iyo-blog-banner

கேள்வி: வெளியில் அமைதி அதிகரிக்கும்போது உள் இரைச்சல்கள் மேலும் அதிகரிக்கின்றன. உள்நிலை அதிர்வுகள் பற்றியும், உள் இரைச்சல் பற்றியும் விளக்க முடியுமா?

சத்குரு: உங்களது உள்நிலை, இரைச்சலாக மாறிவிடவில்லை. அது எப்போதும் இரைச்சலுடன் இருந்ததில்லை. அந்தப் பகுதியில் இரைச்சல் என்கிற அப்படிப்பட்ட ஒரு விஷயமே இல்லை. உங்களுக்கு ஒரு வேலையும் இல்லாத காரணத்தால் நீங்கள் எண்ணங்களில் ஆழ்ந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பெரும்பாலான மக்கள் எப்போதும் தாங்கள் வேலைசெய்து கொண்டிருப்பதாகத்தான் பொதுவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது வாழ்க்கையை நீங்கள் கவனித்தால் அறுபது சதவிகித நேரம் அவர்கள் ஏதோ ஒரு எண்ணத்தில் ஆழ்ந்திருப்பத்தை நீங்கள் காணலாம். இது நீங்கள் உண்ட உணவை மீண்டும் அசைபோடுவதைப் போன்றது. நேற்று என்ன நடந்ததோ அதைப் பற்றி நீங்கள் இன்னமும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆடு, மாடுகளுக்கு இந்த வசதி உண்டு – ஏதோ ஒன்றைத் தின்று சிலமணி நேரங்கள் கழித்து அதை வாய்க்கு கொண்டுவந்து அசைபோட முடியும். உங்கள் உடம்பில் அத்தகைய வசதி உங்களுக்குக் கொடுக்கப்படாததால், அதைப்போன்ற ஒன்றை மனதில் உருவாக்கிவிட்டீர்கள்! இது ஒரு பரிணாம வளர்ச்சிப் பிரச்சனை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அசைபோடுவதை நிறுத்துங்கள்

தென்னிந்திய மறைஞானம் மற்றும் யோகப் பாரம்பரியத்தில் இப்படிப்பட்ட ஒரு புரிதல் உண்டு. அதாவது, ஒருவர் தன்னுடைய முந்தைய செயல்களின் பலன்களை அனுபவித்துக்கொண்டு, ஆனால் தற்போது முற்றிலும் மாறுபட்ட காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டு, மேலும் முந்தைய பலன்களைத்தான் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும், அது எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துவிடக்கூடும் என்பதையும் அறியாதவராக இருக்கும் யாரையாவது நாங்கள் பார்க்கும்போது, "அய்யோ, பழைய சாதம்," என்று கூறுவோம். சக்தி மற்றும் வலிமையைப் பொறுத்தவரை, நாம் நேற்று என்ன சாப்பிட்டோமோ அது நம் உடம்பில் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல நேற்றோ, பத்து வருடங்களுக்கு முன்போ, முந்தைய பிறவியிலோ நாம் செய்ததன் பலனை இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதை மேம்படுத்த நீங்கள் இப்போது எதுவும் செய்யாவிட்டால், அது சீக்கிரமே தீர்ந்து போய்விடக்கூடும். பழைய சாதம் சிறிதுகாலத்தில் கெட்டுப்போய்விடும். எது அற்புதமாக இருந்ததோ அது மோசமாக மாறக்கூடும்.

அதை நிறுத்த முயற்சிக்காதீர்கள்; ஏனெனில் உங்களால் அதை நிறுத்தமுடியாது. அதிலிருந்து உங்களைச் தூரமாக விலக்கி வைப்பதுதான் அதற்கான ஒரே வழி.

உலகில் வெற்றி பெற்றவர்களாக கருதப்படும் பலரும் அவர்கள் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் முந்தைய கர்மாவின் பலன்களை அனுபவிக்கின்றனர், எல்லாம் அற்புதமாக இருப்பதாக எண்ணி, கட்டுப்பாடில்லாமல் அவர்கள் வாழ்கின்றனர். ஒருநாள் திடீரென அவர்களைத் துன்பம் தாக்குகிறது – அது வெளியிலிருந்து ஏற்படவேண்டிய அவசியம் இல்லை; பெரும்பாலும் உள்நிலையிலேயே அது நிகழ்கிறது. அவர்களது உளவியல் கட்டமைப்பும், உடல்நிலையும் எந்த அளவுக்கு மோசமடைகிறது என்றால், அவர்களுக்கு இது நிகழ்ந்தது என்பதை நம்புவதற்கு அவர்களுக்கே கடினமாக இருக்கிறது. இதற்கான காரணம், நீங்கள் பழைய சாதத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதுதான். நீங்கள் தினமும் புதிய உணவைச் சமைக்க வேண்டியது மிக முக்கியம். இதனாலேயே நிகழ்கால கர்மா மிக முக்கியமானதாக இருக்கிறது.

உங்களது உள்நிலையில் இரைச்சலோ, அதிர்வோ அல்லது சப்தமோ இல்லை. அது உங்கள் தலைக்குள்தான் உள்ளது. இதற்குக் காரணம் நீங்கள் பழைய விஷயங்களை அசைபோடுகிறீர்கள். நீங்கள் ஏதோ ஒரு செயலில் ஈடுபாட்டோடு இருந்தால் உங்கள் தலைக்குள் நடக்கும் சில விஷயங்களை நீங்கள் மறந்துவிடுவீர்கள். ஆனால் உங்கள் கைகள் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டால், உங்கள் மனம் பரபரப்பாக ஆகிவிடுவதை நீங்கள் காண்பீர்கள். அதை நிறுத்த முயற்சிக்காதீர்கள்; ஏனெனில் உங்களால் அதை நிறுத்தமுடியாது. அதிலிருந்து உங்களைச் தூரமாக விலக்கி வைப்பதுதான் அதற்கான ஒரே வழி.

மனதில் இருந்து உங்களையே விலக்கிக்கொள்வது

மனதில் இருந்து உங்களை விலக்கி வைப்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. நீங்கள் சாம்பவியோ அல்லது சூன்யாவோ செய்கிறீர்கள் என்றால், அவை சக்திவாய்ந்த செயல்முறைகள். இந்த இரண்டும் இல்லையெனில், நீங்கள் ஈஷா கிரியா செய்யலாம். இவைகள் எதுவும் உங்களுக்கு தெரியாவிட்டால், தற்போது நீங்கள் செய்யக்கூடிய எளிமையான ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது தொடக்கமும், முடிவும் அறியமுடியாத இந்தப் பரந்த வெளியில், இந்த சூரிய மண்டலம் ஒரு சின்னஞ்சிறு துகள் மட்டுமே என்பதைப் பாருங்கள். அந்தச் சின்னஞ்சிறிய துகளில் பூமி ஒரு நுண்ணிய துகள். அந்த நுண்ணிய துகளில் நீங்கள் மிகமிகச் சிறிய உயிரினம். ஆனால் இந்தச் சிறு மண் உருண்டையான பூமிக்கிரகத்தின் மீது உட்கார்ந்துகொண்டு, இந்தப் பிரபஞ்சத்துக்கே நீங்கள்தான் மையப்புள்ளி என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்கள்! இது ஒரு முட்டாள்தனமான கருத்து. இந்த முட்டாள்தனமான கருத்திலிருந்துதான், சமூகத்தைப் பொறுத்தவரை புத்திசாலித்தனமாகக் கருதப்படும், மற்ற பல முட்டாள்தனமான கருத்துக்கள் தோன்றியுள்ளன. ஆனால் உங்களது எண்ணங்களை இந்தப் பிரபஞ்சத்துடன் தொடர்புபடுத்திப் பாருங்கள். இப்போது வைரஸ் உங்கள் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் விஷயங்களையும், நீங்கள் முக்கியமானது என்று கருதும் விஷயங்களையும், உங்கள் நிலையாமையுடன் தொடர்புபடுத்தினால், அவை ஒவ்வொன்றும் முட்டாள்தனமாக இருக்கின்றன என்பதைச் சற்றே பாருங்கள்.

 

உங்கள் எண்ணமும் உணர்ச்சியும் படுமுட்டாள்தனமாக இருப்பதை நீங்கள் பார்த்தால், இயல்பாகவே நீங்கள் ஒரு இடைவெளியை உருவாக்குவீர்கள். பிரச்சனை என்னவென்றால், அது புத்திசாலித்தனம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அது உங்களைத் தொந்தரவு செய்யும்போது அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறீர்கள். அது அந்தமாதிரி வேலை செய்வதில்லை. நீங்கள் எந்த ஒன்றை புத்திசாலித்தனமாக எண்ணுகிறீர்களோ அது உங்களோடு ஒரு பேட்ஜ்(சின்னம்) போல ஒட்டிக்கொள்ளும். அது உங்களை விடாது. உங்களை புத்திசாலி என்று நீங்கள் நினைக்கும் கணத்திலேயே உங்கள் எண்ணங்களால் உங்களை விட்டு விலகமுடியாது. நீங்கள் மிக புத்திசாலியாக இருந்தால், உங்களால் கண்களை மூடி அமரமுடியாது. நீங்கள் ஒரு வடிகட்டிய முட்டாள் என்று உணர்ந்தால் உங்களால் கண்களை மூடி உட்காரமுடியும். ஒரு புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், புத்திசாலிக்கு, தான் ஒரு முட்டாள் என்பது தெரியும், ஆனால் ஒரு முட்டாளுக்கு, தான் ஒரு முட்டாள் என்பது தெரியாது. அதனால்தான் அவர் முட்டாளாக இருக்கிறார்.

உயிரைப் பொறுத்தவரை, இந்தப் படைப்பைப் பொறுத்தவரை நீங்கள் ஒன்றுமே கிடையாது. சமூக நிலையில் நீங்கள் ஏதோ ஒன்றாக இருக்கலாம். முட்டாள்களுக்கிடையே முட்டாள்கள் ஜொலிப்பார்கள். உயிரின் அடிப்படையில் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. ஒரு உயிராக, இந்த சிறிய வைரஸ் உங்களை நாளைக்கே வீழ்த்திவிட முடியும். எவ்வளவு மகத்தான, புத்திசாலித்தனமான எண்ணங்கள் இருந்தாலும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இதை நீங்கள் புரிந்துகொண்டால், இயல்பாகவே உங்களுக்கும் உங்கள் எண்ணவோட்டத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகும். உங்களுக்கும் உங்கள் எண்ணப் போக்குக்கும் ஒரு இடைவெளி உருவாகிவிட்டால், நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டு இருந்தாலும், அது ஒரு பொருட்டே அல்ல.