மஹாபாரதம் பகுதி 72: சொர்க்கமா நரகமா? யுதிஷ்டிரனின் அசாதாரண தேர்வு
தங்கள் ராஜ்ஜியத்தை 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிறகு பாண்டவர்கள் சிம்மாசனத்தைத் துறந்து சுமேரு மலைக்கு யாத்திரை மேற்கொள்கிறார்கள். மலை ஏற ஏற திரௌபதி, நகுலன், சகாதேவன், பீமன், அர்ஜுனன் என ஒவ்வொருவராக விழுந்து இறக்கிறார்கள். தேவலோகத்தை அடையும் தருவாயில், அஸ்தினாபுரத்தில் இருந்து தன்னோடு ஒரு நாயும் இவ்வளவு தொலைவு பயணித்து வந்திருப்பதை காண்கிறான் யுதிஷ்டிரன். கதை தொடர்கிறது...

நாய் வரக்கூடாதெனில் நானும் வரவில்லை
சத்குரு:தேவலோகத்தில் இருந்து வந்திருந்த பாதுகாவலர்கள், "தேவலோகத்திற்குள் நாய்களை அனுமதிப்பதில்லை" என்கிறார்கள். யுதிஷ்டிரன் திரும்பி நாயை பார்க்கிறான். நாயும் யுதிஷ்டிரனை நம்பிக்கையுடன் பார்க்கிறது. "என்னால் இந்த நாயை இப்படியே விட்டுவிட முடியாது. நான் இவனை அழைத்து வரவில்லை, ஆனால் அவனாகவே இத்தனை தொலைவையும் கடந்து வந்துவிட்டான். நல்லொழுக்கம் உள்ளவர்கள் என்று நான் நம்பிய என் மனைவியும் நான்கு சகோதரர்களும் இவ்வளவு தொலைவு வருவதற்கான தகுதி இல்லாததால் விழுந்துவிட்டார்கள். இவ்வளவு தூரத்தையும் கடந்து இந்த இடத்தை அடைய இந்த நாய்க்கு ஏதோ ஒரு கர்மா இருக்க வேண்டும். இவனை நிராகரிக்கும் தகுதி எனக்கு இல்லை. நாம் இந்த நாயை அழைத்துச் செல்வோம்" என்றான் யுதிஷ்டிரன். அதற்கு அவர்களோ, "எங்கள் வாகனத்தில் நாய்களை அனுமதிக்க முடியாது" என்றார்கள்.
"அப்படியானால் நானும் அங்கே வருவதாக இல்லை. இந்த மலையிலேயே அமர்ந்து எனது உடலை இங்கேயே விடுகிறேன்" என்றான் யுதிஷ்டிரன். அவர்கள் அதிர்ச்சி அடைந்து, "என்ன? உனது நாயை அழைத்துவரக்கூடாது என்றால் நீயும் சொர்க்கத்திற்கு வரமாட்டாயா?" என்றார்கள். யுதிஷ்டிரன் சொன்னான், "இது எனது நாய் அல்ல. இது யாருடைய நாய் என்பதும் எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் இது இத்தனை தூரத்தையும் கடந்து வந்துவிட்டது என்றால், இதற்கு சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய தகுதி இருக்கக்கூடும். அதைப் பற்றி நீங்கள் தீர்மானிக்கக் கூடாது" என்றான்.
Subscribe
யுதிஷ்டிரனின் சரியான நீதி பரிபாலனம்
அந்த நாய் மீது கொண்ட பற்றினால் யுதிஷ்டிரன் அப்படி நடந்துகொள்ளவில்லை. இத்தனை தொலைவையும் கடந்து வந்துவிட்ட பிறகு சொர்க்கத்திற்கு செல்லும் பரிசை நாய்க்கு வழங்க மறுப்பது சரியல்ல என்று கருதினான் யுதிஷ்டிரன். இதுதான் யுதிஷ்டிரனின் தர்மம். எனவே அவர்கள் நாயையும் அழைத்துக் கொண்டு தேவலோகம் சென்றார்கள். அங்கே சென்றதும் முதல் கேள்வியாக யுதிஷ்டிரன், "எனது சகோதரர்கள் எங்கே? பாஞ்சாலி எங்கே?" என்று கேட்டான். பாதுகாவலர்கள், "முதலில் நாம் இந்திரனின் அவைக்கு செல்வோம்" என்று கூறி இந்திரனின் அவைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தனது வழக்கமான அகங்காரத்துடனும் பெருமிதத்துடனும் துரியோதனன் அமர்ந்திருப்பதை கண்டான் யுதிஷ்டிரன்.
அதிர்ச்சியடைந்த யுதிஷ்டிரன், "இங்கே வரும் தகுதியுள்ளவனா துரியோதனன்?" என்று கேட்டபடியே மறுபக்கம் திரும்ப, அங்கே இன்னும் அகங்காரத்தோடு துச்சாதனன் அமர்ந்திருந்தான், அருகிலேயே சகுனியும் இருந்தான். ஆனால் யுதிஷ்டிரனின் சகோதரர்களையோ, கர்ணனையோ பாஞ்சாலியையோ காணவில்லை. எனவே, "இது நியாயமல்ல. துரியோதனன் எப்படி இங்கே வரமுடியும்? எங்கள் வாழ்விலும் இன்னும் பலரது வாழ்விலும் நிகழ்ந்த பல கொலைகளுக்கும் பல்வேறு வலிகளுக்கும் வேதனைகளுக்கும் காரணமாக இருந்தவன் அவன். அவனால் எப்படி இங்கே வர முடிந்தது? எனது சகோதரர்கள் எங்கே? எனது மனைவி எங்கே? என்று கேட்டான் யுதிஷ்டிரன். "உனது சகோதரர்களும் உனது மனைவியும் வேறொரு இடத்தில் இருக்கிறார்கள்" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
யுதிஷ்டிரன், "அப்படியானால் இந்த அவையில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. முதலில் அங்கே சென்று அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நான் பார்க்க வேண்டும்" என்று கூறினான். "உனக்கு இந்திரனோடு அமர்ந்திருக்க விருப்பம் இல்லையா?" என்று கேட்டார்கள். "இல்லை, எனக்கு அது அவசியமில்லை. துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் தேவலோகத்தில் இவ்வளவு முக்கியமான இடத்தில் அமர்ந்திருப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் எனது சகோதரர்களை பார்க்கவேண்டும்" என்றான் யுதிஷ்டிரன். எனவே அவர்கள் கீழிறங்கி செல்லும் ஒரு பாதையில் அவனை அழைத்துச் சென்றார்கள்.
நரகத்திற்கு ஒரு தன்னார்வப் பயணம்
அவர்கள் கீழே செல்லச்செல்ல அந்தப் பகுதியே இருளடைந்துகொண்டே வந்தது, எல்லாவிதமான துர்வாசனைகளும் வரத்துவங்குவதை யுதிஷ்டிரன் உணர்ந்தான். வலியையும் வேதனையையும் வெளிப்படுத்தும் முனகல்களையும் கேட்கத் துவங்கினான். குருசேத்திரப் போரை விட அந்த இடம் மோசமானதாக இருந்தது. "இது எந்த இடம்?" என்று கேட்டான் யுதிஷ்டிரன். அப்போது ஒரு பெண்ணின் ஓலக்குரல் கேட்டது. "அது பாஞ்சாலியா? அவள் ஏன் ஓலமிடுகிறாள்? நீங்கள் அவளை துன்புறுத்துகிறீர்களா?" என்று யுதிஷ்டிரன் கேட்கும்போதே அடுத்தடுத்து அவனது சகோதரர்கள் அனைவரின் குரலையும் கேட்டான். "என் மனைவியும் சகோதரர்களும் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? துரியோதனனும் அவனது குடும்பத்தினரும் எப்படி சொர்க்கத்திற்கு சென்றார்கள்? இது நியாயமே இல்லை" என்றான் யுதிஷ்டிரன்.
யுதிஷ்டிரனை கீழே அழைத்து வந்திருந்த தேவர்கள், "இதை நாங்கள் முடிவு செய்வதில்லை. தர்ம கர்ம கணக்கை கவனித்துக்கொள்ளும் சித்திரகுப்தனால் அது தீர்மானிக்கப்படுகிறது. இந்த இடம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் திரும்பிச் சென்றுவிடுவோம்" என்றார்கள். "நான் எப்படி எனது மனைவியையும் சகோதரர்களையும் இங்கே விடமுடியும்? நான் அவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன். தேவர்கள், "அது எங்கள் வேலை அல்ல. நாங்கள் அதை செய்ய முடியாது" என்றார்கள். சற்றே சிந்தனையில் ஆழ்ந்த யுதிஷ்டிரன், "எனக்கு தேவலோகம் திரும்புவதில் விருப்பமில்லை. என் மனைவி மற்றும் சகோதரர்களுடன் நான் நரகத்திலேயே தங்கிக்கொள்கிறேன்" என்றான். அவர்கள், "உறுதியாக தான் சொல்கிறாயா?" என்று கேட்டார்கள். "ஆமாம், நான் இங்கேதான் தங்கப்போகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.
தெய்வீகத்தின் தலையீடு
பிறகு இந்திரனே அங்கு தோன்றி, "உனது தர்ம பரிபாலன சிந்தனையை நாங்கள் பெரிதும் மெச்சுகிறோம். உன்னைப்போல் வேறு எந்த மனிதனும் உலகில் இல்லை, ஆனால் நீ இன்னமும் துரியோதனன் மற்றும் அவனது சகோதரர்கள் மீது கொண்டுள்ள உனது வெறுப்பை விடவில்லை. அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதைப் பார்த்ததுமே நீ அதிர்ச்சி அடைந்தாய். உன்னோடு யாத்திரை வந்த உனது மனைவியும் சகோதரர்களும் மலையிலிருந்து கீழே விழுந்தபோதும் நீ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு நீ உணர்ச்சிகளுக்கு ஆட்படாதவனாக இருந்தாய். ஆனால் துரியோதனன் துச்சாதனனுடனும் சகுனியுடனும் தேவலோகத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் எல்லாமும் உன்னிடம் திரும்ப வந்துவிட்டது. உனக்குள் இருக்கும் வெறுப்பை நீ கைவிடும் வரை நீயும் உனது சகோதரர்களும் மீண்டும் தேவலோகம் திரும்ப முடியாது" என்று தெளிவுபடுத்தினார்.
வெற்றி!
தனது கால்களை மடக்கி அமர்ந்த யுதிஷ்டிரன், தனக்குள் கவனித்துப் பார்த்தான். வெறுப்பின் விதைகள் தனக்குள் புதைந்திருக்கின்றனவே ஒழிய, அவை எரிந்துவிடவில்ல; சூழ்நிலைகள் ஏதுவாக அமைந்தால் அவை எப்போது வேண்டுமானாலும் முளைவிடலாம், அதனால் வேறு வடிவங்களில் போர் நிகழலாம் என்பதையும் கண்டான். எனவே தனக்குள் இருந்த வெறுப்பின் விதைகளை முற்றிலுமாக அழித்தான் யுதிஷ்டிரன். இதை அவனால் செய்துமுடிக்க முடிந்தபோது, கடவுளர்கள் அனைவரும் கீழிறங்கி அவனிடம் வந்து, "ஜெய!" என வாழ்த்தினார்கள்.
வெற்றியில் இரண்டு வகை இருக்கிறது. நமக்கு வெளியில் இருக்கும் ஏதோவொன்றை கைப்பற்றுவது விஜயம் என்று அழைக்கப்படுகிறது. பொருள் உலகில் கல்வி, கைவினை, கைப்பற்றுதல் இவற்றில் கிடைக்கும் வெற்றிகள் - எல்லாம் விஜயம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் உங்களுக்குள் இருக்கும் தடைகள் அனைத்தையும் கடந்து உள்நிலையில் வெற்றியை அடைகையில் அது ஜெயம் ஆகிறது. யுதிஷ்டிரன் குருசேத்திரப் போரில் விஜயத்தை அடைந்தான், ஆனால் அது அவனை எங்கேயும் கொண்டு சேர்த்திருக்கவில்லை. எப்போது தனக்குள் இருந்த எதிர்மறையான தன்மைகளை வென்று தனக்குள் இருந்த ஒவ்வொரு சிறு தடையையும் கடந்தானோ, அது அவனுக்கு ஜெயம் ஆனது.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.