கவனக் குறைவு பிரச்சனை - கையாள்வது எப்படி? (Attention Deficit Disorder in Tamil)
குழந்தைகளின் கவனம் செலுத்தும் திறனை வைத்து அவர்களைத் தரம்பிரித்து வகைப்படுத்துவது ஏன் தவறானது என்பதை விளக்கும் சத்குரு, கவனத்தை மேம்படுத்தும் வழியையும் விளக்குகிறார்.

கவனக் குறைவு பிரச்சனை
உடல், மனம் என்று வரும்போது இரண்டு மனிதர்கள் ஒரே திறனோடு இருக்கமாட்டார்கள், இல்லையா? உடலிலும், மனதிலும் ஒரு மனிதன் செய்ய முடிவதை மற்றவர்களால் செய்ய முடியாது. பல விதத்தில் அது அப்படித்தான். ஆகையால் உங்களுக்கு நீங்களே ஒரு பெயர் சூட்டிக்கொள்ளாதீர்கள், "கவனக் குறைபாடு நோய்" "நான் ஏடிடி, ஏபிசி..." இந்த மாதிரி எல்லாம்.
உங்களை எப்படி வளர்த்துக்கொள்வது என்று பார்க்க வேண்டும், இல்லையா? உங்களுக்கு கவனக் குறைவு பிரச்சனை இருக்கிறது. எனக்கு வேறொரு விதமான பிரச்சனை இருந்தது.
குழந்தைப் பருவத்தில் சத்குருவின் கவனம்
எனக்கு மிக அதிகமான கவனம் இருந்தது. நான் இதன் மீது கவனத்தை வைத்தேன் என்றால் அதன் மீது எனக்கு கவனம் போகாது. நான் இதையே மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுவும் ஒரு பிரச்சனை என்று மக்கள் நினைத்தார்கள். என்னைச் சுற்றி இருந்தவர்கள் அது ஒரு பிரச்சனை என்று நினைத்தார்கள். "ஒரே பொருளையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறானே". எனக்கு இந்த சூழ்நிலை நன்றாக நினைவில் இருக்கிறது. இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. என்னுடைய தந்தை வாழ்க்கை முழுவதும் படிப்பில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். ஆனால் அவருக்கு படிப்பில் துளியும் ஆர்வமில்லாத என்னைப் போன்ற ஒரு மகன் இருந்தான். தந்தை மிகவும் கண்டிப்பான ஒழுக்க நெறியாளர். தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை அண்ணன், அக்கா, தம்பி என நாங்கள் நால்வரும் படிக்க வேண்டும். அனைவரும் பாடப்புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
Subscribe
நான் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்திருப்பேன். அது எந்தப் புத்தகமாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் அதில் ஒரு பக்கத்தைத் திறந்து வைத்திருப்பேன். ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்திருப்பேன். அது எந்தப் பக்கமாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் அந்தப் பக்கத்தில் சிறு துகளை கண்டுபிடிப்பேன். அந்தப் பக்கத்தில் ஒரு சிறிய துகள், ஒரு மிகச் சிறிய துகள் - அதையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன், அவ்வளவுதான். அது என்னுடைய கவனத்தை முழுமையாக ஈர்த்துவிடும்.
நான் அந்தப் புள்ளியையே இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் ஒரு வார்த்தை கூட படிக்கமாட்டேன். ஆனால் நான் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். ஏனெனில் அது என்னுடைய கவனத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிடும். இரண்டு மணி நேரம் அந்தப் புள்ளியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்.
ஏனெனில் அந்தச் சிறிய புள்ளியில் அவ்வளவு இருக்கிறது. அதற்குள் ஒரு முழு உலகமே இருக்கிறது. ஒரு அணுவிற்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு சிலர் தங்கள் ஆயுட்காலம் முழுவதையும் செலவழித்திருக்கிறார்கள். ஒரு புள்ளி என்பது ஒரு அணுவை விடப் பெரியது. எனக்கு அதிகமான கவனம் இருப்பதைப் பார்த்து நான் பைத்தியமாகிவிட்டேன் என்று என்னைச் சுற்றி இருப்பவர்கள் நினைத்தார்கள்.
குழந்தைகளைத் தரம்பிரித்து பெயர்சூட்ட வேண்டாம்!
ஆகையால் உங்களுக்கு நீங்களே இந்தப் பெயர், அந்தப் பெயர் என்று இவ்வாறு கொடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குக் கவனம் குறைவாக இருக்க வேண்டும் என்று யார் தீர்மானிக்க வேண்டும்? ஏதாவது அளவுகோல் இருக்கிறதா? உங்களுக்கு இவ்வளவு கவனம் இருக்க வேண்டும்? அல்லது மற்றவர்கள் உங்கள் மீது இவ்வளவு கவனம் வைக்க வேண்டும்? அந்த மாதிரி எங்கேயும் எந்த அளவுகோலும் இல்லை, சரியா? நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள்.
பிரச்சனை என்னவென்றால், சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு ஏதோ அடையாளம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த அடையாளத்தை அவர்கள் வாழ்க்கை முழுவதும் சுமக்க வேண்டும். 5 வயதில் எவ்வளவு கவனம் இருக்கும், ஆறு வயதில் எவ்வளவு இருக்கும், 7 வயதில், எட்டு வயதில், 15 இருபது வயதில் எவ்வளவு கவனம் இருக்கும் என்பது வேறு வேறு மாதிரி இருக்கலாம். உங்களுக்கெல்லாம் அப்படி இருந்திருக்கிறது தானே, இல்லையா? அந்த மாதிரி இருந்தது இல்லையா? பள்ளியின் முதல் நாள், உங்களுக்கு ஒன்றும் புரியாது. அப்புறம் உங்களுக்கெல்லாம் நன்றாக புரிந்திருக்கும், இல்லையா? முதல் நாள் எல்லாம் நன்றாக புரிந்தது போல தோன்றியிருக்கும். ஆனால் ஒரு வருடத்தின் முடிவில் நீங்கள் எதுவும் செய்திருக்கமாட்டீர்கள்.
கவனத்தை மேம்படுத்தும் வழி?
நீங்கள் ஒரு இளவயது நபர். உங்கள் பக்கத்து வீடுகளில் இளவயது பெண்கள் இருப்பார்கள், இல்லையா?
நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் இருக்கிறீர்கள். அப்போது யார் மீதாவது ஈர்க்கப்படுவீர்கள். அதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம், இல்லையா? நீங்கள் கவனம் செலுத்தத் தேவையில்லை. அவர்களே உங்களுக்குள் வந்துவிடுவார்கள். ஆதலால், கவனம் என்பது எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒன்றின் மீது ஆழ்ந்த ஈடுபாடு வைத்திருந்தால் கவனம் வந்துவிடும். வராமல் எப்படி இருக்கும்? உங்களுக்கு இன்னும் எதன் மீதும் ஆர்வம் வரவில்லை.
நீங்கள் ஒன்றை நோக்கி ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்தால் உங்களுக்கு எப்படி கவனம் இல்லாமல் போகும்? கவனம் தானாக வரும். மற்றவர்களைப் போல எனக்குக் கவனத்திறன் இருக்கிறதா? இல்லாமல் இருக்கலாம். வகுப்பறைக்குள் என்ன நடக்கிறது என்பதில் நான் கவனம் செலுத்தியதே இல்லை. ஏனெனில் அதன் மீது எனக்கு ஆர்வம் வரவில்லை. ஆனால் எனது கவனம் மற்ற பல விஷயங்களில் இருந்தது. அதனால் எனக்கு கவனக்குறைவு தொந்தரவாக இருந்தது என்று அர்த்தமா? இல்லை. வகுப்பில் இருக்கின்ற பிளாக் போர்டில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதில் எனக்கு விருப்பம் இல்லை, அவ்வளவுதான்.
இப்போது துரதிருஷ்டவசமாக உங்கள் பக்கத்து வீடுகளில் இருந்த எல்லா பெண்களும் வேறு எங்கோ சென்றுவிட்டார்கள். அதனால் உங்களுக்கு கவனக்குறைவு இருக்கிறது. நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்ற ஏதோ ஒன்றை கண்டுபிடியுங்கள். உங்களுக்கு கவனம் தானாகவே வந்துவிடும். எப்படி வராமல் இருக்கும். நான் சொன்னதன் மேல் இருக்க வேண்டும், இல்லை அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நான் பெண்களை எடுத்துக்காட்டாக சொன்னேன். ஏனெனில் அதற்கு ரசாயன அளவில் உதவி இருக்கிறது. ஆமாம் தானே? ரசாயனம் உங்கள் கவனத்திற்கு உதவியாக இருக்கிறது. மற்ற விஷயங்கள் மீது கவனம் வருவதற்கு இன்னும் கொஞ்சம் அதிக முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன முக்கியமானதாக இருக்கிறதோ அதன்மீது இன்னும் தீவிரமான ஆர்வத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த புரிதல் உங்களுக்குள் வந்துவிட்டால் உங்களுக்கு தானாகவே கவனம் வந்துவிடும். மற்றவர்கள் இதைப் பற்றி வேறு கருத்துகள் சொல்வார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து இப்போது வரையிலும் உங்களுக்கு என்ன மனநிலை இருந்ததோ அதுவே உங்கள் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
மனக்கட்டமைப்பை மாற்றுவது மிக சுலபம்
வாழ்க்கையில் மிகவும் சுலபமாக நம்மால் செய்ய முடிகிற விஷயம் உங்கள் மனதின் கட்டமைப்பை மாற்றுவதுதான், இல்லையா? உடலின் கட்டமைப்பை மாற்றுவது மிகவும் கடினம். மனதின் கட்டமைப்பை மாற்றுவது மிகவும் சுலபமான விஷயம். ஏனெனில் அதுதான் வளையக்கூடிய ஒன்று. ஆனால் அதை நீங்கள் ஒரு சிமெண்ட் கட்டிடம் போல ஆக்கி வைத்திருக்கிறீர்கள். உங்கள் மண்டையை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? யாரையாவது முட்டுவதற்குத்தான் வைத்திருக்கிறீர்களா? இதை நீங்கள் எவ்வளவு வளையக்கூடியதாக இருக்கிறதோ அப்படி வைத்துக்கொள்ள வேண்டும்தானே? நீங்கள் இதை ஒரு சிமெண்ட் கட்டிடம் போல வைத்திருந்தால் என்ன பிரயோஜனம்?
அதனால்தான் நிறைய பேர் மிகவும் தீவிரமான கால்பந்து ரசிகர்களாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும்தான் ரசிக்கிறீர்கள். அதுவும் நல்ல விஷயம்தான், அதை நல்லவிதமாக விளையாடினால். ஆனால் மண்டையை நாம் பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். அதை நீங்கள் முற்றிலும் வளையக்கூடியதாக வைத்திருந்தால் அதனால் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும். இல்லையென்றால் அந்த சிமெண்ட் கட்டிடம் சில விஷயங்களை மட்டும்தான் செய்யும். அதனால், உங்களுக்கு மற்றவர்கள் என்ன பெயர் சூட்டினாலும் நீங்கள் விரும்பினால் உங்கள் மனதின் கட்டமைப்பை உங்களால் மாற்ற முடியும்.