கேள்வி:

சத்குரு, நமது வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் ஏற்படுவது நமது கடந்த கால செயல்களால் தான் என்று நீங்கள் பலமுறை கூறியுள்ளீர்கள். எதிர்காலத்தில் கசப்பான அனுபவங்களைத் தவிர்க்க இன்று நாம் எந்த வகையான செயல்களைச் செய்ய வேண்டும்?

சத்குரு:

எந்த அனுபவத்தின் கசப்பும் என்ன நடந்தது என்பதில் இல்லை, அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்பதில்தான் உள்ளது. ஒருவருக்கு மிகவும் கசப்பாக இருப்பது மற்றொருவருக்கு இனிமையான அனுபவமாக இருக்கலாம். ஒருமுறை, துக்கத்தில் மூழ்கிய ஒரு நபர் ஒரு கல்லறையில் விழுந்து, தனது தலையை அதில் மோதி "என் வாழ்க்கையே இப்படி அர்த்தமற்றதாக இருக்கிறதே! நீ போய்விட்டதால் என் உடல் எவ்வளவு பயனற்றதாக இருக்கிறது. நீ உயிருடன் இருந்திருந்தால்! விதி உன்னை இந்த உலகத்திலிருந்து பிரித்துச் செல்லும் அளவுக்கு கொடூரமாக இல்லாமல் இருந்திருந்தால் எல்லாமே எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று கதறினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அருகில் இருந்த ஒரு மதகுரு அதைக் கேட்டு, "இங்கு புதைக்கப்பட்டிருப்பவர் உங்களுக்கு மிகவும் முக்கியமான நபராக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

"முக்கியமானவரா? ஆம், நிச்சயமாக," என்று அந்த மனிதர் இன்னும் சத்தமாக அழுதுகொண்டே, "அவர்தான் என் மனைவியின் முதல் கணவர்!" என்றார்.

கசப்பு நடக்கும் விஷயத்தால் அல்ல. நீங்கள் அதை எப்படி அனுபவிக்க அனுமதிக்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது. அதேபோல், கடந்த கால செயல் அல்லது கர்மா என்பதும் செயலில் இல்லை, மாறாக அது எந்த விருப்பத்தில் செய்யப்படுகிறது என்பதில்தான் உள்ளது.

ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உங்கள் தேவையில் மட்டுமே கர்மா இருக்கிறது. உங்களுக்கு எதையும் செய்ய தேவை இல்லாத போது, தேவைப்படுவதை மட்டும் நீங்கள் செய்யும்போது, அதற்கு எந்த கர்ம பிணைப்பும் இல்லை.

நீங்கள் என்னிடமோ அல்லது போதனையின் மீதோ சிறிதளவு திறந்த மனதுடன் இருந்தால், விருப்பு தன்மை அகற்றப்படுகிறது, எனவே நீங்கள் தேவையானதை மட்டுமே செய்கிறீர்கள். விழிப்புணர்வு என்பது இதுதான்; அங்கு விருப்பு தன்மை இல்லை. விருப்பு தன்மை இல்லாத இடத்தில், கர்மா இல்லை. ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை என்பது நீங்கள் தேவையானதை மட்டுமே செய்கிறீர்கள் என்பதாகும். எல்லையற்ற பொறுப்பு என்பது எதைப் பற்றியும் உங்களுக்கு எந்த விருப்பு தன்மையும் இல்லை என்பதாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும், உங்கள் விழிப்புணர்வின்படி தேவை என நீங்கள் காண்பதை, உங்கள் திறனுக்கு ஏற்ப நீங்கள் செய்கிறீர்கள். உங்கள் விருப்பு தன்மையின் வலிமையே கர்மாவை உருவாக்குகிறது; அது நல்லதோ கெட்டதோ, அது முக்கியமில்லை.

மக்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் "உங்கள் குறிக்கோள் (இலக்கு) என்ன?" என்ற ஒரே கேள்வியைக் கேட்கிறார்கள். நான் அவர்களிடம், "எனக்கு எந்த குறிக்கோளும் இல்லை, நான் வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லும்போது, நான் லேசாக எடுத்துக் கொள்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். இந்த உலகில் வாழ்வது பற்றி நான் சொல்லக்கூடிய மிக ஆழமான கூற்று இது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை, ஏனெனில் இங்கு எந்த குறிப்பிட்ட விருப்பமும் இல்லை - என்ன தேவையோ அதை மட்டும் செய்வது, அவ்வளவுதான். இதில், நீங்கள் எதை அனுபவித்தாலும், எந்த கர்மாவும் இல்லை. நீங்கள் செய்வதெல்லாம் தேவைக்கேற்ப நடந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உங்கள் தேவையில் மட்டுமே கர்மா இருக்கிறது. உங்களுக்கு எதையும் செய்ய தேவை இல்லாத போது, தேவைப்படுவதை மட்டும் நீங்கள் செய்யும்போது, அதற்கு எந்த கர்ம பிணைப்பும் இல்லை. அது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல.

குறிப்பு:

சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.