சத்குருவின் பூமி கவிதைகள் (Bhoomi Kavithaigal)
பூமி, மண், மண்வளம், மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை, நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...
பூமி கவிதைகள் (Bhoomi Kavithaigal)
மண்மணம்
மழைக்காற்று
மண்ணின் வாசமேந்தி
பலமாக வீசும்போது
மரணிக்கும் மானுட உடலெனும் மண்பானை
வாழ்வின் சாவின் மணமோடு
நடுக்கம் கொள்கிறது
இவ்வெலும்பும் சதையும்
இவ்விதயமும் ஈரலும்
பிறப்புறுப்பெனும் அணிகலனும்
பெருமூளையெனும் விரிமலரும்
அனைத்தும் வெறும் மண்தான் -
இம்மண் கூட்டின் ஆழத்தில் குடிகொண்ட
தெய்வீக மூலத்தால் தொடப்பட்டவை
இம்மண் கூட்டை
அறிவதொன்று மட்டுமே போதாது
மலர்ந்தாலும் கணப்பொழுதே அது நிலைக்கும்
வாழ்வை சாவை கடந்து உயர்ந்திடு
என் அருளெனும் அரியணைமேல் உயர்ந்திடு
அன்பும் அருளும்,
சத்குரு
ஓ, மண்ணே!
மண்ணின் வாசம்
மென்மையிலும் மென்மை எனக்கு
மலரின் பகட்டான
மணத்தைக் காட்டிலும்.
மண்ணில் பொதிந்துள்ள
உயிரின் வலிமையும் உணர்வும்
வேறுவிதமான வேட்கையுணர்வை
அலையலையாய் வெளிப்படச்செய்யும்.
ஒரு மனிதரின் வேட்கையல்ல
அதற்கு உயிரூட்டும் அனைத்துக்கும்
முடிவில் உள்ளிழுக்கும் மண்ணைப் பற்றி
உணர்வற்றுப்போன என் இனத்தின் வேட்கை.
வெறும் காலில் நான் நடந்து செல்ல
வெடித்துப் போகிறேன் ஆழ்ந்த வேட்கையால்
விளக்கங்களைக் கடந்த உணர்வினால்
ஓ மண்ணே, என் உயிரே!
அன்பும் அருளும்,
சத்குரு
மண்
நீ நடந்து செல்லும் மண்
நீ தூசியென நடத்தும் மண்
தளிராய் மலராய் கனியாய்
தன்னையே மாற்றிக்கொள்ளும்
மாயப்பொருள் அன்றோ!
உயிரென்று நீ உணரும் அனைத்தும்
புனித மண்ணின் நித்திய கருவுக்குள்
நிலைபெற்றிருந்தன ஒரு காலத்தில்...
சிலருக்கு அன்னை - மற்ற
சிலருக்கு தூசு
ஆனால்,
அனைத்துக்கும் புனிதமான ஆதாரம்
உயிரை தன்னுள்ளடக்கும்
உடலென்னும் கூடு - அது
வேறில்லை மண் தான்
உழவரின் கலப்பையின்கீழ்
குயவரின் சக்கரத்தில்
அனைத்துக்கும் மேலாய்
இறைமையின் நோக்கத்தால்
மண் ஆகிறது மாயத் தொழிற்சாலையாய்...
அன்பும் அருளும்,
சத்குரு
விழிப்புணர்வான உலகு
என்னுடல் உன்னுடல்
எல்லாவற்றின் உடல்
இணைந்துள்ளன
பூமியின் உடலோடு
உலவியிருக்கும் மண்ணை தான்
உடலென நாம் கொண்டுள்ளோம்
விழித்துக்கொள்வோமா
மண்ணை பலப்படுத்த
நம் உடலை பலப்படுத்த
பல்லுயிரையும் பலப்படுத்த
அனைத்துக்கும் மேலாய்
இன்னும் பிறந்திராத உயிர்களுக்கு
வளமிக்க பூமியை விட்டுச்செல்ல.
மறவாதிருப்போம்
முடிவில்லா தொடராய் நீண்டிருக்கும்
மனிதம் என்னும் சங்கிலியின்
வெறும் இணைப்பே நாமென்று.
Subscribe
நீங்கள், நான், நாமனைவரும்
விழித்தெழுவோம், விழித்தெழுவோம், விழித்தெழுவோம்
அன்பும் அருளும்,
சத்குரு
மண்ணின் மாயம்
மண் -
மதிப்பான இவ்வுலகின்
உயிர்களுக்கெல்லாம்
ஆன்மா!
மண் -
வாழ்வின் சாவின் பெரும்புதிர்!
மடிந்ததை உயிருள்ளதாய் மாற்றும்
ஒரே மாயப்பொருள்!
மண்ணின் மாயம் -
நாம் காணும் வளங்களுக்கெல்லாம்
அடிப்படை ஆதாரம்!
மண் வளமழிந்தால்
உணவின்றி எரியும் பசியெனும் தீ
பற்றியெரிந்து உலகையே பொசுக்கிவிடும்!
இந்த மாயத்தை
பெருங்கேடாக ஆக்க வேண்டாம்...
அன்பும் அருளும்,
சத்குரு
ஒரு கெண்டி, ஒரு குடம்
குயவரின் கைகள் நிலத்தின் சதையை
பறித்து, பிசைந்து, வார்த்தெடுக்க.
அறிவானா அவன்
தன் சதையை தானே பிசைந்து
வேறு உடல் சமைக்கின்றான்
தண்ணீரும் பாலும் பிடித்து வைக்க.
ஒரு கெண்டி, ஒரு குடம், ஒரு உடல், ஒரு பூமி
சதையின் சதை, மண்ணின் மண்
பிசையும் குயவனும் பிசையப்படுவான்
அன்னை பிசைந்தால் நீ
அச்சப்படவோ தடுக்கவோ கூடாது
அந்த மந்திர வித்தை உன்னை
மாம்பழத்தின் இனிப்பாக ஆக்கலாம், அல்லது
கழுகு இறக்கையில் சிறகாக ஆக்கலாம், அல்லது
ஒரு அறிஞனாக அல்லது ஒரு அரசனாக
ஒரு கெண்டியாக அல்லது ஒரு குடமாக ஆக்கலாம்.
அன்பும் அருளும்,
சத்குரு
கண்ணோட்டம்
பசுமையான இலைக்கும்
பழுப்பான இலைக்கும்
வேறுபாடு என்பது
பூமிக்கும் வானுக்குமானது
பூமிக்கும் வானுக்கும்
வேறுபாடென்பதில்லை
ஓ, மனிதர்களே! பாருங்கள்
பூமி வானில் தானுள்ளது.
கண்ணோட்டம் மட்டுமே வேறானது!
அன்பும் அருளும்,
சத்குரு
திகைப்பு
பாறைகள்... மேலும் பாறைகள்...
வெறுமனே கிடக்கவில்லை ஆனால்
விண்ணோக்கி உயர்ந்தன - சாத்தியமற்ற
வடிவியலின் ஒத்திசைவாக...
உயிர்கொண்டது போல
உன்னை கீழ்நோக்கி பார்த்தன
உயிர் கொண்ட அவை
எந்த பித்து கொண்ட மனம்
பாடுபடும் கரம்
பார்வையால் புரிய முடியாத
பிரம்மாண்ட வடிவங்களாக
இவ்வனைத்தையும் செய்தன?
ஒருவரால் செய்ய முடிந்ததெல்லாம்
திகைப்போடு கண்கொட்டாமல்
பார்ப்பதொன்றே!
படைப்பின் இக்கலையால்
கட்டுண்டேன் திகைப்பில்
அன்பும் அருளும்,
சத்குரு
தொடர்புடைய பதிவுகள்:
இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதான பார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...
கவிதைகள் என்றாலே ஆழமான ஒரு கருத்தை சுவையோடு புரிய வைப்பவை. ஒரு ஞானி கவிஞராகவும் இருப்பது எவ்வளவு அற்புதம்! வாழ்வின் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அழகியலோடு வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள் இங்கே உங்களுக்காக.
குறிப்பு: "மண் காப்போம்" என்பது சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கம். இவ்வியக்கம், உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது, விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும் செயல்படவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணைநிற்கிறது.
இதற்காக சத்குரு அவர்கள் தனியாக மோட்டார்சைக்கிளில் 25 நாடுகள் வழியாக 30,000 கிமீ தூரத்திற்கு 100 நாட்கள் பயணம் மேற்கொண்டார். லண்டனில் துவங்கி இந்தியாவில் நிறைவடைந்த இப்பயணத்தில் மக்களையும் தலைவர்களையும் நிபுணர்களையும் அவர் சந்தித்தார். இவ்வியக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.