Question: நான் எப்படி மற்றவர்களுக்கு நன்றி உடையவனாக இருக்க முடியும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நன்றி உணர்வு என்றால் என்ன?

நன்றி உணர்வு என்றால் என்ன? உங்களுடைய கண்களை நன்றாகத் திறந்து உங்கள் வாழ்க்கை நடக்கும் விதத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள். உங்கள் வாழ்க்கை நடப்பதற்கு யாரெல்லாம் எவையெல்லாம் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெளிவாகப் பாருங்கள். அப்படிப் பார்க்க முடிந்தால், உங்களால் நன்றி உணர்வு இல்லாமல் இருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு, உங்கள் முன்னால் ஒரு தட்டு நிரம்ப உணவு வைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த உணவைத் தயாரிப்பதற்கு எவ்வளவு மக்கள் என்னென்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரியுமா? விதைகளை விதைத்தவர், பயிரை அறுவடை செய்தவர், தானியத்தை கடைகளுக்குக் கொண்டுச் சென்றவர், அங்கிருந்து வாங்கியவர், என்று பலதரப்பட்ட மக்கள் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று சிறிது பாருங்கள்.

நன்றியுடைமை ஒரு மனப்பான்மை அல்ல, அது ஒரு செயலும் அல்ல.

"என்ன பெரிய விஷயம், நான் அதற்குப் பணம் கொடுத்துவிட்டேன். அதனால் அது எனக்குக் கிடைக்க வேண்டும்" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த மனிதர்கள் இல்லையென்றால் அல்லது அவர்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் இவையெல்லாம் உங்களுக்குக் கிடைத்திருக்காது. எனவே நான் பணம் கொடுத்து விட்டேன் என்று நினைக்காமல், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்திலும், நீங்கள் மகிழ்ந்து அனுபவிக்கும் எல்லா விஷயங்களிலும், உங்களுடைய மூச்சிலிருந்து உணவு வரையிலும், இதைச் சற்றுப் பாருங்கள். இந்த உலகத்திலும், அதற்கு அப்பாலும் உள்ள அனைத்துவிதமான ஜீவராசிகளாலும் நீங்கள் எப்படி பேணி வளர்க்கப்பட்டு, காப்பாற்றப்படுகிறீர்கள் என்று உங்கள் கண்களைச் சற்றுத் திறந்து பாருங்கள். இப்படிச் செய்தால், நன்றி உணர்வுக்கான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள உங்களுக்குத் தேவையிருக்காது.

நன்றியுடைமை ஒரு மனப்பான்மை அல்ல, அது ஒரு செயலும் அல்ல. நன்றி உணர்வு என்பது உங்களுக்கு என்னென்ன கிடைக்கிறதோ அவற்றால் நீங்கள் மூழ்கடிக்கப்படும் போது உங்களுக்கு உள்ளிருந்து நிரம்பி வழிந்து ஓடுவதாகும். அது வெறும் மனப்பான்மை அல்லது நடத்தையாக இருந்தால் வெறுக்கத்தக்கதாகும். நீங்கள் எல்லாவற்றுக்கும் எப்போதும் வெறுமனே "நன்றி, நன்றி, நன்றி..." என்று சொல்வீர்களே, அப்படிக் கிடையாது.

கூர்ந்து கவனியுங்கள்...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உங்களை உயிருடன், நல்லவிதமாய் வைத்திருக்கிறது. உதாரணமாக உங்களுக்கு உணவு கிடைக்கும் விஷயத்தையே கூர்ந்து பாருங்களேன். உங்கள் தொடர்பிலேயே இல்லாத பல மனிதர்களும் பல விஷயங்களும் உங்களுக்காக உங்கள் வாழ்வின் ஒவ்வொரு ஷணத்திலும் பங்கு பெற்றிருக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது உங்களால் நன்றி உணர்வில் மூழ்காமல் இருக்க முடியாது.

ஆனால் நீங்கள் மேம்போக்காக உங்களை இந்த பூமியின் அரசனாக நினைத்தால், நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கத் தவறி விடுவீர்கள். உங்கள் கவனம் உங்களைப் பற்றியே முழுமையாக இருந்தால், இந்த வாழ்க்கை முறையை கவனிக்கத் தவறவிடுவீர்கள். அப்படி இல்லாமல் நீங்கள் சற்றே கண்களைத் திறந்து பார்த்தாலே இந்த நன்றி உணர்வால் மூழ்கடிக்கப்படுவீர்கள். எப்போது நீங்கள் நன்றி உணர்வுடன் இருக்கிறீர்களோ, அப்போது எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையிலும் இருப்பீர்கள். நீங்கள் யாரிடமாவது நன்றி உணர்வுடன் இருந்தால், அவரை மிகுந்த மதிப்புடன்தானே பார்ப்பீர்கள். அப்படி மதிப்புடன் பார்க்கும்போது அவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராகவும் இருப்பீர்கள். எனவே எப்போது உங்களுக்கு நன்றி உணர்வு பொங்குகிறதோ அப்போது ஏற்றுக்கொள்ளும் தன்மையும் பொங்கி வழியும்.

ஏற்றுக்கொள்ளும் தன்மை பெற...

என்னை பொறுத்தவரை உங்கள் நன்றி உணர்வில் உண்மையில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. ஆனால் உங்களுக்கு அதிகமான ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். யோகாவின் முழுச் செயல்முறையே, நீங்கள் இதுவரை அறிந்திராத வகையில், இன்னும் ஆழமான வழிகளில், ஏற்றுக் கொள்ளும் தன்மை உடையவராகச் செய்வதே ஆகும். இதுதான் யோகாவின் ஒரே இலக்கு. ஏற்றுக்கொள்ளும் தன்மையைப் பெற, நன்றி உணர்வால் மூழ்குவது நிச்சயமாக ஒரு அழகான வழி. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அது உங்கள் மனதைத் திறந்துவிடும்.

யாராவது கொடுப்பதாக இருந்தாலும் அதைப் பெறுவதற்கான தகுதி வேண்டும். ஞானோதயப் பாதையின் கடினமான பகுதியே ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராய் ஆவதே. இந்த உலகில் உள்ள அனைவரும் முழு ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராய் இருந்தால், ஒரு க்ஷணத்தில் நான் இந்த உலகத்தையே ஞானோதயம் அடையச் செய்து விடுவேன். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பது மிகவும் எளிதாக உள்ளது. பசியுடன் இருப்பவரை சாப்பிட வைப்பது கடினமல்ல. அதற்கு ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம். ஆனால், அவருக்கு பசியை உண்டாக்குவது மிகக் கடினமான வேலை.