கடவுள், கோவில்கள் என முக்திக்கு வழிகோலும் சக்திகள் ஒருபுறம் இருக்க, பில்லிசூன்யம் (அ) செய்வினை என வேறு சக்திகள் மறுபுறம் உள்ளன. ஆன்மீகத் தேடுதலால் மலரும் மறைஞானத்தின் அடிப்படையே செய்வினைக்கும் அடிப்படையாக இருக்கும்போது, இரண்டையும் வேறுபடுத்துவது எது? படித்துத் தெரிந்துகொள்வோம்.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மறைஞானத்தையும் செய்வினை சக்தியையும் பெரும்பாலான சமயங்களில் பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்களாய் மக்கள் இருக்கிறார்கள். மறைஞானம் உணர்ந்திருந்தால் அற்புதங்கள் நிகழ்த்தவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மகத்தான மறைஞானியான ஆதியோகியையே எடுத்துக்கொண்டாலும், அவர் தனக்குப் பிரியமான சிலருடன் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே சில விஷயங்களைச் செய்தாரே தவிர, ஒருபோதும் மாயவித்தைகளை அவர் செய்யவில்லை. பூமியில் மற்ற எல்லோரையும் போலவே அவரும் வலம்வந்தார்.

மறைஞானத்தின் பாதையில் நின்றுகொண்டு இதைப் பார்த்தால், செய்வினை உங்கள் கண்முன்னாலே இருக்கும், ஆனால் அதை நாடிப் போகமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் வேறு திசையில் சென்றுகொண்டு இருப்பீர்கள்.

மெய்ஞானத்திற்கு செய்வினை என்பது, நிதானித்துப் பார்க்காமல் அவசரமாகச் செயல்படும் இளையதம்பி என்றே சொல்லலாம். இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், நீங்கள் பல்கலைக்கழகத்தில் புத்தகம் புத்தகமாக பாடுபட்டு படித்துக்கொண்டு இருக்கையில், உங்கள் இளைய தம்பி 18 வயதிலேயே லோக்கல் தாதா'க்களின் கூட்டத்தைச் சேர்ந்து நிறைய பணத்துடன் தன் வாழ்க்கையை ஏற்கனவே வாழத்துவங்கிவிட்டான். ஆனால் உங்களுக்கு விருப்பமில்லாத இடங்களுக்கு அவன் செல்கிறான், கடைசியில் நீங்கள் துளிகூட விரும்பாத சிறைச்சாலையை அல்லது கல்லறையைக் கூட அவன் அடைந்துவிடலாம். அதனால் செய்வினை என்பது மறைஞானத்தின் கட்டுக்கடங்காத இளைய தம்பி. மறைஞானத்தின் பாதையில் நின்றுகொண்டு இதைப் பார்த்தால், செய்வினை உங்கள் கண்முன்னாலே இருக்கும், ஆனால் அதை நாடிப் போகமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் வேறு திசையில் சென்றுகொண்டு இருப்பீர்கள்.

அறிவியலும் தொழில்நுட்பமும்

உதாரணம் சொல்லவேண்டும் என்றால், செய்வினை தொழில்நுட்பத்தைப் போன்றது, மறைஞானம் அறிவியலைப் போன்றது. அறிவியலின் சாரம்சம், பிரபஞ்சத்தின் தன்மையை உணர்வது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் இன்று தொழில்நுட்பத்தைத்தான் அறிவியல் என்று புரிந்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் என்பது நல்வாழ்வை உருவாக்கும் என்று சொல்லமுடியாது. தொழில்நுட்பம் உங்களை நேரே அழிவின் பாதையில் கொண்டுசெல்லலாம், ஆனால் அதை நீங்கள் உணரமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒய்யாரமாக ஹை-டெக்'ஆக சென்றுகொண்டு இருப்பீர்கள், அதனால் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பீர்கள். அறிவியல் என்றால் அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள விரும்புவது, அதாவது உயிரை இருக்கும்விதத்தில் உணர்ந்துகொள்ள விழைவது என்று அர்த்தம். தொழில்நுட்பம் என்பது பெரும்பாலும் பிரபஞ்சத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவே இருக்கிறது. நான் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை. தொழில்நுட்பம் என்பது நம்மை பலவிதங்களில் விடுவித்திருக்கும் அழகான விஷயம். ஆனால் தற்போது நமக்கு தொழில்நுட்பம் என்றால், எது கிடைத்தாலும் சரி, எல்லாவற்றையும், அதாவது பிரபஞ்சம் முழுவதையும் நம் நல்வாழ்வுக்காக எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்பதாகவே இருக்கிறது. ஒருசெல் உயிரியைக்கூட எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரியும். பூமி முழுவதிலும் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தித் தீர்ப்பது எப்படி என்பது நமக்குத் தெரியும். எல்லாவற்றையும் நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டோம். ஆனால் எப்படி நலமாக இருப்பது என்பது நமக்குத் தெரியவில்லை.

மறைஞானம் என்பது அறிவியல் போன்றது. மறைஞானம் என்பது அடிப்படையில் பிரபஞ்சத்தையும், உங்கள் தன்மையையும், "நான்" என்று நீங்கள் கருதும் இந்த பிண்டத்திற்கும் அண்டத்திற்கும் இடையிலான உறவையும் உணர்வதற்கான வழி. மறைஞானம் என்பது, "நானும்-பிரபஞ்சமும் என்று எதுவும் கிடையாது, நான் மட்டும் இருக்கிறேன், அல்லது பிரபஞ்சத்தின் அதிர்வு மட்டுமே இருக்கிறது" என்பதை உணர்வதற்கான வழி. இதை ஒரு அறிவாக இல்லாமல், அறிவியல் கண்டுபிடிப்பாக இல்லாமல், தத்துவமாக இல்லாமல், வாழும் ஒவ்வொரு கணமும் அனுபவத்தில் உணர்வதே மெய்ஞானம்.

இதனால் என்ன கிடைக்கும்?

"மெய்ஞானத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? பிழைப்பை சம்பாதிக்க முடியுமா?" முடியாமல் போகலாம். "பிறகு இந்த குப்பையெல்லாம் எதற்காக?" வெளிப்படையாக சொல்லபோனால் இதில் எந்த அர்த்தமும் இல்லை. வாழ்க்கைக்கே எந்த அர்த்தமும் இல்லையே, அதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையின் நோக்கம் உயிர் மட்டுமே. உயிரை உணர்வதற்கு மேலாக இங்கு எதுவும் இல்லை. எவ்வளவு ஆழமாக, எவ்வளவு நுட்பமாக உயிரை உணர்ந்துள்ளீர்கள் என்பது மட்டும்தான் இருக்கிறது, இதிலிருந்து கொண்டுசெல்ல எதுவுமில்லை.

துரதிர்ஷ்டவசமாக, நவீன உலகம் முழுவதும் "இதனால் என்ன கிடைக்கும்?" என்பதைச் சுற்றியே சுழல்கிறது. நீங்கள் செத்து விழும்போது, நீங்கள் கொண்டுசெல்ல எதுவுமிருக்காது. மரணம் என்பது "நீங்கள் இந்த வாழ்க்கையிலிருந்து எடுத்துச்செல்ல எதுவுமில்லை" என்பதைச் சொல்லும் தெளிவான வாக்குமூலம். எடுத்துச்செல்ல எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டு, இங்கு இருப்பதை முடிந்த அளவு சிறப்பாக உணர்ந்துசெல்ல முடிவு செய்யும்போதுதான் மறைஞானத்திற்கான சாத்தியம் திறக்கிறது. சிறப்பாக உணர்ந்துசெல்வது என்றால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவையும் சாப்பிட்டுவிட்டு, எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவையும் குடிப்பதல்ல. உங்களை வளமாக்கி நிறைவைத் தருவது நீங்கள் செய்யும் செயல்களல்ல, எவ்வளவு ஆழமாக அதனை உணர்கிறீர்கள் என்பதுதான் நிறைவைத் தருகிறது. எவ்வளவு துடிப்பாய், ஒரு உயிராய் எவ்வளவு சாத்தியங்களுக்குத் திறந்தவராய் மலர்ந்தீர்கள் என்பது மட்டுமே வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு மனிதனுக்குள் எதையும் எடுத்துச்செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போகும்போதுதான் மறைஞானம் சாத்தியமாகுகிறது. "இதிலிருந்து எதை எடுத்துச்செல்வது? இதை வைத்து பிறரிடம் எப்படி நம்மைப் பெரிதாய்க் காட்டிக்கொள்வது?" என்றெல்லாம் எண்ணுபவர்களுக்கானது கிடையாது மறைஞானம். உடல், மனம், வெளிசூழ்நிலையின் தாக்கம், இவை எதுவும் இல்லாமல் தூய்மையான உயிராய் இருக்கும் அந்த பரிமாணத்தைத் தொட்டுவிட்டவருக்கானது இது. உயிரின் ஏக்கமே, கண்ணுக்குத் தெரிவது தெரியாதது என்று எல்லாவற்றையும் தொடுவதுதான். அந்த தாகத்தைத் தணிப்பதுதான் மறைஞானம்.