துக்கத்தின் இயல்பான தன்மை

கேள்வியாளர்: நெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது?

சத்குரு: நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை.

பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்செல்வது உங்கள் வாழ்வில் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அடிப்படையில் உங்கள் துக்கத்திற்கான காரணம் உங்கள் வாழ்வின் அங்கமாக பல வழிகளில் இருந்த ஒருவர் இல்லாமல் போய்விடுவதுதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதி வெறுமையாகிவிட்டது. அந்த வெறுமையை உங்களால் கையாள முடியவில்லை. இது எவ்வாறெனில், நீங்கள் ஒரு குழுவினராக ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். தற்போது திடீரென ஒருவர் அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் அந்த விளையாட்டில் இப்போது ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. அதை உங்களால் கையாள முடியவில்லை.

உங்கள் மருட்சி நீங்குகிறது என்றால் பிழையான ஒரு எண்ணத்தை நீங்கள் நீக்குகிறீர்கள் என்று பொருள். உங்களின் மருட்சி அழியும் போது மாயை அகன்றுவிடுகிறது - உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் தகுந்த தருணம்.

யாரோ ஒருவரைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொண்டீர்கள். உங்கள் மனதில் பல திட்டங்களை வகுத்துள்ளீர்கள் - "நான் இந்த நபரை மணந்துகொள்ளப் போகிறேன், நான் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன், நான் அந்த குழந்தைகளை இவ்வாறு வளர்க்கப் போகிறேன்" என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள். ஆனால் தற்போது இந்த நபர் உங்கள் வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டப் பின்னர் திடீரென உங்கள் கனவுகள் எல்லாம் நொறுக்கப்பட்டு விட்டன. உங்களை எவ்வாறு கையாள்வது என்று உங்களுக்கேத் தெரியவில்லை. நீங்கள் ஒரு ஏமாற்றத்தில் ஆழ்ந்து போகிறீர்கள்.

உங்கள் மருட்சி நீங்குகிறது என்றால் பிழையான ஒரு எண்ணத்தை நீங்கள் நீக்குகிறீர்கள் என்று பொருள். உங்களின் மருட்சி அழியும் போது மாயை அகன்றுவிடுகிறது - உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் தகுந்த தருணம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் மிகுந்த துன்பமும், நாசம் விளைவிக்கும் செயல்முறையாகும் விதமாக தங்களுக்குள் இதை மாற்றிவிடுகிறார்கள்.

உங்கள் துக்கம் என்பது நீங்கள் முழுமையடையாமல் இருப்பதால் நிகழ்வது. துக்கம் என்பது ஒருவர் இறக்காத போதுகூட நிகழக்கூடும். மக்கள் தாங்கள் வெற்றிகரமாக இல்லாத காரணத்தினால் கூட துக்கமாக இருக்கலாம். மக்கள் தாங்கள் அடைய நினைத்ததை அடையாமல் போனதாலோ அல்லது அவர்களின் வீடு எரிந்து போனதாலோ அல்லது அவர்களின் கார் தொலைந்து போனதாலோ கூட துக்கமாக மாறலாம். ஒரு குழந்தை தன்னுடைய பொம்மை தொலைந்து போனால் கூட துக்கமாக இருக்கக்கூடும். அந்த குழந்தை தன் பெற்றோர்களை விட அந்த பொம்மையின் இழப்பை பெரிதாகக் கருதக்கூடும். தன்னுடைய நாய்க்குட்டி தொலைந்து போனால் தன் தாத்தாவை இழந்ததைக் காட்டிலும் பெரிதாக துக்கப்படக்கூடும். நான் இத்தகைய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். மக்கள் இவற்றால் மிக அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் இதுதான் மனித இயல்பு. அந்த குழந்தைக்கு தன் நாய்க்குட்டியிடம் இருக்கும் பந்தம் தன் தாத்தாவோடு கொண்டிருக்கும் பந்தத்தைவிட மிக ஆழமானது.

ஒருவரை நீங்கள் இழந்து போவதால் எதனால் முழுமையற்றவராக உணருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஆராய வேண்டும். இந்த உயிர் முழுமையானதாகவே இங்கு வந்திருக்கின்றது. இந்த உயிரை அதன் தன்மையிலேயே நீங்கள் உணர்ந்து கொண்டால் முழுமையற்று இருப்பது என்பது பற்றிய கேள்வியே அங்கு எழாது. இந்த உயிர் முழுமையானது. முழுமையற்ற உயிர் இருக்கின்றதென்றால் படைத்தவன் மோசமான வேலையை செய்திருக்கிறான் என்று அர்த்தம். அவ்வாறில்லை, இது மிகவும் மகத்தான வேலை - பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொள்வதற்கெல்லாம் அப்பாற்பட்டது இது. இது மிக அற்புதமான வேலையும் கூட. உயிரை அதன் தன்மையில் நீங்கள் உணர்ந்திருந்தால் எதுவும் உங்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தாது. ஏனெனில் இது முழுமையான உயிர். இதை நீங்கள் உங்கள் தொழிலைக் கொண்டோ, உங்கள் காரைக் கொண்டோ, உங்கள் வீட்டைக் கொண்டோ, உங்கள் குடும்பத்தைக் கொண்டோ, வேறு எதைக் கொண்டும் நிரப்ப முடியாது.

இந்த உயிர் பலவற்றோடு தொடர்பு கொள்ளலாம், உறவு கொள்ளலாம், உடன் இருக்கலாம் அல்லது உள் வாங்கலாம். எனினும் அது தானாகவே ஒரு முழுமையான உயிர். அதன் தன்மை அவ்வாறானதே. இத்தகைய ஒரு அனுபவ நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் எதை இழந்தாலும் சரி - உங்கள் வேலை, பணம் அல்லது உங்களுக்கு பிரியமான ஒருவர் - எதை இழந்தாலும் நீங்கள் துக்கமடைய மாட்டீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரியமானவரின் மரணத்தை எவ்வாறு தாங்கிக்கொள்வது

மனிதர்களைப் பொறுத்தவரையில், ஒருவரை அவரது இறப்பினால் நாம் இழந்துவிட்டால், அந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இழந்த உடமைகளை திரும்பப் பெற இயலும், இழந்த பதவிகளை திரும்பப் பெறலாம், பணம் மற்றும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஒரு மனிதரை இழந்தால் அதை ஈடுசெய்ய முடியாது. அந்த வகையில் அது மிக ஆழமான துக்கமாக இருக்கும்.

உங்கள் உறவை உங்களின் முழுமைத் தன்மையை பகிர்வதற்காக நீங்கள் உருவாக்கினால், பின்னர் எந்த துக்கமும் இருக்காது.

இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் நம் தன்மையை நாம் படத்தொகுப்பு போல உருவாக்கியுள்ளோம். நாம் எதை வைத்திருக்கிறோம், நம் பதவிகள், நாம் கொண்டுள்ள உறவுகள் மற்றும் நம் வாழ்வில் உள்ள மனிதர்கள் ஆகியவற்றை வைத்தே நாம் யார் என்பது அமைகிறது. இதில் ஏதோ ஒன்றை நாம் தொலைத்துவிட்டால் நம் தன்மையில் அது ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் நாம் துன்பப்படுகிறோம்.

நம் வாழ்வில் நாம் கொண்டுள்ள உறவுகள் நம் முழுமைத் தன்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். நம் வாழ்வில் ஏதோ ஒன்றை நிறைவு செய்வதற்காக அது இருக்கக்கூடாது. ஒரு உறவை உங்களை முழுமைப் படுத்துவதற்காக நீங்கள் உபயோகித்தால், அதை நீங்கள் இழக்கும்போது நீங்கள் வெறுமையாகிவிடுவீர்கள். உங்கள் உறவை உங்களின் முழுமைத் தன்மையை பகிர்வதற்காக நீங்கள் உருவாக்கினால், பின்னர் எந்த துக்கமும் இருக்காது.

உங்கள் இழப்பை சிறுமைப் படுத்துவதற்காக இது இல்லை. நமக்கு மிகப் பிரியமான ஒருவரை நாம் இழக்க நேர்ந்தால் இது எதுவும் வேலை செய்யாது. இது ஏதோ ஒருவரின் இழப்பைக் குறைத்து மதிப்பிடுவது போலத் தோன்றலாம். எனவே நம் வாழ்க்கை முழுவதும் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் - நாம் யார் என்பது நம் வாழ்வில் நாம் கொண்டுள்ளவைகளை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. நாம் யார் என்பதே நம் வாழ்வில் கொண்டுள்ளவைகளை தீர்மானிக்கும். இது ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் நிகழ வேண்டும். இதையே ஆன்மீக செயல்முறை என்று கூறுகிறோம்.

நாம் அனைவரும் இறக்கும் தன்மை உடையவர்களே

உயிரின் அடிப்படை இயல்பு என்பது ஒரு கட்டத்தில் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் இறக்க வேண்டும் என்பதுதான். நம் முன் இருக்கும் ஒரே கேள்வி யார் முந்தி செல்வது என்பதுதான். இது மிகக் கொடூரமான ஒன்றாக தோன்றலாம், ஆனால் அது இதன் நோக்கம் அல்ல. இதைப் புரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று. இல்லையெனில், இன்று நம்மை சமாதானம் செய்துகொள்ள நமக்கே சில விஷயங்களை கூறிக்கொள்ளலாம். ஆனால் நாளைக் காலை, உண்மை மறுபடி நம்மை மனவேதனைக்கு உள்ளாக்கும்.

உயிரின் அடிப்படை இயல்பு என்பது ஒரு கட்டத்தில் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் இறக்க வேண்டும் என்பதுதான். நம் முன் இருக்கும் ஒரே கேள்வி யார் முந்தி செல்வது என்பதுதான்

நாம் இங்கு இருக்கும் தருணம் அனைவருக்கும் நம்மிடம் இருக்கும் சிறந்த பகுதியை வெளிக்காட்ட வேண்டும். ஒரு மருத்துவர் உங்கள் நண்பர் நாளை இறக்கப் போகிறார் என்று அவருடன் கூறினால் அந்த நண்பருடன் உங்களின் சிறப்பான முகத்தை காட்டுவீர்கள். அதே சமயம் அவர், "நான் இன்னும் 50 வருடங்கள் கழித்து இறந்துவிடுவேன்," என்று கூறினால் நீங்கள் அதை பொருட்படுத்தமாட்டீர்கள். ஆனால் உண்மையில் இதை நீங்கள் உற்று நோக்கினால் அது நாளை நிகழுமா அல்லது ஐம்பது வருடங்கள் கழித்து நிகழுமா என்பது நமக்குத் தெரியாது. நீங்கள் மரணிப்பீர்கள், அவர்களும் மரணம் அடைவார்கள் என்பது தெரியும். ஆனால் அது எப்போது நிகழும் என்று மட்டும் தெரியாது.

நான் உங்களிடம் என் சிறந்த முகத்தையே வெளிக்காட்டுகிறேன். ஏனெனில் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். சில சமயம் நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். பெரும்பாலான நேரத்தில் அது எனக்குத் தெரியாது. நான் எப்போதும் என்னுடைய சிறந்த முகத்தை உங்களுக்கு வெளிக்காட்டுவதை மட்டுமே உறுதி செய்துக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இறந்து கொண்டிருக்கும் மனிதர். உங்கள் வீட்டுக்கு வெளியில் உள்ள மரம் எப்போது மரணிக்கும் அல்லது நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்? அது உங்களுக்குத் தெரியாது. எனவே உங்களின் சிறந்த முகத்தை நீங்கள் மற்றவரிடம் வெளிக்காட்ட வேண்டாமா?

ஆனந்தக் கண்ணீர், துக்கத்தினால் அல்ல

சிலர் நமக்கு மிகப் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் நம் வாழ்வை சில வழிகளில், ஏன் பல வழிகளில், அவர்கள் மேம்படுத்தி இருக்கிறார்கள். நம்மை சுற்றியுள்ள மக்கள் நம் வாழ்வை மேம்படுத்தி இருக்கிறார்கள் அதை நாம் கொண்டாடுகிறோம் என்றால் அவர்களை நாம் மகிழ்வோடு நினைவுகூற வேண்டும் - அவர்களின் முடிவினால் நாம் வேதனையுறக் கூடாது. அவர்கள் நமக்கு மேம்பாடுகள், அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட இனிமை மற்றும் மென்மை ஆகியவற்றை நாம் போற்ற வேண்டும். சில வகையில் சில சமயங்களில் அவர்கள் உங்களை முழுமை அடைந்தவர்களாக உணரச் செய்து இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கை முழுமையடைந்ததாக அவர்கள் உங்களை உணரச் செய்து இருக்கிறார்கள். அவர்களின் நினைவு உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரை, அன்பின் கண்ணீரை கொண்டு வரட்டும், துக்கத்தின் கண்ணீரை அல்ல. அவர்கள் பல வகையில் உங்களுக்கு அற்புதமானவராக இருந்தால், தயவு செய்து அதை உங்களை சுற்றி தற்போது இருப்பவர்களிடம் வெளிக்காட்டுங்கள்.

அவர்கள் உங்களுக்கு முக்கியமானவராக இருப்பதற்கான காரணம் சில வகையில் அவர்கள் உங்களுக்கு அற்புதமானவராக இருந்ததினால்தான். அவர்களின் நினைவுகள் உங்களை துக்கத்தின் பிடியிலோ மனச்சோர்வுக்கோ தள்ளுவதற்கு பதிலாக, அந்த அற்புத அம்சங்களை உங்களுக்கு மீண்டும் கொண்டு வரட்டும். உங்களை நீங்களே துக்கத்துக்குள்ளும் மனச்சோர்வுக்குள்ளும் தள்ளுவதற்கான காரணம், நீங்கள் உயிரின் அடிப்படைத் தன்மையை இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் - அது இறப்பு.

ஒருவர் நல்லவராக இருக்கலாம் அல்லது கெட்டவராக இருக்கலாம். ஆனால் அவர் இறப்பார். இது உங்களின் இழப்பை கேலி செய்வதற்காக அல்ல. இறந்து போனவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் அவர் அற்புதமானவர் என்பதற்காக நீங்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இழப்பினால் நீங்கள் எவ்வளவு வேதனை கொண்டீர்கள் என்று நினைவு கூற தேவையில்லை. அவருக்கு முன்னால் நீங்கள் மரித்திருந்தால் அவரை நீங்கள் ஒரு மோசமான நிலையில் விட்டுச் சென்றிருக்கக் கூடும் - எனவே, ஒரு மனிதராக எழுந்து நில்லுங்கள். உங்களுக்கு நிகழ்ந்த அற்புதமான விஷயங்கள் ஏதோ சில வகையில் வெளிப்பட வேண்டும். அவர்கள் உங்களுக்கு பல வகையில் அற்புதமானவராக இருந்திருந்தால் தயவு செய்து அதை தற்போது உங்களைச் சுற்றி இருப்பவரிடம் வெளிப்படுத்துங்கள். இவ்வாறு தான் வாழ்க்கை நிகழும்.

படத்தொகுப்பின் துண்டுகள்

நான் 'வாழ்க்கை' என்று குறிப்பிடும்போது நான் உயிரைப் பற்றி கூறுகிறேன். நீங்கள் புரியும் செயல்களைப் பற்றியல்ல. நீங்கள் பொதுவாக வாழ்க்கை என்றால் உங்கள் குடும்பம், உங்கள் வேலை, உங்கள் தொழில், உங்கள் சொத்து மற்றும் நீங்கள் கொண்டுள்ள பொருட்கள் ஆகியவற்றைதான் எண்ணுவீர்கள். ஆனால் இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கான உபரி பாகங்களே. நீங்கள் பணம், சொத்து, உறவுகள், குழந்தைகள் ஆகியவற்றை உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் அவை மேம்படுத்தும் என்று எண்ணியே உங்கள் வாழ்வில் கொண்டு வந்தீர்கள். இப்படி பல உபரி பாகங்களை சேகரித்து, முடிவில் அவற்றோடு மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கி, பிணைக்கப்பட்டு, அந்த உபரி பாகங்களோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். இதனால் உயிர் என்ற உங்களை நீங்கள் உணராமலே போய்விடுகிறீர்கள்.

இவை அனைத்தும் உங்கள் முடிவுக்கு தயார் செய்வது தான். உங்கள் சுமை சிறிதளவு குறைகிறது. எனவே நீங்கள் செல்லும்போது நீங்கள் சுலபமாக செல்ல முடியும்.

உண்மை யாதெனில் உயிர் என்ற நீங்கள், இன்னும் அங்குதான் உள்ளது - உபரி பாகங்கள் காலப்போக்கில் உதிர்ந்து விழுகின்றன. சிலர் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு முன்பே நீங்கள் உயிரோடு இருந்தீர்கள், சிரித்தீர்கள், நீங்கள் மகிழ்ச்சி என்பதைப் பற்றி அறிந்து இருந்தீர்கள். சிலரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இணைத்துக் கொண்டதற்கான காரணம், அவர்கள் அதை மேம்படுத்திடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான். அல்லது ஏதோ ஒரு தேவையை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்ற காரணத்தினால்.

ஆனால் தற்போது உங்களின் அடையாளங்களினால் ஒருவரை இழக்கும்போது உங்கள் வாழ்க்கையின் ஒரு துண்டை இழந்துவிட்டதாக நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்களுக்கு வயதாகும் போது உங்கள் தாத்தா இறந்துவிடுவார், உங்கள் தந்தையும் இறந்துவிடுவார், சில வேளைகளில் உங்கள் துணைவரும் இறக்கக்கூடும். சிலர் தங்கள் தலைமுடியை இழந்துவிடுவார்கள். சிலர் தங்கள் தலையையே கூட இழக்கக் கூடும் - இது வேடிக்கையல்ல. சிலர் தங்கள் உடம்பின் பாகங்களை இழக்கக்கூடும். சிலர் தங்களின் உறவுகளை இழப்பார்கள். சிலர் தங்களின் பொருள், அதிகாரம், பதவி அல்லது பணத்தை இழக்கக்கூடும்.

இவை அனைத்தும் உங்கள் முடிவுக்கு தயார் செய்வது தான். உங்கள் சுமை சிறிதளவு குறைகிறது. எனவே நீங்கள் செல்லும்போது நீங்கள் சுலபமாக செல்ல முடியும். இது ஏதோ தத்துவம் அல்ல. வாழ்க்கை அவ்வாறுதான் நிகழ்கிறது. நீங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு சந்திக்க மறுப்பதால் உங்கள் மனதில் அதைக் குறித்து கற்பனையை வளர்த்துக் கொள்கிறீர்கள். அந்த மனரீதியான உருவகங்களை உண்மையென மாற்ற முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் உருவாக்கும் மனரீதியான நாடகம் எப்போதும் உண்மையாகாது. நீங்கள் என்றோ ஒருநாள் அதற்கு முழுக்கு போடத்தான் வேண்டும். எவ்வளவு விரைவில் நீங்கள் மாயையிலிருந்து வெளியேறுகிறீர்களோ அவ்வளவு நல்லது. நீங்கள் உங்கள் சுயநிலைக்கு வரலாம் அல்லது துன்பத்தில் உழன்று கொண்டிருக்கலாம், அது உங்களின் தேர்வு.

வாழ்க்கை உங்கள் மாயையை நீக்கும்போது

வாழ்க்கை உங்கள் மாயையை நீக்கும்போது நீங்கள் எழுந்து அமர்ந்து ஞானோதயம் பெறலாம் அல்லது துன்பத்தில் துவளலாம். எல்லா மாயைகளும் விலகுவதே சுய-உணர்வு என்பதாகும். தற்போது நீங்கள் மாயையை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் - அதற்கு மதிப்பளித்து அதனோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கிறீர்கள். இதுவே மாயை. இது ஏதோ உண்மை போல தொடர்ந்துகொண்டே இருக்கும், முடிவில் திடீரென அது மறையும் வரை.

இந்த நொடியில் உங்கள் மாயை அனைத்தும் விலகி நீங்கள் முழுமையாக தெளிவுப் பெற்றுவிட்டீர்கள் என்றால், நீங்கள் ஞானோதயமும் பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஏதோ ஒரு வகையில் இதை நீங்கள் அறிந்துதான் இருக்கின்றீர்கள். நீங்கள் பிறந்த தருணத்தில் இருந்து உங்கள் கடிகாரம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. முடிவில் ஒருநாள் அது நின்றுவிடும். அதை நீட்டிக்க முயற்சிக்கிறோம், அதை மெதுவாக ஓடச்செய்ய முயற்சிக்கிறோம், நமக்கு கிடைத்த நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முயற்சிக்கிறோம், மேலும் அதை முடிந்தவரையில் ஆழ்ந்த அனுபவமாக மாற்ற முயற்சிக்கிறோம். வாழ்க்கை உங்களை தொடுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வாழ்க்கை மிக ஆழமான நிலையில் உங்களுக்குள் தாக்கத்தை உருவாக்க வேண்டுமெனில், உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கியுள்ள உலகத்தை நீங்கள் விடவேண்டும். இது ஏதோ ஒருவரின் மரணத்தைக் குறித்த கேள்வி மட்டுமல்ல. இது உங்கள் வாழ்க்கையைப் பற்றிய உங்களின் அடிப்படையான அறியாமையைப் பற்றியது. உங்கள் சுயநிலைக்கு நீங்கள் வருவதற்கு இதுவே தக்க தருணம். இந்த நொடியில் உங்கள் மாயை அனைத்தும் விலகி நீங்கள் முழுமையாக தெளிவுப் பெற்றுவிட்டீர்கள் என்றால், நீங்கள் ஞானோதயமும் பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.