புது வருடம் பற்றிய சத்குருவின் கவிதைகள் (New Year Poems in Tamil)
புதுவருடம் பற்றிய சத்குருவின் கவிதைகள் புது வருடத்தை புது உத்வேகத்துடன், புதிய பார்வையுடன் அணுக வழிவகுக்கிறது. படித்து மகிழுங்கள்!

புது வருடம் கவிதைகள் (New Year Poems in Tamil)
சத்குரு:
புத்தாண்டு
வருடங்கள் வெறுமனே வந்து செல்வதில்லை - நம்
வாழ்க்கையின் ஓர் அடுக்கை கொண்டு போகின்றன
வாழ்க்கை என்பதே அடுக்குகள்தான்
வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள் என
பறந்தோடிக் கொண்டே உள்ளது - யாருடைய
ஊக்கமோ உத்தரவோ இல்லாமலே!
உங்கள் அதிகாரம், அந்தஸ்து, கௌரவம் - இவற்றில்
அக்கறை துளியும் கொள்வதில்லை காலம்
அதன் அடுக்குகளில் நாம் எதை பதித்து வைத்தோம்
என்பது மட்டுமே நம்மால் முடிந்தது!
நாம் அனைவரும் பணிந்திடும்
எல்லையற்ற தன்மையின் விருப்பம்
அதன் ஒரு பாகம்தான்
காலத்தின் சிறுசிறு பகுதிகள்
காலத்தின் அடுத்த பகுதி, அதையே
புது வருடம் என அழைக்கிறோம்.
இதில் தாக்கத்தை பதிக்க முனையுங்கள்
இது அல்லவா இங்கு நமக்கான நேரம்!
இதை என்னவாக உருவாக்கப் போகிறோம்
என்பது நமது விருப்பம்தான்!

Subscribe
வருடம் ஒன்று போனது...
கடந்து சென்ற வருடத்தில்...
வாழ்க்கை உங்களைத் தாண்டி போக விட்டுவிட்டீர்களா?
உங்கள் உயிரில் துடித்தெழும் ஆனந்தம்
வெளிப்பட வாய்ப்பளித்தீர்களா? அல்லது
நொண்டிச்சாக்கு சொல்லி தப்பிக்க
காரணங்கள் கண்டறிந்தீர்களா?
உங்கள் இதயத்தில் உறையும் அன்பு,
உலகை கதகதப்பாக்க விட்டீர்களா? அல்லது
சோர்விலே நலிவுற்றிருக்க
தக்கக் காரணம் தேடிக் கொண்டிருந்தீர்களா?
தினசரி உங்களைச் சுற்றி நடைபெறுபவற்றில்
அற்புதத்தை உணர்ந்தீர்களா? அல்லது
அவற்றில் குற்றங்களை மட்டுமே கண்டுபிடித்து,
இறுதிதீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்களா?
காதலித்தீர்களா, சிரித்தீர்களா, கண்ணீர் உணர்ந்தீர்களா? அல்லது
வாழ்க்கை உங்களைத் தொட அனுமதிக்காமல் இருந்துவிட்டீர்களா?
இதோ... ஆண்டுகள் கடந்தோடிக் கொண்டிருக்கின்றன...

உயிர்ப்புடன் இருங்கள்!
நிறைவடையப் போகிறது இந்த ஆண்டு
என்ன செய்தீர்கள் இந்த ஆண்டில்...
இன்னொரு ஆண்டு முடிந்துவிட்டதே!
இன்னும் உயிரோட்டமாக இருக்கிறீர்கள்தானே?
எவற்றுக்கெல்லாம் உயிரோட்டமாக இருக்கிறீர்கள்?
எவற்றுக்கெல்லாம் உயிரற்று இருக்கிறீர்கள்?
கடைசியாக முழுநிலவை நீங்கள் பார்த்தது எப்போது?
அல்லது ஒரு சூரிய உதயத்தை எப்போது தரிசித்தீர்கள்?
ஒரு மலையையோ, கடலையோ
கடைசியாக நீங்கள்
கண் கொட்டாமல் கண்டது எப்போது?
ஒரு பட்டாம்பூச்சி பறப்பதை
ஒரு பூ மலர்வதை
சமீபத்தில் எப்போது பார்த்தீர்கள்?
அல்லது ஒரு பந்தை எப்போது உதைத்தீர்கள்?
உங்களைப் பற்றி எண்ணிப் பார்த்து
நீங்கள் புன்னகைத்தது எப்போது?
அல்லது திரும்பிப் பார்த்து,
உங்களைப் பற்றியே வாய்விட்டுச் சிரித்தது எப்போது?
வருடத்தின் கடைசி சில நாட்கள், இப்போதும்
வரப்போகும் வருடங்கள், இனி எப்போதும்
இறங்கி ஈடுபடுங்கள்,
இது உங்களுக்குள் நிகழும்படி செய்யுங்கள்!
உயிர்ப்புடன் இருங்கள்!
சத்குரு
தொடர்புடைய பதிவுகள்:
இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதான பார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்....
பூமி, மண், மண்வளம், மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை, நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...


