நம் தேசத்தில் பெரும்பாலும் இறந்த உடலை எரித்துவிடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இவ்வழக்கத்தின் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை இப்பதிவிலிருந்து அறிந்துகொள்வதோடு, வேறுசில பிரதேசங்களில் ஏன் புதைக்கும் வழக்கம் வந்தது என்பதும் தெளிவாகிறது. புதைக்கத்தான் போகிறோம் என்றால் கல்லறைக்குப் பதிலாக இப்படிச் செய்யலாம் என சத்குரு கூறும் ஒரு யோசனை சுற்றுச்சூழலுக்கும் தேவையாக உள்ளது. தொடர்ந்து படித்தறியுங்கள்!

Question: என் தோழி வேறு மதத்தைச் சேர்ந்தவரைக் காதலித்து மணந்தாள். அண்மையில் அவள் கணவர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். அவர் மரணம் தந்த வேதனையிலிருந்து மீளும் முன், வேறொரு பிரச்சனை அங்கே வெடித்தது. தோழியின் மத வழக்கப்படி, அவளின் கணவர் உடல் மண்ணில் புதைக்கப்பட வேண்டும். அதுவே அவரை இறைவனிடம் சேர்க்கும் என்பது அவளுடைய முழுமையான நம்பிக்கை. ஆனால், கணவரின் வீட்டைச் சேர்ந்தவர்களோ, உடலை எரித்தால்தான் மோட்சம் கிட்டும் என்று பிடிவாதமாக எரியூட்ட எடுத்துப் போய்விட்டனர். எனக்கு இப்போது குழப்பம். இறந்தவரைப் புதைப்பது நல்லதா, எரியூட்டுவது சிறந்ததா?

சத்குரு:

மரணம் என்பது ஓர் அத்தியாயத்தின் முடிவு, அவ்வளவுதான். அதுவே மோட்சத்துக்கான வாசல் அல்ல.

ஒருவர் உயிர் வாழ்ந்தபோது, அவர் உன்னத நிலை அடைவதற்கு எந்த விதத்திலும் உதவி செய்யாதவர்கள், அவர் இறந்ததும் கட்சி பிரித்து நிற்பது அர்த்தமற்ற செயல். எரித்தால் மோட்சம், புதைத்தால் மோட்சம் என்பதெல்லாம் அபத்தமான முடிவுகள். இறந்தவர் முக்தி பெறத் தகுதியுள்ளவரா என்பதுதான் முக்கியம்.

Question: இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் இந்தக் கலாச்சாரத்தில் ஏன் வந்தது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இங்கு இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. எரியூட்டல் என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

வாழ்ந்து முடித்தவன் முட்டாள்தனமாகத் தன்னை அந்த உடலோடு அடையாளப்படுத்திக் கொண்டு இருந்தால், நழுவி விடுபட்ட அவனது உயிர் அங்கேயே சிறிது நேரத்துக்கு வளையவரும். உடல் முழுமையாக இருந்தால், தனக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டுமா என்று அந்த உயிர் ஏங்கிப் பரிதவிக்கும்.

உயிரைவிட்டவனும் சரி, உறவினர்களும் சரி... வேதனையோடு அல்லாடுவர். விளையாட்டு முடிந்தது, விடுபடும் நேரம் வந்தது என்பதை அவன் உயிர்சக்தி உணர வேண்டும் என்பதால், அந்த உடலுக்கு மொத்தமாக முடிவுகட்டப்பட்டது. அதனாலேயே, இறந்தவரின் உடலை ஒன்றரை மணி நேரத்துக்குள் எரித்துவிட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும், பதற்றத்திலும் தவறான முடிவு எடுத்து, உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணி நேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை. அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்ற உண்மை, வீட்டில் ஒருவிதமான நிசப்தமாக நிலவும். உற்றார், உறவினரும் மாண்டவன் மீள்வதில்லை என்ற நிஜத்தை முழுமையாக உணர்வர், அமைதி கொள்வர்.

போதிய விறகுகள் இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப்பிரதேசங்களிலும் எரிப்பதைவிடப் புதைப்பது சுலபமாக இருந்தது. அதுவே அங்கு பழக்கமானது. திபெத்தியர்கள், மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகட்டும் என்று இறந்தவரின் உடலை வெட்டி வீசுவார்கள்.

Question: நமக்குப் பிரியமானவர் புதைக்கப்பட்ட இடத்தை நினைவிடமாக வைத்துக் கொள்ளலாமே? எரிக்கப்பட்டால், அந்த வாய்ப்பு இல்லாது போகுமல்லவா?

சத்குரு:

மிகக் கடுமையான அதிகாரியாகச் செயல்பட்டு வந்த ராணுவத் தளபதி ஓய்வு பெறும் நாள் வந்தது. மரியாதை செலுத்த சிப்பாய்கள் விறைப்பாக நின்றிருந்தனர்.

தன்னிடம் மிக அதிகமாகத் திட்டு வாங்கிய சிப்பாயை அருகே கூப்பிட்டார் தளபதி. "இவன் எப்போதடா இறப்பான். இவன் கல்லறையில் காறித் துப்பலாம் என்று காத்திருக்கிறாய்தானே?" என்று அவனை உசுப்பேற்றுவது போல் கேட்டார்.

"ஐயோ, சத்தியமாக இல்லை!" என்ற சிப்பாய், பின்பு மெதுவான குரலில் முணுமுணுத்தான்... "மிக நீளமான வரிசையில் நிற்பதற்கெல்லாம் எனக்குப் பொறுமை கிடையாது!"

வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான், நம் நினைவிடங்களுக்கு மரியாதை என்பதை மறக்காதீர்கள். இறந்தவரைப் புதைத்து கான்க்ரீட் கல்லறை எழுப்பி, அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதால் என்ன லாபம்?

அதற்குப் பதிலாக அவரைப் புதைத்த இடத்தில் ஒரு மரம் நடுவது என்று முடிவு செய்யுங்கள். ஏக்கர் ஏக்கராக கான்க்ரீட் கல்லறைகள் எழுப்பி பூமியை மொட்டையடிப்பதைவிட, அங்கு ஏக்கர் கணக்கில் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்.

மாண்டவர் வெறும் சாம்பலாகக் கரையவும் வேண்டாம். கல்லறைச் சிறையில் அழுகி, வீணாகவும் வேண்டாம். மாறாக, அவருடைய ரத்தமும், சதையும் எருவாகி, பச்சை இலைகளாகவும், வண்ணப் பூக்களாகவும் மீண்டும் உயிர் கொள்ளட்டுமே! பின்னால், வரும் சந்ததிகளுக்கு நிழலும், மழையும் கொடுக்கட்டுமே! மாண்டவரே மரமாக நிமிர்ந்து உயிருடன் ஓங்கி வளர்கிறார் என்று உணர்வுபூர்வமாக ஒரு திருப்தியும் கிடைக்கும் அல்லவா!

இன்றைய சுற்றுச்சூழலை மனதில் வைத்து பாருங்கள். மிகச் சிறந்த எருவாக மாறக்கூடியவரை, ஏன் எரிபொருளை வீணடித்துக் கைப்பிடிச் சாம்பலாக்க வேண்டும்?

மாண்டவரைப் புதையுங்கள். அங்கொரு மரம் நடுங்கள் என்பதே என் வேண்டுகோள். அதே சமயம் உடலை எரிப்பதன் நோக்கத்தை முழுமையாக நிராகரிக்கவும் இயலாது.

சரி, இப்படி வைத்துக்கொள்வோம். துடிப்புடன் இருக்கும் இளமையில் ஒருவர் இறந்தால், அவரை எரிப்பது எவ்வளவோ விஷயங்களுக்குச் சிறந்தது. முதுமையில் ஒருவர் மாண்டால் அவரது உடலை மரத்துக்கு அளிப்போம்.

நமக்கு அமுதூட்டிய பூமிக்கு நாமும் அமுதூட்டுவோமே!