இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

பருவமழை

பருவமழை, Rain

ஓ! என்னே ஒரு வரம்!

தொடர்பு விட்டுப்போன காதலரைப்போல

பெற்றுக்கொள்கிறது வறண்ட நிலம்.
சரியான தருணமிது.

அனைத்து உயிர்களும்
மௌன கொண்டாட்டத்தில்

பலத்த மழையினால் பாதிப்பு கண்டாலும்
மரியாதையுடன் வணங்குவோம்
எப்போதும் எதிர்த்திட மாட்டோம்

வெள்ளத்தில் மடிந்தோருக்கு
வருந்துவோர் யாருமில்லை
பஞ்சத்தின் அழிவிலிருந்து நாம்
பிழைத்திருக்கும் காரணத்தால்

தன் கருவில் விதையை
கொண்டிருக்கும் நம்
தாயை கரு தரிக்கச்செய்ய
அருள் பெற்ற துளிகளாய்
தரையிறங்கி வந்ததே மழை!

எந்த ஹார்மோனோ ஊக்கியோ
இந்த வளர்ச்சியின் வீரியத்துக்கு
காரணியாகவில்லை

ஓ! பருவமழையே!
சரியான தருணத்தில் வந்தாயே!

அன்பும் அருளும்,
சத்குரு

 

பருவமழை

பருவமழை, Rain in red sand

பொழியும் மழையும் செம்மண்ணும்
கூடி ஒன்றாக கலந்தன -
தணியாத தாகத்தில் கிளர்ச்சியின் மூட்டத்தில்
தானென்ற அனைத்தையும் அழித்து
ஒன்றிணைந்து மற்றவரை அறியும்
ஒரே முனைப்போடு இருக்கும்
காதலரைப் போல...

தன்னையே அழித்து
தான் மற்றவராய் தரிக்க வேண்டுமென்ற
தீராத ஏக்கம்...

அழியா இறைமையின் கை இவரை பிரித்தது
அழியும் பொம்மைகளாய் பின்னர் சேர்க்கவே

செம்மண்ணும் பொழியும் மழையும்
சேறாவதற்காக சேரவில்லை -
சேர்ந்தன உயிருக்கு உயிரூட்ட...
இறந்தவை இறந்தவையாய் இருக்க...

மரமாய் மலராய் கனியாய் மாற
வானும் மண்ணும்
வாஞ்சையோடு முத்தமிட்டு இணையும்
இப்பூமியில் உயிர்கள் பெருகும்
இவ்வுயிரில் தான் இறைமையும் ஆர்ப்பரிக்கும்

அன்பும் அருளும்,
சத்குரு

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

கரும்பு

கரும்பு, Sugarcane

அன்பின் வலியில் உள்ள இனிமையை உணர
வெகுதூரம் செல்லும் உன் இதயம்

கடினமான கரும்பு
சீனியின் இனிமையை
எப்படியோ பெற்றது

கடினம் இனிமையை தருவது
கொடுமையாய் பிழிவதால்...

எனது அன்பான உன்னை
கொடுமைப்படுத்தும் திண்ணம்
எனக்கில்லை எனினும்

கடினமான உன் மேலுறை
உன் இனிமை வெளிப்படுவதை தடுக்குமெனில்,
உனை நெருக்கிப் பிடிக்க
தயக்கம் இல்லை எனக்கு
இனிமையைப் போலவே
உனை இனிமையாய் மாற்றிடுவேன்.

அன்பும் அருளும்,
சத்குரு

நிலா

நிலா, Moon

மாறும் உன் வடிவியல் தோற்றம்
கவலைக்கான ஒரு காரணம்.
உன் மாற்றத்தில்
பெருங்கடல்கள் பொங்கும்.
மாதவிடாய் காணும் மனிதரை
பித்தும் பெருங்காமமும் பீடிக்கும்.
அன்றைய நாளில்,
மறைந்துபோன உன் தோற்றத்தை தேடியடைந்து
உன்னை முழுமையாய் காண
ஏங்குவதைப் போன்ற பித்து...

அந்நாளின் தந்திர ஆட்டத்திற்கு பின்
சோமனின் பித்து மீண்டும் துவங்கும்
நம் பிறப்புக்காக...

அன்பும் அருளும்,
சத்குரு

மறை நிலா

நிலா, Moon

நம்புமாறு புனையப்பட்ட கதை -
நீயொரு வெண்ணை உருண்டை என்று

பின்னர் நம்ப வைக்கப்பட்டது -
யாரோ உன் மேல் கால்தடம் பதித்தார் என்றும்
மாந்தரின் மாபெரும் பாய்ச்சல் அதுவென்றும்...

திரிபடையும் உன் வடிவியலைக் கண்டு
தனிமையில் கழித்தேன் அந்திப் பொழுதுகளை
எதனால் செய்யப்பட்டாய் நீ?
என் உருவாக்கத்தில் உன் பணி என்ன?
விந்தையோடு எனக்குள் விசாரித்திருந்தேன்

என் உடலின் உருவாக்கம்
என் உணர்வின் விரிவாக்கம்
யாதென்றறிய எத்தனித்த போது
போலி ஒளியால் குருடான என் கண்களுக்கு
பிடிபடாமல் உன் வடிவத்தை மாற்றினாய்

உள்ளொளியின் துணை கொண்டு
இருளை என் கண்கள் கண்டபோது மாறும் உன் வடிவத்தின்
மர்மங்கள் பலவற்றின்
முகத்திரையை விலக்கிக் கண்டேன்

பிரதிபிம்பமே நீ எனினும் -
மாதரின் திரவங்களைக் கையாண்டு
என் பிறவியை இயக்கும் திறன் கொண்டாய்
என் மரணத்திலும் பங்கானாய்
என் உணர்தலின் சுழலும் கதவாய்
என்றும் நீ உள்ளாய்.

அன்பும் அருளும்,
சத்குரு

குறிப்பு: "மண் காப்போம்" என்பது சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கம். இவ்வியக்கம், உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது, விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும் செயல்படவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணைநிற்கிறது.

இதற்காக சத்குரு அவர்கள் தனியாக மோட்டார்சைக்கிளில் 25 நாடுகள் வழியாக 30,000 கிமீ தூரத்திற்கு 100 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். லண்டனில் துவங்கி இந்தியாவில் நிறைவடையும் இப்பயணத்தில் மக்களையும் தலைவர்களையும் நிபுணர்களையும் அவர் சந்திக்கிறார். இவ்வியக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.