உணர்ச்சிகள்... அடக்கவா? அனுமதிக்கவா?
உணர்ச்சிகள் நன்மையை விட தீமையைத்தான் அதிகம் தருவதாகத் தோன்றுகிறது. அவைகள் இல்லாமல் நாம் சிறப்பாக வாழ முடியாதா?
 
உணர்ச்சிகள்... அடக்கவா? அனுமதிக்கவா?
 

Question:உணர்ச்சிகள் நன்மையை விட தீமையைத்தான் அதிகம் தருவதாகத் தோன்றுகிறது. அவைகள் இல்லாமல் நாம் சிறப்பாக வாழ முடியாதா?

சத்குரு:

ஒரு மனிதருக்குள் உணர்ச்சி என்பதே இல்லையென்றால், அவரை நீங்கள் மனிதர் என்றே அழைக்க முடியாது. உணர்ச்சியானது, மனித வாழ்வின் அழகான அம்சம். உணர்ச்சியற்ற ஒரு மனிதர் அவலட்சணம் ஆகிவிடுவார். ஆனால் மற்ற அனைத்தையும் போலவே, உணர்ச்சியும் கட்டுக்கடங்காமல் போகும்போது, அது பைத்தியத்தனமாகிறது. உங்கள் எண்ணம் கட்டுப்பாடின்றி நிகழ்ந்தாலும், அதுவும் பைத்தியத்தனமாகிவிடும்.
மக்கள் உணர்ச்சியை ஒரு பிரச்சனையாகப் பார்க்கின்றனர். ஏனெனில் அவர்கள் வலி மிகுந்த உணர்ச்சியைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அழகான உணர்ச்சிகளைக் கொண்டிருந்தால், அவற்றை ஒரு பிரச்சனை என்று அவர்கள் கூறுவார்களா? நீங்கள் உங்களுக்குள் ஆனந்தம், அன்பு மற்றும் கருணை போன்ற உணர்ச்சிகள் நிரம்பியவராக இருந்தால், அதை ஒரு பிரச்சனையாக நீங்கள் கருதுவீர்களா? மாட்டீர்கள்.

தற்போது உங்களது அனுபவத்தில் இருக்கக்கூடிய உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள் அல்லது உங்கள் சக்தி ஆகிய இந்த நான்கு பரிமாணங்களுக்குள்ளும் முதலில் மிகுந்த இனிமையை கொண்டுவர வேண்டும். இது முக்கியமானது. அவைகளுக்குள் இனிமை நிரம்பியிருந்தால் பிறகு அவை ஒரு பிரச்சனையாக இருக்காது.

உங்களது உடல் மிகவும் நன்றாகவும், அழகாகவும் இயங்கிக் கொண்டிருந்தால், அதை ஒரு பிரச்சனை என்று அழைப்பீர்களா? மாட்டீர்கள். உங்கள் உடல் வலி நிரம்பியதாகவோ அல்லது நோயுற்றிருந்தாலோ, நோய் காரணமாக உட்கார்வதும், நிற்பதும் அல்லது குனிவதும் உண்மையாகவே வலி மிகுந்தவையாக இருக்கும்போதோ இந்த உடல் ஒரு பெரும் பிரச்சனை என்று நீங்கள் நினைப்பீர்கள்.

அதேபோல, நீங்கள் உணர்ச்சியை வைத்து குளறுபடிகள் செய்யும் காரணத்தினாலேயே, உணர்ச்சியை வேண்டாம் என்று நீங்கள் கூறக்கூடும். ஆனால் அழகு மிகுந்த உணர்ச்சிகள் உங்கள் வாழ்வை ஒரு மலரைப் போல் ஆக்கிவிடும். அந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், உணர்ச்சிகள் வேண்டுமா என்று யோசிக்கக்கூட மாட்டீர்கள். உங்களது உணர்ச்சிகளை நீங்கள் விட்டுவிட வேண்டும் என்றோ அல்லது அவற்றைக் கடந்து செல்லவோ நான் கூறவில்லை.

நான் கூறுவதெல்லாம் ஒன்றுதான். தற்போது உங்களது அனுபவத்தில் இருக்கக்கூடிய உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள் அல்லது உங்கள் சக்தி ஆகிய இந்த நான்கு பரிமாணங்களுக்குள்ளும் முதலில் மிகுந்த இனிமையை கொண்டுவர வேண்டும். இது முக்கியமானது. அவைகளுக்குள் இனிமை நிரம்பியிருந்தால் பிறகு அவை ஒரு பிரச்சனையாக இருக்காது. உணர்ச்சிகள் ஒரு பிரச்சனையாக இல்லாதபோதுதான், எதையோ ஒன்றை அடையவேண்டும் என்ற குறிக்கோள் வைத்துக் கொள்ளாமலே மக்கள் ஆனந்தத்தில் திளைக்கும்போதுதான், அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் என்ற பேராவல் மக்களுக்கு வருகிறது.

மற்றபடி, நீங்கள் செய்யும் எல்லாச் செயல்களும் பிழைப்புக்கான முயற்சிதானேயன்றி வேறில்லை. நீங்கள் இறைவனையே அழைத்தாலும், அது உங்கள் பிழைப்புக்கான அழைப்புதான், இல்லையா? இங்கே நீங்கள் உங்கள் பிழைப்பில் தோல்வி அடைகிறீர்கள், ஆனால் சொர்க்கத்திற்குச் சென்று வெற்றி பெறுவதைப் பற்றி சிந்திக்கிறீர்கள். இங்கேயே உங்களால் வெற்றிபெற முடியாவிட்டால், சொர்க்கத்தில் மட்டும் அதைச் செய்துவிடுவீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது?

உங்கள் வரையறைகளைக் கடப்பதற்கு, நீங்கள் உங்கள் மனதை உபயோகித்தால், நாம் இதை ஞானயோகம் என்கிறோம். உங்களது உணர்ச்சியை உபயோகித்தால், பக்தியோகம் என்கிறோம். உங்கள் உடலை நீங்கள் உபயோகித்தால், கர்ம யோகம் என்கிறோம். உங்கள் சக்திநிலைகளை உபயோகித்தால், இதனை கிரியா யோகம் என்கிறோம். இவைகள் ஒவ்வொன்றுமே நுழைவாயிலாக இருக்கின்றன.

கர்நாடகாவில் புகழ்பெற்ற துறவியாகவும், மாபெரும் கவிஞராகவும் இருந்த பசவண்ணா இவ்வாறு கூறினார்: “இல்லி சல்லாதவரு அல்லியு சல்லாரய்யா”. இதன் பொருள், “இங்கேயே அதைச் செய்யாதவர்கள், அங்கேயும் செய்யமாட்டார்கள்”. ஆகவே, இது உணர்ச்சியைக் கடந்து செல்வது பற்றி அல்ல. நீங்கள் கடந்துதான் போக வேண்டும். ஆனால், கடந்து போக வேண்டியது உணர்ச்சியையோ, மனத்தையோ அல்லது வேறெதையோ அல்ல. தற்போது உங்களைப் பற்றிப் பிடித்திருக்கும் எல்லைகளைத்தான் நீங்கள் கடந்து செல்ல வேண்டும். உணர்ச்சியும், எண்ணமும் கூட அதற்கான ஒரு வழிமுறையாகவும், கருவியாகவும் இருந்து உங்களுக்கு உதவ முடியும்.

உங்கள் வரையறைகளைக் கடப்பதற்கு, நீங்கள் உங்கள் மனதை உபயோகித்தால், நாம் இதை ஞானயோகம் என்கிறோம். உங்களது உணர்ச்சியை உபயோகித்தால், பக்தியோகம் என்கிறோம். உங்கள் உடலை நீங்கள் உபயோகித்தால், கர்ம யோகம் என்கிறோம். உங்கள் சக்திநிலைகளை உபயோகித்தால், இதனை கிரியா யோகம் என்கிறோம். இவைகள் ஒவ்வொன்றுமே நுழைவாயிலாக இருக்கின்றன. ஒரு நுழைவாயில் என்பது உங்களைத் தடையும் செய்யலாம் அல்லது கடந்து போக அனுமதிக்கவும் செய்யலாம். ஆகவே வரையறைகளைக் கடப்பதற்காக நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை நிராகரிக்கத் தேவையில்லை. உண்மையில் நீங்கள் உணர்ச்சிகளைத் தவிர்க்கவும் முடியாது. உணர்ச்சி அற்றவராக இருக்க நீங்கள் முயன்றால், அடக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடுவீர்கள். பிறகு நீங்கள் வறண்டு போய்விடுவீர்கள். மிக ஆழமான விதத்தில், உணர்ச்சியை ஏற்றுக்கொள்வது அவசியம். அப்போதுதான் உணர்ச்சி உங்களிடம் தோழமை கொள்ளும். ஒரு தோழன் என்பவன் எப்போதும் உங்களுக்கு இனிமையானவன்தான்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1