'சமாதி' என்ற வார்த்தை எப்போதும் சாவுடனேயே தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் இன்றைய நிலையில், சமாதி எனும் நிலையைப் பற்றி சத்குரு உரையின் தொகுப்பு இங்கே பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

சமாதிநிலையில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. என்றாலும், புரிந்து கொள்வதற்கு எளிதாக அவை எட்டு வகைகள் என்று வகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த எட்டும், சவிகல்ப மற்றும் நிர்விகல்ப சமாதி நிலைகளுக்குள், அதாவது தன்னியல்பு உள்ள, தன்னியல்பற்ற சமாதி நிலைகளுக்குள் அடங்கும்.

நீங்கள் ஒரு நிலையிலான அனுபவத்திலிருந்து, மற்றொரு நிலையிலான அனுபவத்திற்கு, இன்னும் ஆழமான அழுத்தமான அனுபவ நிலைக்கு நகர்கிறீர்கள். என்றாலும், இது மற்றுமொரு அனுபவநிலை தான்.

ஈஷா யோகாவில், பலர் பலவிதமான சமாதி நிலைகளுக்குச் செல்வதைப் பார்க்கிறோம். இங்கு சவிகல்ப சமாதிநிலைகளும் நிகழ்கின்றன, நிர்விகல்ப சமாதிநிலைகளும் நிகழ்கின்றன. சமாதி என்பது குறிப்பிட்ட வகையான ஒரு உள்ளச் சமநிலை. அந்நிலையில் புத்தி தனது பிரித்துப் பார்க்கும் தன்மையைத் தாண்டிச் செல்வதால், உடலிலே நீங்கள் பிணைக்கப்பட்டிருக்கும் அந்த இறுக்கம் சற்றே தளர்வடைகிறது. சமாதி நிலைகளில், ஒருவர் தன் உடலுக்குள்ளேயே தனிப்படுகிறார் அதாவது நீங்கள் என்பதற்கும், உங்கள் உடலுக்கும் நடுவே ஒரு இடைவெளி ஏற்படுகிறது. ஞானமடைதலைப் பொறுத்தவரையில், இது போன்ற சமாதி நிலைகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் எதுவும் கிடையாது. சமாதி நிலையை உணர்வதால், நீங்கள் பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம் இல்லை. இது நம் அனுபவத்தின் அடுத்த நிலை, அவ்வளவுதான்.

இது, நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு ஒரு விதமான அனுபவம் ஏற்பட்டது, இளமைப் பருவத்திற்கு நகர்ந்தபோது, மற்றொரு விதமான அனுபவம் ஏற்பட்டது என்பதைப் போலத்தான். அதே பொருட்களோ, சம்பவங்களோ வாழ்வின் ஒரு தருணத்தில் எப்படி உணர்ந்தீர்களோ, அதுவே சில வருடம் கழித்து முற்றிலும் வேறு வகையாக உணர்வீர்கள். அதாவது ஒரு நிலையிலான அனுபவத்தினின்று அடுத்த நிலையிலான அனுபவத்திற்கு நகர்ந்திருக்கிறீர்கள்.

சமாதிநிலைகளும் இது போலத்தான். நீங்கள் ஒரு நிலையிலான அனுபவத்திலிருந்து, மற்றொரு நிலையிலான அனுபவத்திற்கு, இன்னும் ஆழமான அழுத்தமான அனுபவ நிலைக்கு நகர்கிறீர்கள். என்றாலும், இது மற்றுமொரு அனுபவநிலை தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

சிலர் ஒரு குறிப்பிட்ட நிலையிலான சமாதிநிலைக்குள் சென்று, அதில் மிக மகிழ்ச்சியாக உணர்வதால், அந்நிலையிலேயே வருடக்கணக்காக இருந்து விடுவார்கள். அங்கு கால-நேர வரையறைகள் கிடையாது. உடல் சார்ந்த பிரச்சனைகளும் கிடையாது. இதனால் உடலளவிலும், மனதளவிலுமான எல்லைகளை ஓரளவிற்கு அவர்கள் உடைத்துவிடுகிறார்கள் என்றாலும், இது தற்காலிகமானதுதான். அந்நிலையில் இருந்து வெளி வரும் அக்கணத்திலிருந்து, பசி, தூக்கம் என பலவும் மீண்டும் துவங்கி விடும்.

சமாதிநிலையால் சில நன்மைகள் நிச்சயமாக இருக்கின்றன. அந்நிலைகளில் ஒருவருக்கு கிடைப்பதற்கு நிறைய இருக்கிறது என்றாலும், ஞானமடைதலுக்கு அருகே அவரை அது எவ்வகையிலும் கொண்டு செல்லாது. உதாரணத்திற்கு, நிதானத்தில் இருக்கும் ஒருவரைவிட, மதுபான மயக்கத்தில் இருப்பவரின் அனுபவம், எவ்வளவு தற்காலிகமாக இருந்தாலும், சற்றே அடுத்த நிலையில் தான் இருக்கும். என்னைக் கேட்டால், எல்லா சமாதிநிலைகளுமே, வெளி ரசாயனங்களின் துணை இன்றி மேன்நிலை அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வழிகள் என்று சொல்வேன். இந்த நிலைகளுக்குப் போகும்போது, உங்களுக்கு புதிய பரிமாணங்களை அது திறந்துவிடுகின்றது என்றாலும் அதனால் பெரிய மாற்றங்கள் எதுவும் நேர்ந்துவிடாது. உங்களை நிரந்தரமாக அது மாற்றியமைக்காது.

உங்கள் லட்சியத்தை நிர்ணயித்துவிட்டால், ஞானமடைவதைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லை என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன் பின், அந்நிலைக்கு அருகே கூட்டிச் செல்லாத எதுவுமே அர்த்தமற்றது.

நீங்கள் வேறொரு மாறுபட்ட உண்மைநிலைக்கு சென்றுவிடவில்லை. அதே நிலையில், உங்கள் அனுபவம் மட்டும் ஆழமாகியிருக்கிறது. அதே விஷயங்களை இன்னும் ஆழமான நிலையில் உணர்ந்திருக்கிறீர்கள், ஆனால், மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபெறவில்லை.

இப்போது ஒருவர் 12 வருடம் தியானம் செய்துவிட்டு வெளி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 12 வருடங்கள் கழிந்திருந்தாலும், அவர் ஞானமடைந்தவராக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஒருவேளை அந்நிலைக்குச் சற்று அருகில் அவர் நகர்ந்து இருக்கலாம். நீங்கள் வேறொரு உண்மை நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே பல மணிநேரமோ, நாட்களோ இருந்துவிட்டால், உங்கள் மீதான தற்போதைய உண்மை நிலையின் பிடி, சற்றே தளர்ந்து போகக்கூடும். அந்நிலையில் நீங்கள், அனுபவரீதியாக 'நான் இதுவல்ல' என்று உணர்ந்திருப்பீர்கள். வெறும் அறிவிலே புரிந்து கொண்டதல்ல, அனுபவித்திலேயே 'நான் இதுவல்ல' என்பதை உணர்ந்துவிட்டீர்கள். இதுதான் நீண்ட தியானங்களின் உண்மையான நோக்கம். இருப்பினும், பெரும்பாலான ஞானிகள் சமாதி நிலைகளுக்கே சென்றதில்லை.

கௌதமர் 12 வருடங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்ததே இல்லை. அவரது சீடர்களுள் பலர், புத்தத் துறவிகள் பலர் மிக நீண்ட தியானங்களில் அமர்ந்திருக்கின்றனர். வருடக்கணக்கில் வெளி வராமல் தொடர்ந்து தியானத்தில் இருந்திருக்கின்றனர். ஆனால் கௌதமர் எப்போதுமே அப்படி தியானம் செய்ததில்லை, அது தேவையானதல்ல என்று அவர் அறிந்திருந்தார்.

தான் ஞானமடைவதற்கு முன்பு, எட்டுவிதமான சமாதிநிலைகளையும் பயிற்சி செய்து பிரவேசித்தும், கௌதமர் அவற்றை ஒதுக்கி விட்டார் - 'இதுவல்ல' என்றுவிட்டார். இது ஞானமடைவதற்கு அருகில் உன்னை கொண்டு செல்லப் போவதில்லை. இதன் மூலம் அடுத்த நிலையிலான அனுபவத்திற்குத் தான் உயர்கிறாய், இன்னும் சொல்லப்போனால், தற்போதிருக்கும் நிலையை விட இந்நிலை இன்னும் சற்றே அழகாக, ரம்மியமாக இருப்பதால், இதிலே சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கிறது.

உங்கள் லட்சியத்தை நிர்ணயித்துவிட்டால், ஞானமடைவதைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லை என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன் பின், அந்நிலைக்கு அருகே கூட்டிச் செல்லாத எதுவுமே அர்த்தமற்றது. உதாரணத்திற்கு, நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைய ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு அடி கூட பக்கவாட்டில் எடுத்து வைக்க மாட்டீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு துளி சக்தியும் ஏறுவதற்கு மிகவும் அவசியம். அதேபோல், உங்கள் சுய உணர்வுநிலையைக் கடந்து செல்லவேண்டும் என்றால், உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு துளியும் அவசியம், ஏன், அதுவும் கூடப் போதாது. எனவே, எதை செய்தாலும், அது நம் கவனத்தை திசை திருப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சமாதி நிலைகளை மிக இயல்பாக அடையும் வகையில், சக்தி நிறைந்த இடங்களை நாம் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். சில சமாதிநிலைகள் ரம்மியமாக, சிலவை ஆனந்தமாக, சிலவை பேரானந்தமாக, வேறு சில இவற்றைத் தாண்டியும் இருக்கும். இனிமையான, இனிமையற்ற என்ற சமாதி நிலைகளைத் தாண்டிய (அ) நிர்விகல்ப சமாதிநிலையை அடைபவர்களை, நாம் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்போம். இது ஏனென்றால், உடலோடு அவர்களுக்கு இருக்கும் தொடர்பு மிகக் குறைவாக இருக்கும். இதனால் மிகச் சிறிய சலனமும் கூட, ஒரு சப்தமோ அல்லது குண்டூசி லேசாக குத்தினாலோ கூட, உடலோடு அவர்களுக்கு இருக்கும் அந்த மெல்லிய தொடர்பும் அறுந்து அவர்கள் உடலை விட்டு வெளியேறி விடுவார்கள். நீங்கள் வேறு, உங்கள் உடல் வேறு என்ற வித்தியாசத்தை தெளிவாக ஆழமாக நீங்கள் உணர்வதற்கு இந்த சமாதி நிலைகளை சில காலம் வைத்திருக்கலாம். இது ஒருவருடைய ஆன்மீக வளர்ச்சியில் முக்கியமான படிநிலை, என்றாலும் இதுவே இறுதியானது அல்ல.

YIM Hafiz@flickr