மரணமும் இறத்தலும்

சத்குரு: மரணம் என்பது மிக அடிப்படையான ஒரு கேள்வி. மரணத்தைப் பற்றி நாம் படிக்கும் புள்ளிவிவரங்களை விட, நிஜத்தில் அது நமக்கு மிகவும் அருகில் உள்ளது. ஒவ்வொரு கணமும், மரணம் நமக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது - நமது உறுப்புகளின் நிலையிலும், செல்களின் நிலையிலும் இறப்பு நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், உங்கள் உள்ளுறுப்புகளை ஒருமுறை பார்த்தவுடனேயே, உங்கள் டாக்டரால் உங்கள் வயதை அறிய முடிகிறது. உண்மையில், நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமக்குள் இறப்பு ஆரம்பித்துவிட்டது. விழிப்புணர்வில்லாமல் அறியாமையில் இருப்பவருக்குத்தான், மரணம் பின்னர் ஒருநாள், என்றோ ஒருநாள் வரும் என்று தோன்றும். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், வாழ்வும் மரணமும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டிருப்பதை காணமுடியும். நீங்கள் சுவாசிக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனம் கொண்டு வந்தீர்கள் என்றால், ஒவ்வொரு உள்மூச்சுடன் வாழ்க்கை இருப்பதையும், ஒவ்வொரு வெளிமூச்சுடன் இறப்பு இருப்பதையும் கவனிக்க முடியும்.  

நீங்கள் சுவாசிக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனம் கொண்டு வந்தீர்கள் என்றால், ஒவ்வொரு உள்மூச்சுடன் வாழ்க்கை இருப்பதையும், ஒவ்வொரு வெளிமூச்சுடன் இறப்பு இருப்பதையும் கவனிக்க முடியும்.

பிறந்தவுடன் ஒரு குழந்தை முதலில் செய்வது மூச்சினை உள்ளே எடுப்பதுதான். அதேபோல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைசியாக செய்யப்போவது மூச்சை வெளிவிடுவதுதான். மூச்சை இப்போது வெளியே விடுகிறீர்கள், அடுத்த உள்மூச்சு எடுக்காவிட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். இது புரியாவிட்டால், சும்மா இப்படிச் செய்து பாருங்கள் - மூச்சை வெளிவிடுங்கள், அப்படியே உங்கள் மூக்கைப் பிடித்துக்கொள்ளுங்கள், அடுத்து உள்மூச்சு எடுக்கக்கூடாது. ஒரு சில கணங்களுக்குள், உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும், உயிருக்காக அலறும். வாழ்வும் மரணமும் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதபடி சேர்ந்தே இருக்கின்றன. ஒரே மூச்சில் இருக்கின்றன. இந்த உறவு, மூச்சு என்பதற்கு அப்பாற்பட்டும் நீடிக்கிறது. மூச்சு என்பது ஒரு துணை நடிகர்தான்; நிஜமான நிகழ்வு என்னவோ பிராணா எனும் உயிர்சக்திதான். அதுதான் பொருள்நிலையில் இருப்பதையெல்லாம் ஆளுகிறது. பிராணாவின் மீது ஒருவிதமான ஆளுமை இருந்தால், ஒருவர் கணிசமான கால அளவுக்கு சுவாசத்தைக் கடந்து இருக்கமுடியும். சுவாசம் என்பது உடனடி தேவையாக இருக்கிறது என்றாலும், அதுவும் உணவும் நீரும் இருக்கும் வரிசையில்தான் வருகிறது.

மரணம் என்பது இவ்வளவு அடிப்படையான அம்சமாக இருப்பதற்கு காரணம் என்ன? நாளை காலையில் சின்னதாக ஏதாவது நடந்தால் கூட, நீங்கள் இறந்துவிடக்கூடும், அதனால்தான் அடிப்படையாக இருக்கிறது. நாளை காலை என்ன - சின்னதாக ஏதாவது ஒன்று இப்போது நடந்தால்கூட, அடுத்த கணமே நீங்கள் போய் சேர்ந்துவிட முடியும். நீங்கள் வேறு ஒரு உயிரினம்போல் இருந்திருந்தால்கூட, ஒருவேளை இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் இப்போதோ உங்களுக்கு மனித அறிவு அளிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் இவ்வளவு இன்றியமையாத அம்சத்தை இனிமேலும் எப்படி நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்கமுடியும்? இனிமேலும் எப்படி இதைத் தவிர்த்துவிட்டு, என்றென்றும் இங்கே இருக்கப் போகிறோம் என்பதுபோல வாழமுடியும்? கோடிக்கணக்கான வருடங்கள் இங்கே வாழ்ந்துவிட்ட பிறகும் மரணத்தைப் பற்றி ஒரு துளியும் புரிந்துகொள்ளாமல் வாழ்ந்திட, மனிதர்களால் எப்படி முடிகிறது? அதுமட்டுமில்லை, வாழ்க்கையைப் பற்றியும் இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. வாழ்க்கையின் வெளித்தோற்றங்கள் அனைத்தைப் பற்றியும் நமக்கு தெரியலாம், ஆனால் அடிப்படையாக வாழ்க்கையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

இந்த மாதிரி சூழ்நிலை உருவானதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால், இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் யார், உங்களுடைய நிலை என்ன என்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான பார்வை இல்லை, அதை தொலைத்துவிட்டீர்கள். நீங்கள் வாழும் சூரியமண்டலம், நாளை காலை ஆவியாகி மறைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், அதை இந்த பிரபஞ்சத்தில் ஒருவர்கூட கவனிக்க மாட்டார்கள். அது அந்த அளவுக்கு மிகச்சிறியது, ஒரு துகள்தான். இந்தத் துகள் அளவு இருக்கும் சூரியமண்டலத்தில் பூமி என்பது ஒரு நுண்துகள். அந்த நுண்துகளுக்குள், நீங்கள் வாழும் நகரம் இன்னும் நுண்ணிய நுண்துகள். அதற்குள்ளே நீங்களோ ஒரு பெரிய ஆள். இது ஒரு பெரிய பிரச்சனைதான். நீங்கள் யார், என்ன என்பதைப் பற்றியே ஒரு தெளிவான பார்வையை நீங்கள் தொலைத்துவிட்ட பிறகு பிறப்பு-இறப்பு பற்றிய அடிப்படையை புரிந்துகொள்வீர்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?

கேள்வி: ஆனால் சத்குரு, எனது பால்கனியில் இருக்கும் ஒரு புறாவாகட்டும், நெடுஞ்சாலையில் ஒரு நாயாகட்டும், அதன் மரணம் என்னை மிகவும் பாதிக்கிறது. நான் ஏன் இப்படி உணருகிறேன்?

சத்குரு: அனைத்து பயங்களுக்கும் காரணம் மரணம். நீங்கள் மரணமற்றவராக இருந்தால், உங்களுக்குள் பயம் இருக்காது, ஏனென்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டினாலும், நீங்கள்தான் இறக்கமாட்டீர்களே! ஆனால் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? மரணம் என்பது அற்புதமான விஷயம். அது பல விஷயங்களை முடிவுக்கு கொண்டுவருகிறது. இப்பொழுது நீங்கள் இருக்கிற நிலையில், அதை ஒரு மோசமான விஷயமாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழவேண்டியிருந்தால், இறப்பை ஒரு விடுதலையாக நினைப்பீர்கள். இங்கு நீண்ட காலம் இருக்க நேர்ந்தால், நீங்கள் எப்போது போய் சேர்வீர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள். மரணம் என்பது ஒரு மிகப்பெரிய விடுதலை. அது அகாலமாக நிகழக்கூடாது, அவ்வளவுதான். நாம் இன்னும் உருவாக்கும் திறனோடு, பங்களிக்கும் நிலையில் இருக்கும்போது, பலவற்றை நிகழச் செய்யும் தன்மையில் இருக்கும்போது இறக்க விரும்பவில்லை.

sadhguru-wisdom-article-sadhguru-quotes-on-death-9

மரணம் தவிர்க்க முடியாதது

நீங்கள் சரியான நேரத்தில் இறக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் சாதனா செய்ய வேண்டும், செய்தால் எப்போது இறக்க வேண்டும் என்று நிர்ணயிக்க முடியும். இல்லையென்றால் ஒரு இறந்த புறாவைப் பார்த்தால்கூட, உங்கள் மரணத்தை அது நினைவுபடுத்தும். நேற்று எது பறந்துகொண்டு இருந்ததோ, அது இறந்து, இன்று காய்ந்து போய்விட்டது. இதைப்போல் நீங்களும் ஒருநாள் ஆவீர்கள் என்னும் கற்பனையே, உங்களுக்கு அச்சத்தை உண்டாக்கும். ஏனென்றால் நீங்கள் எதை சேகரித்து வைத்துள்ளீர்களோ, அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வது பெரிய நிர்ப்பந்தமாக மாறிவிட்டது. நீங்கள் சேர்த்து வைத்திருப்பதோடு அடையாளப்படுத்திக் கொள்வது என்று நான் சொல்லும்போது - நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற இந்த உடலே பூமியின் ஒரு சிறு துண்டுதான். இந்த உடலை உருவாக்க நீங்கள் சேகரித்த மண்ணும், அதனுடன் சேர்ந்த உங்களின் அடையாளங்களும் மிகவும் வலுவாகிவிட்டன. அதை இழப்பது பயங்கரமானது என்று தோன்றும் அளவுக்கு வலுத்துவிட்டது.

நீங்கள் மிகவும் பருமனாக இருக்கிறீர்கள், நீங்கள் 10 கிலோ குறைவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், அதை பயங்கரமானது என்று எண்ணி அழப்போகிறீர்களா? நிச்சயமாக இல்லை. பெரும்பான்மையானவர்கள் 10 கிலோ குறைந்தால் களிப்படைவார்கள். இப்போது நீங்கள் 50 அல்லது 60 கிலோ இருக்கும் உங்களது மொத்த எடையையும் இழந்துவிட்டால் என்ன பிரச்சனை? உயிரின் தன்மையை உள்ளது உள்ளபடி நீங்கள் உணர்ந்திருந்தால், நீங்கள் சேகரித்த குவியலில் நீங்கள் தொலையாதிருந்தால், உடலை விடுவதென்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை.

பறவைகள், பூச்சிகள், நாய்கள் மற்றும் மனிதர்களின் இறந்த உடல்கள் என்பது மண்ணை மீண்டும் மண்ணிலேயே திருப்பி செலுத்துவது போலாகும். இது ஒன்றும் பெரிய நாடகமில்லை. இது இயற்கையான நிகழ்வு. நீங்கள் எதை எடுத்தீர்களோ அதை திருப்பி கொடுக்க வேண்டும், மறு சுழற்சி செய்யப்பட வேண்டும். உங்கள் பிறப்பு, வாழ்க்கை, மரணம் எல்லாவற்றிற்கும் நீங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால், பூமித்தாயைப் பொறுத்தவரையில் இது வெறும் மறு சுழற்சிதான். அது உங்களை வெளியே தள்ளுகிறது, உள்ளே இழுத்துக்கொள்கிறது, அவ்வளவுதான். உங்களைப் பற்றி நீங்கள் என்னென்னவோ நினைத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் எடுத்ததை திருப்பித் தந்தே ஆகவேண்டும். இது நல்லப் பழக்கம்தான். மற்றவர்களிடம் இருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொண்டோமோ அவற்றை ஏதோ ஒரு சமயத்தில் திருப்பி தந்தே ஆகவேண்டும். நம்புங்கள், மரணம் என்பது நல்லப் பழக்கம்தான்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேள்வி: அப்படியென்றால் நன்றாக வாழ்பவர்களுக்கு, இறப்புக் குறித்த எந்த மாதிரியான அறிவு இருக்க வேண்டும்?

சத்குரு: மரணம் என்பது வாழ்வின் அடிப்படை கோடு. இறப்பை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால், உங்களால் வாழ்க்கையை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது, வாழ்க்கையை கையாளவும் முடியாது. ஏனென்றால் வாழ்வு-இறப்பு இரண்டும் உள்மூச்சு-வெளிமூச்சு போன்றவை, பிரிக்க முடியாதபடி இணைந்தே இருக்கின்றன. நீங்கள் இறப்பை எதிர்கொள்ளும் போதுதான், ஆன்மீக முறை தொடங்குகிறது - அது உங்களுடைய இறப்பாகவே இருக்கலாம், உங்களுக்கு நேசமானவரின் மரணமாக இருக்கலாம் அல்லது அவரில்லாமல் வாழவே முடியாது என்று நீங்கள் எண்ணும் ஒருவரின் மரணமாக இருக்கலாம். மரணம் நெருங்கும்போது அல்லது அது நிகழும்போதுதான், “இதெல்லாம் என்ன? இதற்குப் பிறகு என்ன நடக்கும்?” என்றெல்லாம் பலருக்கும் கேள்வி எழும். வாழ்க்கையின் அனுபவங்கள் மிகவும் உண்மையானவை போல் தெரியும்போது, அது சட்டென முடியப்போகிறது என்பதை உங்களால் நம்பமுடியாது. ஆனால் மரணம் நெருங்கும்போதுதான், மனம் இதற்கும் மேல் ஏதோ இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும். அது எவ்வளவுதான் காட்டினாலும், மனம் இதுவரை சேகரித்த தகவல்களின் அடிப்படையிலேயே இயங்குவதால் அதற்கு எதுவுமே தெரியவதில்லை. மனதிற்கு மரணத்தில் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் அதனிடம் உண்மையான விஷயம் என்று எதுவும் இல்லை - அதில் இருப்பதெல்லாம் கட்டுக்கதைகள்தான்.

நீங்கள் இறந்தவுடன் கடவுளிடம் சென்று அவர் மடியில் அமர்வீர்கள் என்றெல்லாம் கட்டுக்கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியென்றால், நீங்கள் இப்போதே போகவேண்டும் அல்லவா! அப்படி ஒரு சிறப்புரிமை உங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்றால், அதை ஏன் தள்ளிப்போட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொர்க்கம், நரகம் பற்றியெல்லாம் கூட கட்டுக்கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தேவதைகள் பற்றியும், வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்றும் கட்டுக்கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் எதுவும் உறுதியான தகவல் இல்லை. இறப்புக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்று சிந்திக்க முயற்சித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனென்றால் அது உங்கள் மனத்தின் ஆளுமையில் இல்லை.

விழிப்புணர்வோடு இறத்தல்

இதை அறிந்துகொள்ள ஒரே வழி, இந்திய மொழிகளில் பிரக்ஞை என்று கூறுவோமே, அதன் மூலம்தான். இதன் ஆங்கில அர்த்தம் விழிப்புணர்வு என்று பொருள்படுகிறது. ஆனால் அதை சாதாரண அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால், ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்காமலேயே, அதைப் பற்றிய தகவல்களைப் பெறாமலேயே, அதை உணர உங்களிடம் வழி இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை உற்று நோக்குபவராக நீங்கள் இருந்தால், ஒவ்வொரு படைப்பும் பல விஷயங்களை, அதைப் பற்றி யோசிக்காமலேயே அறிந்துகொள்வதைப் பார்க்க முடியும். நீங்கள் யோசித்துதான் செய்யவேண்டும் என்றால், எப்படி சுவாசிப்பது என்று கூட உங்களுக்கு தெரியாது. அது இயல்பாய் நிகழ்கிறது. அது உங்களின் புத்திசாலித்தனம் அல்ல. படைத்தவனின் புத்திசாலித்தனம். உங்கள் உடலைப் போன்ற ஒரு நுட்பமான இயந்திரத்தை உங்கள் கையில் விட்டால் அது பெருங்கேடாக ஆகிடும் அல்லவா?.

வாழ்வது - இறப்பது என்றெல்லாம் எதுவுமே இல்லை. அது எல்லாமே லீலை - ஒரு விளையாட்டு.

நிறைய விஷயங்கள் உங்களின் துணைக்கும், புரிதலுக்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ்கின்றன. பிரக்ஞை என்பது உங்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. பிரக்ஞை என்பது இந்த படைப்பின் மூலம். அதனுடன் நீங்கள் தொடர்புகொண்டால், வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையில் இருப்பதாக நாம் நினைக்கும் எல்லைக்கோட்டைத் தாண்டிவிடலாம். உண்மையில் அப்படி எல்லைக்கோடு எதுவும் கிடையாது - நீங்கள் இப்போதே வாழ்ந்துகொண்டும், இறந்துகொண்டும் இருக்கிறீர்கள். சமூக அளவில், மக்களின் எல்லைக்குட்பட்ட அனுபவத்தில், புரிதலில் - ஒருவர் இன்று இங்கே இருக்கிறார், நாளை போய்விடுகிறார். உயிரின் அடிப்படையில், வாழ்வது - இறப்பது என்றெல்லாம் எதுவுமே இல்லை. அது எல்லாமே லீலை - ஒரு விளையாட்டு.

தெய்வீகத்தின் லீலை

இது எல்லாமே தெய்வீகத்தின் விளையாட்டு என்று நாம் சொல்லும்போது, தெய்வீகம் என்பது உங்கள் வாழ்வோடு விளையாடி, உங்களின் துன்பத்தில் இன்பம் காணும் சக்தி என்று பொருளல்ல. அனைத்துமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதால், அதை விளையாட்டு என்று கூறுகிறோம். உயிரின் அடிப்படையில் பார்த்தால், குழந்தைப்பருவம், இளமை, நடுத்தர வயது, முதுமை எல்லாமே பின்னிப் பிணைந்துள்ளன. ஒரு தனிநபர் என்று நீங்கள் அழைப்பதையும், பிரபஞ்சம் என்று அழைப்பதையும் பிரிக்கமுடியாது. அணு என்று நீங்கள் அழைப்பதையும், அண்டம் என்று அழைப்பதையும் பிரிக்கமுடியாது. இந்த அர்த்தத்தில்தான் அதை லீலை என்கிறோம்.

மரணம் என்பதும், அதற்கு அப்பாற்பட்டதும் ஏதோ சொர்க்கத்திலோ நரகத்திலோ ஒளிந்துக் கொண்டிருக்கும் ரகசியம் அல்ல. அது, இங்கேயே, இப்போதே இருக்கிறது.

ஆனால் எப்போது நீங்கள் ஒன்றுக்கும், மற்றதற்கும் இடையே எல்லைக்கோட்டை வரைகிறீர்களோ, அதன் பிறகு விளையாட்டு இல்லை. நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கும்போது, உங்களுக்கும், மரத்திற்கும் இடையே மூச்சுக் காற்று விளையாடுகிறது. “என்னுடைய சுவாசத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவனுடைய சுவாசத்தை அவன் பார்த்துக்கொள்ளட்டும்” என்று நீங்கள் பிரிக்கமுடியாது. “என்னுடையதை நான் செய்துகொள்கிறேன் - உன்னுடையதை நீ செய்துகொள்” என்றுதான் பல வீடுகளில் நடக்கிறது. லீலைக்கு நீங்கள் தடுப்பு போடும்போது, வாழ்க்கை உங்கள் கையை விட்டு நழுவிவிடும்.

வாழ்வு-மரண” இயல்பை உணரவேண்டும் என்ற விருப்பத்தில் எல்லா விதமான விஷயங்களும் செய்யப்படுகின்றன. ஆனால், பரிசோதனைகளை செய்வதினாலோ, அதைப் பற்றி சிந்திப்பதாலோ, அதை நீங்கள் கிரகித்துவிட முடியாது. அனுபவத்தினால் மட்டுமே அதை கிரகிக்க முடியும். என்னிடம் மக்கள் மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு நடப்பது பற்றியும் கேள்வி கேட்கும்போது, அனுபவத்தினால் உணர்வதுதான் நல்லது என்று நான் அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பேன். அவர்கள் இறக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால், உங்களுக்குள் இருக்கும் ஜீவன், உயிரை நீங்கள் உணரவேண்டும் என்பதுதான். உங்கள் உடலை மட்டுமே நீங்கள் உணர்ந்திருந்தால், நான் என்ன சொன்னாலும் தவறான முடிவுகளுக்குத்தான் வருவீர்கள். உங்களது வாழ்க்கை அனுபவம், உங்கள் உடல், மன அமைப்புகளுக்கு மட்டுமே உட்பட்டு இருந்தால், இந்த பரிமாணத்தை நீங்கள் தொடமுடியாது. மரணம் என்பதும், அதற்கு அப்பாற்பட்டதும் ஏதோ சொர்க்கத்திலோ நரகத்திலோ ஒளிந்துக் கொண்டிருக்கும் ரகசியம் அல்ல. அது, இங்கேயே, இப்போதே இருக்கிறது. மனிதர்கள் மற்ற விஷயங்களில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள், இதற்கு தேவையான கவனத்தை ஒருபோதும் அளிக்கவில்லை, அவ்வளவுதான்.

அவர்களது தொழில், அவர்களது உயிரை விடவும் முக்கியமாக இருக்கிறது. அவர்களது காதல் விவகாரங்கள் அவர்களின் உயிரைவிட முக்கியமாக இருக்கிறது. அருகில் இருப்பவரோடு நடந்த சில்லறை பிரச்சனைகள் அவர்களின் உயிரை விடவும் மிகவும் முக்கியமாக இருக்கிறது. எந்த மாதிரியான உடை அணிந்திருக்கிறோம் என்பது உயிரை விடவும் முக்கியமாக இருக்கிறது. இவை எல்லாம் வெறும் உதாரணங்கள்தான். நீங்கள் உயிரைப் பற்றி தவறான கருத்துகள் கொண்டிருப்பதால், அது உங்களுக்கு பிடிபடவில்லை. ஆனால் உண்மையில் உயிர் பிடிக்கொடுக்காமல் இல்லை, நீங்கள்தான் அதை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உயிர் உங்களைத் தவிர்க்கவில்லை, நீங்கள்தான் பல வகைகளில் அதை தவிர்க்க முயற்சிக்கிறீர்கள்.

வாழ்வின் கசப்பான, வலிநிறைந்த அனுபவங்கள் வாழ்க்கையால் உருவாக்கப்பட்டவை அல்ல. உங்களது மனதையும், உடலையும் நிர்வகிக்கும் திறனற்றவராக நீங்கள் இருப்பதால்தான் அது நிகழ்ந்தது. வாழ்க்கை எப்போதும் வலியையோ, வேதனையையோ உங்களுக்கு கொடுப்பதில்லை. அதற்குக் காரணம், உங்கள் உடலும், மனமும்தான். உங்கள் உடல் அமைப்பையோ, மன அமைப்பையோ எப்படி நிர்வகிப்பது என்று உங்களுக்கு தெரியவில்லை. இரண்டு அற்புதமான கருவிகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் நீங்கள் அவற்றை சொதப்பிவிட்டீர்கள். எல்லா வலிகளும், வேதனைகளும் உங்களிடம் இருந்துதான் வந்தது, வாழ்க்கையிலிருந்து அல்ல.

உயிருடன், உயிரின் இயல்புடன், உயிரின் மூலத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை, பிரக்ஞை - அந்த உணர்தலின் பரிமாணமே பிரக்ஞை. இவை இரண்டும் வேறு வேறல்ல, உயிர்த்தன்மைக்கு நாம் வழங்கும் இரண்டு பெயர்கள்தான். மூலம் என்ற ஒன்றில்லை, வெளிப்பாடு என்றும் இல்லை - எல்லாம் ஒன்றேதான். வாழ்க்கை என்றும், மரணம் என்றும் எதுவுமில்லை. இது வாழ்வுமில்லை, மரணமுமில்லை - இவை எல்லாம் கலந்த ஒரு ஆட்டம் இது. அதன்மீது ஒரு விளையாட்டை நீங்கள் ஆரம்பிக்கலாம், ஒருநாள் நிறுத்திவிடலாம். வாழ்வு என்பது ஆட்டம் ஆடுகிறது, நிறுத்திக்கொள்கிறது, ஆடுகிறது, நிறுத்திக்கொள்கிறது. ஆனால், அடிப்படையான உயிர்த்தன்மை ஏதோ ஒரு செயல் அல்ல, ஏதோ ஒரு நிகழ்வும் அல்ல. எப்போதும் இருக்கக்கூடிய ஒரு அற்புதம் இது. இதுதான் படைப்பின் அடிப்படை. இதுதான் படைப்பின் மூலம்.

கேள்வி: மரணத்திற்கு அருகில் சென்றுவிட்டது போன்ற நிகழ்ச்சி எனக்கு நடந்தது. ஒரு கார் என்மீது மோதுவதிலிருந்து சில வினாடிகளில் காப்பாற்றப்பட்டேன். அந்த சில வினாடிகளில், அனைத்துமே மிகவும் மெதுவாக slow-motionல் நடப்பது போலவும், அனைத்தையும் அதன் நுட்பத்துடனும் நான் உணர்ந்தேன். அந்த வினாடிகளை நான் ஏன் அப்படி உணர்ந்தேன்? நானாக கவனத்துடன் வாழ்க்கையை அந்த அளவிற்கு நுட்பமாக உணரமுடியுமா?

சத்குரு: ஒருமுறை இப்படி நடந்தது. அமெரிக்காவில் உள்ள இந்தியானா என்ற ஊரில் வயதானவர்கள் இரண்டு பேர் ஒரு பாரில் சந்தித்தார்கள். இரண்டு பேருமே வெவ்வேறு மேஜைகளில் உம்மென்று உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரை பார்த்தபோது, அவர் நெற்றியில் இருந்த மச்சத்தை கவனித்தார். உடனே அவரிடம் போய், “அட நீயா, நீ ஜோஷுவாதானே?” என்று கேட்டார். “ஆமாம், நான்தான். நீங்கள் யார்?” என்றார் அவர். என்னைத் தெரியவில்லையா? நான்தான் மார்க். போரின்போது நாம் ஒன்றாக இருந்தோமே!” அதற்கு அவர், “அட ஆமாம், ஓ மை காட்!” என்றார். சட்டென்று இருவரும் உற்சாகமாகி விட்டார்கள். அவர்கள் இரண்டு பேருமே இரண்டாவது உலகப் போரின்போது ஒன்றாக இருந்தவர்கள். அது முடிந்து ஐம்பது வருடங்கள் ஆகியிருந்தது.

இரண்டு பேருமே ஒரே மேஜையில், சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் வெகுநேரம் பேசினார்கள். ஐரோப்பாவில் இரண்டாவது உலகப் போரின்போது ஆபத்தான பதுங்கு குழிக்குள் இருந்தபடி நாற்பது நிமிடங்களுக்கு மிக பயங்கரமான சண்டையில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாற்பது நிமிடங்களைப் பற்றி மிகவும் விலாவாரியாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படியாக, எல்லாம் பேசிமுடித்த பிறகு, ஒருவர் இன்னொருவரைப் பார்த்து, “அப்புறம், இவ்வளவு நாளாக நீ என்னசெய்து கொண்டிருந்தாய்?” என்றார். “ஓ அதுவா, நான் வெறும் ஒரு சேல்ஸ்மேனாகத்தான் இருக்கிறேன்.” போரில் நிகழ்ந்த நாற்பது நிமிடங்களைப் பற்றி அவ்வளவு உற்சாகமாக இரண்டு மணி நேரத்திற்கு பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு நடந்த ஐம்பது வருட வாழ்க்கையை சும்மா ஒரே வரியில் “நான் வெறும் ஒரு சேல்ஸ்மேனாகத்தான் இருக்கிறேன்,” என்று முடித்துவிட்டார் பாருங்கள். இது இப்படித்தான் நடக்கிறது.

கல்லறைக்கான பயிற்சி

துரதிருஷ்டவசமாக, பெரும்பாலானவர்கள், போரோ அல்லது கார் விபத்தோ, மரணத்தை வைத்து அச்சுறுத்தினால்தான் உயிரோட்டமாகிறார்கள். மரணம் என்பதை பெரிய அளவில் எதிர்கொள்ளும்போதுதான், நீங்கள் முழுமையாக உயிரோட்டமாகிறீர்கள், இது துரதிருஷ்டமானதுதானே!. மரணத்தின் தன்மையை உண்மையாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ளும்போதுதான், உயிரோடு இருப்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம் என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

sadhguru-wisdom-article-sadhguru-quotes-on-death-07

நான் மனிதர்களை கவனிக்கும்போது, கல்லறையில் இருக்கும்போது அவர்கள் உடல் இருக்கும் விதம் எப்படி இருக்க வேண்டும், முக பாவனை எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் கல்லறைக்கு பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும். அவர்கள் மரணமடையக் கூடியவர்கள் என்று அவர்கள் உணர்வதில்லை. நாம் எப்போதும் இங்குதான் இருக்கப்போகிறோம் என்று நினைத்து, தாங்கள் உயிருடன் இருக்கும்போதே மரணத்திற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மரணத்தைக் கொண்டு பயம் ஏற்படுத்தும்போது உயிரோட்டமாகி விடுவார்கள். கிருஷ்ணர், அவருடைய போதனையை வழங்க ஏன் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தார்? ஆசிரமத்தின் அமைதியான சூழ்நிலையிலோ, இந்தியாவின் அழகான காடுகளிலோ, இமாலய குகைகளிலோ அல்லாமல், பாதகம் நிறைந்த போர்க்களத்தை தேர்ந்தெடுத்தார். ஏனென்றால், மரணத்தால் அச்சுறுத்தப்படாத வரையில், பெரும்பான்மையானவர்களுக்கு தங்கள் உயிரை நோக்கிட வேண்டும் என்ற புத்தி இருப்பதில்லை.

தானியங்கி கார்கள் வரும்போது, மக்களில் நிறைய பேர் ஞானோதயம் அடைந்துவிடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்! கொஞ்ச காலத்திற்குப் பிறகு அதன்மேலேயே அவர்கள் படுத்து உறங்கக்கூடும் என்பது வேறு விஷயம். ஆனால் ஆரம்பத்தில், அது ப்ரேக் பிடிக்குமா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது. அது சரியான சமயத்தில் நின்றுவிடுமா அல்லது மோதிவிடுமா என்று தெரியாது. தானியங்கி கார்கள் சட்டபூர்வமாகும் முதல் சில மாதங்களில், இந்த பூமியில் சில ஞானோதயங்கள் நிகழும் என்று நான் நினைக்கிறேன்! சில ஞானோதயம் அடைந்த மனிதர்களுக்காக நாம் தயாராக இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் மதிப்புணர்ந்து உயிரோட்டமாயிருங்கள்

come-alive-illustrative-image

கார் வந்து மோதுவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். நீங்கள் இப்போதுகூட இறந்துவிடலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இப்படி நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நீண்ட ஆயுளோடு இருக்க ஆசீர்வதிக்கிறேன். ஆனால் இது நடக்கக் கூடியதுதான். ஒவ்வொரு நாளும் நிறைய மனிதர்கள் அதுபோல இறக்கிறார்கள். உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு என்று பலவித நிலைகளில் இறக்கிறார்கள்.

நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று உணரும்போதுதான், சட்டென்று வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து அதற்கு உயிரோட்டமாக ஆகிறீர்கள். இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரும் தோற்றுப்போக மாட்டீர்கள், எல்லோரும் வெற்றி பெறுவீர்கள், கடந்து போவீர்கள் என்று நான் மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். வாழ்க்கையை சரியான விதத்தில் வாழாததினால், எவரும் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டதில்லையே! அனைவருமே கடந்துபோகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தாம் எதைக் கடக்கிறோம் என்பதை அறியாமலேயே கடந்து சென்றுவிடுவார்கள்.

கார் மோத இருந்த அந்த சில கணங்களில், நீங்கள் எதைக் கடக்கிறீர்கள் என்று அறிந்தீர்கள். மற்ற நேரங்களில் நீங்கள் அறிவதில்லை. தற்சமயம், உங்கள் மூளையின் கூத்து மற்ற எல்லாவற்றின் மீதும் கலந்து விழுந்து கிடக்கிறது. அதாவது, உங்களது அற்ப படைப்பு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த அற்புதமான படைப்பின் மீது விழுந்து கிடக்கிறது. உங்கள் அற்ப படைப்பு உடைந்து, உங்களால் யோசிக்கவோ, உணர்ச்சிகளை காட்டவோ முடியாத அந்த ஆபத்தான சூழ்நிலையில், சட்டென நீங்கள் உண்மையிலேயே உயிர்ப்புடன் இருப்பதாக உணரமுடியும்.

நாம் கற்றுக்கொடுக்கிற எல்லாவித யோகாவும், உங்களுக்கு தீட்சை அளிக்கப்படும் அத்தனை வழிமுறைகளும், உங்களது நாடகங்களிலிருந்து சற்றே தள்ளியிருக்க உதவி செய்து, இந்த அண்டத்தின் நாடகத்தை உங்களது அனுபவத்தில் கொண்டு வருவதற்காகத்தான். இது இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு வேறு எதுவுமில்லை.