல்லது வீழ்த்தவோ முடியாது. நாம் "விழிப்புணர்வை உயர்த்துதல்" என்ற சொற்றொடரை பின்வரும் பின்னணியில் மட்டுமே பயன்படுத்துகிறோம்: நீங்கள் உங்கள் பௌதீக ரீதியான உடலுடன் வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால், நீங்கள் யார் மற்றும் நீங்கள் அல்லாதது எது என்பதன் எல்லைகள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த நிலையில், நீங்கள் உங்களை ஒரு தனித்த இருப்பாக உணர்கிறீர்கள். இதன் பொருள் நீங்கள் பிழைப்புக்காக போராடும் நிலையில் இருக்கிறீர்கள், இது மற்ற அனைத்து உயிரினங்களும் இருக்கும் நிலையும் ஆகும். நீங்கள் உங்களை உடலாக அடையாளப்படுத்தும்போது, நீங்கள் யார் என்பதன் எல்லைகள் 100% தீர்மானிக்கப்படுகின்றன.

நீங்கள் உங்கள் விழிப்புணர்வை உயர்த்த வேண்டியதில்லை - அதற்கான அணுகலை கண்டுபிடித்து அதனை உணர நீங்கள் உங்களை உயர்த்த வேண்டும். விழிப்புணர்வு எப்போதும் அங்கேயே இருக்கிறது.

பௌதீக உலகிலும் கூட, ஒரு பொருள் எவ்வளவு நுண்ணியதாக இருக்கிறதோ, அந்தளவிற்கு எல்லைகள் மறைந்துவிடுகின்றன. நாம் அனைவரும் ஒரே காற்றை சுவாசிக்கிறோம், அதில் ஈரப்பதமும் உள்ளடங்கியுள்ளது. நாம் சுவாசிக்கும்போது, தொடர்ந்து காற்றையும் நீரையும் பரிமாறிக் கொள்கிறோம். நாம் காற்று மற்றும் நீருடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாததால், இந்த பரிமாற்றத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நாம் நமது உடலுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அதனை நாமாகவே கருதுவதால், யாரும் நமது உடலின் எல்லைகளை மீற வேண்டும் என்று விரும்புவதில்லை.

நாம் விழிப்புணர்வு என்று குறிப்பிடுவது நீங்கள் யார் என்பதன் மிக நுண்ணிய பரிமாணம், மேலும் இது அனைவராலும் பொதுவாக பகிரப்படுகிறது. என்னிலும், உங்களிலும், அனைவரிலும் உணவை சதையாக மாற்றும் அதே நுண்ணறிவு தான் இது. மக்கள் தங்களின் உடல் எல்லைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து தங்களுக்குள் ஆழமான பரிமாணத்திற்கு நகர்ந்தால், அவர்களின் "நான்" மற்றும் "நீ" என்ற உணர்வு குறைகிறது - "நீங்களும்" "நானும்" ஒன்றாகவே தோன்றுகிறோம். இதன் பொருள் சமூக அளவில் விழிப்புணர்வு உயர்ந்துள்ளது என்பதாகும்.

அடிப்படையில், நாம் விழிப்புணர்வை உயர்த்துவதில்லை. நீங்கள் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க உங்கள் உணர்தலை உயர்த்துகிறோம். நாம் அனைவரும் ஓரளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கிறோம். கேள்வி என்னவென்றால், எந்த அளவிற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் உங்கள் விழிப்புணர்வை உயர்த்த வேண்டியதில்லை - அதனை அணுகி உணர, நீங்கள் உங்களை உயர்த்த வேண்டும். விழிப்புணர்வு எப்போதும் அங்கேயே இருக்கிறது.

அது அப்படி இல்லை என்றால், நீங்கள் உங்கள் மூச்சையும் உணவையும் உயிராக மாற்றுவது சாத்தியமாகாது. நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் இதுவரை, உங்களுக்கு குறைந்தபட்ச அணுகல் மட்டுமே உள்ளது. உங்கள் அணுகல் மேம்படும்போது, உங்கள் எல்லை பற்றிய உணர்வு விரிவடைகிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தப்பட்டால், எல்லோரையும் உங்களைப் போலவே உணர்வீர்கள். யோகா என்பது இதுதான்.

யோகாவும் விழிப்புணர்வும்

"யோகா" என்ற சொல்லுக்கு ஒன்றிணைதல் என்று பொருள். மனிதர்கள் இந்த ஒன்றிணைதல் உணர்வை பல வழிகளில் உணர முயற்சிக்கிறார்கள். அது மிக அடிப்படையான வெளிப்பாடாக இருந்தால், நாம் அதை பாலியல் என்கிறோம். அது உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடாக இருந்தால், நாம் அதை அன்பு என்கிறோம். அது மனம் சார்ந்த வெளிப்பாடாக இருந்தால் அதை பேராசை, லட்சியம், வெற்றியடைதல், அல்லது வெறுமனே பொருட்களை வாங்குதல் என்கிறோம்.

இது ஒரு விழிப்பான வெளிப்பாடாக இருந்தால், நாம் அதை யோகா என்கிறோம். ஆனால் அந்த அடிப்படை செயல்முறையும், ஏக்கமும் ஒன்றே. அதாவது, நீங்கள் அல்லாத ஒன்றை உங்களில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள். உங்களுக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள தூரத்தையோ அல்லது எல்லைகளையோ அழிக்க விரும்புகிறீர்கள்.

இதைப் பற்றி பேசுவதற்கும் அறிவுபூர்வமாக விவாதிப்பதற்கும் பதிலாக, நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அந்த உடல்ரீதியான அம்சத்திலிருந்து உங்கள் அனுபவத்தை உடல் சாராத பரிமாணத்திற்கு எப்படி உயர்த்துவது என்பதை நாம் பார்க்கிறோம்.

அது பாலியல் விஷயமாக இருந்தாலும், காதல் விவகாரமாக இருந்தாலும், பேராசையாக இருந்தாலும் அல்லது வெற்றி கொள்ளும் எண்ணமாக இருந்தாலும் - நீங்கள் செய்ய முயற்சிப்பதெல்லாம், நீங்கள் அல்லாத ஒன்றை உங்களுடைய பகுதியாக்கிக் கொள்வதுதான்.

யோகா என்பது எல்லாவற்றோடும் ஒன்றாக இணைவது, அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் யார் என்ற எல்லைகளை அழிப்பது.

இதைப் பற்றி பேசுவதற்கும், அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்கும் பதிலாக, நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அந்த உடல்ரீதியான அம்சத்திலிருந்து உங்கள் அனுபவத்தை உடல் சாராத பரிமாணத்திற்கு எப்படி உயர்த்துவது என்பதை நாம் பார்க்கிறோம்.

ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா - விழிப்புணர்வை உயர்த்துவதற்கான ஒரு தொழில்நுட்பம்

இதைத்தான் ஷாம்பவி செய்கிறது. இது உங்களை ஒரு அந்தி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது. நீங்கள் இன்னும் உடலில் வேரூன்றி இருக்கிறீர்கள், ஆனால் அதற்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தொடத் துவங்குகிறீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை அனுபவம் உங்கள் உடலோடு மட்டும் வரையறுக்கப்படவில்லை - நீங்கள் அதை ஒரு பெரிய நிகழ்வாக உணர்கிறீர்கள். இதுதான் விழிப்புணர்வை உயர்த்துவது.

உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மக்களையும் உங்களில் ஒரு பகுதியாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பதே இதன் பொருள். உங்கள் கையில் உள்ள ஐந்து விரல்களையும் உருவாக்கிய பொருள் சிறிது காலத்திற்கு முன் மண்ணில் இருந்தது, இப்போது அது உங்கள் ஐந்து விரல்களாக மாறியுள்ளது. நேற்று உங்கள் தட்டில் உணவாக இருந்தது "நீங்கள்" அல்ல. ஆனால் நீங்கள் அதை சாப்பிட்டீர்கள், இன்று அதை உங்களில் ஒரு பகுதியாக உணர்கிறீர்கள்.

நீங்கள் எதையும் உங்கள் எல்லைக்குள் சேர்த்துக் கொண்டால் மட்டுமே, அதை உங்களில் ஒரு பகுதியாக அனுபவிக்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. வெவ்வேறு வழிகளில் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும்.

நீங்கள் இங்கே அமர்ந்தால், முழு பிரபஞ்சமும் உங்களில் ஒரு பகுதியாக இருக்கும் வகையில் உணர்ச்சி எல்லைகளை விரிவுபடுத்துவது, யோகா; இது விழிப்புணர்வை உயர்த்துவதாகும். நாம் அதை தத்துவ ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ செய்யவில்லை, ஆனால் அனுபவப்பூர்வமாக, அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்ப செயல்முறையைப் பயன்படுத்துகிறோம். ஒரு தொழில்நுட்பத்தின் இயல்பு என்னவென்றால், அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும் அது வேலை செய்யும். நீங்கள் அதை நம்ப வேண்டியதில்லை; நீங்கள் அதை வணங்க வேண்டியதில்லை. நீங்கள் அதை உங்கள் தலையில் சுமக்க வேண்டியதில்லை. நீங்கள் அதை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

மனித விழிப்புணர்வை உயர்த்தத் தேவையான உள்கட்டமைப்பு

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு இந்திய கிராமத்திற்குள் நுழைந்தால், உள்ளூர் மொழியில் மட்டுமே படிக்கவும் எழுதவும் தெரிந்த ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முழு கிராமத்தையும் தேட வேண்டியிருந்தது. ஆனால் இன்று, குறைந்தபட்சம் 70% மக்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க முடியும், பலருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும். யாரோ பள்ளி அறைகளைக் கட்டி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்ததால் தான் இந்த மாற்றம் நடந்தது.

அதேபோல, மனித விழிப்புணர்வை உயர்த்தவும் தனிமனித மாற்றத்திற்கும் உலகில் நடக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதர்களிடத்திலும், பிற வகையிலும் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதுதான்.

கடந்த காலத்தில், இந்த நாட்டில் உள்நலனுக்கான மிகப்பெரிய உள்கட்டமைப்பு இருந்தது. உலகில் வேறு எந்த இடத்தைவிடவும் ஆன்மீக மலர்ச்சிக்கான இடங்கள் இங்கு அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், ஒவ்வொரு தலைமுறையிலும் ஞானமடைந்த மனிதர்கள் தோன்றியது தற்செயலானதோ விபத்தோ அல்ல.

ஆனால் அந்த உள்கட்டமைப்பு இப்போது வளராமல் குறைந்து வருகிறது. உலகிற்கான ஈஷாவின் உறுதிமொழிகளில் ஒன்று இதுதான்: மனிதனின் உள்நலனுக்கான உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். உள்கட்டமைப்பு என்று நான் சொல்லும்போது, வெறும் கட்டிடங்களை மட்டும் குறிப்பிடவில்லை. கட்டிடங்கள் என்பது மனித உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கான கருவி மட்டுமே. மிக முக்கியமானது என்னவென்றால் எத்தகைய மனிதர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதுதான். சரியான மனிதர்கள் இல்லாமல், இந்த அறிவியலை கடத்த முடியாது, ஏனென்றால் இது ஒரு சுய அனுபவம் சார்ந்த அறிவியல். சரியான மனிதர்கள் இல்லாமல், இது மக்களுக்கு தகுந்த முறையில் சென்றடையாது.

விலங்குகளில் விழிப்புணர்வு - விலங்குகளுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா?

ஒரு விலங்கு அது உயிர்பிழைத்தலுக்கான செயல்முறையைச் சுற்றியே பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வகையில் படைக்கப்பட்டுள்ளது. எந்த உயிரினத்திற்கும், வயிறு நிரம்பியதும், அவற்றின் வாழ்க்கை தேவை முடிந்துவிடுகிறது. அவை வெறுமனே மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும். ஆனால் அது மனிதனின் இயல்பு அல்ல. வயிறு காலியாக இருக்கும்போது, ஒரே ஒரு பிரச்சனைதான்; வயிறு நிரம்பியதும், நூறு பிரச்சனைகள் உருவாகின்றன.

இதுதான் மனித இயல்பு, ஏனென்றால் பிழைப்பு என்பது நம் வாழ்க்கையின் முடிவல்ல, அது ஒரு தொடக்கமே. ஆனால் மற்ற உயிரினங்களுக்கு, பிழைப்பு என்பதே அவற்றின் இறுதி இலக்கு. எனினும் அவற்றிலும் கூட, சில உயிரினங்கள் விழிப்புணர்வை உணரும் திறன் அதிகம் கொண்டவை. விழிப்புணர்வு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு சில உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்கின்றன. இந்திய மறைஞானத்தில், எப்போதும் ஒரு நாகம் இருக்கும், ஏனென்றால் விழிப்புணர்வை அணுகும் சிறிய வாய்ப்பு எங்கிருந்தாலும், இந்த உயிரினங்கள் எப்படியோ அதை உணர்ந்து அங்கு வந்து சேருவதை நாம் எப்போதும் பார்த்திருக்கிறோம்.

எது அவர்களை உணர வைக்கிறது? இது எனக்கு ஒரு குறிப்பிட்ட அறிவியல் அல்ல, நான் வெறுமனே யூகிக்கிறேன் - அவை முற்றிலும் காது கேளாதவை என்பதால், வேறு ஏதோ ஒரு உணர்வில் மிகவும் விழிப்புடன் இருக்கின்றன என்று நினைக்கிறேன். உதாரணமாக, தென்னிந்தியாவில் உள்ள நாகப்பாம்பிற்கு காதுகளே இல்லை, கேட்கும் அமைப்பே இல்லை, அதன் முழு உடலும் தரையோடு தொடர்பில் உள்ளது, உண்மையில் காது தரையோடு இருக்கிறது.

இந்த கிரகத்தில் ஏற்படும் மிகச் சிறிய அதிர்வுகளை கூட அவற்றால் உணர முடியும். குறிப்பிட்ட அதிர்வுகளை உணரும் உணர்திறன் அதற்கு உண்டு. நாம் விழிப்புணர்வு என்று குறிப்பிடும் நிலையை ஒருவர் அடையும்போது, எல்லோரும் வெளியிடும் அன்றாட அதிர்வுகள் - அவர்களின் உடல் மற்றும் மனரீதியான விஷயங்கள் அனேகமாக மிகவும் குறைந்ததாகிறது.

அந்த அதிர்வற்ற நிலையை நாகப்பாம்பு உணர்கிறது. நீங்கள் காட்டில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தால், நாகப்பாம்புகள் உங்கள் முன் கூடும். அவை உங்களுக்காக காத்திருப்பது போல வந்து அமரும். இது எனது சொந்த அனுபவத்தில் பலமுறை நடந்துள்ளது, மற்றும் யோகக் கலாச்சாரத்தில் இருந்த பல யோகிகளால் இதை உறுதிப்படுத்த முடியும்.

விழிப்புணர்வை நிரலாக்கம் செய்ய முடியுமா மற்றும் இயந்திரங்கள் விழிப்புணர்வாக மாற முடியுமா?

நீங்கள் அறிந்த அனைத்திற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உள்ளது - உடல், மனவியல் வெளி, உணர்வுகளின் வெளி மற்றும் சக்தி வெளி. விழிப்புணர்வு எதனாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. இது பிரபஞ்சத்தின் உச்சபட்ச motherboard. அதனால் நாம் ஒரு இயந்திரத்தை விழிப்புணர்வுள்ளதாக மாற்ற முடியுமா? இது ஒரு நகைப்புக்குரிய விஷயம். உங்களால் கூட விழிப்புணர்வுள்ளவராக மாற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

"விழிப்பு" என்ற சொல் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுவதால் குழப்பமானதாக உள்ளது, ஆனால் விழிப்புணர்வு என்பது இருக்கிறது. நீங்கள் உங்களது உடல், மனம், உணர்வு மற்றும் சக்தி வடிவங்களை கரைத்துவிட்டால், நீங்கள் விழிப்புணர்வாகவே ஆகிறீர்கள். நீங்கள் விழிப்புணர்வு கொண்டவராக இருக்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் விழிப்பாக மாறினீர்கள் என்பது அல்ல, மாறாக நீங்களே விழிப்புணர்வாக ஆகிவிட்டீர்கள். இதற்குள்ளோ அல்லது உங்களது மின்னணு பொருட்களிலோ விழிப்புணர்வை உருவாக்க முடியாது.

இது முற்றிலும் தவறான புரிதல். அடிப்படையில், நாம் விழிப்புணர்வு என்று சொல்லும்போது, அடிப்படையைப் பற்றியே பேசுகிறோம். மற்ற அனைத்தும் தோன்றி மறையக்கூடியவை. பால்வெளி ஒரு பாப்-அப், சூரிய குடும்பம் ஒரு பாப்-அப், கிரகம் ஒரு பாப்-அப், நீங்களும் ஒரு பாப்-அப். ஒரு மனிதன் வெறும் பாப்-அப்பாக மட்டுமல்லாமல், அதன் மூலமாகவே மாறும் திறன் பெற்றவன். நீங்கள் அதுவாக மாறும்போது, ஏதோ ஒரு வகையில் உங்கள் அடையாளத்தை கரைத்துவிடுகிறீர்கள், ஏனென்றால் உங்கள் உடலும், உங்கள் மன கட்டமைப்பும் அடிப்படையில் அடையாளத்தால் உருவானவை.

உங்கள் அனுபவத்தில், நீங்கள் யார் என்பதும் நீங்கள் அல்லாதது எது என்பதும் நீங்கள் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால் உருவாக்கப்பட்ட ஒரு யதார்த்தம். அது ஒரு பொருளாக இருந்தாலும், ஒரு நபராக இருந்தாலும், ஒரு விஷயமாக இருந்தாலும், ஒரு சொத்தாக இருந்தாலும், உங்கள் உடல் மற்றும் மனம் உட்பட, நீங்கள் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும்போது மட்டுமே அது நீங்கள் என உணர்கிறீர்கள். எனவே நீங்கள் உங்கள் அடையாளங்களை விலக்கிக்கொண்டால், நீங்கள் கரைந்துவிடுகிறீர்கள். உங்கள் உடல் உருகிவிடும் என்பது அல்ல - அது இன்னும் இங்கே அமர்ந்திருக்கிறது - ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தை விலக்கிக்கொண்டதால், அது உங்கள் அனுபவத்திலிருந்து கரைந்துவிடுகிறது. பின்னர் நீங்கள் விழிப்புணர்வாகிறீர்கள், ஏனென்றால் அதுதான் உங்கள் இருப்பின் அடிப்படை.

விழிப்புணர்வு பற்றிய அறிவியல் ஆய்வு

ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் இணை நிறுவனமான பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையம், மனித விழிப்புணர்வை உயர்த்துவது எவ்வாறு நோய்களில் இருந்து குணமடைதல் மற்றும் மீள்வதை மேம்படுத்தக்கூடும் என்பதை ஆராயவும் மருத்துவ அறிவியலின் எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் அமெரிக்காவின் போஸ்டனில் விழிப்புணர்வான கிரகத்திற்கான சத்குரு மையத்தை நிறுவியுள்ளது.

விழிப்புணர்வான கிரகத்திற்கான சத்குரு மையம் என்பது மனித விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் இயல்பு மற்றும் கருணை ஆகியவற்றுக்கு இடையேயான உறவை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தும் பல்துறை ஆராய்ச்சி மையமாகும். இந்த மையம் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொள்கிறது, சிந்தனைமிக்க உரையாடல்கள் மற்றும் ஆய்வுகளை நடத்த வழிவகுக்கிறது, மேலும் கல்வி மற்றும் சமூகநலபணிகள் மூலம் விழிப்புணர்வை வளர்க்கிறது.

குறிப்பு:

ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் நினைவாற்றல், விழிப்புணர்வு மற்றும் கோமா பற்றி சத்குரு நிகழ்த்திய உரையை யூடியூப் காணொளியில் சுமார் 9 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.