சமீபத்தில் வெளிவந்த "இன்ட்டர்ஸ்டெல்லர்" (Interstellar) என்ற திரைப்படம் பிரபஞ்ச ரகசியத்தையும் அதன் அடிப்படை இயற்பியலையும் அறிந்துகொள்ளும் ஆவலை மக்களிடத்தில் தூண்டியது. இந்த பதிவில், சத்குரு தனது உள் அனுபவத்தினால் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த தனது புரிதலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கற்றறிந்த அறிவியல் விஞ்ஞானிகள் பலர் இது குறித்து பலவித கருத்துக்களை சொல்லியிருந்தாலும், சத்குருவின் இந்த விளக்கம், நமக்கு பிரபஞ்ச உருவாக்கத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது!

சத்குரு:

பெருவெடிப்பையும் கடந்து

மேற்கத்திய விஞ்ஞானி ஒருவர் பங்கேற்ற கூட்டமொன்றில் நானும் இருந்தேன். இவர், "எல்லையில்லா பிரபஞ்சம்" எனும் தலைப்பில் நூலொன்றை எழுதியுள்ளார். இந்தநூல் விஞ்ஞானிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. "பெருவெடிப்பையும் கடந்து" (Beyond Big Bang) எனும் தலைப்பில் இவர் உரை நிகழ்த்தினார். ஏனெனில், சமீபகாலம் வரை எல்லாமே பெருவெடிப்பின் விளைவாக ஏற்பட்டதென்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

எல்லையில்லா பிரபஞ்சம் என்பது யோக மரபில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட ஒன்று.

ஆனால், பெருவெடிப்புகள் ஒன்று மட்டுமல்ல, பலவும் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று இப்போது சிலர் சொல்கிறார்கள். பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்து அதன் விளைவாகவே இந்தக் கோள்களும் இந்தப் பிரபஞ்சமும் உருவாயின என்கிறார்கள்.

நான் இந்த விஞ்ஞானங்களுக்குள் முழுமையாகப் போகவில்லை என்றாலும், இந்தக் கோட்பாடுகள் ஏறக்குறைய யோக மரபின் தொன்மங்கள் போலவே இருப்பது எனக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியது. இவர்கள் சொல்பவை உள்நிலையில் நாம் ஏற்கெனவே உணர்ந்தவைதான். எவற்றையெல்லாம் நாம் புனிதமானவை என்று சொல்லி வழிபட்டு வருகிறோமோ அந்த வடிவங்கள் பற்றி இவர்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளார்கள்.

எல்லையில்லா பிரபஞ்சம்

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையுமே நீங்கள் கண்டறிந்துவிட முடியாதென்று யோக மரபில் சொல்கிறோம். இப்போது விஞ்ஞானிகள் எல்லையில்லா பிரபஞ்சமென்கிறார்கள். இதன் பொருள் பிரபஞ்சத்தை முழுமையாகக் கண்டறிய முடியாதென்பதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரபஞ்சத்தை ஓரெல்லையிலிருந்து அடுத்த எல்லை வரை பயணம் செய்து கண்டறிய முடியாது. ஏனெனில், நீங்கள் பயணம் செய்வதற்குள் இந்தப் பிரபஞ்சம் விரிந்திருக்கும். இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை சட்டம் என்னவென்றால் எல்லா வேகங்களையும் விட ஒளியின் வேகம்தான் முதன்மையானது. அப்படிப் பார்த்தால், ஒளியின் வேகத்துக்குக் குறைவான வேகத்தில் பிரபஞ்சத்தின் ஓரெல்லையிலிருந்து இன்னோர் எல்லைக்கு நீங்கள் பயணம் செய்யும்முன் பிரபஞ்சம் விரிந்திருக்கும். எனவே, எல்லையில்லா பிரபஞ்சம் என்பது யோக மரபில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட ஒன்று.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்...

எனவே, இந்த இருப்பின் தன்மையை உணர மிகச்சிறந்த வழி, உள்நோக்கித் திரும்புவதுதான். ஏனெனில், உங்கள் உடல் இந்தப் பிரபஞ்சத்தின் சுருக்கப்பட்ட பிரதி. பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் அது உங்கள் சிறிய உடலுக்குள் ஏதோ ஒருவிதத்தில் பதிவாகி விடுகிறது. இதைத்தான் "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என்கிறார்கள். கடவுளின் பிம்பமாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்று சொல்வதும் இதனால்தான். படைப்பிலிருந்து படைத்தவனை உங்களால் பிரிக்கவே முடியாது.

படைப்பின் தன்மையை உள்நிலையிலிருந்து யோகா எப்படி விளக்குகிறது என்று உங்களுக்கு சொல்கிறேன். அடிப்படையில் இந்தக் கலாச்சாரம் இயங்கியல் தன்மை கொண்டது. அதனை படிப்படியாக உங்களுக்கு என்னால் விளக்க முடியும். ஆனால், இந்தக் கலாச்சாரத்தின் மேன்மையை நீங்கள் அனுபவிக்க வேண்டும். உங்கள் தர்க்க எல்லைக்கு அப்பாற்பட்ட ஓர் அம்சம், இயங்கியல் அடிப்படையில் ஒரு கதையின் வடிவில் இங்கு பேசப்படுகிறது.

ருத்ரன் ஆன சிவன்!

சிவன் உறங்கிக் கொண்டிருந்தாராம். இங்கு குறிப்பிடப்படுபவர் சிவன் எனும் மனிதரோ யோகியோ அல்ல. எது இல்லையோ அதுதான் சிவன் எனப்படுகிறது. இல்லாத ஒன்றால்தான் உறங்க முடியும்!!

சிவனும் அப்படி எழுந்த மாத்திரத்தில் சீறி விழுந்தார். இதனால்தான் இவருடைய முதல் வடிவமும் முதல் பெயரும் ருத்ரன் என குறிக்கப்படுகிறது.

சக்திக்கோ சிவன் தன்னுடன் நடனமாட வேண்டும், விளையாட வேண்டும் என்றெல்லாம் ஆசை. எனவே, சிவனை எழுப்ப முற்படுகிறாள். நீண்ட நேரம் சிவன் எழவில்லை. எனவே, தொடர்ந்து எழுப்புகிறாள். உறங்குபவர்களை விடாமல் எழுப்பினால் ஒருவகை எரிச்சலுடன்தான் எழுவார்கள். எழுந்ததும் சீறி விழுவார்கள்.

சிவனும் அப்படி எழுந்த மாத்திரத்தில் சீறி விழுந்தார். இதனால்தான் இவருடைய முதல் வடிவமும் முதல் பெயரும் ருத்ரன் என குறிக்கப்படுகிறது. ருத்ரன் என்றால் சீறுபவர் என்று பொருள். எனவே, நான் அந்த விஞ்ஞானியிடம் கேட்டேன், "அந்தப் பெருவெடிப்பு என்பது ஒரு சீற்றமாக இருக்குமா? ஒன்றா அல்லது அதற்கு தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்குமா?'' என்று.

"அதை ஏன் ஒரு பெருவெடிப்பு என்கிறீர்கள்? அது ஒரு சீற்றமாக இருக்கலாம் அல்லவா?" என்று கேட்டேன். நீங்கள் ஒரு காரையோ மோட்டார் சைக்கிளையோ சைலன்சர் இல்லாமல் ஓட்டினால் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும். ஆனால், நீங்கள் வாகனத்திற்கு விசையூட்டினால் அது சீறும். அந்தச் சீற்றம் தொடர் பெருவெடிப்புகளின் தொகுப்பேயாகும்.

உடலின் சக்கரங்கள்

இன்று விஞ்ஞானம் கண்டுபிடிக்கிற பல விஷயங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டவை. நீங்கள் ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொரு தனிமனிதரும் இதனை உணர முடியும். இன்று நம்முடைய அனுபவத்தில் நம் உடலில் 114 சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள் உள்ளன என்பதை நாம் உணர்கிறோம். "பிராணா" என எதை அழைக்கிறோமோ அந்த சக்தியுடல் 114 சந்திப்பு மையங்களைக் கொண்டுள்ளது. உடலிலுள்ள 72,000 நாடிகள் இந்த மையங்களில் சந்திக்கின்றன.

உடலை அறுத்துப் பார்த்தால் அவை கண்களுக்குத் தெரியாது. ஆனால், சக்திநிலையின் அசைவையும் விரைவையும் நீங்கள் உணர முடிந்தால், இதனை உங்களால் உணர முடியும். இவற்றில் 112 சந்திப்பு மையங்கள் உடலுக்குள் உள்ளன. மீதமுள்ள இரண்டு, உடலுக்கு வெளியே உள்ளன. இந்த அமைப்பு முறையே பிரபஞ்ச உருவாக்கத்தின் இன்னொரு வடிவம்தான்.

இந்த 114 சக்திமையங்களில் 84 சக்திமையங்கள் ஒருவிதமாகவும் மற்ற மையங்கள் வேறுவிதமாகவும் அமைந்துள்ளன. சிவன் 84 முறை சீறினான், 84 பிரபஞ்சங்கள் உருவாயின என்று யோக மரபில் சொல்கிறோம். காலப்போக்கில் இந்தப் பிரபஞ்சங்கள் வடிவமிழந்து லேசாகி காணாமல் போயின. படைப்பு மீண்டும் நிகழ்ந்தது.
இந்தப் பிரபஞ்சம் உருவான அதே முறையில்தான் மனித உடலும் உருவாக்கப்பட்டது. எப்படி ஒரு மரத்திலுள்ள வளையங்களைப் பார்த்து அதன் வயதைச் சொல்ல முடியுமோ அதே போல இந்த உடலைப் பார்த்தே பிரபஞ்சம் உருவான விதத்தை சொல்லிவிட முடியும். எனவே, பிரபஞ்ச உருவாக்கத்தில் இது 84ஆவது சுழற்சி. 112 ஐ எட்டும் வரை இது தொடரும். மற்ற இரு சுழற்சிகள் ஸ்தூல வடிவிலானவை அல்ல. எனவே 113 ஆவது பிரபஞ்சம் அரை ஸ்தூல வடிவிலும் 114 வது பிரபஞ்சம் பொருள்தன்மை சாராத விதத்திலும் வடிவமைக்கப்படும்.

ஒன்றுமின்மை மிக சூட்சுமமாக தன்னை வெளிப்படுத்தும். யோக மரபு இதைத்தான் சொல்கிறது. உள்நோக்கிப் பார்க்கும் தீவிரம் உங்களுக்கிருந்தால் உங்களாலும் இதனை உணர முடியும். எனவே, நீங்கள் 84ஆவது பிரபஞ்சத்தில் இருப்பதால் யோக மரபு 84 அடிப்படை யோக முறைகளையும் ஆசனங்களையும் உருவாக்கியது. மற்றவை எதிர்காலத்திற்கானவை. 84 பெருவெடிப்புகள் சார்ந்த கர்மவினை பிணைப்புகளே இப்போது வெளிப்படுபவை.

உங்கள் உடல் உறுதியானதாகவும் இருக்கிறது, அதேநேரம் அழியக் கூடியதாகவும் இருக்கிறது. இதை உங்கள் விழிப்புணர்வுக்குள் கொண்டு வந்தால் இதில் ஒரு சமநிலை இருப்பதை உணர்வீர்கள். இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியவரின் நிபுணத்துவத்தை இதன்மூலம் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.