சத்குருவிடம் கேட்கப்படும் கேள்விகள் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையாக மட்டும் இல்லாமல், பல தளங்களிலும் இருக்கும். அப்படி விளையாட்டு, கிரிக்கெட், ஐபில் போன்றவற்றைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கான சத்குருவின் பதில்கள் இங்கே...

Question: இளைஞர்களின் நேரத்தையும் கவனத்தையும் விளையாட்டு சிதறடித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

விளையாட்டை பழிக்காதீர்கள். மக்களுக்கு விளையாட்டு கொடுக்கும் சந்தோஷமும், ஈடுபாடும் அளப்பரியது. அது ஒரு மனிதனை சிலிர்ப்படையச் செய்து அவனை எல்லா விஷயத்திலும் முழு மனதுடன் ஈடுபடச் செய்கிறது. அதனால் மக்களுக்கு அந்த வாய்ப்பை நாம் தடை செய்ய வேண்டாம். அவர்களுக்கு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து பரவசத்தில் இருக்கத் தெரியுமா என்ன? தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தோனி சிக்ஸர் அடிப்பதை பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமே. ரசித்து விட்டு போகட்டுமே!

Question: நீங்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறீர்களா?

சத்குரு:

நான் சிறு வயதில் அதிகம் விளையாடிய விளையாட்டு ஹாக்கி. மிக நேர்த்தியான, அழகான ஒரு விளையாட்டு. துரதிர்ஷ்டவசமாக இன்று அது பின்பக்கத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. எப்படி கிரிக்கெட்டில் ஐபிஎல் நடக்கிறதோ அதுபோல் ஹாக்கி விளையாட்டிற்கும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் விளையாடாமல் நீங்கள் இந்தியாவில் இருக்க முடியுமா என்ன? கண்டிப்பாக நானும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் கூட ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற டோர்னமன்டிலும் பங்கு கொண்டேன்.

Question: ஐபில் கிரிக்கெட் போட்டிகள் எவ்வாறு உள்ளன?

சத்குரு:

ஓ! அதிகப்படியான ரன் எடுக்க வேண்டும் என்னும் தேவையிருப்பதால் கிரிக்கெட்டின் சில நுட்பங்களும் சூட்சுமங்களும் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அதேசமயம் இதுபோன்ற போட்டியில் பங்கேற்பதற்கு வேறுவகையான திறன் தேவைப்படுகிறது. ஒருவர் எந்நேரமும் தன் முழுத் திறனுடன் இயங்க வேண்டி இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இது ஒரு விளையாட்டுதான், அதனால் அதனுடன் தேவையான உற்சாகமும் கலந்தே உள்ளது. ரசிகர்களை எந்நேரத்திலும் சீட்டின் நுனியிலேயே வைத்திருக்கிறது. இது இந்த ஆட்டத்தினுடைய வெற்றிதான். ஒரு விளையாட்டை சிறப்பானதாக ஆக்கும் எல்லா சமாச்சாரமும் 20 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்டிருப்பது, ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.