சத்குரு: எந்த விதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும் என்பது உடலுக்கு என்ன வேண்டும் என்பதைத்தான் சார்ந்திருக்கிறதே தவிர, அதைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்பதையோ அல்லது உங்கள் மதிப்பீடுகள் மற்றும் ஒழுக்க நெறிகளையோ சார்ந்திருக்கவில்லை. உணவு என்பது உடலைப் பற்றியது. எந்த விதமான உணவுடன் அது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உடலைக் கேளுங்கள். வெவ்வேறு உணவுகளை முயற்சித்து, அதைச் சாப்பிட்ட பிறகு உங்களது உடல் எப்படி உணர்கிறது என்று பாருங்கள். உங்களுடைய உடல் சுறுசுறுப்பாகவும், சக்தி நிரம்பியதாகவும் உணர்ந்தால், உடல் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது அதன் பொருள். உடல் சோம்பலாக உணர்வதுடன், அது சுறுசுறுப்பாக இருப்பதற்கு காஃபி அல்லது நிகோடின் தேவைப்படுகிறது என்றால், உடல் மகிழ்ச்சியாக இல்லை என்பது அதன் பொருள்.

உங்கள் உடலுக்கு நீங்கள் செவிமடுத்தால், அது எந்தவிதமான உணவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை உங்களுக்கு தெளிவாகக் கூறும். ஆனால் தற்போது, நீங்கள் உங்கள் மனதுக்கு செவிமடுக்கிறீர்கள். எல்லா நேரமும் உங்கள் மனம் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறது. முன்பே அது உங்களிடம் பொய் சொல்லியிருக்கிறதல்லவா? இன்றைக்கு அது, “இதுதான்“ என்று உங்களிடம் கூறுகிறது. நேற்று நீங்கள் எதை நம்பினீர்களோ, அதற்காக இன்றைக்கு உங்களை ஒரு முட்டாளைப் போல உணரச் செய்கிறது. உங்கள் மனதின் பின்னால் செல்லாதீர்கள். உங்கள் உடலுக்கு செவிமடுப்பதற்குத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

..நீங்கள் சாப்பிடும் உணவும் உயிரின் வேறொரு வடிவமாகத்தான் இருக்கிறது. நாம் உயிர்வாழ, பிற உயிர் வடிவங்கள், அவைகளுடைய உயிரை விட்டுக்கொடுக்கின்றன. அவைகள் அனைத்திற்கும் மிகுந்த நன்றியுணர்வுடன் நாம் உண்டால், அந்த உணவு உங்கள் உடலில் முற்றிலும் வித்தியாசமாக செயல்படும்.

உங்கள் உடலுக்கு செவிகொடுக்கக் கற்றுக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கான கவனம் தேவைப்படுகிறது. அந்த கவனம் உங்களுக்கு வந்துவிட்டால், எதைச் சாப்பிடலாம் மற்றும் எதைச் சாப்பிடக்கூடாது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஒவ்வொரு உயிரினமும் இதை அறிந்திருக்கிறது. பூமியிலேயே மனித இனம்தான் அதிபுத்திசாலித்தனமானது என்று நம்பப்படுகிறது, ஆனால் எதைச் சாப்பிடுவது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.

உங்களது உடல் எந்தவிதமான உணவிலிருந்து, ஊட்டம் பெறுவதற்குப் போராடாமல், அதிகமான தளர்வு நிலையில் இருக்கிறதோ அந்தவிதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும். உங்கள் வியாபாரத்தை சரிவரச் செய்யவேண்டும் என்றாலோ அல்லது ஒழுங்காக கல்வி பயிலவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு செயலையும் சரியாக செய்யவேண்டும் என்றாலோ, உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகமிக முக்கியமானது. இதை நாம் ஒழுக்க நெறிமுறையின் கோணத்தில் பார்க்கவில்லை. உங்கள் உடலமைப்புக்கு எது பொருத்தமானது என்ற வகையில்தான் நாம் பார்க்கிறோம் – உடலில் உங்களை சௌகரியமாக உணரச் செய்யும் உணவுகளைச் சாப்பிடுவதற்கு நாம் முயற்சிக்கிறோம்.

ஒரு சைவ உணவாளராக மாறுவது எப்படி

உங்கள் உடலுக்குள் செல்லும் உணவின் தரத்தைப் பொறுத்தவகையில், அசைவ உணவைக்காட்டிலும் சைவ உணவானது நிச்சயமாக உடலமைப்புக்கு மிகவும் மேலானது. தாவர உணவை அதன் உயிரோட்டமான தன்மையில் நீங்கள் சாப்பிடும்போது, அது எவ்வளவு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். பச்சையாக, சமைக்கப்படாத நிலையில் சாப்பிடக்கூடியது என்னவாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு உயிரோட்டமான உணவைச் சாப்பிடவேண்டும் என்பதே இதன் நோக்கம். ஒரு உயிரோட்டமான அணு, உயிரை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு உயிரோட்டமான அணுவை உட்கொண்டால், உங்கள் உடலமைப்பின் ஆரோக்கியம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நாம் உணவைச் சமைக்கும்போது, அதிலிருக்கும் உயிர்த்தன்மையை அழித்துவிடுகிறோம். இந்த அழிவுச் செயல்முறைக்குப் பிறகு உணவைச் சாப்பிடுவது, அதே அளவுக்கான உயிர்சக்தியை உடலுக்கு வழங்குவதில்லை. ஆனால் உயிரோட்டமான உணவை நீங்கள் சாப்பிடும்போது, அது வித்தியாசமான நிலையில் உங்களுக்குள் உயிர்த்தன்மையை கொண்டுவருகிறது. உயிரோட்டமான முறையில் சாப்பிடக்கூடிய முளைகட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் காய்களை ஒருவர் தன் உணவில் குறைந்தபட்சம் முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் ஆக்கிக்கொண்டால், அது உங்களுக்குள் இருக்கும் உயிரை மிக நன்றாக உறுதிப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.

அனைத்தையும்விட, நீங்கள் சாப்பிடும் உணவும் உயிரின் வேறொரு வடிவமாகத்தான் இருக்கிறது. நாம் உயிர்வாழ, பிற உயிர் வடிவங்கள், அவைகளுடைய உயிரை விட்டுக்கொடுக்கின்றன. அவைகள் அனைத்திற்கும் மிகுந்த நன்றியுணர்வுடன் நாம் உண்டால், அந்த உணவு உங்கள் உடலில் முற்றிலும் வித்தியாசமாக செயல்படும்.

தாவர உணவு – மாமிச உணவு

கே) சத்குரு, நான் ஒரு உணவுப் பிரியர். நான் நன்றாக உணரும் பட்சத்தில் அசைவ உணவைச் சாப்பிடுவது சரிதானா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: நீங்கள் ஒரு தாவரத்தைச் சாப்பிட்டாலும் அல்லது ஒரு விலங்கைச் சாப்பிட்டாலும், அது வன்முறைதான். தாவரங்கள் நம்மைப்போல் உணர்வுள்ளவைதான் என்று காட்டுவதற்கு இன்றைக்கு தகுந்த ஆவணம் இருக்கிறது. அவைகள் வலியினால் வீரிடுவதைக் காட்டுவதற்கு போதிய சான்று இருக்கிறது.

உங்களுடைய காதுகளுக்கு அது கேட்பதில்லை, அவ்வளவுதான். மரங்களுக்கிடையே இது நிகழ்கிறது. இங்கு ஆயிரம் அல்லது பத்தாயிரம் மரங்கள் இருப்பதாகவும், ஒரு யானை வந்து ஒரு மரத்தின் இலைகளை சாப்பிடத் தொடங்கியது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த குறிப்பிட்ட மரமானது, தனது இனத்தின் மற்ற எல்லா மரங்களுக்கும், தான் சாப்பிடப்படும் செய்தியை உடனடியாக அனுப்பிவிடும். சில நிமிடங்களில், யானை மற்ற மரங்களிடம் சென்றால், எல்லா மரங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான விஷத்தன்மையை தனது இலைகளில் உற்பத்தி செய்திருக்கும். யானை இலைகளைச் சாப்பிடுவதற்கு முயற்சிக்கும்போது, அவைகளின் கசப்பின் காரணமாக, அந்த இலைகளைச் சாப்பிடாது. அந்த அளவுக்கு அவைகள் உணர்வு மிகுந்தவை.

ஒரு உணவுப் பிரியர் என்று உங்களையே அழைத்துக்கொள்ளாதீர்கள், ஏனென்றால் உணவு ஒருபோதும் அடையாளமாகக்கூடாது.

நீங்கள் ஒரு பழம் அல்லது ஒரு காயைப் பறித்தாலும் அல்லது ஒரு விலங்கை வெட்டிச் சாப்பிட்டாலும், எல்லாமே கொடூரம்தான். அதை நாம் சிறிது மென்மையுடன், தேவையான அளவுக்கு மட்டும் செய்யவேண்டியது அவசியம். ஒரு உணவுப் பிரியராக இருக்கும் இந்தக் கருத்தை நீங்கள் விலக்கவேண்டும். நாம் அனைவரும் உணவு சாப்பிடவேண்டும்; இல்லையென்றால் நமது உடலுக்கு அது துன்பமாகிவிடும். ஆனால் உணவுடன் அடையாளம்கொள்வது சரியல்ல. ஏனெனில் நமக்கே நாம் ஊட்டமளிப்பதுடன் நிற்காமல், மேன்மேலும் அதிலேயே திளைத்துக்கொண்டே இருப்போம் என்பதே அதன் பொருள். ஒரு உயிராக நமக்கே ஊட்டமளித்துக்கொள்ளும் உரிமை நமக்கு உண்டு – உலகத்தின் உணவுச் சங்கிலி அப்படித்தான் இருக்கிறது - ஆனால் அனுபவிப்பதற்காக மட்டும் வலுக்கட்டாயமாக மற்றொரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை. அதை செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை. இந்த உயிரை வளர்க்கும் உரிமை நமக்கு உண்டு, ஆனால் மகிழ்ச்சிக்காக மற்றொரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை. ஒரு உணவுப் பிரியர் என்று உங்களையே அழைத்துக்கொள்ளாதீர்கள், ஏனென்றால் உணவு ஒருபோதும் அடையாளமாகக்கூடாது. இந்தக் கணம் பிழைத்திருக்கவும், ஊட்டச்சத்து பெறவும் நாம் என்ன சாப்பிடவேண்டி இருந்தாலும், அதைச் சாப்பிடுவோம்.

உணவுக்கும், மன ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு

pablo-merchan-montes-Orz90t6o0e4-unsplash

கே) நம்முடைய மன நிலை, உணர்ச்சி நிலை, மன ஆரோக்கியம் இவற்றுக்கும், நாம் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு இருக்கிறதா? பொதுவாக, நமது மனம் மற்றும் உடல் இவற்றுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?

சத்குரு: மனதையும், உடலையும் இரண்டு வெவ்வேறு விஷயங்களாக யோக முறை கருதுவதில்லை. பொதுவாக மனம் என்று நாம் குறிப்பிடுவது, ஒரு குறிப்பிட்ட அளவு ஞாபகம் மற்றும் புத்திசாலித்தனம்தான். உங்கள் மூளை என்பது உங்களுடைய உடலின் ஒரு பகுதி. மூளையானது எண்ணப்போக்கைக் கையாளும் காரணத்தால், பொதுவாக மக்கள் மூளைதான் எல்லாமாக இருக்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால் மூளைக்கும், எஞ்சிய உடலுக்கும் இடையில் பார்த்தால், எதற்கு அதிகமான ஞாபகமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது? நீங்கள் கவனமாகப் பார்த்தால், உங்களது உடலின் ஞாபகம் இலட்சக்கணக்கான வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது. உங்களுடைய முப்பாட்டன்கள் எப்படி இருந்தனர் என்பதை அது தெளிவாக நினைவில் வைத்திருக்கிறது. அந்த அளவுக்கான ஞாபகம் மனதிற்கு இல்லை. புத்திசாலித்தனம் என்று வரும்போதும், மரபணுவின் ஒரே ஒரு செல்லில் என்ன நிகழ்கிறது என்பதைக்கூட, உங்களுடைய ஒட்டுமொத்த மூளையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, அது அவ்வளவு சிக்கலாக இருக்கிறது. யோக முறையில், உடலெங்கும் ஓடுகின்ற புத்திசாலித்தனம் மற்றும் ஞாபகமாக பரு உடல் என்பதும் மனோ உடல் என்பதும் இருக்கிறது.

புத்திசாலித்தனம் என்று வரும்போதும், மரபணுவின் ஒரே ஒரு செல்லில் என்ன நிகழ்கிறது என்பதைக்கூட, உங்களுடைய ஒட்டுமொத்த மூளையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, அது அவ்வளவு சிக்கலாக இருக்கிறது.

மேற்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் மன அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். நாம் சாப்பிடும் உணவின் இயல்பு மனதின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சராசரி அமெரிக்கர், ஒவ்வொரு வருடமும் சுமார் 90 கிலோ மாமிசம் சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது. அதை 22 கிலோக்களாகக் குறைத்துவிட்டால், 75% மக்களுக்கு அதற்குப்பிறகு மன அழுத்த நோய்க்கான மருந்து தேவைப்படாது என்றே நான் கூறுவேன். நீங்கள் பாலைவனத்திலோ அல்லது காட்டிலோ இருக்க நேர்ந்தால், மாமிசமானது பிழைத்திருப்பதற்கான ஒரு நல்ல உணவு. நீங்கள் எங்காவது வழிதவறிவிட்டால், ஒரு துண்டு மாமிசம் உங்களைப் பிழைத்திருக்கச் செய்யும், ஏனென்றால் அது திடமான ஊட்டமளிக்கிறது. ஆனால் மற்ற உணவு வகைகள் இருக்கும்போது, அது தினசரி உணவாக இருக்கக்கூடாது.

இதனை நாம் பல வழிகளில் பார்க்க முடியும். இதன் ஒரு அம்சம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு தந்திரமாகவும், அறிவியல்பூர்வமாகவும் அதைச் செய்தாலும், தாம் கொல்லப்படப் போகிறோம் என்பதை கடைசி சில கணங்களில் அறிந்துகொள்வதற்கான புத்திசாலித்தனம் விலங்குகளுக்கு உண்டு. சில விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்ட எந்த ஒரு விலங்கும், அது கொல்லப்படப் போகும்போது எப்போதும் அதை கிரகித்துவிடுகிறது. இந்த நாளின் முடிவில், நீங்கள் வெட்டப்படப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் அனுபவிக்கவிருக்கும் போராட்டம் மற்றும் உங்களுக்குள் வெடித்துக் கிளம்பும் இரசாயன எதிர்வினைகளை கற்பனை செய்து பாருங்கள். அதில் குறைந்தபட்சம் சிறிதளவாவது ஒரு விலங்கு அனுபவிக்கிறது. நீங்கள் ஒரு விலங்கைக் கொல்லும்போது, எதிர்மறை அமிலங்களும், மற்ற இரசாயனங்களும் அந்த மாமிசத்தில் இருக்கிறது என்பது இதன் பொருள். அந்த மாமிசத்தை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களுக்குள் தேவையற்ற உளவியல் மாறுபாடுகளின் நிலையை உருவாக்குகிறது.

உளவியல்ரீதியான நோய்களுக்கு ஆளாகியுள்ள பெரும்பாலானவர்களுக்கு, நோய்க்கான மூலக் காரணம் மனதில் இல்லை, அது பழக்கத்தினால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தின் அடிப்படையான கட்டமைப்புக்குள் எப்படியோ அதை நாம் வளர்த்தெடுக்கிறோம். இதைத் தவிர, வேறு எதனாலும் அவ்வளவு பெரும் மக்கள் சதவிகிதத்தினர் உளவியல்ரீதியாக நோய்வாய்ப்பட முடியாது.

மன அழுத்த நோய்க்கான மருந்து எடுக்கும் மக்களுக்கு நீங்கள் தாவர உணவு வழங்கினால், சுமார் மூன்று மாத காலங்களில், அவர்களில் பலருக்கு அதற்குமேல் மருந்து தேவைப்படாது. ஈஷா யோக மையத்துக்கு வந்திருந்த பல மக்களிடம் இதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சரியானவைகளைத் தேர்வுசெய்வது

அமெரிக்காவில் காணப்படும் புகைத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தைப்போல, உணவுக்காக ஒரு திறன்மிகுந்த பிரச்சாரம் நமக்குத் தேவை என்று நான் என்ணுகிறேன். எழுபதுகளில், அமெரிக்காவில் எந்தப் பொது இடத்திலும் புகை மண்டலத்துக்கு இடையில்தான் நீங்கள் நடந்து செல்லவேண்டியிருந்தது. அப்போதுதான் அவர்கள் காற்றைச் சுத்தப்படுத்திய ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தை செயல்படுத்தினார்கள். இன்றைக்கு, புகைப்படலம் குறுக்கிடாமல் ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நீங்கள் செல்லமுடியும். ஆனாலும், அருந்துகின்ற பானத்தில் கரியமிலவாயு இருக்கத்தான் செய்கிறது! ஒரு காலத்தில் நிறைய பேருக்கு புகைப்பது தேவையாக மட்டுமில்லாமல், அது ஒரு நாகரீகமாக இருந்தது. அடுத்தவரின் முகத்தில் புகை விடுவது சரியான விஷயமாக இருந்தது. சரியான முறையிலான பிரச்சாரத்தினால், ஒரு தலைமுறை காலத்திற்குள், இந்தச் சூழ்நிலை முற்றிலுமாக மாறியுள்ளது. அதைப் போன்றதொரு வெற்றிகரமான பிரச்சாரம், நாம் என்ன சாப்பிடுவது மற்றும் என்ன அருந்துவது என்பதற்கும் தேவைப்படுகிறது.

 Photo by Anna Pelzer on Unsplash