சத்குரு: தனியே தன் கால் போனபோக்கில் நடந்த அம்பாவிடமிருந்த விரக்தி, நாட்கள் செல்லச்செல்ல ஆற்றாமையாக பொங்க துவங்கியது. ஆற்றாமை கோபமாக உருவெடுத்தது, கோபம் வெறியாக மாறியது.. அந்த வெறி, எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற தணியாத தாகமானது. இப்படியே தொடர்ந்து ஒவ்வொரு இடமாக பீஷ்மரை கொல்வதற்கு தகுந்த வீரனை தேடினாள். ஆனால் பீஷ்மரின் வலிமையை அனைவரும் அறிந்திருந்ததால் ஒருவரும் முன்வரவில்லை. வீரம் மட்டுமின்றி, ஒரு வரமும் பீஷ்மருக்கு பக்கபலமாக இருந்தது. தந்தை சாந்தனுவுக்காக, தன் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்ற சபதமேற்று தன் ஆண்மையை தியாகம் செய்த பீஷ்மருக்கு சாந்தனு ஒரு வரமளித்திருந்தார், "இன்று எனக்காக நீ ஏற்றுக்கொண்டுள்ள தியாகத்திற்காக உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். நான் கடந்த 18 ஆண்டுகளாக பிரம்மச்சரியத்தை கடைபிடித்து தவவாழ்வை வாழ்ந்திருக்கிறேன். இதனால் எனக்கு கிடைத்திருக்கும் யோக்யதை, எனக்குள் சேர்ந்திருக்கும் ஷக்தி - இவைகள் அனைத்தையும் பயன்படுத்தி, உன் மரணத்தை நீயே நிர்ணயிக்கும் வரத்தை வழங்குகிறேன். நீ எப்போது இறக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்க முடியும்." இப்படி ஒரு வரமும், தன்னிகரற்ற வீரமும் நிறைந்த பீஷ்மரை எதிர்த்து நிற்க யாரும் விரும்பவில்லை.

பீஷ்மருடன் மோதும் பரசுராமர்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்பா, பரசுராமரை தேடிக்கொண்டு சென்றாள். பீஷ்மருக்கு போர்க்கலைகளை, குறிப்பாக வில்வித்தையை கற்றுக்கொடுத்தவரே பரசுராமர் தான். பரசுராமரை பார்த்ததும் நெடுஞ்சான்கிடையாக விழுந்துவணங்கி தனக்கு நிகழ்ந்த அவலத்தை எடுத்துச் சொன்னாள் அம்பா. பரசுராமர், "கவலை வேண்டாம். உன் வாழ்க்கையை நான் சரிசெய்கிறேன்" என்றவாறு தன்னை வந்து சந்திக்க பீஷ்மருக்கு அழைப்பு விடுத்தார். வந்ததும் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார் பீஷ்மர். "இதுவரை நீ சத்தியத்தை காப்பாற்றியது போதும். இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்" என்றார் பரசுராமர். முதன்முறையாக பீஷ்மர், "நீங்கள் என் குரு. என் தலையை கேட்டால் இப்போதே தந்துவிடுவேன். ஆனால் நான் கொடுத்த வாக்கை மட்டும் மீறச்சொல்லாதீர்கள். என் சத்தியத்தை நானே உடைக்க முடியாது" என்றார்.

மகாபாரதம் முழுவதிலும் இப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்திக்கப் போகிறோம். ஒருமுறை வாக்கு கொடுத்தால் அதை எதற்காகவும் எப்போதும் மீறமாட்டார்கள். - என்ன நடந்தாலும், என்ன கிடைப்பதாக இருந்தாலும் சரி.. தலையே போவதாக இருந்தாலும் சரி.. அவரவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதையே முதன்மையானதாக வைத்திருந்தார்கள்.

மகாபாரதம் முழுவதிலும் இப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்திக்கப் போகிறோம். ஒருமுறை வாக்கு கொடுத்தால் அதை எதற்காகவும் எப்போதும் மீறமாட்டார்கள். - என்ன நடந்தாலும், என்ன கிடைப்பதாக இருந்தாலும் சரி.. தலையே போவதாக இருந்தாலும் சரி.. அவரவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதையே முதன்மையானதாக வைத்திருந்தார்கள். எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலையிலிருந்து, நாகரீகம் என்பதை நோக்கி சமுதாயத்தை நகர்த்திச் செல்ல மக்கள் முயன்று கொண்டிருந்தார்கள். இந்த முயற்சியில், ஒருவரது வார்த்தைக்கு மிக முக்கியமான இடம் இருந்தது. எந்த சட்டமும், சட்டவரைவும் எழுதப்படாததால் ஒருவர் என்ன சொல்கிறாரோ அதுவே முக்கியம் என்று ஆனது. நான் எதாவது சொன்னால் அதை செய்ய வேண்டும். என்ன விலை கொடுத்தாலும் சரி. பொதுவான ஒரு சட்டம் என்பது இல்லாத நிலையில், ஒருவர் கொடுக்கும் வாக்கே அவரை கட்டுப்படுத்தும் சட்டமாக இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் பரசுராமருக்கு கீழ்படியாமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர் எப்போதுமே மறுவார்த்தையின்றி கீழ்படிபவர். பரசுராமரின் தந்தை, பரசுராமரிடம், அவரது சகோதரர்கள் மற்றும் தாயாரின் தலையை கொய்ய சொன்னபோது, மறு சிந்தனை இல்லாமல் நால்வரின் தலைகளையும் எடுத்துவிட்டார். அவரது கீழ்படிதலை மெச்சி‍, "என்ன வரம் வேண்டும் ?" என்று பரசுராமரிடம் கேட்டார் அவரது தந்தை. "என் தாயும் சகோதரர்களும் மீண்டும் உயிருடன் வேண்டும்" என்று பரசுராமர் கேட்கவே, அவர்களது உயிரை பரசுராமரின் தந்தை மீண்டும் திரும்ப அளித்தார்.

அவர் வளர்ந்த விதம் அப்படி இருந்ததால், கீழ்படியாமையை ஏற்றுக்கொள்ளவே முடியாதவராக இருந்தார் பரசுராமர். பீஷ்மர் கீழ்ப்படிய விரும்பாததை பார்த்து வெகுண்டெழுந்தார் பரசுராமர். இருவருக்கும் இடையே துவங்கியது யுத்தம். ஒருவருக்கொருவர் சளைக்காமல் சமபலத்துடன் தொடர்ந்து மோதினார்கள். தான் அறிந்திருந்த வித்தைகள் அனைத்தையும் பீஷ்மருக்கும் கற்றுத்தந்திருந்த பரசுராமர், பீஷ்மரை வெல்வது சிரமம் என்பதை உணர்ந்தார். தொடர்ந்து நாட்கணக்கில் நீடித்த யுத்தத்தில் இருவருமே ஒருவரையொருவர் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தார்கள். இதனால், "நீ வேறு யாரையாவது தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அம்பாவிடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொண்டார் பரசுராமர்.

கார்த்திகேயனின் வரம்

பனிபோர்த்திய இமயமலைப்பகுதிக்கு சென்று தவத்தில் ஆழ்ந்தாள் அம்பா. வீரத்திற்கு பெயர்பெற்றிருந்த சிவமைந்தன் கார்த்திகேயனை நோக்கி தீவிரமாக தன் சாதனாவை தொடர்ந்தாள். அம்பாவின் மனதில் கார்த்திகேயனால் மட்டுமே பீஷ்மரை வெல்லமுடியும் என்று தோன்றியிருந்தது. தீவிர தவம் கார்த்திகேயரை அம்பாவின் முன் வரச்செய்தது‌. "நீங்கள் எனக்காக பீஷ்மரை கொல்ல வேண்டும்" என்றாள் அம்பா. "நான் உயிர்களை கொன்ற காலம் கடந்துவிட்டது" என்றார் கார்த்திகேயர்.

கார்த்திகேயனின் கதை உங்களுக்கு தெரியும்தானே.. நீதியை நிலைநாட்ட தெற்கு நோக்கி வந்த கார்த்திகேயன் தன் கண்ணில் பட்ட அநீதிகள் அனைத்தையும் துவம்சம் செய்தார். கர்நாடக மாநிலத்தில் சுப்ரமணியா என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தவர், ரத்தம் தோய்ந்த தனது வாளை கடைசியாக கழுவி, "இந்த வாள் இனி இரத்தம் பார்க்காது" என்றவாறு போரைக் கைவிட்டு மலை மீது ஏறினார். குமார பர்வதம் என்று இப்போது அழைக்கப்படும் இந்த மலைமீதுதான் தனது உடலையும் விட்டார். உடலற்ற நிலையில் அம்பாவின் அழைப்பை ஏற்று வந்த கார்த்திகேயர், "என்னால் இப்போது பீஷ்மரை கொல்ல முடியாது. ஆனால் உன் அவலநிலையை போக்கவும், உன் பக்திக்காவும் ஒரு வரம் அளிக்கிறேன்" என்றவாறு ஒரு தாமரை மாலையை அளித்து, "இந்த மாலையை அணிபவரால் பீஷ்மரை கொல்ல முடியும்" என்றார்.

மறுபடியும் மாலையுடன் - இந்தமுறை கைகளில் தாமரை மாலையை ஏந்தியபடி கிராமம் கிராமமாக, ஊர்ஊராக "யாராவது இந்த மாலையை அணிந்து கொண்டு பீஷ்மரை கொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டு அலைய துவங்கினாள்.

Mahabharat Episode 9: Amba Thirsts For Revenge

 

மனதில் எழுந்த பெரும் நம்பிக்கையுடன் கையில் மாலையை ஏந்தி மீண்டும் தன் தேடலை துவங்கினாள் அம்பா. அம்பாவுக்கும் மாலைகளுக்கும் ஏதோ பொருந்தவில்லை போலிருக்கிறது. முதல்முறை மாலையை ஏந்தியபோது அம்பாவின் வாழ்க்கையே தடம்புரண்டது. மறுபடியும் மாலையுடன் - இந்தமுறை கைகளில் தாமரை மாலையை ஏந்தியபடி கிராமம் கிராமமாக, ஊர்ஊராக "யாராவது இந்த மாலையை அணிந்து கொண்டு பீஷ்மரை கொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டு அலைய துவங்கினாள். ஆனால் யாருமே அந்த மாலையை தொடக் கூட விரும்பவில்லை

கையில் மாலையுடன் தொடர்ந்த அம்பாவின் பயணம், அப்போது பாரதபூமியில் இரண்டாவது பெரிய சாம்ராஜ்யமாக இருந்த பாஞ்சால தேசத்தின் அரசனான துருபதன் அரசவைக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அம்பாவை பற்றி ஏற்கனவே பரவியிருந்த செய்திகளால் அம்பா இருந்த திசையில்கூட துருபதன் வரவிரும்பவில்லை. பீஷ்மரின் இரத்தத்தின் மீது தீராததாகத்துடன் கிட்டத்தட்ட பேயாக அலைந்த அம்பாவுக்கு, துருபதன் தன்னை பார்ப்பதைக் கூட தவிர்ப்பதை கண்டதும் நம்பிக்கை முற்றிலுமாக குலைந்தது. ஏமாற்றத்தின் உச்சத்திற்கு சென்ற அம்பா அரசவையில் இருந்த தூண்களில் ஒன்றில் தாமரை மாலையை அணிவித்துவிட்டு மீண்டும் தனியாக மனம்சோர்ந்து நேராக இமயமலையை நோக்கி சென்றாள். அம்பா அரண்மனையிலேயே விட்டுச்சென்ற தாமரைமாலை எப்போதுமே அப்போது மலர்ந்தது போலவே முழுமலர்ச்சியுடன் இருந்தது. இதனால் பயந்துபோன துருபதன் அந்த மாலையை தொடவே யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் மாலைக்கு தினமும் விளக்கேற்றி வழிபட துவங்கினர். ஆனால் அந்த தாமரை மாலையை தொடவோ அல்லது அதுனுடன் எந்த வகையிலும் சம்மந்தப்படவோ யாரும் விரும்பவில்லை.

சிவனின் வரம்

இமயமலைக்கு வந்து அமர்ந்த அம்பா கடுந்தவம் இயற்ற துவங்கினாள். அழகும் இளமையுமான பெண்ணாக இருந்த அம்பாவின் உடலில் இப்போது எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தது. வெறும் எலும்பும் சதையுமாக அமர்ந்து சிவனை அழைத்தாள் அம்பா. சிவனே நேரில் வந்தார். "நீங்கள் பீஷ்மரை கொல்ல வேண்டும்" என்றாள் அம்பா. "உன் கையால் பீஷ்மரை கொல்ல உனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கும்.. நான் கொல்வதைவிட, நீ பீஷ்மரை கொன்றால் பழிவாங்கிய திருப்தியை நீ இன்னும் அதிகமாக ருசிப்பாயே" என்றார் சிவன். அம்பாவின் கண்கள் மின்னினாலும் சிறிது தயங்கினாள் "ஆனால் அது எப்படி முடியும்? நானோ ஒரு பெண். அவன் ஒரு வீரன். என்னால் எப்படி கொல்ல முடியும்?" என்றாள். "அடுத்த பிறவியில் உன்னால் கொல்ல முடியும் என்ற வரத்தை நான் தருகிறேன்" என்றார் சிவன். "ஆனால் என் அடுத்த பிறவியில் இதெல்லாம் எனக்கு நினைவுக்கே வராதே.. என்னால் எப்படி பழிதீர்க்கும் இனிமையை ருசிக்க முடியும்" என்று கேட்டாள் அம்பா. "கவலை வேண்டாம். அது என் பொறுப்பு. சரியான நேரம் வரும்போது நான் உன் நினைவுக்கு கொண்டு வருவேன். பழிக்குபழிதீர்க்கும் இனிமையை நீ உணர்வாய். இதுவரை நீ அனுபவித்த துன்பங்களுக்காக உனக்கு அந்த திருப்தி கிடைக்கும்." என்றார் சிவன். இந்த உறுதியை கேட்டதும், மீண்டும் வருவதற்காக அங்கேயே அமர்ந்து தன் உடலை உதறினாள் அம்பா.

தொடரும்...

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடர்! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!