கல்பவிருட்சம்

சத்குரு: இந்த பூமியில் நாம் உருவாக்கியுள்ளவை அனைத்தும் அடிப்படையாக முதலில் மனதில் உருவானவை. மனிதர்களால் செய்யப்பட்ட எல்லா செயலும் – அற்புதமான விஷயங்கள், மோசமான விஷயங்கள் என இரண்டுமே – முதலில் மனதில் வெளிப்பட்டு, அதன் பிறகு வெளியுலகில் முழுமையாக உருவாயின. யோகப் பாரம்பரியத்தில், உறுதியாக ஒருநிலைப்பட்ட மனம் ஒரு கல்பவிருட்சம் என்று குறிப்பிடப்படுகிறது

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உங்கள் மனதை நீங்கள் ஒருங்கிணைத்தால், பதிலுக்கு அது ஒட்டுமொத்தமாக உங்கள் அமைப்பை ஒருங்கிணைக்கிறது; உங்கள் உடல், உணர்ச்சிகள் மற்றும் சக்திகளை அந்த திசையில் ஒருங்கிணைக்கிறது. இது நிகழ்ந்ததென்றால், நீங்களே ஒரு கல்பவிருட்சமாக இருக்கிறீர்கள். நீங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் நிகழும்.

நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள்

யோக மரபில் அழகான கதை ஒன்று உள்ளது. ஒரு மனிதன் நடை உலா செல்லும்போது, தற்செயலாக சொக்கத்துக்குள் சென்றுவிட்டான். நீண்ட நடைக்குப் பின்னர், அவன் சிறிது களைப்பாக உணர்ந்ததால், “நான் எங்காவது ஓய்வெடுக்க விரும்புகிறேன்,” என்று நினைத்தான். அவனுக்கு எதிரில் ஒரு அழகான பெரிய மரத்தையும், அதன் கீழ் அற்புதமான, மென்மையான புல்தரையையும் கண்டான். ஆகவே அவன் மரத்தினருகில் சென்று, புல் மீது படுத்து உறங்கினான். சில மணி நேரங்கள் கழித்து, நன்றாக ஓய்வெடுத்து அவன் கண் விழித்தான். பிறகு அவன், “ஓ! எனக்கு பசிக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று நினைத்தான். தனக்கு விருப்பமான எல்லா உணவுகளையும் அவன் விரும்பி நினைத்ததும், அவை அனைத்துமே அவனுக்கு முன் தோன்றின. விருந்து உண்ட பிறகு, அவன் நினைத்தான், “ஓ! எனக்கு தாகமாக இருக்கிறது, ஏதாவது அருந்த விரும்புகிறேன்” என்று. அவன் அருந்த விரும்பிய எல்லா பானங்களும் அவன் நினைத்தவுடன், அவை அனைத்தும் அவன் முன்பு தோன்றின.

யோகத்தில், மனித மனம் மர்கட்டா அல்லது குரங்கு என்று குறிக்கப்படுகிறது. ஏனென்றால், அது சுற்றியலைந்து திரியும் இயல்புடையது. ஆங்கிலத்தில் குரங்கு என்ற வார்த்தை அசலைப்போல் நடிப்பது என்பதற்கு இணையானதாகவும் உள்ளது. யாரையோ குரங்குத்தனம் செய்கிறீர்கள் என்று நீங்கள் கூறினால், அதன் பொருள் யாரோ ஒருவர் போன்று நடிக்கிறீர்கள் – இதுதான் உங்கள் மனதின் முழு நேர வேலை. ஆகவே ஒரு நிலையில்லாத மனம், ஒரு குரங்கு என்று குறிப்பிடப்படுகிறது.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒருநிலைப்பட்ட உறுதியான மனம், ஒரு கல்பவிருட்சம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மனதில், நீங்கள் கேட்பது என்னவாக இருந்தாலும், அது நிஜமாகிறது.
 

சொர்க்கத்துக்குச் சென்ற மனிதனுக்குள் இந்த “குரங்கு” செயல்படத் தொடங்கியபோது, அவன் இவ்வாறு நினைக்கலானான், “இங்கே என்னதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது? நான் உணவு கேட்டேன், உணவு வந்தது, நான் பருகுவதற்குக் கேட்டேன், பானம் வந்தது. ஒருவேளை இங்கு எங்கேனும் ஆவிகள் இருக்கலாம்.” உடனே ஆவிகள் அங்கே இருப்பதை அவன் கண்டான். அவைகளைப் பார்த்த கணமே, அவன் நடுங்கி பயந்துவிட்டான். “ஓ, ஆவிகள் இங்கு சுற்றிலும் உள்ளன. அவைகள் என்னை சித்ரவதை செய்யக்கூடும்,” என்று கூறினான். அடுத்த கணம், அந்த ஆவிகள் அவனை சித்ரவதை செய்யத் துவங்கின. அவன் கூக்குரலிட்டு, வலியில் கத்தினான். அத்துடன் அவன், “ஓ, இந்த ஆவிகள் என்னைக் கொடுமைப்படுத்துகின்றன, அவைகள் என்னைக் கொல்லப்போகின்றன” என்றான், அப்படியே அவன் இறந்துபோனான்.

பிரச்சனை என்னவென்றால், அவன் ஒரு கல்பவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருந்தான். அவன் கேட்டதெல்லாம் நிஜமானது. மனம் பைத்தியக்காரத்தனத்தின் பிறப்பிடமாக இல்லாமல், ஒரு கல்பவிருட்சமாக மாறுவதற்கு நீங்கள் உங்கள் மனதைப் பண்படுத்துவது அவசியம். ஒருநிலைப்பட்ட உறுதியான மனம், ஒரு கல்பவிருட்சம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மனதில், நீங்கள் கேட்பது என்னவாக இருந்தாலும், அது நிஜமாகிறது.

ஓட்டுனர் இருக்கையில் இருப்பது யார்?

நீங்கள் ஒரு கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஸ்டீயரிங் வீல் கழன்றுவிட்டது என்று வைத்துக்கொள்வோம்; மற்றபடி எல்லாம் நன்றாக இருக்கிறது, தானியங்கி க்ரூயிஸ் முறையில், கார் ஒரே சீரான வேகத்தில் செல்கிறது, ஆனால் ஸ்டீயரிங் கழன்றுவிட்டது. நீங்கள் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருப்பீர்களா? இல்லை, அப்போது நீங்கள் அசாதாரணமான பயத்தில் தள்ளப்படுவீர்கள். நல்லது, இதுதான் பெரும்பாலான மக்களின் இன்றைய நிலை, ஏனென்றால் ஸ்டீயரிங் வீல் அவர்கள் கைகளில் இல்லை. உடல், மனம் மற்றும் சக்திகள் உங்கள் கைகளில் இல்லையென்றால், அவைகளுக்கே உரிய நிர்ப்பந்தமான பழக்கங்களின் வெளிப்பாடாக அவைகளுக்கே உரிய வழக்கமான விஷயங்களைச் செய்கின்றன. அவற்றுக்கே உரிய வழியில் உடல், மனம் மற்றும் சக்திகள் செயல்படும்போது, கல்பவிருட்சம் என்பது தூரத்துக் கனவாகவே இருக்கிறது.

முதன்மையான விஷயம் என்னவென்றால், உண்மையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அதை உருவாக்கும் கேள்வியே எழுவதில்லை. உங்களுக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்று நீங்கள் பார்த்தால், ஒவ்வொரு மனிதரும், ஆனந்தமாகவும் அமைதியாகவும் வாழ்வதைத்தான் விரும்புகின்றார். உறவுகள் என்று பார்த்தால், அவர்கள் அன்புடனும், கனிவுடனும் இருப்பதையே ஒரு மனிதர் விரும்புகிறார். அல்லது வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், எந்த ஒரு மனிதரும் தேடுவதெல்லாம், அவருக்குள் இனிமையையும், அவரைச் சுற்றிலும் இனிமையையும்தான்.

முதன்மையான விஷயம் என்னவென்றால், உண்மையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அதை உருவாக்கும் கேள்வியே எழுவதில்லை.

இந்த இனிமை நமது உடலில் நிகழ்ந்தால், இதை நாம் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் என்று அழைக்கிறோம். அது நமது மனதில் நிகழ்ந்தால், இதை நாம் அமைதி மற்றும் ஆனந்தம் என்று அழைக்கிறோம். நமது உணர்ச்சியில் இது நிகழ்ந்தால், இதை நாம் அன்பு மற்றும் கருணை என்று அழைக்கிறோம். நமது சக்தியில் இது நிகழ்ந்தால், இதை நாம் பேரின்பம் மற்றும் பரவசம் என்று அழைக்கிறோம். ஒரு மனிதர் தேடுவதெல்லாம் இதுதான். அவர் பணிக்காக அலுவலகம் சென்றாலும், அவர் பணம் சம்பாதிக்க விரும்பினாலும், ஒரு தொழிலில் முன்னேறினாலும், ஒரு குடும்பத்தை உருவாக்கினாலும், மதுக்கடையில் உட்கார்ந்தாலும், கோவிலில் உட்கார்ந்தாலும், எப்போதும் அவர் தேடிக்கொண்டிருப்பது ஒரே விஷயம் – உள்ளுக்குள் இனிமை, சுற்றிலும் இனிமை.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், அதை உருவாக்குவதற்கு உங்களுக்கு நீங்களே உறுதி செய்துகொள்வது. தினமும் காலையில் உங்கள் மனதில், “இன்றைக்கு நான் எங்கு சென்றாலும், ஒரு அமைதியான, அன்பான, ஆனந்தமான உலகையே உருவாக்குவேன்,” என்ற இந்த எளிய எண்ணத்துடன் உங்களது நாளை நீங்கள் தொடங்குங்கள். ஒரு நாளில் நீங்கள் நூறு முறை கீழே விழுந்தால்கூட, அதனால் என்ன? உறுதியுடன் இருக்கும் ஒருவருக்கு, தோல்வி என்பதைப் போன்ற ஒரு விஷயமே இல்லை. நீங்கள் நூறு முறை கீழே விழுந்தால், கற்றுக்கொள்வதற்கு நூறு பாடங்கள் இருக்கின்றன. நீங்கள் உண்மையிலேயே கவனம் செலுத்துவது என்னவோ, அதை உருவாக்குவதற்கு, இதைப்போன்று உங்களுக்கு நீங்களே உறுதி எடுத்துக்கொண்டால், உங்கள் மனம் ஒருங்கிணைகிறது.

மேம்பட்ட புரிதலினால் கிடைப்பது, இன்னொரு கருவி மட்டுமல்ல

உளவியல்ரீதியான குளறுபடியாக இருப்பதற்குப் பதிலாக, உங்களையே நீங்கள் ஒரு கல்பவிருட்சமாக உருவாக்கமுடியும். அந்த விதமாக, இந்த உடல், மனம் மற்றும் சக்தியின் அமைப்பை எப்படி ஒருங்கிணைப்பது என்பதற்கான கருவிகளும், தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. படைப்பின் மூலமாக இருப்பது எதுவோ, அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் பரிமாணத்துடன் நீங்கள் தொடர்பு வைத்துள்ளீர்களா, இல்லையா என்பதுதான் கேள்வி. உங்கள் வாழ்வின் நான்கு அடிப்படையான கூறுகளை ஒருங்கிணைப்பது, உங்களுக்கு அந்தத் தொடர்பைக் கொடுக்கும். யோகா என்று நாம் குறிப்பிடும் ஒட்டுமொத்த விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இதைப் பற்றியதுதான் – படைப்பின் ஒரு துளியாக மட்டும் இருப்பதிலிருந்து, ஒரு படைப்பாளியாகவே உருவெடுப்பதற்கு உங்களையே மாற்றமடையச் செய்வது.

உதாரணத்துக்கு, நூறு வருடங்களுக்கு முன்பு, இன்றைய கைபேசியைப் போன்ற ஏதோ ஒன்றை நான் எடுத்து, உலகின் மறுபக்கத்தில் இருக்கும் ஒருவருடன் பேசியிருந்தால், அதை ஏதோ ஒரு அதிசயம் நிகழ்வதாக நீங்கள் எண்ணியிருப்பீர்கள். நான் ஒரு இறைத்தூதராகவோ அல்லது கடவுளின் புதல்வராகவோ அல்லது இறைவனாகவோ இருக்கவேண்டும் என்று வியந்திருப்பீர்கள். ஆனால் இன்றைக்கு கைபேசி என்பது, நாம் ஒவ்வொருவரும் கையில் வைத்துக்கொண்டு, பயன்படுத்தும் இன்னொரு கருவியாகத்தான் இருக்கிறது. இன்று இந்தக் கருவியைப் பயன்படுத்தாமல், உலகின் வேறொரு பகுதியில் இருப்பவருடன் நான் பேசினால், இப்போதும் உங்களுக்கு அது அதிசயமாகத்தான் இருக்கும். இது நிகழவேண்டும் என்ற ஒரு மனித மனதின் விருப்பத்தால், இந்தக் கருவி நிகழ்ந்தது. நூறு வருடங்களுக்கு முன்னால், இது சாத்தியம் என்று ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு, இது ஒரு சாதாரணமான விஷயம். அதைப்போன்றே, இன்னமும் நமது புரிதலில் இல்லாத பற்பல விஷயங்களையும், நம்முடைய புரிதலுக்குள் கொண்டுவர முடியும். மற்றும் நமது வாழ்வை உருவாக்குவதற்கான நமது திறனும் மகத்தான மேம்பாடு அடைய முடியும்.

நீங்கள் ஒரு படைப்பாளி

உங்கள் மனம் ஒருநிலைப்பட்டுவிட்டால் – நீங்கள் உணரும் விதமே நீங்கள் சிந்திக்கும் விதமாக இருக்கிறது – உங்களது உணர்ச்சி ஒருநிலைப்படுகிறது. உங்கள் எண்ணமும், உணர்ச்சியும் ஒருங்கிணைந்துவிட்டால், உங்கள் சக்திகள் ஒரே திசையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. உங்கள் எண்ணம், உணர்ச்சி மற்றும் சக்திகள் ஒருங்கிணைந்தால், உங்களது உடலே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த நான்கும் ஒரு திசையில் ஒருங்கிணைந்தால், உங்களுக்கு வேண்டியதை உருவாக்கி, வெளிப்படுத்தும் உங்கள் திறன் அதிசயிக்கத்தக்கதாக இருக்கிறது.

தற்போது உங்கள் வாழ்வின் இயல்பை நீங்கள் உற்றுநோக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், நான்கு மணி நேரத்தில், இந்த வாழைப்பழம் ஒரு மனிதனாக மாறுகிறது. உங்களுக்குள் ஏதோ ஒன்று, இந்த உடலைக் கட்டமைக்கின்ற, உயிர் உருவாக்கும் ஒரு செயல்முறை இருந்துகொண்டிருக்கிறது. இந்த உடலை உருவாக்குபவர் உள்ளே இருக்கிறார்; அவருக்கு நீங்கள் ஒரு வாழைப்பழம் தருகிறீர்கள் – அந்த வாழைப்பழத்திலிருந்து அவர் ஒரு மனிதரை உருவாக்குகிறார். ஒரு வாழைப்பழத்தை, மனிதராக மாற்றமடையச் செய்வது ஒரு சிறிய விஷயமல்ல. அது ஒரு அதிசயம்; அது என்னவென்றால், இந்த அதிசயம் உங்களுக்குள் தன்னுணர்வில்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு வாழைப்பழத்தை, ஒரு மனிதராகச் செய்யும் இதை மட்டும் உங்களால் தன்னுணர்வுடன் வெளிப்படுத்த முடிந்தால், நீங்கள் படைப்பாளி. அதற்கு எந்த விதத்திலும் நீங்கள் குறைந்தவர் அல்ல.

பரிணாம வளர்ச்சி தத்துவத்தின்படி, குரங்கை மனிதனாகச் செய்வதற்கு இலட்சக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டன. ஒரு மதியப்பொழுதில், ஒரு வாழைப்பழத்தை, ஒரு இட்லியை அல்லது நீங்கள் சாப்பிடும் எதையும் உங்களால் ஒரு மனிதராக உருவாக்கமுடியும். ஆகவே படைப்பின் மூலமே உங்களுக்குள் இயங்கிக்கொண்டு இருக்கிறது. உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி ஆகிய இந்த நான்கு பரிமாணங்களையும் நீங்கள் ஒரே திசையில் ஒருங்கிணைத்தால், படைப்பின் மூலம் உங்களுக்குள் இருக்கிறது; நீங்கள் படைப்பாளியாக இருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்க விரும்புவது உங்களுக்கு சிரமமில்லாமல் நிகழும். இதுபோல் நீங்கள் ஒருங்கிணைப்பாக இருந்துவிட்டால், இப்போது நீங்கள் ஒரு குளறுபடியாக இல்லை. நீங்கள் ஒரு கல்பவிருட்சம். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதற்கு, உங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.