சத்குரு: நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்கள் உடல், உங்கள் மனம் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த இயக்கமும் எப்படி செயல்படுகிறது என்பதை நிர்ணயிப்பது அனைத்திற்கும் மூலமாக இருக்கும் உங்கள் சக்தி. இதை நாம் பிராணா அல்லது பிராணசக்தி என்போம். பிராணா என்பது புத்திசாலித்தனமுள்ள ஒரு சக்தி. பிராணாவில், ஒரு தனிமனிதனின் கர்மவினைகளின் பதிவுகளும் பதிந்திருப்பதால், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இது தனித்தன்மையுடன் செயல்படுகிறது. இதுவே, மின்சார சக்தியை எடுத்துக்கொண்டோமானால், அதில் எந்த புத்திசாலித்தனமோ, ஞாபக பதிவோ இல்லை. ஒரு மின் விளக்கையோ, புகைப்பட கருவியையோ அல்லது இந்த உலகில் உள்ள கோடிக்கணக்கான கருவிகளில் எதை வேண்டுமானாலும் அதே மின்சார சக்தியை பயன்படுத்தி இயக்கலாம். மின்சாரத்தில் இருக்கும் புத்திசாலித்தனத்தால் அவை இயங்குவதில்லை, சக்தியை பெறும் அந்த குறிப்பிட்ட கருவி எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதை பொருத்து இயங்குகிறது. வருங்காலத்தில் புத்திசாலித்தனமுள்ள மின்சாரம் கூட கண்டுபிடிக்கப்பட்டுவிடலாம். மின்சக்தியின் மீது ஒரு குறிப்பிட்ட ஞாபகத்தை உங்களால் பதிக்க முடிந்தால், அந்த ஞாபகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட தன்மையில் செயல்படும்படி மின்சக்தியையே நீங்கள் இயக்க முடியும்.

பிராணாவில், ஒரு தனிமனிதனின் கர்மவினைகளின் பதிவுகளும் பதிந்திருப்பதால், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இது தனித்தன்மையுடன் செயல்படுகிறது.

 

பஞ்ச வாயுக்கள்

பிராண சக்தியானது இந்த உடலில் அடிப்படையாக ஐந்து விதமான தன்மைகளில் செயல்படுகிறது. இந்த பஞ்ச வாயுக்களான - பிராண வாயு, சமான வாயு, உதான வாயு, அபான வாயு மற்றும் வியான வாயு - மனித உடலின் வெவ்வேறு இயக்கங்களை செயல்படுத்துகிறது. சக்தி சலன கிரியா போன்ற யோக பயிற்சிகளின் மூலம் இந்த பஞ்ச வாயுக்களையும் நீங்கள் உங்கள் பொறுப்பில் எடுத்துவர முடியும். இந்த ஐந்து வாயுக்கள் மீதும் நீங்கள் ஆளுமை பெறும்போது, கிட்டத்தட்ட அனைத்து விதமான நோய்களில் இருந்தும், குறிப்பாக மனநிலை சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட முடியும். இன்று உலகின் தேவையும் இதுவாகவே இருக்கிறது.

இப்போது நாம் உடனடியாக செயல்படாவிட்டால், அடுத்த ஐம்பது ஆண்டுகளில், நமது வாழும் முறை காரணமாக மனதில் சமநிலையற்ற தன்மை, மன சஞ்சலங்கள் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை கொண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இப்போதைவிட பலமடங்கு அதிகரித்துவிடும். நம் வாழ்வில் பல அம்சங்களையும் பெரும்பாலும் அலட்சியமாகவே கையாள்கிறோம், இதற்கான விலையை கொடுக்கவும் போகிறோம். உங்கள் பிராண சக்தியை உங்கள் ஆளுமையில் எடுத்து வரும்போது, வெளி சூழ்நிலை எப்படி இருந்தாலும், நீங்கள் மனதில் சமநிலையுடன் இருப்பீர்கள். மருத்துவரீதியாக முத்திரைக் குத்தாத, மனதில் சமநிலை இல்லாத மக்களின் எண்ணிக்கையே அதிகம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிராணா, சமநிலை மற்றும் ஆரோக்கியம்

இப்போது உங்கள் கை தன் விருப்பத்திற்கு ஏதோ செய்து கொண்டு, உங்கள் கண்ணில் குத்துகிறது, உங்களை கீறி விடுகிறது, உங்களுக்கு அடியும் கொடுக்கிறது என்றால், அது நோய்தானே? இதையேதான் பெரும்பாலான மக்களின் மனமும் செய்கிறது. தினமும் உள்ளே இருந்தவாறே அவர்களை அழ வைக்கிறது, புலம்ப வைக்கிறது, கவலைப்பட வைக்கிறது - பல வழிகளிலும் அவர்களுக்கு வேதனையை உருவாக்குகிறது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இது இருந்தாலும், இது நோய்தான். அனுதினமும் மனிதர்கள் அனுபவிக்கும் வேதனைகள் உருவாவது அவரவர் மனதில்தான். இந்த நோய் பரவலாக காணப்படுகிறது. மேலும் சமூக அமைப்பு, நம்மை சுற்றிலும் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் பல காரணிகளால் இது அதிகமாகிக்கொண்டே போகும்.

சக்தி சலன கிரியா போன்ற யோக பயிற்சிகளின் மூலம் இந்த பஞ்ச வாயுக்களையும் நீங்கள் உங்கள் பொறுப்பில் எடுத்துவர முடியும்.

தன் பிராண சக்தியை தன் ஆளுமையில் எடுத்து வரும் ஒருவர், அசைவற்ற மன சமநிலையை அடைவது நூறு சதவீதம் உறுதி. இதனால் உடல் ரீதியான நோய்கள் ஏற்படுவதை பெருமளவு தடுக்க முடியும். இருந்தாலும், தொற்றுநோய்கள் மற்றும் நாம் தினமும் பலவகைகளிலும் சந்திக்க வேண்டியிருக்கிற இரசாயனங்கள் மற்றும் விஷத்தன்மை குறித்த கவனம் நமக்கு தேவைதான். நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், காற்று, நீர் மற்றும் உணவு மூலமாக நாம் என்ன எடுத்துக் கொள்கிறோம் என்பது முழுமையாக நமது கட்டுப்பாட்டில் இல்லை. இது எந்த அளவுக்கு நம்மீது தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது தனிப்பட்ட மனிதரை பொறுத்து மாறுபடுகிறது.

உடல் ஆரோக்கியம் என்பது வெளி சூழ்நிலையை சார்ந்து இருப்பதால் அதற்கு 100 சதவீத உத்திரவாதம் வழங்க‌ முடியாது. ஆனால் உங்கள் பிராண சக்தியை உங்கள் ஆளுமையில் கொண்டு வருவதன் மூலம் உங்கள் மனநலத்திற்கு நூறு சதவீதம் உத்திரவாதம் இருக்கிறது. உங்கள் மனதளவில் நீங்கள் மிக ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது ஒருசில உடல் ரீதியான தொந்தரவுகள் பெரிய பிரச்சனையாக தெரியாது. பெரும்பாலான நேரங்களில், உடலில் ஏற்படும் சிறு அசௌகரியங்களைவிட, இதனால் உங்கள் மனதில் ஏற்படும் பாதிப்புதானே அதிகமாக இருக்கிறது. உங்களுக்குள் பிராணா எப்படி செயல்படுகிறது, இந்த பிரபஞ்சத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறது, புதிதாக பிறந்த உயிரில் எப்படி நுழைகிறது, இறந்த உடலை விட்டு எப்படி விலகுகிறது என எல்லாமே பிராண சக்திக்கென தனித்த ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

சக்தி சலன கிரியா - உங்கள் பிராணசக்தியுடன் ஒரு செயல்

இந்த ஐந்துவித பிராணாவும் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட விதமான கவனமும், விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. சக்தி சலன கிரியா ஒரு அபாரமான செயல்முறையாக இருந்தாலும், நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது இருக்கிறது. ஒரு நாற்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை நீங்கள் இதில் மனம் குவித்து ஈடுபட‌ வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, அவர்களின் ஒரு முழு உள்மூச்சை எடுப்பதற்குள் கவனம் வேறு எங்கெங்கோ சென்றுவிடுகிறது. பாதியிலேயே அவர்களின் எண்ணங்கள் வேறு எங்கோ சென்றுவிடுகிறது அல்லது எண்ணிக்கையை மறந்து விடுகிறார்கள் அல்லது அடுத்த சுற்று என்ன என்பதை மறந்துவிடுகிறார்கள். குறிப்புகளை பின்பற்றி பயிற்சியின் முழு சுற்றுக்களையும் பல மாதங்கள், வருடங்கள் என நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யும்போதுதான் உங்கள் சுவாசத்தின் மீதும் கவனத்துடன் பயிற்சி செய்யும் நிலைக்கு வருகிறீர்கள்.

எனவேதான் நாம் எப்போதுமே சக்தி சலன கிரியாவை ஷூன்ய தியானத்துடன் சேர்த்து கற்றுத்தருகிறோம். நீங்கள் கண்களை மூடினால், உங்கள் அனுபவத்திலிருந்து இந்த உலகம் விலகிவிடும் என்ற நிலைக்கு உங்களை எடுத்து வருவதே ஷூன்ய தியானம். இந்த அருள் உங்கள் அனைவருக்கும் வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் கிடைக்கவேண்டும். உங்களை நீங்கள் இந்த நிலைக்கு கொண்டுவரும் போதுதான் நீங்கள் இயல்பாகவே எதன் மீதும் தொடர்ந்து கவனத்துடன் இருக்க முடியும். வலுக்கட்டாயமாக செலுத்தப்படும் கவனத்தால் எதையும் சாதிக்க முடியாது.

நீங்கள் உங்கள் கண்ணிமைகளை மூடினால், உங்கள் சுவாசம், உங்கள் இதயத் துடிப்பு, உங்கள் உடலில் நடக்கும் இயக்கங்கள், உங்கள் பிராண சக்தியின் செயல்பாடு இவை மட்டுமே உங்கள் அனுபவத்தில் இருக்க வேண்டும். உங்களுக்குள் என்ன நடக்கிறதோ அது மட்டுமே உயிர்த்தன்மை, வெளியில் நடப்பது என்பது வெறும் பிம்பங்கள். வெளியில் நடமாடும் மற்ற மக்களை நீங்கள் பார்த்தாலும் கூட, நீங்கள் அவர்களை வெளியே பார்ப்பதில்லை, உங்கள் (மூளையில் உள்ள) திரையில் எப்படி பிரதிபலிக்கிறதோ அப்படியே பார்க்கிறீர்கள்.

தொடர்ந்த கவனமே முக்கியம்

ஷூன்யா மற்றும் மற்ற சாதனாக்களை இந்த நோக்கத்திற்காகவே செய்கிறோம். நீங்கள் அதில் எவ்வளவு தூரம், அதுவும் இன்றைய உலகில், செல்கிறீர்கள் என்பது வேறு விஷயம். உயிர்த்தன்மையை பொறுத்தவரை, நம்மை சுற்றிலும் உள்ள உயிர்கள் இப்படி இருப்பதற்கு நான் எதிராக இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக, தடுமாற்றம் நாகரீகமானதாகவும், ஆழமான தன்மையானது காணாமலும் போய்விட்டது. இப்படிப்பட்ட அணுகுமுறை இருந்தால், உங்களுக்குள் உயிர் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளவே வழியில்லாமல் போய்விடும். அப்படியானால் இது எல்லா மனிதர்களாலும் முடியாத ஒன்றா? - நிச்சயமாக இது அனைவருக்குமே சாத்தியமான ஒன்றுதான். ஆனால், நீங்கள் இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. அனைத்திலும் முதன்மையானதாக, முக்கியமானதாக இதை நீங்கள் அமைத்துக்கொண்டால், உங்களுக்குள் எல்லாமே இந்த நோக்கத்திற்காக தம்மைத்தாமே சீரமைத்துக்கொள்ளும்.

உங்கள் கவனம் பல திசைகளிலும் இருந்தால், நீங்கள் எல்லா பக்கமும் நகர்ந்திருந்தாலும், வாழ்வின் அடிப்படையான நிலையில் பார்க்கும்போது, நீங்கள் எங்கும் சென்றிருக்க முடியாது. சமூக சூழலை பார்த்தோமானால், எந்த இடத்தை வேண்டுமானாலும் நீங்கள் அடையக்கூடியவராக இருக்கலாம். உங்கள் மனதை பார்த்தோமானால், அது எதையாவது பற்றிக்கொண்டு அதையே வட்டமிட்டுக்கொண்டே‌ இருக்கும் தன்மையுடையது. உடலளவில் பார்த்தோமானால் அது நேராக கல்லறையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது - நீங்கள் வேண்டுமானால் பயணதூரத்தை கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வின் அடிப்படையான இயல்பின் மீது கவனம் செலுத்தும்போது மட்டுமே நீங்கள் உண்மையில் எதையும் அடைய முடியும். உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மை மட்டுமே நிஜத்தில் உண்மையானது - மற்ற அனைத்தும் பிம்பங்களே. ஆனால் இப்போது பெரும்பான்மையான கவனம் பிம்பத்தின் மீதே இருக்கிறது, உண்மையின் மீது இல்லை.

தொடர்ந்து சக்தி சலன கிரியா பயிற்சி செய்வதன் மூலம் படிப்படியாக மாற்றம் நிகழ துவங்குகிறது. உங்கள் பிராணா மற்றும் உங்கள் உடலளவில் அதன் பலவித செயல்களையும் உங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்வது என்பது ஒரு அற்புதமான செயல்முறை. சக்தி சலன கிரியா இந்த நிலையில் செயல்படக் கூடியது. இதை பயிற்சி செய்யும்போது, உங்கள் உடல் இயக்கத்தின் அஸ்திவாரத்தையே நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.

சாம்பவி - பிராணாவை கடந்து

படைத்தல் செயலுக்கு மூலமாக இருக்கும் அந்த பரிமாணத்தை நீங்கள் தொடுவதற்கான வாய்ப்பு சாம்பவி மஹாமுத்ராவில் இருக்கிறது. ஆனால் அதை நீங்களாக முயன்று நடத்திக்கொள்ள முடியாது. அது நிகழ ஏற்ற சூழலை மட்டுமே நீங்கள் உருவாக்க முடியும். நாம் எப்போதுமே சாம்பவியை "அவள்" என்றே குறிப்பிடுகிறோம்‌. சாம்பவி அவளை அளிப்பதற்கு நீங்கள் பக்தி உணர்வோடு இருக்க வேண்டும். படைப்பின் மூலத்துடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும் - அதனுடன் நீங்கள் செய்வதற்கு என்று எதுவுமில்லை. சாம்பவி மஹாமுத்ராவில் பிராணாயாமத்தின் அம்சமும் சேர்ந்து இருப்பதால், அது பல நன்மைகளையும் கொண்டு வருகிறது.

சாம்பவி கிரியாவின் முக்கியமான அம்சமே, அது பிராணசக்தியை கடந்து, படைத்தலுக்கு மூலமானதாக இருப்பதை தொடுவதற்கான ஒரு கருவியாக இருக்கிறது என்பதுதான். இது முதல் நாளிலேயே நிகழலாம் அல்லது நீங்கள் ஆறு மாதங்கள் பயிற்சி செய்தும் எதுவும் நிகழாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் சாம்பவியை தொடர்ந்து செய்துவர, இந்த பரிமாணத்தை தொடும் நாளும் வரும். அதை நீங்கள் தொடும்போது சட்டென உங்களுக்குள் எல்லாமே மாறிவிடும்.

ஆசிரியர் குறிப்பு: உங்களுக்கு அருகாமையில் நடைபெறும் ஈஷா யோகா வகுப்பில், ஷாம்பவி மஹா முத்ர கிரியா கற்றுக்கொள்ளலாம். அல்லது, சக்தி சலன கிரியா மற்றும் சூன்ய தியானம் போன்ற ஈஷா யோக மையத்தில் நடைபெறும் உயர்நிலை வகுப்புகள் பற்றிய விவரங்கள் அறிய: http://ishayoga.org/Schedule/Yoga-Programs