விநாயகர் சிலையைக் கரைப்பது ஏன்?
நம் பாரதப் பாரம்பரியத்தில், விநாயகருக்காகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அழகான விநாயகர் சிலைகளைச் செய்து, வழிபட்டு, பின் நாமே அதைக் கரைக்கும் ஒரு வழக்கம் சிலருக்கு விநோதமாகத் தோன்றலாம். அதன்மூலம் நமக்கு உணர்த்தப்படும் ஒரு உண்மை என்னவென்பதை சத்குரு விளக்குகிறார்.

ஒரு திருவிழா இருக்கிறது, இந்தியாவில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில். அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயர். இவர் யானை முகம் கொண்ட கடவுள். அது யானை முகமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, அது ஒரு பூத கணத்தின் முகமாக இருந்திருக்க வேண்டும். எப்படியோ ஒரு ஓவியர் அதை தவறாக வரைந்திருக்க வேண்டும். அவர் யானை ஆகிவிட்டார். கணபதி என்று அழைக்கப்படுகிறார். கணபதி என்றால் கணங்களின் தலைவர் என்று அர்த்தம். அவருடைய உருவத்தை களிமண்ணால் செய்து அதற்கு வண்ணம் பூசுவார்கள். சிலர் பூசமாட்டார்கள். அவர் உருவத்தை உருவாக்கி, அந்த உருவத்தை வழிபடுவார்கள். இசைகள் நடக்கும், பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். சிலர் மிகப்பெரிய சிலைகளை அமைப்பார்கள். 108 அடி அளவு பெரிய சிலை. அந்த விழா முடிந்ததும் ஒரு வாரமோ, 15 நாட்களோ வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்கள் வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த சிலைகளை கரைப்பதற்கு எடுத்து போய் பெரிய ஏரியிலோ, கடலிலோ போடுவார்கள்.
Subscribe
கடவுள் சிலையை உருவாக்கி, விழா கொண்டாடி, அவரை அவர்களுடைய முழு வாழ்க்கையாக்கி, அந்த 15 நாள், ஒரு மாதம் விநாயகர் மட்டும்தான், வேறு எதுவுமே கிடையாது. அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் சாப்பிடுவோம், அவருக்கு என்ன பிடிக்குமோ அதுதான் நமக்கும் பிடிக்கும், எல்லாமே அவருக்கானதாக இருக்கும். ஒரு நாள் அவரை கரைத்துவிடுவோம், அதன் பிறகு அவர் இல்லாமல் போய்விடுவார்.
வியாச முனிவருக்கு விநாயகர் கொடுத்த சவால்...
இந்த ஒரு கலாச்சாரத்தில் மட்டும்தான் கடவுள் என்பது நம்முடைய உருவாக்கம் என்பதை இன்னமும் விழிப்புணர்வாக வைத்திருக்கிறோம். அவர் அறிவின் குறியீடாக இருந்தார். ஏனென்றால் அவர் மிகப்பெரிய புராணங்களை எழுதினார். அந்த புராணங்களை அவருக்கு வாசித்த முனிவருக்கு விநாயகர் கொடுத்த சவால் என்னவென்றால், அந்த முனிவர் வாசிக்கும்போது அவர் இடைவெளி இல்லாமல் வாசிக்க வேண்டும், விநாயகரோ இடைவெளி இல்லாமல் எழுதுவார். நீங்கள் கொஞ்சம் நிறுத்தினால் கூட நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று சொன்னார். இது அந்த முனிவருக்கான ஒரு பரிசோதனை. அவர் சொல்வது அவருடைய இருப்பின் வெளிப்பாட்டில் இருந்து வருகிறதா, இல்லை அவர் தலையில் இருந்து சிந்தித்து தத்துவம் போல சொல்கிறாரா என்று ஒரு பரீட்சை. கணேசன், "இடைவெளி இல்லாமல் சொன்னால் மட்டும்தான் நான் எழுதுவேன். எங்கேயாவது நிறுத்தினீர்கள் என்றால், ஒருமுறை நான் பேனாவை கீழே வைத்துவிட்டால் திரும்ப எடுக்கமாட்டேன்" என்று சொன்னார்.
அதனால் வியாச முனிவர் எங்கேயும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக கதையை சொன்னார். மாதக்கணக்காக தொடர்ந்து சென்றது. விநாயகரும் ஒரு வார்த்தையையும் விடாமல் எல்லாவற்றையும் எழுதினார். உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த ஸ்டெனோ அவர்தான். அவர் மனித அறிவின் குறியீடாக போற்றப்பட்டார். ஒரு குறியீடாக பார்த்தால் அதுவும் சரியாக தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதுதான் மனித அறிவின் இயல்பும் கூட. அறிவை நீங்கள் விழிப்புணர்வாக எதையாவது கற்பனை செய்ய பயன்படுத்தலாம். இது அற்புதமான கற்பனைத் திறன்தானே? யானைத் தலையோடு ஒரு மனிதன். யானைத் தலை ஏனென்றால், பூமியிலேயே மிகப்பெரிய தலை அதுதான். அப்படியென்றால், பெரிய மூளை இருக்கிறது என்று அர்த்தம். அவர் மனித அறிவின் குறியீடு.
விநாயகர் சிலை கரைப்பது ஏன்?
அவரை கரைப்பது எதை குறிக்கிறது என்றால், நீங்கள் உங்கள் அறிவை சரியாக பயன்படுத்தினால், உலகத்தையும் உங்களால் கரைக்க முடியும் என்று சொல்கிறது. உங்கள் அறிவின் செயலை கரைப்பதில் பிரச்சனை இல்லை. உங்கள் கற்பனையால் உலகத்தை கரைத்துவிட்டீர்கள் என்றால், பிறகு கற்பனையை நிறுத்துவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. உங்கள் கற்பனையால் இந்த பிரபஞ்சத்தையே இல்லாமல் செய்ய முடியும். நீங்கள் சக்தியான கற்பனையை உருவாக்கினால், உங்கள் அனுபவத்தில் இந்த பிரபஞ்சமே இல்லாமல் போய்விடும். அதன் பிறகு உங்கள் கற்பனையை நிறுத்துவது மிகவும் சுலபமான விஷயமாகிவிடும்.
உங்கள் கற்பனை விழிப்புணர்வோடு உருவாக்கப்பட்டது என்றால், அதை நிறுத்துவதும் சுலபம்தான். இப்போது கற்பனைகள் விழிப்புணர்வு இல்லாமல் துண்டுத்துண்டாக நடப்பதால் அதை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்றாக உங்களுக்கு தெரிகிறது. அதனால் இந்த மொத்த திருவிழாவும் நாம் அவரை உருவாக்குகிறோம் என்பதை தான் குறிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
அவரை வைத்து நடக்கிற விழாக்கோலத்தை நீங்கள் பார்க்க வேண்டும். பொது இடத்தில் வைப்பார்கள், வீட்டில் வைத்திருப்பார்கள், அதை தவிர பெரிய சிலைகளை வீதிகளில் வைப்பார்கள். அந்த 15 - 30 நாட்களுக்கு நிறைய வீதிகள் முடக்கப்பட்டிருக்கும், போக்குவரத்து நிறுத்தப்படும், எல்லாமே நிறுத்தப்படும். அவர் வீதிக்கு நடுவில் உட்கார்ந்திருப்பார். பெரிய அளவில் கொண்டாட்டங்கள், இசை எல்லாம் நடக்கும். அந்த நாட்களில் மக்களும் அவரை சுற்றி தங்குவார்கள். ஆனால் நேரம் வந்ததும் அவரை எடுத்து போய் கரைத்துவிடுவார்கள், அவ்வளவுதான் கரைந்துவிடுவார். அடுத்த ஒரு வருடத்திற்கு யாரும் நினைப்பதில்லை.
இதை முழு வீச்சில் உங்கள் அறிவாலும் கற்பனையினாலும் செய்தீர்கள் என்றால், இந்த மூளை, இல்லை இந்த மூளையுடைய செயல், எதை நம் மனம் என்று சொல்கிறோமோ அது. இதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மூளை என்பது ஒரு அறுதியற்ற பொருள் கிடையாது. அது ஒரு வகையான செயல். எந்த செயல்பாடும் இல்லையென்றால், அறிவும் இல்லை. ஆமாவா இல்லையா? ஒருவேளை உங்களுக்கு எண்ணமே இல்லை என்று வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு மனம் இருக்குமா? "எனக்கு மனது இருக்கிறது, மனது இல்லை..." உங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அதுவே ஒரு எண்ணம்தான். ஒருவேளை எண்ணங்கள் இல்லை என்றால், உங்களுக்கு மனம் என்று ஒன்று இல்லை. ஏனென்றால், அது ஒரு செயல்பாடு. விழிப்புணர்வு நிலை என்பது எந்த செயலுடைய உதவியும் இல்லாமல் சும்மாவே இருக்கக்கூடியது. செயல் என்பது விழிப்புணர்வு நிலையை உருவாக்கவில்லை. விழிப்புணர்வு நிலைதான் செயல்களை உருவாக்குகிறது, இல்லையா?
உங்கள் மனதின் இயல்பை நீங்கள் நிர்ணயித்தால்...
நான் என்னுடைய கையை அசைக்கிறேன். என்னுடைய கை என்னை அசைக்கவில்லை, நான் தான் என்னுடைய கையை அசைக்கிறேன். அதுபோல நான் தான் என்னுடைய மனதை நகர்த்துகிறேன், மனது என்னை நகர்த்தவில்லை. ஆனால் அது மாறி நடந்திருக்கிறது. இப்போது உங்கள் மனதுடைய இயல்பு தான் உங்கள் தன்மையாக ஆகிவிட்டது, இல்லையா? உங்கள் மனது செய்கிற எல்லாவிதமான குளறுபடியான செயல்களும் தான் உங்கள் தன்மையாக ஆகியிருக்கிறது, இல்லையா? இப்போது இதை மாற்றுவது முக்கியம். ஏனென்றால், உங்கள் மனதின் இயல்பை நீங்கள் நிர்ணயித்தால் ஏதோ அற்புதமான ஒன்று நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனம் நீங்கள் யார் என்பதை நிர்ணயித்தால், அது ஒரு விபத்து. அது ஒரு மோசமான விபத்தா, இல்லையா? அதுதான் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்யும், ஆனாலும் அது ஒரு விபத்து தான்.