பணிவுடன் இருக்க வேண்டியது அவசியமா?
யாரையும் உயர்வாகவோ, தாழ்வாகவோ பார்க்க வேண்டாம் என்றும், பெரும் முயற்சியேதும் இல்லாமலேயே வாழ்வில் பயணிக்க அது இருக்கும் விதத்திலேயே பார்க்க கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் சத்குரு இந்த கட்டுரையில் விளக்குகிறார்.

கேள்வி: சத்குரு, எங்கள் பள்ளி, கல்லூரி காலம் முழுவதும், தன்னையே நேசிப்பது, தனக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொள்வது, தன்னம்பிக்கை, சுயமரியாதை என்றே கற்பிக்கப்படுகிறது...
சத்குரு:தன்னையே நேசிப்பது என்றால் என்ன? உங்கள் பள்ளிக்கூடத்தில் என்ன நடக்கிறது?
கேள்வியாளர்: சமுதாயத்தில் பொதுவாக, எங்களுக்கு நாங்களே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், எப்படி பணிவாக நடந்துகொள்வது என்பதே எங்களுக்கு தெரிவதில்லை, அதனால் நாங்கள் மீண்டும் பணிவாக மாறுவது எப்படி என்று எங்களுக்கு கூறமுடியுமா?
Subscribe
சத்குரு:
பணிவுடன் இருக்க வேண்டியது அவசியமா?
நீங்கள் யாரிடமும் பணிந்து செல்ல வேண்டிய அவசியமும் இல்லை, யாரிடமும் ஆணவமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டதால் இதை உங்களிடமும் சொல்கிறேன்: என்னோடு தனியாக பயணம் செய்வது என் மகளின் வழக்கமாக இருந்தது. அப்போது அவள் மூன்று மாத குழந்தை. இந்த கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, நாடு முழுவதும் காரிலேயே சுற்றி வந்திருக்கிறேன். எனவே இயல்பாகவே பல வீடுகளில் வளர வேண்டிய சூழ்நிலை அவளுக்கு ஏற்பட்டது. எனவே ஒரே ஒரு விதிமுறையை மட்டும் ஏற்படுத்தினேன், ஏனென்றால் பெரியவர்களாக இருப்பதாலேயே இது ஒரு பிரச்சனையாகி விடுகிறது. ஒரு குழந்தையை பார்த்தாலே ஏதோ வேட்டைக்கு செல்வது போல பாய்ந்து விடுகிறார்கள். குழந்தைக்கு எதையாவது கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று எல்லாருமே ஏதாவது ஒன்றை, 1,2,3 அல்லது A B C D அல்லது Mary had a little lamb என்று ஏதாவது ஒன்றை கற்பிக்க முயல்கிறார்கள். எனவே "இதோ பாருங்கள், இந்த 1,2,3, ABCD, அல்லது மேரியிடம் உண்மையிலேயே ஒரு ஆட்டுக்குட்டி இருந்ததா என்பதையெல்லாம் அவள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இதை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள், நீங்கள் அவளுடன் விளையாடலாம், ஆனால் அவளுக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுக்க கூடாது" என்ற ஒரே ஒரு விதிமுறையை ஏற்படுத்தினேன். அவள் ஆனந்தமாக வளர்ந்தாள்.
குழந்தை தெரிந்துகொள்ள வேண்டியது
இப்படி பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோதே மூன்று மொழிகளில் சரளமாக பேச துவங்கியிருந்தாள். ஏனென்றால் அவளுக்கு யாரும் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை, அவள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு மேரியின் ஆட்டுக் குட்டியை தெரியாது, எந்த ரைம்ஸும் தெரியாது, எந்த மொழி, அறிவியல், கணக்கு எதையுமே கற்றுக் கொடுக்கவில்லை, வெறும் உயிராக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளை ஒருபோதும் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவள் வயது குழந்தைகளுடன் இருப்பதும் முக்கியமாக இருந்தது. எனவே பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த போது, அப்போது அவளுக்கு சுமார் 12 வயது இருக்கும், ஒரு நாள் பள்ளியில் நடந்த ஏதோ ஒன்றிற்காக என்னிடம் வந்து, "நீங்கள் எல்லோருக்கும் நிறைய சொல்லிக் கொடுக்கிறீர்கள், எனக்கு மட்டும் எதையுமே சொல்லிக் கொடுக்கவில்லை" என்று துவங்கினாள். "யாராவது விரும்பி கேட்காமல் எதையும் தானாகவே செய்யும் வழக்கம் எனக்கில்லை. இப்போது நீயே கேட்கிறாய். சரி, நீ தெரிந்துகொள்ள வேண்டியது இதை மட்டும் தான்; யாரையும் உயர்வாக பார்க்க வேண்டாம், யாரையும் தாழ்வாகவும் பார்க்க வேண்டாம்.” இதை கேட்டதும் என்னை அப்படியே பார்த்தாள். 'அப்போது உங்களை?' என்ற கேள்வி அந்த பார்வையிலேயே இருந்தது. அதனால், "என்னையும் சேர்த்துதான், நீ என்னை உயர்வாக பார்த்தால் நான் யார் என்பதை மொத்தமாக தவறவிட்டுவிடுவாய். என்னை உயர்வாக நினைத்தால், அநேகமாக என்னை ஒரு போட்டோவாக சுவற்றில் ஆணியடித்து தொங்கவிடுவாய். ஆனால், நான் யார் என்பதன் மொத்த அர்த்தத்தையும் நீ தவறவிடுவாய். நான் எப்படி இருக்கிறேன் என்பதை நீ அப்படியே பார்க்க வேண்டும். என்னை உயர்வாக நினைத்து பார்க்காதே. யாரையுமே உயர்வாகவும் பார்க்கத் தேவையில்லை, யாரையுமே தாழ்வாகவும் பார்க்கத் தேவையில்லை."
உயர்வும் தாழ்வும்
இது மிக எளிமையான ஒன்றாக தோன்றலாம், ஆனால் முயற்சி செய்து பாருங்கள், உங்கள் மனதிற்குள் எது நல்லது, எது கெட்டது, எது உயர்வு, எது தாழ்வு, எது புண்ணியம், எது பாவம், எது அசிங்கம், எது மதிப்பானது என்று எல்லாவற்றைப் பற்றியும் ஒரு தீர்மானம் இருக்கிறது. எல்லாமும் ஏற்கனவே முடிவு செய்த ஒன்றாகிவிட்டது. ஒருமுறை நீங்கள் இப்படி முடிவு செய்த பிறகு, வேறு வழியே இல்லை. உங்களால் ஏதோவொன்றை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ பார்க்காமல் இருக்க முடியாது. எதை நீங்கள் மோசமானது என்று நினைக்கிறீர்களோ அதை தாழ்வாக பார்ப்பீர்கள்; எதை நல்லது என்று நினைக்கிறீர்களோ அதை உயர்வாக பார்ப்பீர்கள். இதை அகற்றிவிட்டு, வாழ்க்கையில் எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்ப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சிரமமின்றி முன் செல்ல முடியும். நீங்கள் ஒரு சிலரை மதிக்கிறீர்கள், ஒரு சிலரை அலட்சியம் செய்தபடியே அவர்களிடம் பணிவாக இருக்கவும் முயற்சி செய்கிறீர்கள். யாரிடமும் பணிவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மிகச்சரியாக வேலை செய்யும் உத்தி
உங்களை நீங்கள் எவ்வளவு கடுமையாக நடத்துகிறீர்களோ, அவ்வளவு கடுமையாக மற்றவர்களையும் நடத்துங்கள். நீங்கள் உங்களை கடுமையாக நடத்துபவராக இருந்தால் மட்டுமே இது பொருந்தும். மாறாக, உங்களை அளவுக்கு அதிகமாக மென்மையாக கையாண்டால், மற்றவர்களிடமும் அதை முயற்சி செய்து பாருங்கள், அதில் சோர்வடைந்து, பிறகு அவர்களை கடுமையாக தான் நடத்துவீர்கள். ஆமாம், அவ்வளவு எளிமையானது இது. என் மகளுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன், இது அவளுக்கு ஒரு அதிசயம் போல வேலை செய்தது, "எவரையும் உயர்வாகவும் பார்க்க வேண்டாம், எவரையும் தாழ்வாகவும் பார்க்க வேண்டாம். எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பாருங்கள்"
வைராக்கியா
இதுதான் இந்த கலாச்சாரத்தின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஒரு கோவிலுக்கு சென்றால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை எப்போதாவது கோவிலுக்கு சென்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கை கூப்பி நமஸ்காரம். ஒரு ஆணைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? நமஸ்காரம். ஒரு பெண்ணைப் பார்த்தால்? நமஸ்காரம். ஒரு மரத்தைப் பார்த்தால்? அதே நமஸ்காரம். ஒரு பாறையைப் பார்த்தாலும் அதே நமஸ்காரம் தான். ஒரு மாடு, பாம்பு, கழுதை, குதிரை, குரங்கு அனைவருக்கும் நமஸ்காரம் தான். ஏனென்றால் இதுதான் அடிப்படையான அர்த்தம். இதுவே வைராக்கியா என சொல்லப்படுவது.
வைராக்கியா என்றால் உங்கள் வாழ்க்கையை அப்படியே கைவிட்டு விட்டு வேறு எங்கேயோ செல்வதில்லை. நீங்கள் செல்வதற்கு வேறு எந்த இடமும் இல்லை. ஒருவேளை நீங்கள் விண்வெளிக்கு அவருடன் போவதாக இருந்தால் உண்டு, அங்கேயும் உங்களுக்கு போவதற்கு மட்டும் தான் டிக்கெட், திரும்பி வருவதற்கு இல்லை¹ என்றே நம்புகிறேன். அதைத் தவிர செல்வதற்கு வேறு எந்த இடம் இருக்கிறது? நீங்கள் எங்கே சென்றாலும் அப்போதும் அதே வாழ்க்கை தான் இல்லையா, அப்படித்தானே? எனவே வைராக்கியா என்றால் வண்ணங்களை கடந்தது என்று அர்த்தம். அதாவது நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். நீங்கள் தெள்ளத் தெளிவாக இருந்தால் வாழ்வின் எல்லா பரிமாணங்களும் உங்களை கடந்து செல்ல முடியும். ஆனால் உங்களை அது தொடாது. நீங்கள் விரும்பும் அளவிற்கு நீங்கள் வாழ்க்கையை கையாளலாம். உங்களால் எதையெல்லாம் சமாளிக்க முடியுமோ அதை கையாளலாம், உங்களால் எதையெல்லாம் சமாளிக்க முடியாதோ, அதை கையாள முடியாது தானே? உங்கள் வாழ்க்கையில் உங்களால் எதையெல்லாம் செய்ய முடியாதோ, அதை செய்யாவிட்டால் பரவாயில்லை. ஆனால் உங்களால் செய்ய முடிந்ததையே நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் ஒரு பேரழிவு தான்.
தீதும் நன்றும்
ஏதோ ஒன்று நல்லது, மற்றொன்று கெட்டது, யாரோ ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் தாழ்ந்தவர் என்று நினைக்கும் கணத்திலேயே உங்களால் செய்யக்கூடிய பல செயல்களையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யமாட்டீர்கள், அது மோசமானது என்று நீங்கள் நினைப்பதால் மட்டுமே. உங்கள் மனதில் அது தாழ்வானது அல்லது உயர்வானது அல்லது இப்படி ஏதோ ஒன்றை நினைத்தாலே போதும், அதை தவிர்ப்பீர்கள். எனவே நம் வாழ்க்கையில் இது மிக முக்கியமானது, ஏனென்றால் இந்த வாழ்க்கை மிகக் குறுகியது. மனித ஆற்றல் மலர்வதற்கு மிகக் குறுகிய காலமே இருக்கிறது. இந்த மிகக் குறுகிய வாழ்க்கையில், நீங்கள் இதை செய்யலாமா, அதை செய்யலாமா என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தால்.. இல்லை, அப்படி இல்லை, உங்களால் செய்யமுடிந்த அனைத்தும் உங்களுக்கு நிகழ வேண்டும். உங்களால் செய்ய முடியாதது எப்படியும் நடக்காது. அது பரவாயில்லை.
¹ ஃபால்கன் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட டெஸ்லா காரையும், அதிலிருந்த ஸ்டார்மேன் எனும் மனித உருவ பொம்மையையும் குறிப்பிடுகிறார்.