கேள்வி: ஈமச்சடங்கு செய்வதன் முக்கியத்துவம் என்ன, என்பதை அறிய விரும்புகிறேன்...

சத்குரு: இந்தியாவில், உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால், நீங்கள் அருகில் உட்கார்ந்து கவனித்துக்கொள்ள வேண்டும் - இறந்த உடலை யாரும் தனியாக விடமாட்டார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் உடலை வைத்திருந்தால், உடலில் முடி வளரத் தொடங்கும். அது ஒரு ஆணாக இருந்தால், அவருக்கு முகச்சவரம் செய்யும் பழக்கம் இருந்தால், அவர் முகத்தில் தாடி மற்றும் மீசை வளர்ந்திருப்பதை நீங்கள் கவனிக்கமுடியும். 

நகங்களும் வளரும். எனவே, இறந்த உடல்களை நீண்டநேரம் பதப்படுத்தி வைக்கும் நாடுகளில், இந்த சேவையை செய்பவர்கள் நகங்களை வெட்டி, முகச்சவரம் செய்கிறார்கள். ஏனென்றால் அப்படித்தான் உடலில் உயிர் வியாபித்திருக்கிறது. புரிதலுக்காக இப்படி பிரித்துப் பார்க்கலாம் - அடிப்படையான உயிர்த்தன்மை இருக்கிறது, பொருள் தன்மையிலான உயிர் என்பது இருக்கிறது. பொதுவாக பிராணா எனப்படும் பொருள் தன்மையிலான உயிர் சக்தி, ஐந்து அடிப்படையான விதங்களில் உருவெடுத்துள்ளது. இவை சமானா, பிராணா, உடானா, அபானா மற்றும் வியானா என்று அழைக்கப்படுகின்றன.

மரணத்தின் நிலைகள்

ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்த கணத்திலிருந்து 21 முதல் 24 நிமிடங்களுக்குள் சமானா வெளியேறத் தொடங்குகிறது. உடலின் வெப்பநிலையை பராமரிப்பது சமானாவின் பொறுப்பு. இறப்பிற்குப் பிறகு நடக்கும் முதல் விஷயம், உடல் குளிர்ச்சியடைய தொடங்குவது தான். ஒருவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதை பரிசோதிப்பதற்கான பாரம்பரிய வழி, மூக்கில் கை வைத்து பார்ப்பதுதான் - அவர்களது கண்விழிகளையோ பிறவற்றையோ பரிசோதிக்க மாட்டார்கள். மூக்கு குளிர்ந்துவிட்டால், அவர் இறந்துவிட்டார் என முடிவு செய்கின்றனர்.

ஒருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, தோராயமாக 48 முதல் 64 நிமிடங்களில், பிராணா வெளியேறுகிறது. ஆறு முதல் பன்னிரண்டு மணி நேரத்திற்குள் உடானா வெளியேறுகிறது. உடானா வெளியேறும் முன் உடலை உயிர்ப்பிக்க தாந்த்ரீக செயல்முறைகள் உள்ளன. உடானா வெளியேறிய பின், உடலை உயிர்ப்பிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. பின்னர், எட்டு முதல் பதினெட்டு மணி நேரத்திற்குள், அபானா வெளியேறுகிறது.

அதைத் தொடர்ந்து, பிராணாவை பாதுகாக்கும் தன்மையான வியானா வெளியேறத் தொடங்குகிறது. அது இயற்கை மரணமாக இருந்தால், 11 முதல் 14 நாட்கள் வரை வெளியேறுகிறது - அதாவது, உயிர் பலவீனமடைந்து, முதுமையால் ஒருவர் இறந்து போனால் அவ்வாறு வெளியேறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், உடலில் சில செயல்முறைகள் தொடர்கிறது; உயிர்த்தன்மையின் சில அம்சங்கள் சிறிது காலம் தொடர்கிறது. உள்ளிருக்கும் உயிர் இன்னும் துடிப்பாக இருக்கும்போது விபத்தில் யாராவது இறந்துவிட்டால் - உடல் முழுவதுமாக நசுங்கிப்போனாலொழிய - இந்த உயிரின் அதிர்வுகள் சுமார் 48 முதல் 90 நாட்களுக்குத் தொடரும்.

அந்த காலத்திற்குள், அந்த உயிருக்கு நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன. உங்களைப் பொறுத்தவரை யாரோ ஒருவர் இல்லாமல் போய்விட்டார் என்பதுதான் அந்த மரணத்தின் அனுபவம், ஆனால் அந்த உயிரின் அனுபவம், அவர் உடலை விட்டு வெளியேறிவிட்டார் என்பதுதான். அவர் உடலை விட்டு வெளியேறியதும், அவருடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் போகிறது. நீங்கள் அவர்களை இனி அடையாளம் காண முடியாது, அவர்கள் திரும்பிவர நேர்ந்தால், நீங்கள் அரண்டுபோவீர்கள். உங்களுக்குப் பிரியமான நபர்கள் இறந்தபின் மீண்டும் தோன்றினால், பேரச்சம் ஏற்படும் - அன்பு வராது, ஏனென்றால் உங்களது உறவு, அவர்களது உடலுடனானது, அல்லது அவர்கள் சுயநினைவுடன் இருந்தபோது அவர்களது மனம் மற்றும் உணர்ச்சியுடனானது. ஒருவர் இறந்துவிட்டால், அந்த இரண்டு அம்சங்களும் இல்லாமல் போய்விடும். 

மரணத்திற்குப் பிறகு, அந்த உயிருக்கு ஒரு குழந்தைக்கு இருக்கும் அளவுக்குக் கூட பகுத்துப்பார்க்கும் திறன் இல்லாமல் போகிறது. அதன்பின், நீங்கள் அந்த மனதிற்குள் எந்தவொரு தன்மையைப் போட்டாலும், அது கோடி மடங்காகப் பெருகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனம் வெறும் தகவல்களின் குவியல். அது இயல்பாக செல்லும் போக்கின்படி அது ஒரு குறிப்பிட்ட விதமாக வெளிப்படுகிறது. ஒருவர் இறக்கும்போது, பகுத்துப்பார்க்கும் திறன் இல்லாமல் போகிறது, புத்தி இல்லாமல் போகிறது. அவர்களின் மனதில் ஒரு துளி இனிமையைப் புகுத்தினாலும், அது பலகோடி மடங்காகப் பெருகும். ஒரு துளி கசப்பைப் புகுத்தினாலும், அந்த கசப்பான உணர்வு பலகோடி மடங்கு பெருகும். இது குழந்தைகளுக்கு ஏற்படுவதைப் போன்றது - அவர்கள் சோர்வடைந்து அதற்குமேல் முடியாமல் போகும் வரை வெளியே சென்று விளையாடுவார்கள், ஏனென்றால் எப்போது நிறுத்துவது என்று பகுத்துப்பார்க்கும் திறன் அவர்களுக்கு கிடையாது.

மரணத்திற்குப் பிறகு, அந்த உயிருக்கு ஒரு குழந்தைக்கு இருக்கும் அளவுக்குக் கூட பகுத்துப்பார்க்கும் திறன் இல்லாமல் போகிறது. அதன்பின், நீங்கள் அந்த மனதிற்குள் எந்தவொரு தன்மையைப் போட்டாலும், அது கோடி மடங்காகப் பெருகும். இதைத்தான் சொர்க்கம், நரகம் என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு இனிமையான நிலைக்கு நீங்கள் சென்றால், அது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. மிக கசப்பான நிலைக்கு நீங்கள் சென்றால், அது நரகம் என்று அழைக்கப்படுகிறது. இவை புவியியல் சார்ந்த இடங்கள் அல்ல - இவை உடலற்ற ஒரு உயிர் கடந்து செல்லும் அனுபவப்பூர்வமான நிதர்சனங்கள்.

ஈமச் சடங்குகள்

மரணம், Maranam in Tamil, Death Rituals, kariyam after death in tamil

இன்று அது எவ்வளவு சிறப்பாகவோ அபத்தமாகவோ செய்யப்படுகிறது என்பது வேறு விஷயம், ஆனால் வெவ்வேறு படிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தனி விஞ்ஞானமே உள்ளது. ஒருவர் இறந்த பின், பாரம்பரியமாக மக்கள் செய்யும் முதல் காரியங்களில் ஒன்று, இறந்த உடலின் பெருவிரல்களை அவர்கள் ஒன்றாக கட்டுவார்கள். இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அது மீண்டும் அந்த உயிர் உடலை ஆக்கிரமிக்க முடியாத வகையில் மூலாதாரத்தை இறுக்குகிறது. "இந்த உடல் நான் அல்ல" என்ற விழிப்புணர்வோடு வாழாத ஒரு உயிர், உடலின் எந்த துவாரத்தின் வழியாகவும், குறிப்பாக மூலாதாரத்தின் வழியாக நுழைய முயற்சிக்கும். மூலாதாரா என்பது உயிர் உருவாகும் ஆதாரமாகும், மேலும் உடல் குளிர்ச்சி அடையும் போது, வெப்பத்தை கடைசியாக இழக்கும் இடமும் அதுதான். 

ஒருவர் இறந்துவிட்டால், ஒன்றரை மணி நேரத்திற்குள் அல்லது அதிகபட்சம் நான்கு மணி நேரத்திற்குள் உடலை எரிக்க வேண்டும் என்று பாரம்பரியமாக நாம் கூறுவதற்குக் காரணம், அந்த உயிர் உடலுக்குள் மீண்டும் நுழைய முயற்சிப்பது தான். உயிருடன் இருப்பவர்களுக்கும் இது முக்கியம். உங்களுக்கு மிகவும் பிரியமான ஒருவர் இறந்துவிட்டால், “ஏதாவது அதிசயம் நேர்ந்துவிடாதா? ஒருவேளை கடவுள் வந்து அவர்களை உயிர்ப்பித்துவிட மாட்டார்களா?” என நினைத்து உங்கள் மனம் வித்தை காட்ட ஆரம்பிக்கக்கூடும். அப்படி யாரும் மீண்டும் உயிர்த்தெழுந்ததில்லை, ஆனால் அந்த குறிப்பிட்ட நபர்மேல் உங்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளால் மனம் இதுபோன்று விளையாடுகிறது. அதேபோல, உடலை விட்டு வெளியேறிய உயிரும், மீண்டும் உடலுக்குள் வரமுடியும் என்று நம்புகிறது.

இப்படி பகுத்துப்பார்க்கும் திறன் இல்லாத மனதுக்குள் எப்படியாவது ஒரு துளி இனிப்பைப் புகுத்துவதற்கு பல சடங்குகள் உள்ளன.

இந்த நாடகத்தை நிறுத்த வேண்டுமென்றால், முதலில் ஒன்றரை மணி நேரத்திற்குள் உடலுக்கு தீமூட்ட வேண்டும். அல்லது, அந்த நபர் இறந்து விட்டார் என்பதை உறுதிசெய்ய, எரிப்பதற்கான காலக்கெடுவை நான்கு மணிநேரமாக நீட்டித்துள்ளனர். ஆனால் உடலை முடிந்த அளவு விரைவாக அகற்றிவிட வேண்டும்.

விவசாய சமூகங்களில் புதைக்கும் வழக்கம் உண்டு, ஏனெனில் மண்ணின் ஒரு பாகமான அவர்களது முன்னோர்களின் உடல், மீண்டும் அவர்களுக்கு ஊட்டமளித்த அதே மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இன்று, நீங்கள் உங்கள் உணவைக் கடையில் இருந்து வாங்குகிறீர்கள், அது எங்கிருந்து வருகிறது என்றே உங்களுக்குத் தெரியாது. எனவே இப்போது அடக்கம் செய்வது உகந்ததல்ல.

முற்காலத்தில், இறந்தவரின் உடலை அவர்களது சொந்த நிலத்தில் புதைத்தபோது, அது விரைவாக மக்கி மண்ணோடு சேர்வதற்கு, அவர்கள் எப்போதும் உப்பையும் மஞ்சளையும் இறந்த உடலின்மீது போடுவார்கள். தகனம் செய்வது நல்லது, ஏனெனில் அது அந்த அத்தியாயத்தை அடியோடு முடித்துவிடுகிறது. குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால், மக்கள் கதறி அழுவார்கள், ஆனால் தகனம் நடந்தவுடன், அவர்கள் அமைதியாகிவிடுவார்கள், ஏனென்றால் திடீரென்று அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது என்ற உண்மை புரிந்துவிடுகிறது. 

இது உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, உடலை விட்டு வெளியேறிய அந்த உடலற்ற உயிருக்கும் நன்மை பயக்கும். உடல் இருக்கும் வரை, அவர் மீண்டும் உடலுக்குள் புகுந்துவிடலாம் என்ற மாயையில் இருப்பார்.

இப்படிப்பட்ட பகுத்துப்பார்க்கும் தன்மை இல்லாத மனதுக்குள் எப்படியாவது ஒரு துளி இனிமையைப் போட்டுவிட பல சடங்குகள் உள்ளன, அதன் மூலம் இந்த இனிமை பல மடங்கு பெருகும். மேலும் அவர்கள் சுயமாக தூண்டப்பட்ட ஒரு விதமான சொர்க்கத்தில் சுகமாக வாழ்வார்கள். சடங்குகள் சரியான முறையில் செய்யப்படும் பட்சத்தில், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கமும் அதுதான்.

ருணானுபந்தம்

உடல் சம்பந்தப்பட்ட உறவைக் குறிக்கும் ருணானுபந்தம் பற்றி உங்களில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் இரத்த சம்பந்தப்பட்ட உறவினாலோ பாலியல் உறவினாலோ ஒருவரை தொடும்போது, அல்லது வெறுமனே நீங்கள் ஒருவரின் கையை பிடித்துக் கொண்டாலோ ஆடைகளை பகிர்ந்து கொண்டாலோ கூட - இந்த இரண்டு உடல்களுக்கிடையே ருணானுபந்தம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட பொதுவான தன்மை உருவாகிறது. ஒருவர் இறந்தால், பாரம்பரியமாக, ருணானுபந்தத்தை எப்படி முழுவதுமாக அழிப்பது என்று நீங்கள் பார்க்கிறீர்கள். சாம்பலை கங்கையிலோ கடலிலோ கரைப்பது என்பது, அவற்றை முடிந்தவரை பரவலாக பரப்புவதன் மூலம், உடலை பிரிந்து சென்றவருடன் ருணானுபந்தத்தை உருவாக்காமல் இருப்பதற்குத்தான். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தொடர, இந்த ருணானுபந்தத்தை முறையாக முறிக்க வேண்டும். இல்லையெனில், நவீன சமூகங்களில் நடப்பது போல, அது உங்கள் உடல் மற்றும் மனக் கட்டமைப்பை பாதிக்கும். எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த விஷயங்கள் பாதிக்காது - இயற்கை அவர்களுக்கு அந்த பாதுகாப்பைக் கொடுத்துள்ளது, ஆனால் இறந்தவர்களுக்கான செயல்முறைகளை நாம் முறையாக செய்யாதபோது, இளம் பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் உடலற்ற உயிர்களின் சக்தி எப்போதும் இருக்கிறது, அதோடு அவர்கள் எப்போதும் இளம் பருவத்தினரையே முதலில் பின்தொடர்வார்கள், ஏனெனில் அவர்கள்தான் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இளம் பருவத்தினர் இன்று எத்தனை கொந்தளிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் உலகில் பார்க்கிறீர்கள்.

கடந்த தலைமுறைகளை விட இன்று இளமைப்பருவம் பெரும் போராட்டமாக இருப்பதற்கு ஒரு காரணம், இறந்தவர்களுக்கான செயல்முறைகளை நாம் சரியாக செய்யாமல் இருப்பதும், அவர்களது ருணானுபந்தங்கள் எங்கும் பரவிக்கிடப்பதும் தான். இது எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கும் மென்பொருளைப் போன்றது, இது எப்போதும் இளம் பருவத்திலிருக்கும் உயிர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.

கேள்வி: ஆனால் என்ன செய்வது? உணர்ச்சிகளை அஸ்தியைப் போல கடலில் கரைத்துவிட முடியாதல்லவா? உணர்ச்சிகளை வேரறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

சத்குரு: உணர்ச்சிகள் வேறு, அவை உயிருக்கு இரண்டாம்பட்சம்தான். இந்த உடலளவில் உள்ள ஒரு பொதுத்தன்மை, இறந்தவர்களுடன் உள்ள ருணானுபந்தம், இதைத்தான் நீங்கள் அகற்ற விரும்புகிறீர்கள், ஏனெனில் இது நோய் மற்றும் மனக்குழப்பம் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தும். உணர்ச்சிகள் தன்னளவிலேயே கேடு விளைவிப்பவை அல்ல. ஒருவருடன் உங்களுக்கு அழகான ஒரு உறவு இருந்ததென்றால், அந்த நபர் இப்போது உயிருடன் இல்லை என்றால், நீங்கள் துக்கப்படுவதை விட அந்த உறவின் அழகை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்திடுவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். 

ஆனால் ருணானுபந்தம் இருந்தால், அது இருவருக்கிடையே நிகழ்ந்த அழகான விஷயங்கள் அனைத்தையும் பொக்கிஷமாகப் போற்றுவதற்கு பதிலாக, நீங்கள் துன்பப்படும் விதமாக உங்கள் உடலையும் மனக் கட்டமைப்பையும் பலவீனப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அது வாழ்க்கையில் ஒருவிதமான சீர்குலைவை ஏற்படுத்துகிறது. 

அதைத் தவிர்க்க, உடல் சார்ந்த நினைவுகளை மட்டும் அழிக்க முயற்சிக்கிறோம். உணர்ச்சி மற்றும் உளவியல் சார்ந்த நினைவுகளை நீங்கள் மறக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதை நீங்கள் மறக்கவும் கூடாது. உங்களுக்கு அவ்வளவு பிரியமானவராக இருந்த ஒருவரை நீங்கள் ஏன் மறக்க வேண்டும்? அந்த உறவை நீங்கள் என்றென்றும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்திட வேண்டும்.

ஆசிரியர் குறிப்பு:  

காயாந்த ஸ்தானம் என்பது ஈஷாவின் எரியூட்டும் சேவை. இது தொன்மையான மரபுகளையும் மரண சடங்குகளையும் ஒரு ஆற்றல்வாய்ந்த சக்தி அடிப்படையைக் கொண்டு புதுப்பிக்கிறது. அவற்றை வணிக முயற்சியாக இல்லாமல் சேவை உணர்வில் நடத்துகிறது. மேலும் பலருக்கு இந்த சேவைகளை அர்ப்பணிக்க எங்களுக்கு உதவுமாறு உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் கோருகிறோம். மேலும் தகவலுக்கு, காயாந்த ஸ்தானம் - ஈஷாவின் எரியூட்டும் சேவையை பார்வையிடுங்கள்.