முட்டாள்கள் தின பதிவு: யார் முட்டாள்? யார் புத்திசாலி?
உலகெங்கிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. முட்டாளாக இருப்பது பற்றி சத்குருவின் பார்வையில்..

முட்டாள்
முட்டாள் என்பவன் முட்டாள்தான்
அகந்தையில் நிரம்பி இருப்பதால்,
பெற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ
முடியாமல் இருப்பதால்
முட்டாளாகவே இருக்கிறான்.
முட்டாளாய் இருப்பது பெருமையல்ல
ஆனால் ஒவ்வொருவருமே யாரோ ஒருவரின் முன்
முட்டாள்தான்
கேள்வி:
நான் ஈஷா யோகா பயிற்சியைத் துவங்கியதில் இருந்து, என் மனம் காலியாகிவிட்டது. நான் ஒரு முட்டாளாக மாறுகிறேன் என்று இதற்கு அர்த்தமா?
Subscribe
வேறு ஒருவர் உங்களை முட்டாள் என்று சொன்னால், அது அவமானம். ஆனால் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை நீங்களே உணர்ந்தால், அதை புரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் புத்திசாலியாகி விட்டீர்கள் என்று அர்த்தம். நான் உங்களை முட்டாள் என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்னதை நானும் ஏற்றுக்கொள்கிறேன், அவ்வளவுதான்.
இது எனக்கும் நடந்திருக்கிறது. ஞானோதய அனுபவம் ஏற்படுவதற்கு முன், நான் புத்திசாலியாக, மிக மிக புத்திசாலியாக இருப்பதாக நினைத்தேன், என்னை சுற்றி இருந்தவர்களும், 'அவன் ரொம்ப கெட்டிக்காரன்' என்று அதை ஆமோதிக்கவும் செய்தார்கள். நான் அப்போது செய்து வந்த செயல்களும் அதன் விளைவுகளும் நான் புத்திசாலி என்பதை நிரூபித்தும் வந்தது. இவை எல்லாம் அந்த சிறிய மலை மீது சென்று அமர்ந்த நாள் வரைதான். நான் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கிறேன் என்பதை அங்கு உணர்ந்தேன். அன்று முதல் அனைத்துமே அற்புதமாக இருக்கிறது.
முட்டாளாக இருப்பது நல்லது!
நீங்கள் முட்டாளாக இருங்கள், அது உண்மையிலேயே நல்லது தான். நீங்கள் அப்பட்டமான முட்டாளாக இருந்தால் அது இன்னும் நல்லது. ஆனால் இதை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் இன்னமும் இந்த சமுதாயத்தில் வாழ தேவை இருக்கிறது. நீங்கள் எல்லோரிடமும் போய், 'நான் ஒரு முட்டாள்' என்று சொல்லத் தேவையில்லை. நீங்கள் முட்டாள் என்பது உங்களுக்கு தெரிந்தால் போதும். மற்றவர்கள் உங்களை புத்திசாலியாக பார்க்கிறார்கள், அது நல்லது தான். ஆனால் நீங்களே எல்லோரிடமும் உங்களை முட்டாள் என்று சொல்வது நல்லதல்ல.
எனவே இதை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும். உங்களை விட மிகப்பெரிய ஒன்று உங்களுக்கு நடந்தால், உங்களை விட மிக பிரம்மாண்டமான ஒன்று உங்களுக்கு நடக்கும்போது, இயல்பாகவே நீங்கள் ஒரு அப்பட்டமான முட்டாளாக உணர்வீர்கள். உங்களுக்கு அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்றால், நீங்கள் தான் இந்த பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய விஷயம் என்று நினைத்துக்கொள்வீர்கள். நீங்கள் உங்களை புத்திசாலி என்று நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு அடிமுட்டாள். இது அவ்வளவு பெரிய வித்தியாசம். உங்களுக்கு பெரிதாக எந்த பிரச்சனைகளும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு பல சிக்கல்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஏனென்றால் சிக்கல்களோடு இருப்பது தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது. சாதாரணமாக இருந்தால் முட்டாளாக இருப்பது போல் உங்களுக்கு தோன்றுகிறது. உங்களை நீங்களே முட்டாளாக பார்ப்பதை தவிர்க்கவே நீங்கள் உங்களை சிக்கல்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறீர்கள். உங்கள் பிரச்சனை வாழ்வதைப் பற்றி அல்ல. அதை பராமரிப்பு பற்றியது தான். சில விஷயங்கள் உங்களுக்கு திறக்க வேண்டும்.
சங்கரன் பிள்ளையும் திறக்காத ஜன்னலும்
இப்படி ஒரு சம்பவம் நடந்தது. சங்கரன் பிள்ளை தன் மனைவியுடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். இரவு 11:30 மணிக்கு அவர் ரிசப்ஷனை அழைத்து, 'என் மனைவி ஐந்தாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே குதித்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள்' என்றார். அதற்கு வரவேற்பாளர், "ஐயா, இது உங்கள் தனிப்பட்ட விஷயம். நாங்கள் இதில் தலையிட முடியாது" என்றவர் தொடர்ந்து, "இப்போது இரவு நேரம் என்பதால் நானும் ஒரோயொரு பராமரிப்பாளரையும் தவிர ஹோட்டலில் வேறு யாரும் இல்லை, எனவே எங்களால் உங்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது. அதிலும் இது உங்கள் சொந்த விஷயம் என்பதால் இதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
சங்கரன் பிள்ளைக்கு கோபம் வந்துவிட்டது, "முட்டாள்! என் தனிப்பட்ட பிரச்சனைக்கு உன்னிடம் உதவி கேட்கிறேன் என்றா நினைக்கிறாய்? நான் உங்கள் ஹோட்டலின் பராமரிப்பு பிரச்சனையைப் பற்றி தான் பேசுகிறேன். அந்த பாழாய் போன ஜன்னலை திறக்கவே முடியவில்லை!” என்று சீறினார். உங்கள் பிரச்சனையும் இது தான் - ஜன்னல் திறக்கவில்லை. வேறு எந்த பிரச்சனையும் இல்லை, வெறும் பராமரிப்பு பிரச்சனை தான். ஏனென்றால் உங்களை அதிக புத்திசாலியாக நீங்கள் நினைத்து கொண்டிருப்பதால் உங்களுக்கு ஜன்னலாக இருக்க வேண்டிய மனம் முழுவதுமாக அடைபட்டிருக்கிறது. எதுவும் தெரியாத முட்டாள் என்று உங்களை நீங்களே உணரும்போது ஜன்னல் திறந்துகொள்ளும்.