மாயையைக் கடந்து போவது எப்படி?
ஒரு மனிதர் மாயையைக் கடந்து போவது எப்படி? ஒரு மனிதர் உண்மையானவராக நல்ல பக்தராக இருக்கும்போது, எவ்வளவு முயற்சித்தாலும் அவரால் வாழ்க்கையில் தன் தரத்தை உயர்த்திக் கொள்ள முடிவதில்லை. இது மாயையின் காரணமாக நடப்பதா?
சத்குரு:
Subscribe
நீங்கள் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. இந்த உலகில் வாழவேண்டுமேயானால், நீங்கள் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லையா? நீங்கள் எப்போதுமே உங்களை நல்ல மனிதர் என்று நினைக்கிறீர்கள். அப்படிப்பட்ட மாயையிலிருந்து நீங்கள் வெளிவர நேரம் வந்துவிட்டது. முதலில் நீங்கள் நல்லவர் என்று எப்படி முடிவெடுக்கிறீர்கள்? இங்கே அமர்ந்துகொண்டு இந்தக் கூட்டத்திலேயே நான் மட்டும்தான் நல்லவன் என்ற முடிவிற்கு எப்படி வருகிறீர்கள்? உங்களைச் சுற்றியிருக்கிற பத்து பேரைப் பார்த்தபிறகுதான். ஏதோ ஒரு காரணத்தினால் அல்லது ஒப்பிட்டுப் பார்த்துதான் நீங்கள் நல்லவர் என்ற முடிவுக்கு வருகிறீர்கள். அப்படித்தானே.
நீங்கள் மட்டும்தான் நல்லவரா?
உலகிலேயே நீங்கள்தான் சிறப்பான மனிதர் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், உங்கள் மனதில் உங்களைத்தவிர உலகில் நல்லவர்களே யாரும் இல்லை என்று ஆகிவிடுகிறது. நீங்கள் மட்டுமே நல்லவர். இப்படியொரு முட்டாள்தனத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு எது வேண்டுமானாலும் நேரலாம். நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வாழ்க்கையில் உங்கள் உள்தன்மை அமைதியாக, அன்புமயமாக, ஆனந்தமயமாக இருந்தாலே போதும். நல்லவராக இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம். இந்த உலகில் இருக்கிற பிரச்சினைகளுக்கு காரணம் நல்லவர்கள்தான். இல்லையா? மோசமான மனிதர் என்று நீங்கள் நினைக்கிறவர் ஏதோ ஒரு குற்றத்தையோ, ஒரு கொலையையோ செய்கிறார். அத்தோடு முடிந்துவிட்டது.
எனவே, நீங்கள் நல்லவர் என்ற முடிவுக்கு, நீங்கள் வரவேண்டிய அவசியமேயில்லை. உங்கள் வாழ்க்கையை அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக வாழ்ந்தீர்களா? என்று பார்த்தாலே போதும். உண்மையாக நல்லவர்களால் சிரிப்பதுகூட முடியாது. தெரியுமா? இப்படித்தான் அவர்கள் ஆகிவிட்டார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனென்றால் அவர்கள் மிக நல்லவர்கள். இந்த நல்ல குணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? ஒரு நல்ல பக்தராகயிருப்பதற்கும், சமூகத்தில் நீங்கள் உயர்வதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடவுளே வந்து, உங்கள் தொழிலை நடத்தி, சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் பக்தியை செலுத்துகிறீர்கள். இந்த பண்டமாற்று முறையை முதலில் நிறுத்துங்கள்.
கடவுள் என்ற கணக்குபிள்ளை
ஒரு உயிரினம் உள்ளபடியே அழைப்பு விடுத்தால், அழைப்பு விடும்போது இயற்கை பதில் அளிக்கிறது. நீங்கள் கேட்டால் கடவுள் பதில் தருகிறார். ஆனால் யாரும் கடவுளை எட்டுவதில்லை, அணுகுவதில்லை. அனைவரும் கணக்குப்பிள்ளையாகி விட்டார்கள். அவர்கள் எப்போதுமே பேலன்ஸ் ஷீட் அடிப்படையிலேயே வாழ்க்கையை பார்க்கிறார்கள். லாபம், நஷ்டம், எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று. அவர்கள் அழைப்பு கடவுளை நோக்கிப் போகவில்லை. காரண அறிவுடன் குரல் எழுப்பும் போது கடவுளின் பெயரை நீங்கள் உரக்க அழைக்கலாம். நீங்கள் விரும்புவதை நீங்கள் செய்யலாம். காரண அறிவிற்கு அவர் செவிடர். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். காரண அறிவின் குரலுக்குக் கடவுள் காது கொடுப்பதில்லை. அன்பின் அழைப்பிற்கு அவர் உடனே பதிலளிக்கிறார். சிலர் இருக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பதில் கிடைக்கிறது. அவர்கள் மிக எளிமையானவர்களாக இருக்கிறார்கள்.
நாமக்கல் ஆஞ்சனேய பக்தர்
நாமக்கல்லில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் ஒரு ஆஞ்சநேய பக்தர். அவருக்கு எல்லாமே ஆஞ்சநேயர்தான். அவர் எதைக் கேட்டாலும் ஆஞ்சநேயர் பதில் அளிக்கிறார். இந்த யோகா வகுப்பிற்கு வந்தாலும் அவருக்கு யோகா என்றால் தெரியாது. அதனால் அவர் ஆஞ்சநேயரிடம் போய், "நான் யோகா வகுப்புக்குப் போக வேண்டுமா?" என்றார். "போ நல்லது" என்று ஆஞ்சநேயர் சொன்னதாக அவர் உணர்ந்தார். எப்படியாவது அந்த பதில் அவருக்குக் கிடைக்கிறது. ஏதாவது பூ விழுந்து உணர்த்துகிறதோ என்னவோ, அது முக்கியமில்லை.
இவர் மிக எளிமையானவராகவும், மிக உண்மையானவராகவும் இருப்பதால், அவருக்கு இது நடக்கிறது. யாராவது அவரிடம் ‘அனுமான்’ என்று சொன்னால் அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகும். இப்படி வாழ்வது ஒரு மனிதனுக்கு அற்புதமானதொரு நிலை. நான் அவரை அணைத்துக் கொண்டால் உடனடியாக பரவச நிலைக்குப் போய்விடுவார். ஏனென்றால் அந்த விளிம்பில் தான் அவர் இருக்கிறார். நான் கோயில்களை கேலி செய்வேன். ஆஞ்சநேயர் ஒரு கடவுள் அல்ல, ஒரு குரங்குதான் என்று கேலி செய்வேன். அவர் முன்பு நான் என்ன சொன்னாலும் அவருக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் அவர் சத்குருவையும் ஆஞ்சநேயராகத்தான் பார்க்கிறார். அவருக்கு சத்குருவும் ஆஞ்சநேயரின் இன்னொரு வடிவம். அதே அதிர்வுகளை அவர் இங்கேயும் உணர்கிறார். ஆஞ்சநேயரைப் பற்றி என்ன மோசமாகப் பேசினாலும், மகிழ்ச்சியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. வகுப்பு முடிந்ததும் நேராக ஆஞ்சநேயர் கோவிலுக்குத்தான் போவார். இப்படி வாழுகிற மனநிலை மனிதனுக்கு மிக அற்புதமானது. மிக எளியவர்களுக்கு இது சுலபமாக நிகழும்.
எது பக்தி?
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இது ஆஞ்சநேயர் அல்ல. இது அவருடைய விழிப்புணர்வின் நிலை. நீங்கள் உங்களை எப்படி வைத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதுதான் எல்லாமே. "நீங்கள்" என்று எதைக் கருதுகிறீர்களோ அதுதான் கடவுள். நீங்கள் உள்ளபடியே உண்மையாக இருந்தால், தர்க்க அறிவைத் தாண்டி, இந்த கேள்வியை அன்பின் அடிப்படையில் கேட்டால் கடவுள் இங்கேயே இருக்கிறார். கடவுளை நேராகப் பார்க்கமுடியாததால், அவர் ஆஞ்சநேயர் வடிவத்தில் பார்க்கிறார். அது ஒரு நல்ல கருவி. அதனால் பயனும் இருக்கிறது. ஆஞ்சநேயர் வழிபாடு என்று வெறுமனே போய் வடை மாலை போடுவது, ஜிலேபி மாலை போடுவது என்றிருந்தால், அங்கே பண்டமாற்று முறை தொடங்குகிறது. அங்கே நீங்கள் முட்டாளாகிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்காக கோவில்கள் சிதைக்கப்படவேண்டும். ஆனால் அந்த ஆஞ்சநேய பக்தர் போன்றவர்களுக்காவே கோவில்கள் திறக்கப்படவேண்டும். அது தேவை. இந்த மனநிலையில் மனிதன் இருக்கமுடியுமென்றால் கோயில் ஒரு அற்புதமான கருவி.