பொருளடக்கம்
1. காதலில் வீழ்வது
2. நிபந்தனையில்லாமல் எப்படிக் காதலிப்பது?
3. தயாளசிந்தை கொண்ட சகோதரர்கள்
4. நன்றிப்பெருக்கு
5. காதல் என்பது வாழ்வின் மிக மெல்லிய ஒரு பரிமாணம்
6. காதல் ஒரு தேவை என்ற நிலையில்
7. அரசியின் காதல்
8. உண்மைக் காதலின் அர்த்தம் என்ன?
9. காதலாகிக் கசிந்திருப்பதற்கு ஒரு எளிய செயல்முறை

காதலில் வீழ்வது (Falling in Love)

சத்குரு: “காதலில் விழுவது”, என்ற ஆங்கிலச் சொற்றொடர் முக்கியத்துவமானது. ஏனெனில் யாரும் காதலில் உயர்வதோ அல்லது காதலில் மேலேறுவதோ கிடையாது. நீங்கள் காதலில் விழுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் யார் என்பதில் சிறிதளவாவது காணாமல் போகவேண்டும். உங்களின் ஒட்டுமொத்தமும் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் உங்களின் ஒரு பகுதியாவது தகர்ந்து சரியவேண்டும். அப்போதுதான் அங்கே ஒரு காதல் உறவு இருக்கிறது. மற்றவர் பொருட்டு உங்களின் ஒரு சிறிய அளவேனும் அழிவதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள். அதன் முக்கியமான பொருள் என்னவென்றால், உங்களைக்காட்டிலும் வேறொருவர் மிகமிக முக்கியமான நபராகியுள்ளார். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்களும் “காதல்” என்று அழைப்பது, ஒரு பரஸ்பர உதவித் திட்டமாகத்தான் இருக்கிறது.

நீங்கள் காதலில் விழுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் யார் என்பதன் ஒரு சிறிதளவு மறையவேண்டும்.

ஒருநாள், சங்கரன்பிள்ளை ஒரு பூங்காவிற்கு சென்றார். அங்கிருந்த ஒரு கல்மேடை மீது அழகிய பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவரும் அதே மேடை மீது சென்று அமர்ந்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் அவளுக்கு சற்று நெருக்கமாக நகர்ந்தார். அவள் நகர்ந்து விலகினாள். மீண்டும், அவர் சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, அவளுக்கு சற்று நெருக்கமாக நகர்ந்தார். அவள் மீண்டும் நகர்ந்து விலகினாள். அவர் மீண்டும் சற்று நேரம் கழித்து, மேலும் நெருக்கமாக நகர்ந்தார். இதற்குள் அவள் மேடையின் மறுமுனைக்கே சென்றிருந்தாள். அவர் அவளை எட்டிப்பிடித்து, அவள் மீது தனது கைகளைப் பதித்தார். அவள் தோள்களைக் குலுக்கி அவரது கைகளை விலக்கினாள். அவர் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டு, பிறகு தரையில் முழந்தாளிட்டு, ஒரு பூவைப் பறித்து, அவளிடம் நீட்டியபடியே, “நான் உன்னைக் காதலிக்கிறேன். என் வாழ்க்கையிலேயே நான் வேறு யாரையும் உன்னைப்போல் ஒருபோதும் காதலித்ததில்லை”, என்று கூறினார்.

அவள் உருகிவிட்டாள். அதன் பிறகு இயற்கை தன் வேலையைச் செய்யத் துவங்கிவிட்டதில், அவர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். மாலை நேரமாகிக்கொண்டிருந்தது; சங்கரன்பிள்ளை எழுந்து நின்று கூறினார், “நான் போகவேண்டும். மணி எட்டாகிவிட்டது. என் மனைவி காத்திருப்பாள்.”

அவள் கேட்டாள், “என்ன? நீங்கள் போகவேண்டுமா? இப்போதுதானே என்னைக் காதலிப்பதாகக் கூறினீர்கள்!”

“ஆமாம், ஆனால் நேரமாகிவிட்டது, நான் போயாகவேண்டும்.”

பொதுவாகவே, நமக்கு வசதியாகவும், இலாபமளிப்பதாகவும் இருக்கும் வரையறைக்குள் நாம் உறவுகளை உருவாக்கியுள்ளோம். மக்களுக்கு உடல் நிலையில், மன நிலையில், உணர்ச்சி நிலையில், பொருளாதார நிலையில் அல்லது சமூக நிலையில் தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான சிறந்த வழிகளுள் ஒன்று, “நான் உன்னைக் காதலிக்கிறேன்”, என்று மற்றவரிடத்தில் கூறுவதுதான். இந்த “காதல்” என்று அழைக்கப்படுவது ஒரு மந்திரச்சொல் போல ஆகியுள்ளது; திறந்திடு சீசேம் என்பதைப்போல. அதைக் கூறுவதனால், உங்களுக்கு விருப்பமானதைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஏதோ ஒரு வழியில் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கானதாகவே இருக்கிறது. இதை நீங்கள் புரிந்துகொண்டால், காதலை அல்லது அன்பை, உங்களது இயல்பான தன்மையாக வளர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால் மக்கள் தங்களது வசதி, சௌகரியம் மற்றும் நல்வாழ்வுக்காக உருவாக்கியுள்ள உறவுகளை உண்மையில் காதலின்பால் ஏற்பட்ட உறவுகள் என்று நம்பிக்கொண்டு தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக்கொண்டே இருக்கின்றனர். அந்த உறவுகளில் அன்பின் உணர்தல் முற்றிலும் இல்லை என்று நான் கூறவில்லை, ஆனால் அது குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கிறது. எவ்வளவுதான் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று கூறப்பட்டாலும், அது பொருட்டல்ல, ஒரு சில எதிர்பார்ப்புகளும், தேவைகளும் பூர்த்திசெய்யப்படவில்லை என்றால், அந்த உறவு முறிந்துவிடும்.

நிபந்தனையில்லாமல் எப்படிக் காதலிப்பது (How to Love Unconditionally?)

மீராபாய், Meerabai, நிபந்தனையற்ற காதல், Unconditional Love

காதலைப்பற்றி நீங்கள் பேசும்போது, அது நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். நிபந்தனையுடைய காதல் மற்றும் நிபந்தனையில்லாத காதல் என்பதைப்போன்ற விஷயம் உண்மையில் இல்லை. அது என்னவென்றால், நிபந்தனைகள் இருக்கின்றன மற்றும் காதல் இருக்கிறது. ஆனால், ஒரு நிபந்தனை எழுகின்ற கணமே, அது ஒரு பரிவர்த்தனை என்ற அளவில்தான் இருக்கிறது. அது ஒரு வசதியான பரிவர்த்தனையாக இருக்கலாம், ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கலாம் – மக்கள் பலரும் அதிசிறப்பான ஏற்பாடுகளை வாழ்க்கையில் செய்திருக்கலாம் – ஆனால் அது உங்களை நிறைவு செய்யாது, அது உங்களை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லாது. அது சௌகரியமானது மட்டுமே.

 உங்களுக்கு வெளியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது, எப்போதும் பல சூழ்நிலைகளுக்கு உட்பட்டது. ஆனால் காதல் என்பது உள்தன்மையின் நிலை – உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது கட்டாயமாக நிபந்தனையின்றி இருக்கமுடியும்.

“காதல்” என்று நீங்கள் கூறும்பொழுது, அது ஒரு வசதிக்காக இருக்கவேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான நேரம், அது வசதியில்லை. அது உயிரை எடுக்கிறது. காதல் ஒரு மகத்தான விஷயமல்ல, ஏனென்றால் அது உங்களை முழுவதுமாக சாப்பிடுகிறது. நீங்கள் காதலில் இருக்கவேண்டும் என்றால், ‘நீங்கள்’ என்பது இருக்கக்கூடாது. ஒரு நபர் என்ற நிலையில், நீங்கள் கீழே விழுவதற்கு சம்மதிக்க வேண்டும், அப்போதுதான் அது நிகழமுடியும். அந்த செயல்முறையில் உங்கள் தனிப்பட்ட ஆளுமை பலப்படுத்தப்பட்டால், பிறகு அது ஒரு வசதியான சூழ்நிலையாக மட்டுமே இருக்கிறது, அவ்வளவுதான். ஒரு பரிவர்த்தனை என்பது என்ன மற்றும் ஒரு உண்மையான காதல் உறவு என்பது என்ன என்று நாம் அடையாளம் காணவேண்டும். ஒரு காதல் உறவு என்பது எந்த ஒரு குறிப்பிட்ட நபருடனும் இருக்கவேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட எந்த ஒருவருடனும் இல்லாமல், ஆனால் வாழ்க்கையுடன் உங்களுக்கு ஒரு மகத்தான காதல் உறவு இருக்கமுடியும். 

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும், என்ன செய்யவில்லை என்பதும், உங்களைச் சுற்றிலும் இருக்கும் சந்தர்ப்பசூழல்களைப் பொறுத்திருக்கிறது. வெளிச்சூழல்களின் தேவைகளுக்கேற்ப நமது செயல்கள் உள்ளன. உங்களுக்கு வெளியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது, எப்போதும் பல சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டது. ஆனால் காதல் என்பது உள்நிலை – உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது கட்டாயமாக நிபந்தனையின்றி இருக்கமுடியும்.

தயாளசிந்தை கொண்ட சகோதரர்கள்

எனது கொள்ளுப்பாட்டி எனக்கு பல கதைகள் கூறினார் – இந்தக் கதை எனக்குள் பதிந்துவிட்ட ஒன்று. இந்தக் கதை என் வாழ்க்கைக்கு அடித்தளமல்ல, ஆனால் நிச்சயமாக சில வழிகளில் என்னை அது உருவாக்கியது. ஒரு தம்பதியர் இருந்தனர். அந்த நாட்களில், ஆண்கள் நிலத்தில் உழைத்து, பயிர் வளர்த்து, சம்பாதித்தனர். ஆண் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் இணைந்து உழைத்து, அதிக நிலத்தில் பயிர்செய்யலாம். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு பிள்ளைகளும் பலம் பொருந்திய இளைஞர்களாக வளர்ந்து நின்றனர். தந்தையோடு மகன்களும் பாடுபட்டு உழைத்து, நிலத்தை விரிவாக்கம் செய்து, செல்வச் செழிப்புடன் இருந்தனர். தந்தை முதுமையடையும் தருவாயில், அவரது இரண்டு மகன்களிடமும் கூறினார், “நான் எந்த நேரமும் இறக்க நேரலாம். நான் கூறப்போகும் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் எப்போதும் சரியாக செய்துவரவேண்டும். எனது மரணத்திற்குப் பிறகு, இந்த நிலத்தின் விளைச்சலை நீங்கள் இருவரும் எப்பொழுதும் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது குறித்து உங்களுக்குள் எந்த விவாதமோ, வாக்குவாதமோ அல்லது சண்டையோ இருக்கக்கூடாது.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதியவர் இறந்ததும், மகன்கள் நிலத்தைக் கவனித்துக்கொண்டனர். அந்தக் காலத்தில் இந்தியாவிலும், மற்றும் உலகின் மற்ற பல பகுதிகளிலும், நிலத்தைப் பங்கு பிரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. விளைச்சல் மட்டும் பிரிக்கப்படலாமே தவிர, நிலம் அல்ல. கடந்த நான்கு தலைமுறைகளில்தான், ஒருவேளை பிரிட்டிஷ் வந்த பிறகு இருக்கலாம், நாம் நிலத்தைப் பிரிக்கத் துவங்கினோம். ஆகவே, இரண்டு சகோதரர்களும் எப்பொழுதும் விளைச்சலை அவர்களுக்குள் சமமாகப் பிரித்துக்கொண்டனர்.

அவர்களுள் ஒருவருக்கு திருமணம் முடிந்து, ஐந்து குழந்தைகள் இருந்தன. மற்றொருவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அப்போதும் அவர்கள் சரிபாதியாகப் பிரித்துக்கொண்டனர். ஒருநாள், திருமணமாகாத சகோதரனுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. அவன் நினைத்தான், “என் சகோதரனுக்கு மனைவியும், ஐந்து குழந்தைகளும் உள்ளனர். நான் தனியாளாக இருக்கிறேன். ஆனாலும் அவன் 50% எடுக்கிறான், நானும் 50% எடுக்கிறேன். இது நியாயமாகத் தோன்றவில்லை. இருப்பினும், இது நமது தந்தையின் விருப்பம். இதில் பெருமிதம் அடையும் என் சகோதரனுக்கு நான் கூடுதலாகக் கொடுக்க முயன்றாலும், அவன் அதை எடுத்துக்கொள்ளமாட்டான். ஆகவே இதற்கு வேறு ஒரு உபாயம் செய்கிறேன்.” அவன் இரகசியமாக ஒரு செயல் செய்யத்தொடங்கினான். அறுவடை முடிந்தபிறகு, தினசரி இரவில், யாரும் அறியாமல் அவன் ஒரு மூட்டை தானியத்தைத் தன் முதுகில் சுமந்து சென்று, அவனது சகோதரனின் கிடங்குக்குள் வைத்தான்.

அதே எண்ணம் அவனது சகோதரனின் தலையிலும் ஓடியது, அவன் நினைத்தான், “எனக்கு வளர்ந்துவரும் ஐந்து மகன்கள் உள்ளனர். சில வருடங்களில், எனக்கு அதிக நிகழ்வு இருக்கும். என் சகோதரனுக்கு ஒருவரும் இல்லை. பின்னாட்களில் அவன் என்ன செய்வான்? ஆனால் அவன் ஐம்பது சதவிகிதம் மட்டும் எடுக்கிறான், நான் ஐம்பது சதவிகிதம் எடுக்கிறேன். அவனுக்கு நான் அதிகம் கொடுக்க முன்வந்தால், அவன் அதை எடுத்துக்கொள்ளமாட்டான்.” யோசனையின் முடிவில், அவன் ஒவ்வொரு இரவும் ஒரு தானிய மூட்டையை எடுத்துச் சென்று, அவனது சகோதரனின் கிடங்குக்குள் வைக்கத் தொடங்கினான். அங்கே தானியங்களின் ஒருவிதமான தலைகீழ் சவ்வூடுபரவல் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவர்கள் இருவருமே அதை நீண்ட காலம் உணரவில்லை.

சகோதரர்கள் முதுமையடைந்து கொண்டிருந்தனர் என்றாலும் இதைத் தொடர்ந்து செய்துவந்தனர். ஒருநாள், தானிய மூட்டையுடன் அவர்கள் மற்றவரது கிடங்குக்குள் நடந்துகொண்டிருக்கையில், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், இத்தனை காலமும் என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதை சட்டென்று உணர்ந்தனர். வேகமாக ஒருவர் மற்றவரது பார்வையைத் தவிர்த்துவிட்டு, மேலும் நடந்து சென்று, தானிய மூட்டையைச் சுமந்து அதனை சேருமிடத்தில் வைத்தனர், அவரவர் வீடுகளுக்குச் சென்று உறங்கினர். காலம் கடந்தது, அவர்கள் முதுமை அடைந்து, இறந்துவிட்டனர்.

அவர்கள் வாழ்ந்த நகரத்து மக்கள் ஒரு கோவில் கட்டும் விருப்பத்துடன், அதற்கான ஒரு நல்ல இடத்தைத் தேடிக்கொண்டிருந்தனர். ஒரு நீண்ட தேடலுக்குப் பிறகு, அவர்கள் கோவில் கட்டுவதற்கான சிறந்த இடத்தை முடிவு செய்தனர். இந்த இரண்டு சகோதரர்களும் தங்களது முதுகுகளின் மீது தானிய மூட்டையுடன் சந்தித்துக்கொண்டு, தங்களது சுய தாராளமனம் வெளிப்பட்டதைக் குறித்து சங்கடம் அடைந்த அந்தக் குறிப்பிட்ட இடத்தை கோவில் கட்டத் தேர்ந்தெடுத்தனர். நீங்கள் இந்த மாதிரி வாழ்ந்தால், நீங்களே ஒரு வாழும் கோவிலாகத்தான் இருக்கிறீர்கள். அப்போது, நிபந்தனையுடைய காதல், நிபந்தனையில்லாத காதல் இவையெல்லாம் குறித்து நீங்கள் வருந்தவேண்டியதில்லை.

நன்றிப்பெருக்கு

நன்றி உணர்வு, Gratitude

நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்று எண்ணாமல், ஆனால் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால், இயற்கையாகவே ஒரு நன்றிப்பெருக்குடன் இருப்பீர்கள். "நான் எவ்வளவு செய்துள்ளேன்” என்ற இந்த முட்டாள்தனத்தை விட்டுவிடுங்கள். யாரிடமிருந்தும், எதையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், நீங்கள் எளிதாக வாழ்வீர்கள். யாரோ ஒருவரிடம் இருந்து ஏதோவொன்றை நீங்கள் எதிர்பார்த்தால், அல்லது உங்களை அவர்கள் காதலிக்கிறார்களா, இல்லையா என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொண்டால், அப்போது இந்த எல்லாப் பிரச்சனைகளும் எழுகின்றன. யாரிடமிருந்தும் எதையும் நீங்கள் எதிர்பார்க்காதபொழுது, அவர்கள் அதைச் செய்தால், அவர்களுக்கு அது அற்புதமாக இருக்கிறது, அவர்கள் செய்யாமல்போனால், என்ன பிரச்சனை இருக்கிறது?

"நான் எவ்வளவு செய்துள்ளேன்” என்ற இந்த முட்டாள்தனத்தை விட்டுவிடுங்கள். யாரிடமிருந்தும், எதையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், நீங்கள் எளிதாக வாழ்வீர்கள்.

ஒரு உறவு என்பது, ஒரு பரிவர்த்தனை. அதை நன்றாக நடத்திக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட திறமை வேண்டும். இல்லையென்றால், அது அசிங்கமாக மாறிவிடமுடியும். ஒருவருடனான உறவு, ஒருநாள் எவ்வளவு அற்புதமாக இருக்கமுடியும் என்பதையும் அதே நபருடனான உறவு வேறொரு நாளில் எவ்வளவு அசிங்கமாக இருக்கமுடியும் என்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு உறவு என்பது, ஒரு பரிவர்த்தனை என்பதை பெரும்பாலான மக்களும் ஆமோதிக்க விரும்பாதது, துரதிருஷ்டவசமானது. அதற்கான சில அடிப்படை விதிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் நீங்கள் நின்றால் மட்டும்தான், நீங்கள் உறவை வெற்றிகரமாக நிகழ்த்திக்கொள்வீர்கள். “எங்கள் காதல் நிபந்தனையற்றது” என்பதைப்போன்று வழக்கத்துக்கு மாறான கருத்துகள் உங்களுக்கு இருந்தால், என்றைக்கோ ஒருநாள், அது உடைந்து விழும்.

காதல் என்பது வாழ்வின் மிக மெல்லிய ஒரு பரிமாணம்

ரோஜா, Rose Flower

நான் உறவுகளை சிறுமைப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை, ஆனால் அதன் எல்லைகளைப் புரிந்துகொள்வதில் தவறேதுமில்லை. அதற்கு எல்லைகள் உண்டு, ஆனால் அதற்காக, அது அழகானது அல்ல என்பது அர்த்தமில்லை. ஒரு மலர் மிகவும் அழகானது, ஆனால் அதை நான் கசக்கிவிட்டால், இரண்டு நாட்களில் அது உரமாகிவிடும். ஒரு கணத்தில் நான் மலரை அழித்துவிட முடியும், ஆனால் ஒரு மலர் என்றால் என்ன என்பதன் அழகை அது குறைத்துவிடுகிறதா? இல்லை. அதைப்போல், உங்கள் காதல் நுட்பமானது, அதாவது எளிதில் உடையக்கூடியது. அதைப்பற்றிய கற்பனையான விஷயங்களை நம்பாதீர்கள். அதே நேரத்தில், அதனுடன் இணைந்திருக்கும் அழகையும் நான் மறுக்கவில்லை.

ஆனால் வாழ்வின் மிக மெல்லிய ஒரு பரிமாணத்தை, உங்கள் வாழ்வின் அடித்தளமாக்கினால், நீங்கள் எல்லா நேரமும் இயல்பாகவே பதட்டம் மற்றும் வருத்தத்தில் இருக்க நேரிடும். ஏனென்றால் அப்படிப்பட்டதொரு மெல்லிய மலர் மீது நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இது, உங்கள் வீட்டை நீங்கள் பூமியின் மீது கட்டாமல், ஒரு மலர் அழகாக இருக்கும் காரணத்தால் அதன் மீது கட்டிவிட்டு, எப்போதும் பயத்திலேயே வாழ்ந்திருப்பதைப் போன்றது. மாறாக, உங்களது அடித்தளங்களை பூமி மீது கட்டிவிட்டு, பின் மலரைப் பார்த்து, முகர்ந்து, அதை ஸ்பரித்தால் அது அற்புதமாக இருக்கும். ஆனால் ஒரு மலர் மீது உங்கள் வீட்டைக் கட்டினால், நீங்கள் எந்த நேரமும் பயத்தில் இருக்கிறீர்கள். அந்தப் பொருளில்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். காதலை நான் மறுப்பதற்கு முயற்சிக்கவில்லை.

காதல் ஒரு தேவை என்ற நிலையில்

ஒரு நிலையில், நீங்கள் அதைப் பார்த்தால் – முழுமையாக இதனை நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை, ஆனால் பலருக்கும் அது அப்படித்தான் இருக்கிறது – காதல் இல்லாமல் அவர்களால் வாழமுடியாது என்ற அளவுக்கு அது மற்றுமொரு தேவையாகத்தான் இருக்கிறது. உடலுக்கென்று தேவைகள் இருப்பதைப்போல், உணர்ச்சிக்கென்று தேவைகள் உள்ளது. “நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது” என்று நான் கூறும்பொழுது, “ஒரு ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடக்கமுடியாது” என்று நான் கூறுவதிலிருந்து எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வைரம் பதிக்கப்பட்ட ஊன்றுகோல் உங்களிடம் இருந்ததென்றால், நீங்கள் மிக எளிதாக அதன் மீது காதல் வயப்படமுடியும். மற்றும் இந்த ஊன்றுகோலை நீங்கள் பத்து வருடங்கள் பயன்படுத்திய பிறகு, “இப்போது நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம்”, என்று நான் உங்களிடம் கூறினால், “இல்லையில்லை, என் ஊன்றுகோலை எப்படி என்னால் கைவிடமுடியும்”, என்று நீங்கள் கூறுவீர்கள். இதில் வாழ்வின் அறிதல் இல்லை. அதேபோன்று, காதலின் பெயரால், உங்களை நீங்களே முழுக்கமுழுக்க செயலற்றவராகவும், உங்களுக்குள்ளேயே முழுமையில்லாமலும் செய்துகொள்கிறீர்கள்.

இதில் எந்த அழகுமில்லை மற்றும் இதற்கு வேறெந்த பரிமாணமும் இல்லை என்பதுதான் அர்த்தமா? இல்லை, அதற்கென்று மதிப்பீடுகள் உண்டு. ஒருவரின்றி மற்றவர் வாழமுடியாத அளவுக்கு ஒருமித்து வாழ்ந்த பலர் இருந்துள்ளனர். உண்மையிலேயே அந்த மாதிரி இருந்தால், அதாவது இரண்டு உயிர்கள் ஓருயிர் போல் ஆகியிருந்தால், அது அற்புதமானதுதான்.

அரசியின் காதல்

இந்தியாவில், ஒரு ராஜஸ்தானிய அரசனுக்கு இது நிகழ்ந்தது. அரசனுக்கு ஒரு இளம் மனைவி இருந்தாள். அவள் அரசனை மிகவும் நேசித்து, அவனுக்கு முழு அர்ப்பணிப்புடன் இருந்துவந்தாள். ஆனால் அரசர்களுக்கு எப்போதும் பல மனைவிகள் இருப்பதுண்டு. ஆகவே, அவள் அவன்பால் ஆழமாக பற்றுக்கொண்டிருந்ததை, முட்டாள்தனமானது என்று அரசன் எண்ணினான். அவளது ஈர்ப்பை அவன் விரும்பிக் களித்தான், ஆனால் சில நேரங்களில் அது அளவுக்கு மிஞ்சியது. அப்போது அவன் அவளைச் சிறிதே விலக்கிவிட்டு, மற்றவர்களுடன் சென்றுவிடுவான். ஆனால் அந்தப் பெண் அவனுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருந்தாள்.

அரசனும், அரசியும் இரண்டு பேசும் மைனாக்களை வளர்த்துவந்தனர். வெப்பமண்டலப் பறவைகளாகிய அவை பயிற்சி கொடுத்தால் ஒரு கிளியைக்காட்டிலும் நன்றாகப் பேசக்கூடியவை. ஒருநாள், பறவைகளுள் ஒன்று இறந்துவிட்டது. மற்றொரு பறவை உணவு எடுக்காமல் வெறுமனே அமர்ந்திருந்தது. பறவைக்கு உணவை ஊட்டிவிட அரசன் அவனால் இயன்ற எல்லா வழிகளிலும் முயற்சித்தான், ஆனால் அந்தப் பறவை எந்த உணவும் எடுக்காமல், இரண்டு நாட்களில் இறந்துபோனது.

இது ஏதோ ஒருவிதத்தில் அரசனைத் தொட்டுவிட்டது. “இது என்ன? எந்த ஒரு உயிரும் முதலில் தன் உயிரைப் பெரிதென மதிப்பதுதானே இயற்கையானது. ஆனால் இந்தப் பறவை சாப்பிடாமல் அமர்ந்திருந்தபடியே இறந்துவிட்டதே!”

அவன் இதைக் கூறியபொழுது, மனைவி கூறினாள், “யாரோ ஒருவர், யாரையாவது உண்மையிலேயே காதலிக்கும்பொழுது, அந்த காதலுக்கு உரிய மற்றவர் இறந்துபோனால், இன்னொருவரும் அவருடனே சென்றுவிடுவது மிகவும் இயல்பானதுதான், ஏனென்றால் அதன்பிறகு வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த அர்த்தமும் இருக்காது.”

அரசன் நகைச்சுவையாகக் கேட்டான், “உனக்கு அப்படித்தானா? நீ என்னை அந்த அளவுக்குக் காதலிக்கிறாயா?”

அவள் கூறினாள், “ஆமாம், எனக்கு அப்படித்தான்.” அரசனுக்கு இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. 

ஒருநாள், அரசன் அவனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றான். பறவைகள் இறந்ததும், அவனது மனைவி, அவளுக்கும் உண்மையில் அப்படித்தான் இருக்கும் என்று கூறிய வார்த்தைகளும் அவன் மனதில் வட்டமிட்டவாறு இருந்தன. அவன் அதைப் பரிசோதிக்க விரும்பினான். ஆகவே அவன் தனது ஆடைகளை எடுத்து, அவற்றில் இரத்தம் தோய்த்து, ஒரு சேவகன் மூலம் அதை அரண்மனைக்கு அனுப்பி, “அரசனை ஒரு புலி தாக்கிக் கொன்றுவிட்டது”, என்று அறிவிக்கச் செய்தான். அந்த அரசியும் அவனது ஆடைகளை மிகுந்த கௌரவத்துடன், கண்களில் ஒரு துளி கண்ணீரும் சிந்தாமல் பெற்றுக்கொண்டாள். பிறகு, அவள் ஒரு சிதைக்கு ஏற்பாடு செய்து, அரசனின் ஆடைகளை அதன் மீது பரப்பி, அவளே தன்னைச் சிதை மீது கிடத்திக்கொண்டு, உயிர் நீத்தாள்.

மக்களால் இதனை நம்பவே முடியவில்லை. அரசி அப்படியே சிதையில் படுத்து, உயிரை விட்டுவிட்டாள். மக்கள் வேறெதுவும் செய்ய இயலாத நிலையில், அவள் இறந்துவிட்டதால், அவளை எரியூட்டினர். இந்த செய்தி அரசனுக்கு எட்டியதும், அவன் உடைந்துபோனான். ஒரு வேடிக்கையின் பொருட்டு அவன் அவளுடன் விளையாட விரும்பியதில், அவள் உண்மையாகவே இறந்துவிட்டாள் – தற்கொலை செய்துகொள்ளாமல், துள்ளாமல் துடிக்காமல், மலர்போல சென்றுவிட்டாள்.

இந்தியாவில் எண்ணற்ற தம்பதியர், அவர்களது சக்திகள் ஒரு குறிப்பிட்ட விதமாக கட்டப்பட்டதால், தம்பதியருள் ஒருவர் இறந்தால், மற்றவரும் ஆரோக்கியமாக இருந்தாலும் அடுத்த சில மாதங்களிலேயே தன் துணையைப் பின் தொடர்வதுண்டு. அந்த மாதிரி ஒருவர் மற்றொரு மனிதருடன் பிணைக்கப்பட்டால், அந்த இரண்டு உயிர்களும் ஒரு உயிராக வாழ்கின்றனர், மற்றும் அது வாழ்வதற்கான அற்புதமான முறையாகவும் இருக்கிறது. அது ஒரு உச்சபட்ச சாத்தியமில்லை, இருப்பினும் அது வாழ்வதற்கான, மிக அழகான வழி.

உண்மைக் காதலின் அர்த்தம் என்ன? (True Love in Tamil)

இன்றைக்கு, மக்கள் காதல் குறித்துப் பேசும்போது, அவர்கள் அதன் உணர்ச்சிரீதியான பகுதியைப்பற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உணர்ச்சிகள் இன்றைக்கு ஒரு விஷயம் கூறும், நாளைக்கு வேறொரு விஷயத்தைக் கூறும். முதன்முதலாக நீங்கள் உறவை உருவாக்கியபோது, “இது என்றைக்குமானது”, என்று நினைத்தீர்கள், ஆனால் மூன்று மாதங்களுக்குள், “ஓ, நான் ஏன் இந்த நபருடன் இருக்கிறேன்”, என்று நினைக்கிறீர்கள். ஏனென்றால் அந்த உறவு, உங்களுக்கு பிடிக்கும் மற்றும் பிடிக்காது என்ற ரீதியில் நிகழ்கிறது. இந்த விதமான உறவில், நீங்கள் துன்பப்படத்தான் நேரும். ஏனெனில் ஒரு உறவானது உறுதியில்லாமல் இருந்தால் – அது அவ்வப்போது இருந்தால் – நீங்கள் அளவற்ற வலி மற்றும் வேதனையை அனுபவிப்பீர்கள். இது முற்றிலும் தேவையில்லாதது.

எல்லாவற்றையும் அன்புடன் உங்களால் பார்க்கமுடிந்தால், உங்கள் அனுபவத்தில் ஒட்டுமொத்த உலகமும் அழகானதாகிவிடுகிறது.

காதலின் வலியைப்பற்றி அதிகமான கவிதை எழுதப்பட்டிருந்தபோதிலும், காதல் என்பது வலியை உருவாக்குவதற்கல்ல. காதலுக்குள் நீங்கள் பயணிப்பதன் காரணம் என்னவென்றால், அது உங்களுக்கு பரவசத்தைக் கொண்டுவருவதாகக் கருதப்படுகிறது. காதலிப்பது இலக்கு அல்ல; பரவசம் அடைவதுதான் இலக்காக உள்ளது. எத்தனை முறைகள் மக்கள் காயப்பட்டு, ரணமடைந்தாலும், அவர்கள் யாருடனாவது காதல்வசப்படுவதில் தீராத விருப்பம் கொள்கின்றனர், ஏனென்றால் அவர்கள் காதலில் இருப்பதாக நினைக்கும்போதே, அவர்களுக்குள் பரவசம் துளிர்க்கிறது. காதல் என்பது பரவசத்துக்கான நாணயமாகத்தான் இருக்கிறது. தற்போது, அது மட்டும்தான் பரவசமாக இருப்பது எப்படி என்று பெரும்பாலான மக்களும் அறிந்துகொள்வதற்கான ஒரே வழியாக உள்ளது.

ஆனால், உங்கள் இயல்பிலேயே பரவசமாக இருப்பதற்கு ஒரு வழி உள்ளது. நீங்கள் பரவசமாக இருந்தால், காதலாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை. காதலின் மூலமாக நீங்கள் பரவசத்தைத் தேடும்பொழுதுதான், யாருடன் காதலில் இருப்பது என்பதைப்பற்றி நீங்கள் மிகவும் தேர்வு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பரவசமாக இருக்கும்பொழுது, உங்கள் பார்வையில் காணும் அனைத்துடனும் நீங்கள் காதலில் இருக்கமுடியும், ஏனென்றால் அனைத்துடனும் காதல் வயப்படுவதில், எதனுடனும் சிக்கிப்போய்விடும் பயம் இல்லை. சிக்கிப்போய்விடும் பயம் இல்லாதபோதுதான், வாழ்வுடனான ஈடுபாடு உங்களுக்குத் தெரியவரும்.

காதலாகிக் கசிந்திருப்பதற்கு ஒரு எளிய செயல்முறை

தினமும் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு, நீங்கள் சற்றும் பொருட்படுத்தாத ஏதோ ஒன்று – அது ஒரு மரமாக அல்லது ஒரு கூழாங்கல்லாக அல்லது ஒரு புழுவாக அல்லது ஒரு பூச்சியாக இருக்கலாம் – அதனுடன் வெறுமனே அமர்ந்திருங்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, உங்கள் மனைவியை அல்லது கணவனை அல்லது உங்கள் தாயை அல்லது உங்கள் குழந்தையை எந்த அளவுக்கு அன்புடன் பார்ப்பீர்களோ அதைப்போல், இதனையும் உங்களால் பார்க்கமுடியும்.

பனை மரம், Palm Tree

சிறு கற்கள், கூழாங்கல், Pebble

பூச்சி, Insect

உங்கள் அன்பை அந்த மரமோ அல்லது கூழாங்கல்லோ அல்லது புழு, பூச்சியோ அறியாமல் இருக்கலாம், அது பொருட்டல்ல. ஆனால் அனைத்தையும் உங்களால் அன்பு மேலிடப் பார்க்க முடிந்தால், உங்கள் உணர்வில் ஒட்டுமொத்த உலகமும் அழகாகிவிடுகிறது. காதல் அல்லது அன்பு என்பது நீங்கள் செய்யும் ஏதோவொரு செயல் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்கள்; நீங்கள் இருக்கும் விதம்தான், அன்பு.