சத்குரு:

ஒன்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்: உங்களால் உணரமுடிகின்ற ஒவ்வொன்றும் வாழ்வுதான்.

மரணம் என்று நீங்கள் அழைப்பதென்னவோ அதுகூட வாழ்வுதான். மரணத்தை வேறு எதுவாகவோ இல்லாமல், அதை வாழ்வாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

அப்படியென்றால், மரணம் குறித்து தேர்வு செய்யமுடியுமா? நிச்சயமாகத் தேர்வு செய்யமுடியும். மரணம் என்று எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அது வாழ்வின் இறுதிக்கணம்தான். உங்களது பொருள்தன்மையான உடலின் எல்லைகளை நீங்கள் கடக்கும் அந்த இறுதிக்கணம், உங்களது வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது. உங்கள் வாழ்வில் ஏறக்குறைய எல்லா விஷயங்களும் பல முறை நிகழக்ககூடும். ஆனால் இந்த ஒரு விஷயம் உங்களது வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் நிகழ்கிறது என்பதுடன் அதுவே நீங்கள் செய்கின்ற கடைசி விஷயமாகவும் இருக்கிறது. மரணத்தை வேறு எதுவாகவோ இல்லாமல், அதை வாழ்வாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உங்கள் வாழ்வின் கடைசி செயல். அதை (with grace)கம்பீரமாகவும், அற்புதமாகவும் நிகழச் செய்யுமாறு நீங்கள் தேர்வு செய்துகொள்வது மிகவும் முக்கியமானதல்லவா?

நீங்கள் அது குறித்த அச்சத்தில் இருந்தால், வாழ்வின் குறித்த அறியாமையில் இருந்தால், அதற்கு எதிர்ப்பு உருவாக்கினால், இயல்பாகவே நீங்கள் அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிடுவீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் அவர்களது மரணத்தின் காலம், தேதி மற்றும் இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். எப்போதும் ஒரு யோகி தன் மரணத்தின் நேரம் மற்றும் நாளை முன்கூட்டியே அறிந்துகொள்ள விரும்புகிறார். அவர் அதை முடிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன்பாகவே, “இந்த நாளில், இந்த நேரத்தில் நான் விட்டுச் செல்வேன்” என்று கூறுவதுடன் அவ்வாறே உடலை விட்டுச் செல்கிறார், ஏனென்றால் அதற்குத் தேவையான விழிப்புணர்வை தனக்குள் அவர் உருவாக்கியுள்ளார். இந்த உடலைப் பாழ்படுத்தாமல் முழு விழிப்புணர்வுடன் அதனை விடுவது, உங்களது ஆடைகளை அகற்றுவதைப்போல் நடந்தால், அதை உங்களால் செய்ய முடிந்தால், அதுதான் உங்கள் வாழ்வில் உச்சபட்ச சாத்தியக்கூறு. ஒரு உயிர் என்ற நிலையில் நீங்களும், நீங்கள் சேகரித்த இந்த பொருள் உடலும் எங்கே இணைந்துள்ளது என்பதை நீங்கள் அறியுமளவுக்கு உங்களது விழிப்புணர்வு வளர்ந்திருந்தால், அப்போது உங்களுக்கான சரியான கணத்தில் உங்களையே நீங்கள் விடுவித்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்பாடு தேவைப்படுகிறது. வாழ்வை வீணாக்கிவிட்டு, பிறகு மரணத்தை பயன்படுத்த முயற்சி செய்வதென்பது முடியாதது.

இது தற்கொலையா? நிச்சயமாக இல்லை. தற்கொலை என்பது கோபத்திலிருந்து, பயத்திலிருந்து, துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் திறனில்லாமையிலிருந்து நிகழ்கிறது. ஆனால் இதுவோ, வாழ்வு அதன் சுழற்சியை எப்போது நிறைவு செய்கிறது என்பதை நீங்கள் விழிப்புணர்வுடன் அறிந்துகொண்டு, அதிலிருந்து நீங்கள் வெளியேறிச் செல்வதைப் பற்றியது. மேலும் இது மரணம் என்பதிலும் அடங்குவதில்லை. ஒரு மனிதர் தான் சேகரித்த பௌதீக உடலிலிருந்து தன்னையே விலக்கிக்கொள்வதற்குப் போதுமான விழிப்புணர்வை தனக்குள்ளே வளர்த்துக்கொள்ளும் இந்தத் தன்மையானது சமாதி என்று அறியப்படுகிறது. விழிப்புணர்வின் அந்தத் தளத்தில், ஒருவரால் உடலை விட்டுச்செல்ல முடியும். அந்த அளவு விழிப்புணர்வை நீங்கள் அடையவில்லையென்றால், குறிப்பிட்ட சில விஷயங்களை நடத்தினால், அந்தக் கடைசி கணத்தைக் குறைந்தபட்சம் மிகுந்த கம்பீரமாகவும், இனிமையாகவும், ஆனந்தம் நிரம்பியதாகவும், பரவசத்துடனும் உங்களுக்கு நீங்களே நடத்திக்கொள்ள முடியும்.

இந்தத் தேர்வை நீங்கள் நடைமுறைப்படுத்த விரும்பினால், ஒரு குறிப்பிட்ட அளவு தயார் நிலை தேவைப்படுகிறது.

வாழ்வை வீணடித்துவிட்டு, மரணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்வது என்பது உங்களால் முடியாதது.

உங்களது வாழ்க்கை முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வுடன் நீங்கள் வாழ்ந்திருந்தால், கடந்து செல்லும் கணமும்கூட விழிப்புணர்வில் நிகழமுடியும். விழிப்புணர்வில்லாத ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துவிட்டு, அந்தக் கணத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அப்படிப்பட்ட விஷயங்கள் மக்களுக்கு நிகழ்வதில்லை.

இதனைச் செய்யுங்கள்!

இன்றிரவு இதைப் பயிற்சி செய்யுங்கள், உறக்கத்திற்குள் நழுவும் அந்தக் கடைசி கணம் – விழிப்பு நிலையிலிருந்து தூக்கத்துக்குள் செல்லும் அந்தக் கடைசி கணத்தில்- உங்களது விழிப்புணர்வு நிலையில் இருந்து பாருங்கள். உங்களது வாழ்வை அதிசயிக்கத்தக்க விதமாக அது மாற்றிவிடும். தினமும் இதை ஒரு வழிமுறையாகவே செய்திடுங்கள். சில நாட்களில், அந்த கடைசிக் கணத்தில் நீங்கள் விழிப்புடன் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். சட்டென்று, உங்கள் வாழ்க்கை குறித்த எல்லா விஷயங்களும், உங்கள் வாழ்வின் அடிப்படையான தன்மையே இந்த ஒரு எளிய விஷயத்தைச் செய்வதிலேயே மாறிப்போகும். விழிப்பிலிருந்து தூக்கத்துக்கு விழிப்புணர்வுடன் நீங்கள் நகர்ந்து செல்லப் பழகிவிட்டால், வாழ்விலிருந்து மரணத்துக்கு நழுவும் அந்த இறுதிக் கணமானது உங்களுக்கு முற்றிலும் அழகாக நிகழும். இதற்கு மற்ற வழிமுறைகளும் உண்டு.

இந்தியாவில், பாரம்பரியமாகவே மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் அண்மையில் இறப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் உங்களது குடும்பத்தினர் மத்தியில் நீங்கள் இறந்தால், பல உணர்ச்சிகள் மேலோங்கி இருக்கும். அப்போது இயல்பாகவே நீங்கள் வாழ்வுடன் பற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள். மென்மையும், கம்பீரமுமாக அது நிகழ்வதற்கு நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ஆகவே, ஆன்மீக அதிர்வு கொண்டதாகக் கருதப்படும் தொலைதூரப் பிரதேசங்களுக்குப் பயணித்து, அந்த வெளியில் தங்கள் உடலை உதிர்க்க விரும்புகின்றனர். இன்றைக்கும்கூட, இன்னமும் இதனை மக்கள் செய்து வருகின்றனர். மேற்கில் இது முற்றிலும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கலாம், ஏனெனில் அங்கு மக்கள் தங்களது குடும்பத்தினரின் அரவணைப்பான சூழலில் இறக்க விரும்புகின்றனர். அது அறிவார்ந்த ஒன்றல்ல. ஆன்மீகத் தன்மையும், குறிப்பிட்ட அதிர்வுகளும் கொண்ட ஒரு வெளியைத் தேர்ந்தெடுத்து, கூடுமானவரை மென்மையாக உடலை விடுவதுதான் புத்திசாலித்தனம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் அழகாக வாழ்ந்திருந்தால், அதே அழகுடன் நீங்கள் இறப்பதும் மிக முக்கியமான ஒன்றே.