கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, தூக்கம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அதைக் குறித்து அதிகம் பேசியிருப்பது எனக்குத் தெரியும், ஆனால் இன்னும் சற்று ஆழமாக அதற்குள் நாம் செல்லமுடியுமா என்று பார்க்க விரும்புகிறேன். ஒருவர் தன் தூக்கத்தின் அளவை சட்டென்று குறைப்பதற்கு, உண்மையிலேயே எளிமையான சில விஷயங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டீர்கள். எனது பயிற்சிகள் அனைத்தையும் நான் செய்தால்கூட, பெரும்பாலான மக்கள் தூங்குவதை விட, எனக்கு மிக அதிகமான தூக்கம் தேவைப்படுவதாகவே நான் இன்னமும் உணர்கிறேன்.

சத்குரு: தூக்கத்திற்குள் நான் ஆழமாகச் செல்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா!

கேள்வியாளர்: ஆம், அதன் அறிவியல்பூர்வமான விஷயங்களுக்குள் செல்லவேண்டும்.

சத்குரு: தூக்கம் என்பது என்ன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். தூக்கம் என்றால் உடலுக்கான பழுதுநீக்கும் நேரம். அதாவது, உடலானது கழிவுகளை நீக்கும்போது, அது எடுத்துக்கொள்ளும் நேரம். தினசரி வாழ்தலின் காரணமாக, அணுக்களின் நிலையில், சக்தி நிலையில், மற்றும் பல்வேறு வித்தியாசமான வழிகளில் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்வது, பராமரிப்பதற்கான நேரம் அது.

பராமரிப்புக்காக எவ்வளவு ஓய்வுநேரம் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பது, எவ்வளவு பழுது நீக்கம் செய்யவேண்டியுள்ளது என்பதைப் பொறுத்தது. வாழ்வின் போக்கில், உங்களுக்கு எவ்வளவு பாதிப்பை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள் என்பதுதான் இங்கே கேள்விக்குரியது. உங்களுக்குள் மிக அதிகமான உராய்வு இருந்தால், அதிகபட்ச பாதிப்பு இருக்கும். உங்களுடைய உடல் மற்றும் மனக் கட்டமைப்பு மிக நன்றாக ஒத்திசைவுடனும், தளர்வாகவும் இருந்தால், குறைந்தபட்ச உராய்வு இருப்பதுடன், பராமரிப்புக்கான ஓய்வுநேரமும் இயல்பாகவே குறைந்துவிடும்.

தூக்கத்தின் அளவைக் குறைப்பதற்கான குறிப்புகள்

#1 புத்தம்புதிய உணவை உண்ணுவது

சத்குரு: உங்கள் தூக்கத்தின் அளவைக் குறைப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் என்ன? முதல் விஷயமாக, புத்தம்புதிய உணவைச் சாப்பிடுங்கள். யோகக் கலாச்சாரத்தில் இருக்கும் எளிமையான புரிதல் என்னவென்றால், நீங்கள் எதையாவது சமைத்தால், அதிகபட்சமாக தொண்ணூறு நிமிடங்களுக்குள் அதைச் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குப் பிறகு, உணவில் மந்தத்தன்மை படியத் துவங்கும். மந்தத்தன்மை அதிகமான உணவை நீங்கள் சாப்பிட்டால், உடல் சோம்பலாகிவிடுகிறது. மந்தத்தன்மையை எதிர்த்துச் செயல்படுவதற்கு, மிக அதிகமான சக்தியை உடல் செலவழிக்கவேண்டி இருப்பதால், அதற்கு மிக நீண்ட நேர உறக்கம் தேவைப்படும்.

உணவு சமைக்கப்படுகிறது என்றால், ஒருவிதத்தில் நீங்கள் அதைக் கொன்றுவிட்டிருக்கிறீர்கள் என்பதே அதன் பொருள். அது உயிர்ப்புடன் இல்லை. ஒருவேளை நீங்கள் இறந்துவிட்ட நிலையில், உங்கள் உடலை மூன்று நாட்களுக்கு நாம் வைத்திருந்தால், அது அழுகிவிடும். எந்த ஒரு உயிரினத்திற்கும் அதுதான் நிகழ்கிறது. அது காய் என்றாலும் அல்லது விலங்கு மாமிசம் என்றாலும் அல்லது வேறு எதுவென்றாலும், சமைப்பதன் மூலம் அதிலிருந்து உயிர்த்தன்மையை வெளியேற்றும் கணமே, அது அழுகத் தொடங்குகிறது.

அழுகிப்போவதில் எதுவும் தவறில்லை, ஏனென்றால் அது மற்றொரு வடிவத்தில் இருக்கும் உயிர். அழுகிப்போவது என்றால், அழுகலைத் தங்கள் உணவாகக் கொள்ளும் வேறொரு உயிர் வளரத் தொடங்கியுள்ளது என்பது பொருள். நுண்ணுயிராக இருக்கக்கூடிய பெருந்திரளான உயிர் அங்கே இருக்கிறது, உங்களால் அவைகளைப் பார்க்க முடியாது, ஆனால் அவை அனைத்தும் விருந்துண்ணுகின்றன. பாக்டீரியா போன்றவைகளின் விருந்தில் நீங்கள் கலந்துகொண்டு, அந்த உணவைச் சாப்பிட்டால், நீங்கள் தொந்தரவுக்கு உள்ளாவீர்கள். தொந்தரவு என்றால், உடனே உங்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்படப்போகிறது என்பது பொருளல்ல, ஏனென்றால், அவை அனைத்துமே உங்களுக்கு தொற்று பரப்பக்கூடிய திறனுள்ளவையாக இருப்பதில்லை. அது என்னவென்றால், உங்கள் சக்தி குறைவதால், உடலில் அது மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது.

நீங்கள் பல்பொருள் அங்காடிக்குச் செல்லும்போது வாங்கும் உணவுப் பொருட்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அங்கிருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஒரு மாதத்திற்கும் அதிகமாக அங்கே இருந்துள்ளன. அதை நீங்கள் எடுத்துவந்து, உங்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் மேலும் ஒரு மாதம் வைத்திருந்து, எப்போதெல்லாம் நீங்கள் விரும்புகிறீர்களோ அப்போது அதை எடுத்துச் சாப்பிடுகிறீர்கள். நீங்கள் எட்டு மணி நேரம் தூங்கவேண்டும், இல்லையென்றால் நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கமாட்டீர்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், இது ஏனென்றால் அவர்கள் சாப்பிடுவதும் அதே உணவுதான்!

#2 எளிமையான உணவைச் சாப்பிடுதல்

ஒவ்வொரு உயிரினமும் அது இருக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நிலையில், ஒரு மனிதரின் இயல்பு எப்படி இருக்கிறது என்றால், ஒரு மனிதர் அவருக்கு விருப்பமான சூழ்நிலைகளை உருவாக்கும் திறனுடையவராக இருக்கிறார். அதுதான் நம்மை வித்தியாசப்படுத்துகிறது. உங்களைக் குறித்த அக்கறை ஏதேனும் உங்களுக்கு இருந்தால், உங்களது உடலுக்குள் என்ன செல்கிறது என்பதைக் குறித்து நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் சாப்பிடும் உணவானது, அதற்குள் குறைந்தபட்ச அளவுக்கு சிக்கலான ஞாபகங்களைக் கொண்டதாக இருந்தால், அதைச் சாப்பிட்ட இரண்டு, மூன்று மணி நேரங்களுக்குள் உங்களது உடலின் பாகமாக அது மாறிவிடும். அந்த விதமான உணவு, தூக்கத்தின் அளவைக் கணிசமாகக் குறைக்கும். ஆனால் இன்றைய உலகில், நல்ல தரமான உணவைச் சாப்பிடுவது மிகுந்த சிரமமாகிவிட்டது, ஏனென்றால் உங்களுக்குக் கிடைக்கும் உணவானது பெரும்பாலும் வணிகத்தின் அளவீடுகளாகத்தான் இருக்கிறதேயன்றி, உண்மையில் உடலுக்கான உணவாக இல்லை. மேலை நாடுகளில் வாழ்ந்துகொண்டு, இந்த விதமான உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மக்கள், ஈஷா யோக மையத்திற்கு வரும்போது, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, ‘நான் ஏன் போதுமான அளவு தூங்காமல் இருக்கிறேன்?” என்று ஆச்சரியப்படத் தொடங்குகின்றனர். அவர்கள் எட்டு மணி நேரம் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகின்றனர். ஆனால் நாம் நான்கு மணி நேரம் தூங்குகிறோம். நமக்கு நான்கு மணி நேரம் போதுமானதாக மட்டுமில்லாமல், நாம் மிக நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்.

உணவில் மிக அதிகமான இரசாயனமும், செயற்கைப் பொருட்களும் இருந்தால், அதைச் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு உடல் வடிவமைக்கப்படவில்லை. நீங்கள் சாப்பிடும் மொத்த உணவில் ஒரு சதவிகிதம் உரங்கள், இரசாயனங்கள் அல்லது பதப்படுத்தும் பொருட்களின் வடிவில் இயல்பாகவே செயற்கைத் தன்மை இருந்தாலும், ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் ஒரு போராட்டமாகிறது.

அமெரிக்காவில், அமில சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மிகப் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அப்படியென்றால், உங்களது வயிற்றுக்குள் அனுப்பப்படுபவை, குறைந்தபட்சம் உங்கள் வயிற்றுக்கு பொருத்தமானதாக இல்லை. நெஞ்செரிச்சல் நீங்கள் காதலில் வீழ்ந்ததால் அல்ல. நெஞ்செரிச்சல் என்றால், உங்களுடைய உணவுக்குழாய் முழுவதும் அமிலம் அல்லது பல்வேறு காரணங்களுக்காக எரிச்சலாக உணர்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவில் ஒரு சதவிகித அளவுக்கும் குறைவாக செயற்கைப் பொருள் இருந்தாலும், உடலுக்குள் அதைக் கிரகிக்கும் உங்கள் திறன் சட்டென்று குறைகிறது. அதனால் பெருமளவுக்கு உங்கள் தூக்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது. உடலானது போராட்டத்தில் இருக்கும் காரணத்தால், இயல்பாகவே நீங்கள் தூக்கத்திற்குள் செல்லவேண்டும் என்று அது விரும்புகிறது.

#3 எவ்வளவு சாப்பிட வேண்டும்

உங்கள் சக்திகளை எவ்வளவு கவனமாக நீங்கள் நிர்வகிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் விழிப்புணர்வை முடிவு செய்கிறது. தியானம் செய்வதற்கு, மனம் மட்டும் விழிப்புடன் இருப்பதோடு, உங்கள் சக்தியும் விழிப்புடன் இருக்கவேண்டும். இதற்கு உறுதுணையாக, யோகப்பாதையில் இருப்பவர்களுக்கு, நீங்கள் இருபத்தி நான்கு கவளங்கள் மட்டும்தான் சாப்பிடவேண்டும் என்றும், மற்றும் ஒவ்வொரு கவளத்தையும் குறைந்தபட்சம் இருபத்தி நான்கு முறைகள் நீங்கள் மெல்லவேண்டும் என்றும் கூறப்படுகிறது. உணவானது வயிற்றுக்குள் செல்வதற்கு முன், உங்கள் வாயில் முன்கூட்டியே செரிமானம் செய்யப்படுவதை இது உறுதி செய்வதுடன், சோம்பலையும் அது ஏற்படுத்தாது.

உங்களுடைய இரவு நேர உணவின்போது இதைச் செய்தால், அதிகாலை மூன்றரை மணிக்கு எளிதில் நீங்கள் எழுந்துவிடுவீர்கள். யோகமுறையில், இந்த நேரமானது பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகிறது. யோகப் பயிற்சிகளைச் செய்வதற்கு அது உகந்த நேரம். ஏனென்றால், அந்த நேரத்தில் உங்கள் சாதனாவிற்கு இயற்கையே கூடுதல் உறுதுணையாக இருக்கிறது.

#4 நீங்கள் சாப்பிட்ட உடனேயே தூங்கவேண்டாம்

இந்த விதமான மனநிலையில் சிலர் இருந்துகொண்டிருக்கின்றனர். அதாவது, உணவினால் தங்கள் வயிற்றை நிரப்பி, உடலை மந்தமாக்கினால் தவிர, அவர்களால் தூங்க முடிவதில்லை. வயிறு நிரம்பினால் தவிர உங்களால் தூங்க முடியாது என்ற ஒரு நிலையில் நீங்கள் இருந்தால், இந்தப் பிரச்சனையை நீங்கள் பார்க்கவேண்டும். இது தூக்கத்தைப் பற்றியல்ல, இது ஒருவிதமான மனோநிலை.

நீங்கள் சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கிவிட்டால், நீங்கள் எடுத்துக்கொண்ட 80% உணவு கழிவாக வீணாகிவிடும் என்றுதான் நான் கூறுவேன். நீங்கள் தூங்குவதற்கு முன்பு, செரிமானம் நிகழ்வதற்குப் போதிய அவகாசம் அளிக்கவேண்டும்.

 

#5 தூங்குவதற்கான சரியான நிலை

உடலானது கிடைமட்ட நிலையில் இருக்கும்போது, உங்களது நாடித்துடிப்பு குறைவதை நீங்கள் சட்டென்று உணரமுடியும். உடல் இந்தவிதமாகத் தன்னையே சரிசெய்துகொள்வது ஏனென்றால், ஒரே வேகத்தில் இரத்தம் பாய்ந்தால், உங்கள் தலைக்கு மிக அதிகமான இரத்தம் செல்லும், அது பாதிப்பை உண்டாக்கும். உடலின் கீழ்நோக்கிச் செல்லும் இரத்த நாளங்களைக் காட்டிலும், மேற்புறமாகச் செல்லும் இரத்த நாளங்கள் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. அவைகள் மேலேறி மூளைக்குள் செல்லும்போது, கூடுதலாக ஒரு துளி இரத்தம்கூட எடுத்துச் செல்லமுடியாத அளவுக்கு, ஏறக்குறைய மயிரிழை போலாகின்றன.

நீங்கள் தூங்கும்போது, உங்கள் தலையை வடக்கு திசை நோக்கி வைத்து, அதே நிலையில் 5, 6 மணி நேரங்கள் இருந்தீர்களென்றால், பூமியின் காந்தவிசை உங்களது மூளையின் மீது அழுத்தம் ஏற்படுத்தும், ஏனென்றால் இரும்பு உங்கள் இரத்தத்தின் மிக முக்கியமானதொரு மூலப்பொருளாக இருக்கிறது. இப்படித் தூங்கினால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பதல்ல. ஆனால் இதைத் தினமும் செய்தால் நீங்கள் தொந்தரவைத் தேடிக்கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தவராக இருந்து, உங்கள் இரத்தக் குழாய்கள் பலவீனமாக இருந்தால், அதன் விளைவாக இரத்தக்கசிவு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும். உங்களது உடல் திடகாத்திரமாக இருந்தாலும்கூட, இரத்த ஓட்டமானது மூளைக்குச் செல்லவேண்டியதைவிட அதிகமாக இருக்கும் காரணத்தால், உங்களால் மிக நன்றாகத் தூங்கமுடியாமல் போகலாம்.

நீங்கள் வடகோளத்தில் இருந்தால், நீங்கள் தூங்கும்போது உங்கள் தலையை வைப்பதற்கு கிழக்கு திசை சிறந்ததாக இருக்கிறது. வடகிழக்கு பரவாயில்லை. மேற்கு திசை நல்லது. கட்டாயமாக இருந்தால் தெற்கு திசை. வடக்கு திசையில் தூங்கவே கூடாது. நீங்கள் தென்திசைக் கோளத்தில் இருந்தால், உங்கள் தலையை தெற்கு திசையில் வைக்காதீர்கள்.

#6 வலுக்கட்டாயமாக தூக்கத்தை மறுக்காதீர்கள்

உங்களது உடலுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படுகிறது என்பது நீங்கள் செய்யும் உடல்ரீதியான செயல்பாட்டின் அளவைப் பொறுத்து இருக்கிறது. உணவு அல்லது தூக்கத்தின் அளவை நிர்ணயிக்கத் தேவையில்லை. உங்களுடைய செயல்பாட்டின் அளவு குறைவாக இருக்கும்போது, நீங்கள் குறைவாகச் சாப்பிடுகிறீர்கள். செயல்பாடுகள் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள். இது தூக்கத்திற்கும் பொருந்துகிறது. உடல் நன்றாக ஓய்வெடுத்த அடுத்த கணத்தில், அதிகாலை 3 மணியோ அல்லது காலை 8 மணியோ, அது எந்த நேரமாக இருந்தாலும் எழுந்துவிடுகிறது. உங்கள் உடலானது ஒரு அலார ஒலிக்கு எழுந்திருக்கக்கூடாது. போதிய ஓய்வெடுத்ததாக அது உணர்ந்துவிட்டால், உடல் விழிப்படைய வேண்டும்.

நீங்கள் உடலுக்கான தூக்கத்தை வலுக்கட்டாயமாக மறுத்தால், உங்கள் உடல் மற்றும் மூளைத்திறன்களும், மற்றும் உங்களுக்கு இருக்கும் வேறு திறன்களும் குறைந்துவிடும். அதை நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது. எவ்வளவு தூக்கம் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் உடலுக்குக் கொடுக்கவேண்டும்.

ஆனால் படுக்கையை ஒரு கல்லறையாக உபயோகிப்பதற்கு உடல் எப்படியாவது முயற்சி செய்யுமேயானால், அது தூக்கத்திலிருந்து வெளியில் வருவதற்கு விருப்பப்படாது. மரணத்திலிருந்து உங்களை யாரேனும் எழுப்பவேண்டி இருக்கும்! அது உங்கள் வாழ்வை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. வாழ்வைத் தவிர்க்க விரும்பும் ஒரு மனோநிலையில் நீங்கள் இருந்தால், இயல்பாகவே நீங்கள் அதிகமாகச் சாப்பிடவும், தூங்கவும் முயற்சிப்பீர்கள்.

#7 ஆனந்தமான நிலையில் இருப்பது

தூக்கம் என்றால் செயலற்ற நிலை, தற்காலிக மரணம், பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதலுக்கான ஓய்வு நேரம் என்பது பொருள். பகற்பொழுதில் மிகக் குறைவான பாதிப்பு உண்டாக்குமளவிற்கு உங்களது உடலை நீங்கள் வைத்திருந்தால், தினசரி பராமரிப்புக்கான ஓய்வு நேரம் இயல்பாகவே குறைவதை நீங்கள் கவனிப்பீர்கள். சரியான உணவைச் சாப்பிடுவதாலும், உங்கள் மனதை ஆனந்தமான ஒரு நிலையில் வைத்திருப்பதாலும் இதைச் செய்யமுடியும். உங்களுக்குள் ஒத்திசைவான தன்மையை நீங்கள் உருவாக்கிய காரணத்தால், உங்களையே நீங்கள் ஆனந்தமாக வைத்திருந்தால், உங்களது உடலில், சக்தியமைப்பில் உராய்வு இல்லாமல், உங்களது மனதிலும் மற்றும் உணர்ச்சியிலும் உராய்வு இல்லாமல் இருந்தால், உங்களது தூக்கத்தின் அளவு வெகுவாகக் குறையும்.

#8 வாழ்க்கையோடு யுத்தம் செய்யாதீர்கள்

உடலுக்குத் தேவைப்படுவது ஓய்வுதானே தவிர, தூக்கம் அல்ல. பெரும்பாலான மக்களின் அனுபவத்தில், அவர்கள் அறிந்தவரையில் தூக்கம்தான் ஓய்வெடுப்பதன் ஆழமான வடிவமாக இருப்பதால், அவர்கள் தூக்கத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் அடிப்படையில், உடல் தூக்கத்தைத் தேடுவதில்லை, அது ஓய்வாக இருப்பதை நாடுகிறது. உங்களது இரவுப்பொழுதுகள் ஓய்வு நிறைந்ததாக இல்லாத நிலையில், உங்களுடைய காலைப்பொழுதுகள் மிகவும் மோசமானதாகவே இருக்கும். ஆகவே வித்தியாசம் ஏற்படுத்துவது ஓய்வு நிலைதானே தவிர தூக்கம் அல்ல.

நாள் முழுவதும் உங்கள் உடலை நீங்கள் தளர்வு நிலையில் வைத்திருந்தால், உங்களுடைய வேலை, பயிற்சி மற்றும் ஒவ்வொரு செயல்பாடும் உங்களுக்கு இளைப்பாறலின் ஒரு வடிவமாக இருந்தால், உங்களது தூக்கத்தின் அளவு இயல்பாகவே குறைந்துபோகும். பிரச்சனை என்னவென்றால், எல்லாவற்றையும் கடினமாக - இறுக்கத்தில் – செய்வதற்கே மக்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர். பூங்காவில் மக்கள் மிகவும் இறுக்கத்துடன் நடப்பதை நான் பார்க்கிறேன். இந்த விதமான பயிற்சியானது நல்வாழ்வைவிட அதிகமான கெடுதலைக் கொண்டுவரும். எல்லாவற்றையும் ஒரு யுத்தம் நடத்துவதைப் போல் செய்யாதீர்கள். நீங்கள் நடைபயிற்சி செய்தாலும், ஜாகிங் அல்லது உடற்பயிற்சி செய்தாலும், ஏன் அதை எளிதாக, ஆனந்தமாக நீங்கள் செய்யக்கூடாது?

வாழ்க்கையோடு போரிடாதீர்கள். உங்களைக் கட்டுக்கோப்புடனும், நலமுடனும் வைத்திருப்பது ஒரு யுத்தம் அல்ல. உங்களுக்கு விருப்பமான விளையாட்டு, நீச்சல், நடைப்பயிற்சி என்று எதை வேண்டுமென்றாலும் செய்யுங்கள்.

#9 யோகப் பயிற்சிகள் – ஷாம்பவி மஹாமுத்ரா

ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற குறிப்பிட்ட யோகப் பயிற்சிகளை உங்கள் வாழ்க்கைக்குள் எடுத்துவந்தால், அதனால் ஏற்படும் முதல் மாற்றங்களுள் ஒன்றாக உங்களது நாடித்துடிப்பில் நீங்கள் பார்ப்பீர்கள். உதாரணமாக, சமீபத்தில் ஈஷா யோகா செய்து, ஷாம்பவி தொடங்கியிருக்கும் ஒரு நபர், தனது நாடித்துடிப்பை உணவுக்கு முன்பும், உணவுக்குப் பின்பும் பரிசோதித்து, பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு ஆறு வாரங்களுக்கு ஒரு நாளில் இரண்டு முறை ஷாம்பவி பயிற்சி செய்துவிட்டு, மீண்டும் அவரது நாடியைப் பரிசோதித்தால், அது எட்டிலிருந்து பதினைந்து எண்ணிக்கைகள் குறைந்திருக்கும். ஒருவர் உண்மையிலேயே ஷாம்பவியில் ஓய்வுத் தன்மைக்குள் ஆழமாக மூழ்கினால், நாடித்துடிப்பானது மேலும் அதிகமாகக் குறையும்.

12ல் இருந்து 18 மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு, ஓய்வு நிலையில் உங்களது நாடித்துடிப்பை ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபதுக்குக் கொண்டுவர முடியும். இது நிகழ்ந்தால், உங்களுடைய தூக்கத்தின் அளவு ஆச்சரியப்படும் வகையில் குறைந்துவிடும், ஏனென்றால் பொதுவாகவே நாள் முழுவதும் உடலானது ஓய்வு நிலையில் இருக்கிறது.

#10 சூன்ய தியானம்

சூன்யா என்றழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தியானத்தை நாங்கள் கற்றுத் தருகிறோம். தென்னிந்தியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ஈஷா மையங்களில் மட்டும் நடத்தப்படுகின்ற ஒரு யோகா வகுப்பில் இது கற்றுத்தரப்படுகிறது. இதை வேறெங்கும் நாம் கற்றுத்தருவது கிடையாது, ஏனென்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட சூழல், பயிற்சி மற்றும் வேறு சில செயல்முறைகள் தேவைப்படுகின்றன. சூன்ய தியானத்தால் உங்கள் தூக்கத்தின் அளவை அதிசயிக்கத்தக்கவாறு குறைக்கமுடியும். அது வெறும் பதினைந்து நிமிட தியானம்தான், ஆனால் இந்த தியான செயல்முறைக்குள் நீங்கள் முறைப்படி அமைதி அடைந்தால், உங்களது வளர்சிதை மாற்றமானது இருபத்தி நான்கு சதவிகிதம் வரை குறைவதை நீங்கள் காண்பீர்கள். இருபத்தி நான்கு சதவிகிதம் என்பது, தியானத்தின் விழிப்புணர்வான நிலைகளில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மிக ஆழமானதொரு நிலை. நீங்கள் அந்த நிலையைக் கடந்து சென்றால், சாதாரணமான உணர்வில் இருக்கமாட்டீர்கள். ஒரு குறிப்பிட்ட தளர்வு நிலைக்குச் சென்று, முழு உணர்வுடன் வெளிவர முடிந்தால், இருபத்தி நான்கு சதவிகிதத்திற்கு அதிகமாக உங்களால் போகமுடியாது.

ஓய்வு நிலையின் அடிப்படையில், இந்த பதினைந்து நிமிட தியானமானது இரண்டிலிருந்து மூன்று மணி நேர தூக்கத்திற்குச் சமமானது. குறிப்பாக உங்கள் இரத்தத்தினுடைய இரசாயன நிலையில் அந்த அளவுக்கு உடலளவிலான மாற்றங்கள் உடலில் ஏற்படும் காரணத்தால் பிரமிக்கத்தக்க விஷயங்கள் மாற்றத்திற்கு உள்ளாகும் – இந்தக் காரணத்தினால்தான், அதனை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட, தீவிரமான சூழல்களில் கற்றுத்தரவேண்டி இருக்கிறது.

ஆசிரியர் குறிப்பு: உங்கள் உள்சூழலானது, அது எவ்விதமாக நிகழவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த விதமாக நிகழவில்லையா? ஈஷா யோகா ஆன்லைன் மூலம் உங்களது உள்தன்மையை உங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள்.

IYO-Blog-Mid-Banner