நம் ஒவ்வொருவருக்கும் நாம் முழுமையடைய வேண்டும் என்பது இயற்கையான உந்துதலாக இருக்கும் பட்சத்தில், அந்த முழுமைத் தேடுதலில் நாம் செய்யும் செயல்கள் சில நேரங்களில் திருப்தியளித்தாலும், பல நேரங்களில் துன்பத்தைத்தான் அளிக்கின்றன. இதைக் கடந்து நம் இயல்பான முழுமைத் தன்மை அடைவதற்கு சத்குருவின் ஆசிகள்...

உள்நிலையில் மாற்றம் எடுத்துவராமல் வெளிச்சூழ்நிலையில் எத்தனை எத்தனை மாறுதல்கள் கொண்டு வந்தாலும், இந்த உலகம் மாறப் போவதில்லை. மனிதர்களை மாற்றாமல் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற முனைவது எப்போதும் பயனளிக்காது. 100 வருடங்களுக்கு முன்பு ராஜாக்களும் ராணிகளும் நினைத்துக்கூட பார்க்காத சௌகரியங்களை இன்று சாதாரண மனிதன் நன்கு அனுபவிக்கிறான். ஆனால் தற்போதைய மனிதன் 100 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிக மகிழ்ச்சியில், ஆனந்தத்தில் இருக்கிறானா என்றால், இல்லை. மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில் மனிதன் இந்த உலகத்தை சுரண்டி இருக்கிறான். இருப்பினும் மனிதனுக்கு மகிழ்ச்சி வந்தபாடில்லை. எந்த அளவிற்கு உலகத்தை சீரழித்திருக்கிறான் என்றால் இந்த கிரகத்தின் இருப்பே அச்சுறுத்தலுக்கு ஆகும்படிக்கு சீரழித்திருக்கிறான். எனவே இதற்கு ஒரே தீர்வு உள்நோக்கிப் பார்ப்பதுதான். நீங்கள் இதுவரை வெளிநோக்கிப் பார்ப்பதிலேயே மிகுந்த நேரத்தை செலவழித்து விட்டீர்கள். உள்தன்மையை சீரமைத்தால் இந்த கிரகத்திலுள்ள ஒவ்வொரு மனிதரும் எந்த காரணமும் இல்லாமலே ஆனந்தத்துடன் வாழ முடியும், தன்னுள் அமைதியுடன் இருக்கமுடியும். இயல்பாகவே அவன் ஒரு முழுமை பெற்ற மனிதனாக வாழ முடியும். இது மிகவும் சாத்தியமானதே. இந்த சாத்தியத்தை நோக்கி நீங்கள் நகர வேண்டும் என்பதே என் பேராவல்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.