கேள்வி:

சிலருக்கு நிலக்கடலை சாப்பிடுவதால் கூட ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிறது. சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சில உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுகிறது. மனித உடலமைப்பு ஏன் உணவு பொருட்களுக்கே ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது, இதை சரிசெய்வதற்கு யோகா உதவுமா?

சத்குரு:

நாம் இன்று வாழும் வாழ்க்கை முறை தான் ஒவ்வாமை ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகிறது. மனித உடலமைப்பு பல்வேறு வழிகளிலும் சீர்குலைக்கப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவால் ஏற்படும் ஒவ்வாமை

அடிப்படை தவறு எங்கு இருக்கிறது என்றால், இன்று தொழிற்சாலையில் உணவு தயாரிக்கப்படுகிறது. உணவு மண்ணில் இருந்து வரவேண்டும், ஏனென்றால் நம் உடலே மண் தான். முடிந்த அளவிற்கு உங்கள் உடல் பூமியுடன் ஒத்திசைவாக இருக்க வேண்டும். அதை தவிர, பெரும்பாலும் அசைவம் உண்பவர்களிடம் உணவு ஒவ்வாமை ஏற்படுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக பெரிய அளவுகளில் தயாராகும் அசைவ உணவை நீங்கள் சாப்பிடும்போது, நீங்கள் ஒரேயொரு விலங்கின் மாமிசத்தை மட்டும் சாப்பிடுவதில்லை - நீங்கள் பலவிதமான விலங்குகளின் பலவிதமான பாகங்கள் சேர்ந்த கலவையை சாப்பிடுகிறீர்கள். அந்த விதமான உணவை சாப்பிட்டு நீங்கள் ஆரோக்கியமாக வாழமுடியாது. அதிலிருக்கும் புரதசத்து, மற்றும் பிற சத்துக்களை யாரோ ஒருவர் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் வரை, மக்கள் அதை தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். குப்பையில் கூட புரதத்தையும் மற்ற ஊட்டச்சத்துக்களையும் உங்களால் பார்க்க முடியும், ஆனால் அது சாப்பிடக்கூடிய பொருள் இல்லையே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மக்களுக்கு நிலக்கடலையால் கூட ஒவ்வாமை ஏற்படுகிறது. ஒரு சின்னஞ்சிறு நிலக்கடலை, நீங்கள் சரியாக வாழவில்லை என்பதை உங்களுக்கு சொல்கிறது. இந்த செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் குழந்தையாக இருக்கும்போது, ஒரே ஒரு பசுவின் பாலை தான் எனக்கு கொடுப்பார்கள். இன்று நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பால், ஆயிரக்கணக்கான பசுக்களிடமிருந்து பெறப்பட்டவை - எல்லாம் ஒன்றாக கலந்து பதப்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில், மக்கள் அதிக அளவில் விலங்குகளின் ஹார்மோன்களை, மொத்தமாக தயாரிக்கப்படும் பால், பண்ணை பொருட்கள், ரெட் மீட் என்று அழைக்கப்படும் சிவப்பு இறைச்சி போன்றவைகளை சாப்பிடுகிறார்கள். நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதற்காகவும், சுவைக்காகவும், எல்லா வகையான சேர்க்கை பொருட்களும் எல்லாவற்றிலும் சேர்க்கப்படுகின்றன.

உங்கள் உடல் ஒரு உயிருள்ள பொருள் - இந்த பூமியின் இயற்கையான தன்மையை உள்வாங்கி, அதை தன்னுடைய பாகமாக மாற்றிக்கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் செயற்கை ஊட்டச்சத்துக்களை மட்டும் கொடுத்துவிட்டு, அவை மனித உடலுக்குள் சென்று மனிதனில் ஒரு பாகமாக மாறும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. உடலில் குறிப்பிட்ட அளவு அமினோ அமிலங்கள், புரதங்கள் போன்ற பொருட்கள் இருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு டெஸ்ட் டியூபில் போடுவதால் மட்டும் உங்களால் ஒரு மனிதனை உருவாக்கிவிட முடியாது. அது அப்படி வேலையும் செய்யாது. இப்படிப்பட்ட அனைத்தையும் உயிரின் மற்றொரு பரிமாணம் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. அதன் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்றால், நீங்கள் துன்பப்பட நேரிடும்.

பலவிதமான உணவை கலந்து உண்ணாதீர்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக, குறிப்பாக அமெரிக்காவில் எல்லா பக்கமும் உணவு மிக அதிக அளவில் கிடைக்கிறது. இப்படி அதிக அளவில் உணவு இருப்பதால், உணவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும், கவனத்தையும் நீங்கள் கொடுப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த பழக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வசதியான இடங்களில், தட்டில் பல வகையான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கும், மக்களும் ஒன்றுடன் இன்னொன்றை கலந்து சாப்பிடுகிறார்கள். எங்கள் சிறு வயதில், இரண்டு உணவை கலந்து சாப்பிட்டால், பெற்றோரும், தாத்தா பாட்டியும் “நீ பிச்சைக்காரனை போல சாப்பிடுகிறாய்” என்பார்கள், ஏனென்றால் பிச்சை எடுப்பவர் தான், தன் பிச்சை பாத்திரத்தில் சேகரித்த எல்லா விதமான உணவையும் ஒன்றாக கலந்து சாப்பிடுவார்.

நம் வயிறு ஒவ்வொரு உணவுப்பொருளையும் ஒவ்வொரு விதமாக கையாள்வதால், நாம் ஒவ்வொரு உணவுப்பொருளையும் தனித்தனியாக சாப்பிட வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் கலந்து சாப்பிடும்போது, உங்கள் உடல் குழப்பம் அடைகிறது, இதன் விளைவாக நாளடைவில் ஒவ்வாமை உருவாகிறது. நான் தனியாக சாப்பிட நேர்ந்தால், ஒரே ஒரு உணவு வகையை மட்டும்தான் எடுத்துக்கொள்வேன். நான் உண்ணும் உணவு என் உடலில் எப்படி நடந்து கொள்கிறது, நாக்கு மட்டுமல்லாமல், என் முழு உடலும் அந்த உணவை எப்படி வரவேற்று மகிழ்ச்சி அடைகிறது என்ற விழிப்புணர்வு எனக்கு இருப்பதால் நான் இப்படி சாப்பிடுகிறேன். இதனால் நான் சிக்கனமாக, கட்டுப்பாடுடன் இருக்கிறேன் என்று அர்த்தமில்லை - இது விழிப்புணர்வாக இருப்பதை பற்றியது. விழிப்புணர்வு இல்லாமல் நாம் நலமுடன் வாழமுடியாது.

அதிகரித்து வரும் ஒவ்வாமை

துரதிர்ஷ்டவசமாக, இன்னும் இரண்டு தலைமுறைகளில், இப்போது மக்கள் சாப்பிடும் உணவுகளில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை அலர்ஜியாக மாறக்கூடும். சிலருக்கு மழைநீரும், சூரிய ஒளியும் கூட அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் எங்கு வாழமுடியும்? ஒருவேளை நீங்கள் சுவாசிக்கும் காற்று கூட உங்களுக்கு அலர்ஜியாக மாறினால் என்ன செய்வது? இதை கேட்பதற்கு இப்போது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நீராலும் சூரிய ஒளியாலுமே ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றினால் ஒவ்வாமை ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

ஒரு டாக்டரிடம் சென்று உங்களுக்கு என்ன வகையான ஒவ்வாமை இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்ப்பதால் மட்டும் தீர்வு வராது. இதற்கு நீங்கள் இன்னும் அடிப்படையில் இருந்து கவனம் கொடுக்க வேண்டும். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளின் மீதான ஒவ்வாமை மட்டுமல்ல. அடிப்படையில், உங்கள் உடல், உயிரின் மூலக்கூறுகளுக்கு எதிர்வினையாக செயல்படுகிறது.

வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒவ்வாமை

நீங்கள் உணவை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். அமெரிக்க நகரங்களில், வெற்றிகரமான உயர் அதிகாரிகள் சாலையோரம் நின்று கொண்டு, அங்கு விற்கும் உணவை ஏதோ ஒரு கடமைக்கு அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். இது உணவு உண்ணும் முறையல்ல. அவர்களை பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது - அவர்கள் முகத்தில் அந்த உணவை ரசித்து உண்ணும் மகிழ்ச்சியின் சுவடே இருப்பதில்லை. உங்களுக்கு உணவு உண்ண அரை மணிக்கும் குறைவான நேரமே இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்கு ஓடி, நிறைய சம்பாதிக்க வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால், நீங்கள் எப்படி துன்பப்படாமல் இருக்க முடியும்?

இன்று குழந்தைகளுக்கு பால் கூட ஒவ்வாமையை உண்டுபண்ணுகிறது. முந்தைய தலைமுறைகளில், ஒரு கிராமத்திலோ அல்லது பழங்குடி சமூகத்திலோ எந்த குழந்தைக்குமே பால் ஒவ்வாமை ஏற்பட்டதில்லை. மக்களுக்கு நிலக்கடலையால் கூட ஒவ்வாமை ஏற்படுகிறது. ஒரு சின்னஞ்சிறு நிலக்கடலை, நீங்கள் சரியாக வாழவில்லை என்பதை உங்களுக்கு சொல்கிறது. இந்த செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நிலக்கடலையால் ஏற்படும் ஒவ்வாமை உயிரையே எடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒருமுறை நான் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்தபோது அதில், "இன்று விமான பயணத்தில் யாருக்கும் நிலக்கடலை கொடுக்கப் போவதில்லை, ஏனென்றால் இந்த விமானத்தில் ஒருவருக்கு நிலக்கடலை ஒவ்வாமை இருக்கிறது" என்று அறிவித்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, 'அவருக்கு ஒவ்வாமை என்றால் நான் ஏன் நிலக்கடலை சாப்பிடக்கூடாது?' ஆனால், நீங்கள் நிலக்கடலை பாக்கெட்டை திறந்தால் கூட, அந்த வாசனையே அவருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்கள்.

முந்தைய தலைமுறையினருக்கு ஊட்டச்சத்து தரும் ஒன்றாக இருந்த நிலக்கடலை, இன்று இவ்வளவு பரவலாக அலர்ஜியை ஏற்படுத்துவதாக மாறியிருக்கிறது - இது நாம் எங்கே தவறு செய்கிறோம், ஏன் இதுபோன்ற ஒவ்வாமை ஏற்படுகிறது, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வைக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வாமை - உடல் தரும் எச்சரிக்கை மணி

மற்றொரு முக்கிய காரணம், நீங்கள் வாழும் சூழல். நீங்கள் தொடர்ந்து நச்சுக்காற்றை சுவாசித்து, தீங்கு விளைவிக்கும் உணவை உண்டால், உங்கள் உடல் எதிர்வினையாற்றும். ஒவ்வாமை என்பது உங்கள் உடல் செய்யும் எதிர்வினை தான். ஏனெனில், உங்கள் உடலை ஒரு உயிராக மதிக்காமல், ஒரு இயந்திரம் போல நீங்கள் நடத்துகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட பொருளால் ஏற்படும் ஒவ்வாமை பற்றி மட்டுமல்ல இது. உடலின் அடிப்படை கட்டமைப்பிலேயே ஏதோ தவறு இருப்பதால், உங்கள் உடல் ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அப்படி இருந்தால், அந்த ஒரு பொருளை மட்டும் நீங்கள் தவிர்த்துவிடலாம். ஆனால் இன்று, ஒவ்வாமை என்பது தொற்றுநோய் போல பரவி வருகிறது. அடிப்படையாக, நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு நம் உடல் செய்யும் எதிர்வினை தான் ஒவ்வாமை.

ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது என்றால், நாம் ஏதோ அடிப்படையான தவறை செய்கிறோம் என்று அர்த்தம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களின் ஆரோக்கியத்தை சீரழித்து வருகின்றன, ஆனால் அது ஒரு மிகப்பெரிய வணிகமாக வளர்ந்து நிற்கிறது.

ஒவ்வாமையை சரிசெய்ய யோகா எப்படி உதவும்?

யோகப் பயிற்சிகளின் மூலம் நிச்சயமாக இந்த நிலையை மாற்றியமைக்க முடியும். குறிப்பாக காற்றில் கலந்துள்ள பூக்களின் மகரந்தங்களால் ஏற்படும் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சக்தி சலன கிரியா, ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் அந்த ஒவ்வாமையிலிருந்து முழுமையாக வெளிவந்துள்ளனர்.

உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு உணவு ஒவ்வாமை இருந்து, அதை சரிசெய்துகொள்ள அவர்கள் விரும்பினால், நீங்கள் இந்த எளிய செயலை செய்யலாம். கொஞ்சம் விபூதியை அவர்களிடம் கொடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை விபூதியை கலந்து, தினமும் ஐந்து லிட்டர் விபூதி நீரை பருகி வர சொல்லுங்கள். சில மாதங்களிலேயே உடல் தன்னைத்தானே சுத்தமாக்கிக்கொள்ளும், அலர்ஜிகளும் குறையும். இத்துடன் சில யோகப் பயிற்சிகளையும் சேர்த்து செய்து வந்தால், ஒவ்வாமை நிச்சயமாக மறைந்துவிடும். ஒவ்வாமையை சரிசெய்ய தேவையானது இது ஒன்றுதான் - உடலை சுத்தப்படுத்துவது.