உயிருக்கு உயிரான வாழ்க்கைத் துணை சாத்தியமா? (Soulmate Meaning in Tamil)
உயிருக்கு உயிரான துணை, ஆத்மார்த்தமான உறவு என்பதை நம்புகிறீர்களா? சரியான நபரைக் கண்டுகொண்டீர்கள் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? ஆத்மார்த்தமான உறவுகள் என்ற பொதுவான எண்ணத்தை உடைக்கும் சத்குரு, ஒரு 'சரியான' திருமணத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றும் கூறுகிறார்.

உயிருக்கு உயிரான துணை என்பது யதார்த்தமா?
உடலுக்கு ஒரு துணை தேவை. அது நன்றாக வளரவில்லை என்றால், ஒருவேளை உங்கள் மனதிற்கு துணை தேவைப்படலாம். உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் விதமாக ஆகவில்லை என்றால், அதற்கும் துணை தேவை. குறைந்தபட்சம் உங்கள் உயிராவது இது போன்ற ஏக்கங்களிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும்!
Subscribe
மக்கள் "ஆன்மா" என்று கூறும் போது, உடல் கடந்த ஏதோ ஒன்றையே குறிப்பிடுகிறார்கள். பொருள் தன்மையைக் கடந்த ஏதோ ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு ஒரு துணை தேவையா?துணை என்றால் உடன் இருப்பவர். அது உடல்ரீதியான, மனரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான தேவை என எதுவாகவும் இருக்கலாம், அல்லது ஏதோ ஒரு வேலை சம்பந்தமாக இருக்கலாம், ஆனால் துணையின் தேவை என்பதே ஏதோ ஒரு நிறைவற்ற உணர்வு இருப்பதால்தான் வருகிறது. நீங்கள் ஆன்மா என்று எதைக் குறிப்பிட்டாலும் - குறைந்தபட்சம் அந்த ஒன்றாவது பூரணமானதாக இருக்க வேண்டும், அல்லவா!
உங்களுக்கான துணை எங்கேயோ இருக்கிறார், உங்களுக்காகவே கடவுள் இன்னொருவரைப் படைத்திருக்கிறார் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, உங்களுக்காகவே ஒருவரைக் கடவுள் படைக்கிறார், பாருங்களேன்.. அப்படியென்றால் கடவுள் உங்கள் விஷயத்தில் நிறையத் தவறுகள் செய்கிறார், அல்லவா! அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உயிருக்கு எந்த துணையும் தேவையுமில்லை, உங்களுக்கென்று மிகச்சரியாகப் பொருந்தும் எந்த ஒரு மனிதரும் உருவாக்கப்படவுமில்லை. நீங்கள் சரியானவர் என்றும், கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு பொருத்தமான இன்னொரு மனிதரை வேறெங்கோ உருவாக்கியிருக்கிறார் என்றும் நீங்கள் நினைத்துக்கொண்டால், அது பெருங்கேடாகப் போய் முடியும்.
ஆத்மார்த்தமானவர்களும் காதலும்
மக்கள் ஏன் ஒரு உறவை நாடுகிறார்கள்? உடல் சார்ந்த காரணங்களுக்காக இருக்கலாம்; அதை தாம்பத்தியம் என அழைக்கிறோம், அது அழகானதாகவும் இருக்க முடியும். மனம் சார்ந்த காரணங்களுக்காக இருக்கலாம்; அதை துணை என்கிறோம், அதுவும் அழகானதாக இருக்கமுடியும். உணர்ச்சிகளின் காரணமாக இருக்கலாம்; நாம் காதல் என்று அழைக்கும் இது, இருப்பதிலேயே இனிமையான அனுபவமாகப் பெரிதும் போற்றப்படுகிறது. உடலளவில் பொருத்தமும், மனதிற்கு ஏற்ற துணையும், காதலும், வாழ்க்கையை நிச்சயமாக அழகாக்கினாலும், நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருந்தால், இது போன்ற ஏற்பாடுகளைத் தொடர்ந்து வரும் பதட்டத்தையும் மறுக்க முடியாது. ஒரு உறவின் வரையறைகளும் எல்லைகளும் எதுவரை என்பதில் நீங்கள் நேர்மையாக இருப்பதே புத்திசாலித்தனம். யதார்த்தத்தை உணர்ந்தவராக இருப்பதில் ஒரு நன்மை என்னவென்றால், ஒருவேளை நாளை அந்த எல்லைகளை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால், அதை கையாள ஒரு பக்குவமான வழியைக் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் "ஆத்மார்த்தமான உறவு" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ அல்லது உங்கள் உறவு "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது" என்று சொல்லிக்கொண்டாலோ ஏமாற்றம் தவிர்க்க முடியாததே.
காதலைப் பற்றி உங்களுக்கு நிறைய கற்பனைகள் இருந்தால், உண்மையிலேயே அற்புதமான நபரை நீங்கள் திருமணம் செய்திருந்தாலும் கூட அது நிச்சயமாக நொறுங்கும், ஏனென்றால் காலத்திற்கும் நீங்கள் கற்பனையிலேயே இருக்க முடியாதே! நீங்கள் விவேகமாகவும் ஆனந்தமாகவும் வாழ வேண்டுமென்றால், திருமணம் என்பது மனிதர்கள் அமைத்த ஓர் ஏற்பாடு, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். இதுவே வாழ்வின் உச்சம் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்திருக்கும் வரையில் திருமணம் என்பது மிக இனிமையான அனுபவமாக இருக்கும்.
இந்த உறவுகளின் வெற்றி என்பது நாம் எந்த அளவிற்குப் பக்குவமாகவும் கவனமாகவும் அவற்றை அணுகுகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. நான் காதலைப் பற்றி இழிவாகப் பேசவில்லை. ஒரு மனிதன் வெளிப்படுத்தக்கூடிய தன்மைகளிலேயே காதல் என்பது மிக அழகான ஒரு தன்மை. பல கலாச்சாரங்கள் காதலை அமிழ்த்தி வைத்துள்ளன. சிலர் அதைச் சொர்க்கத்திற்கு ஏற்றுமதி செய்ய முயல்கிறார்கள். ஆனால் காதல் என்பது இந்த பூமியைச் சேர்ந்தது, இது ஆழமான ஒரு மனித உணர்வு. அதை ஏன் மறுக்க வேண்டும்?
அன்பு செலுத்த எந்த பொருளும் தேவை இல்லை. அன்பு என்பது ஒரு தன்மை, அவ்வளவுதான். நீங்கள் நேசிக்கும் மனிதர் உங்கள் முன்னிலையில் இல்லை என்றாலும், உங்களால் அவர்களை நேசிக்க முடியும். நீங்கள் விரும்பும் ஒருவர் இல்லாமலேயே போனாலும் கூட, நீங்கள் அவர்களைத் தொடர்ந்து நேசிக்கிறீர்கள். அப்படி என்றால் உங்களுக்குள்ளேயே இருக்கும் இயல்பான இந்த தன்மையை வெளிப்படுத்திக்கொள்ள உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களை ஒரு தூண்டுதலாகப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.
உங்களது பகுத்தறியும் புத்திக்கு போதுமான அளவு விழிப்புணர்வை கொண்டு வந்தால், நீங்கள் அன்பாக மட்டுமே இருக்க முடியும். அன்பு என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. நீங்கள் இருக்கும் விதமே அன்புதான். இந்த உயிரின் தன்னைக் குறித்த ஏக்கமே அன்பு. இந்த ஏக்கத்தின் அடிப்படையே, அனைத்தையும் தனக்குள் அணைப்பதாக எல்லையற்றதாக ஆகவேண்டும் என்பதுதான். அனைத்தையும் நேசிக்குமளவு உங்கள் அன்பு விரிவடையும் போதுதான், எல்லையற்றதை நீங்கள் தொடுகிறீர்கள்.
அப்போதுதான் எளிமையான ஒரு உண்மையை நீங்கள் உணர்வீர்கள்: உயிருக்கு துணையோ இணையோ தேவையில்லை. அதற்கு அப்படி ஒன்று ஒருபோதும் இருந்ததே இல்லை.
நீங்கள் சரியான நபரைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி?
சில குறிப்பிட்ட கர்ம தொடர்புகளால் மக்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவது உண்மையே. அதற்காக, இந்த உறவுகள் எல்லாம் சிறந்த உறவுகளாக இருக்கும் என்றில்லை. இந்த பூமியில் சரியான மனிதர் என்று யாரும் இல்லை. ஏதோ ஒன்றிற்கு உங்கள் இதயத்தைக் கொடுத்தால், அந்த ஏதோ ஒன்று அற்புதமாக மாறலாம். இது சரியான விஷயம்தானா? சரியானது என்று எதுவுமில்லை. மிகச் சரியான ஒரு நபரைக் கண்டுபிடித்து விட்டோம் என்ற ஒரு உண்மையற்ற மனநிலைக்குள் நீங்கள் சென்றால், விரைவில் ஏமாற்றமடைவீர்கள். உங்களிடம் உங்கள் முட்டாள்தனங்கள் இருக்கின்றன, அவர்களிடம் அவர்களின் முட்டாள்தனங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டால், இந்த முட்டாள்தனத்திற்கும் அந்த முட்டாள்தனத்திற்கும் ஒத்துப்போகும்படி நாம் தொடர்ந்து செல்லலாம்.
உறவுகள் பல்வேறு தேவைகளுக்காக ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல தேவைகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஒருவரிடம் செல்லும்போது, நீங்கள் ஒரு பிச்சைக்காரனாகவே செல்கிறீர்கள், ஒரு பிச்சைக்காரனால் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த உலகில் நீங்கள் உண்மையிலேயே எதையாவது தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: உங்கள் வாழ்க்கை அனுபவத்தை இனிமையாக உணர நீங்களே போதும் என்ற நிலையை அடைவதுதான். இந்நிலையை அடைந்தால் இதை நோக்கி எது ஈர்க்கப்படுகிறது என்று பார்ப்போம். நீங்கள் உண்மையிலேயே அற்புதமானவராக இருந்தால், நடக்க வேண்டியவை அனைத்தும் எல்லா வழிகளிலும் நடக்கும். வேலை, திருமணம், உறவுகள் எல்லாவற்றிலும் சிறந்ததே நிகழும். ஏனென்றால் உங்களை நீங்கள் அப்படி வைத்திருக்கிறீர்கள். மற்றவர்களிடம் மாற்றம் கொண்டு வர அவர்களை சரி செய்ய முயல்வதற்குப் பதிலாக, உங்களோடு இருப்பதற்கு அனைவரும் விரும்பும் ஒரு அற்புதமான மனிதராக உங்களை மாற்றிக்கொள்ள நீங்கள் உழைத்தால், தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இப்போது உங்களிடம் இருக்கும்.
மிகச் சரியானவர் என்று எந்த ஒரு மனிதரையும் நீங்கள் கண்டுபிடிக்கப் போவதில்லை. ஒரு ஆழமான ஈடுபாட்டை முதலீடு செய்தால், அற்புதமான ஏதோ ஒன்று நிகழலாம். இன்னொரு மனிதர் அற்புதமானவர் என்பதால் அல்ல. நீங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு முட்டாளாகவே இருந்தாலும் கூட, அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொண்டால், அது அழகானதாக மாற முடியும். இந்த பிரபஞ்சத்திலேயே மிகச் சாமர்த்தியமான ஒரு மனிதரை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும், அது கேடாக மாற முடியும். “அவர் எனக்காகவே படைக்கப்பட்டவர்” போன்ற அபத்தங்களின் அடிப்படையில் சிந்திக்காதீர்கள். உண்மையில் நீங்கள் நேர் எதிரானதைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அவர்கள் உங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய தவறு. உங்கள் வீட்டில் உங்களைப் போலவே இன்னொரு மனிதர் இருந்தால் உங்களால் அங்கே வாழ முடியுமா? அவர்கள் வேறு விதமாக இருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும், அல்லவா! உங்களைப் போல் இன்னொரு மனிதர் இந்த பூமியில் இல்லை என்பதே அற்புதமானது. எல்லாமே ஒன்று போலவே இருக்க வேண்டும் என்று தேடாதீர்கள்.
குறிப்பு:
உங்கள் நல்வாழ்வை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள உதவும் ஈஷா யோகா வகுப்பு இப்போது ஆன்லைனிலும் வழங்கப்படுகிறது!