தூக்கமே வரலப்பா என்று அவதிப்படுவோரும், எப்போ பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது என்று புலம்புவோரும் இன்று சற்று அதிகம். இப்படி பலரையும் பாடாய் படுத்தும் தூக்கத்தை நாம் சரியாய் புரிந்துகொண்டிருக்கிறோமா? தூக்கத்தின் பல அம்சங்களை அலசும் கட்டுரை இது. விழிப்பாய் வாசியுங்கள்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தூக்கம் என்பது உங்களுக்குத் தேவைப்படும் ஓர் ஓய்வு. அந்த ஓய்வு இன்றி உங்களால் வாழ முடியாது. உங்கள் உடலைவிட மனதுக்கு நிச்சயமாக ஓய்வு தேவைப்படுகிறது. எனவேதான் உடலளவிலும் மனதளவிலும் ஓய்வு கிடைக்கும்படியாக இயற்கை தூக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தூக்கத்திலும்கூட மனம் தொடர்ந்து செயல்படுவதை தற்போது விஞ்ஞானத்தில் கண்டறிந்து இருக்கிறார்கள். ஆனால், யோகா இதனை ஏற்கெனவே அறிந்திருக்கிறது. நாம் புலன் உறுப்புகளை மட்டுமே தூக்கத்தில் ஈடுபடுத்துகிறோம். தூக்கத்தின்போது அனைத்து இயக்கங்களும் நின்றுவிட்டதுபோலத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அப்படி இல்லை. உங்கள் இதயம் துடிக்கிறது. கல்லீரல் செயல்படுகிறது, மனம் இயங்குகிறது. இப்படிப் பல உறுப்புகள் செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், ஐம்புலன்கள் தூக்கத்தில் தள்ளப்பட்டதால் அந்த இயக்கங்களை உங்களால் உணர முடியவில்லை.

தூக்கத்தில் அடையாளங்கள் மறைகின்றன:

ஏதோ ஒரு நாள், ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ, அது எவ்வளவு நேரம் என்பது முக்கியம் அல்ல. மிக ஆழமாகத் தூங்கும்போது உங்கள் எல்லா அடையாளங்களும் மறைந்துபோகின்றன. தூக்கத்தில் கனவு ஏற்படும்போதும்கூட உங்கள் அடையாளம் வெளிப்படுகிறது. நீங்கள் கனவையும் தாண்டி ஆழமான தூக்கத்துக்குச் செல்லும்போது நீங்கள் ஒன்றுமில்லாத்தன்மைக்குச் சென்றுவிடுகிறீர்கள்.

உங்கள் உடலும் மனமும் எப்போதும் விழித்திருப்பதற்கே ஏங்க வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் வைத்திருக்க வேண்டும்.

மறுநாள் காலை எழும்போது அது அற்புதமான உணர்வாக இருக்கும். முழுமையான விடுதலையுணர்வும் புத்துணர்ச்சியும் இருக்கும். ஆனால், இந்த அடையாளமற்ற நிலை முழுமையான விழிப்பு உணர்வற்ற நிலையில் நிகழ்கிறது. அதே நிலையை விழிப்பு உணர்வோடு அடையும்போது அது தியானமாக இருக்கிறது.

தூங்குவதற்கானச் சரியான நேரம்:

எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று அதிகளவில் பேசப்பட்டு வருவதை நான் அறிவேன். உடலுக்குத் தேவையானது தூக்கம் அல்ல. உடலுக்குத் தேவை ஓய்வும் தளர்வு நிலையும்தான். நாள் முழுவதும் உடலைத் தளர்வாக வைத்திருந்தால், இரவில் உங்களின் தூக்கம்கூட இயல்பாகவே குறைந்துவிடும். அதிக ஓய்வான வேலை, ஓய்வான நடை, தளர்வான உடற்பயிற்சி போன்றவையுடன் நீங்கள் இருக்கும்போது, உங்கள் தூக்க நேரம் தானாகவே குறைந்திருக்கும். தற்போது மனிதர்கள் ஒவ்வொன்றையும் கடுமையாகவே செய்ய விரும்புகின்றனர். ஏதோ போருக்குச் செல்வதைப் போல உடற்பயிற்சிகள் செய்கிறீர்கள். இது உங்களுக்கு நன்மையைவிட கெடுதலே அதிகம் செய்யும். நடப்பது, ஓடுவதுபோன்ற உடற்பயிற்சிகளை நீங்கள் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செய்யலாமே!

எவ்வளவு தூக்கம் தேவை?

அப்படியானால், என் உடலுக்கு எவ்வளவு தூக்கம் தேவை? அது நீங்கள் எவ்வளவு உடல் உழைப்பு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எவ்வளவு தூங்க வேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயிக்கத் தேவை இல்லை. இவ்வளவு கலோரி உணவு உண்ண வேண்டுமென்றோ, இத்தனை மணி நேரம் தூங்க வேண்டுமென்றோ நிர்ணயம் செய்துகொண்டு வாழ்வது வாழ்க்கையை முட்டாள்தனமாக வாழ்வதாகும். இன்று எவ்வளவு சாப்பிடலாம் எவ்வளவு நேரம் தூங்கலாம் என்பதை உங்கள் உடல் நிர்ணயம் செய்யட்டும். இன்று உங்களுடைய செயல் குறைவாக இருந்தால், குறைவாக உண்ணுங்கள். நாளை அதிகம் செயல் இருக்கும்போது, அதிகம் உண்ணுங்கள். அதேநிலைதான் தூக்கத்துக்கும் தேவையான ஓய்வு உடலுக்குக் கிடைத்துவிட்டது என்றால், தூக்கத்தில் இருந்து நீங்கள் தானாகவே வெளிவர வேண்டும். அது காலை மூன்று மணியாக இருந்தாலும் சரி, அல்லது காலை எட்டு மணியாக இருந்தாலும் சரி. போதுமான அளவுக்கு ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அறிந்தால் உடல் தானாகவே தூக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும். நீங்கள் அந்த அளவுக்கு உடலை வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் படுக்கையைக் கல்லறையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இருந்தால், உடல் தூக்கத்தில் இருந்து வெளிவருவதற்கு விரும்பாது. உங்கள் உடலும் மனமும் எப்போதும் விழித்திருப்பதற்கே ஏங்க வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் வைத்திருக்க வேண்டும். வாழ்க்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கக் கூடாது. இவை எல்லாமே நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்திச் செல்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. ஏதோ ஒரு துக்கத்தில் இருக்கிறீர்கள். அப்போது வாழ்க்கையைத் தவிர்க்க நினைக்கிறீர்கள். அப்போது தூக்கம்தான் சரியான வழியாக உங்களுக்குத் தெரிகிறது. அந்த நிலையில் நீங்கள் இயல்பாகவே அதிகம் உண்பீர்கள். அதிகம் தூங்குவீர்கள்.

சாப்பிட்டவுடன் தூங்காதீர்கள்:

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம்(metabolic activities) அதிகம் இருக்க வேண்டும். ஆனால், தூங்கச் செல்லும்போது வளர்சிதை மாற்றம் குறைந்துவிடுகிறது. எனவே, சாப்பிட்டவுடன் தூங்கச் சென்றால், குறைந்த வளர்சிதை மாற்றம் காரணமாகச் சாப்பிட்ட உணவில் அதிகப் பகுதி வீணாகக் கழிவாகச் சென்றுவிடுகிறது. சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குள் நீங்கள் தூங்கச் சென்றால், சுமார் 80 சதவிகித உணவாவது செரிமானமாகாமல் கழிவாகச் சென்றுவிடும். சாப்பிட்ட பிறகு தேவையான நேரம் இடைவெளி எடுத்த பிறகே தூங்கச் செல்ல வேண்டும். சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கினால் உடலுக்கு என்ன செய்வதென்று தெரியாது. ஒன்று உங்களைத் தூங்கவிடாது அல்லது சாப்பிட்ட உணவு ஜீரணமாகாது. ஆனால் பலர் சாப்பிட்டவுடன் தூங்கச் செல்கின்றனர். நன்றாகச் சாப்பிட்டு உடலை மந்தப்படுத்தினால்தான் தூக்கம் வரும் என்ற நிலையில்தான் நீங்களும் தற்போது இருக்கிறீர்கள் என்றால், அதை என்னவென்று பார்ப்பது மிக அவசியம். நிச்சயமாக அது தூக்கத்தைப்பற்றியது அல்ல. அது ஒரு வகையான மனநிலை.

எனவே, எவ்வளவு தூக்கம் தேவை? உணவும் தூக்கமும் உங்கள் உடல் நிர்ணயிக்கட்டும். எவ்வளவு சாப்பிட்டால் உங்கள் உடல் வசதியாக உணர்கிறதோ, எவ்வளவு தூங்கினால் உங்கள் உடல் வசதியாக உணர்கிறதோ, அப்படித்தான் செய்ய வேண்டும். ஏனெனில், இவை உடலைச் சார்ந்தவை.