சத்குரு: இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அற்புதமானதாய் அமையட்டும்!

காலம் என்பது பலருக்கும் பல விஷயங்களாக இருக்கிறது. சிலர் காலத்தை சுமையாக சுமக்கிறார்கள். ஒரு குழந்தைக்கும் வயதில் மூத்தவருக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால், குழந்தையின் உற்சாகமான உயிருக்கும், வயதில் மூத்தவர்கள் பலரின் சோர்வடைந்த உயிருக்கும் இடையே அடிப்படையில் உள்ள வித்தியாசம், காலத்தின் சுமையே. உங்கள் ஞாபகங்களை எப்படி சுமப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் மட்டும்தான் காலம் என்பது சுமையாக மாறமுடியும். 2019 - இன்னொரு ஆண்டு முடிந்துவிட்டது - இதை ஒருவர் சுமக்கவேண்டிய இன்னொரு ஆண்டாகவும் பார்க்கலாம். ஆனால் ஆண்டு என்பது காலத்தை அளவிடும் குறியீடு மட்டுமே. ஆண்டுகள் உதிர்ந்துகொண்டே செல்கின்றன என்பதுதான் உண்மை. இன்னொரு ஆண்டு சென்றுவிட்டது என்றால், சுமப்பதற்கு ஒரு ஆண்டு குறைந்துள்ளது. அது உங்களை லேசாக்கிட வேண்டாமா? வரும் ஆண்டை நீங்கள் கொண்டாடலாம் அல்லது இறந்து கடந்துசென்ற ஆண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கையாள ஒரு ஆண்டு குறைந்துள்ளது என்பதையும் நீங்கள் கொண்டாடலாம்.

முக்கியமானது என்னவென்றால், ஒரே சமயத்தில் வாழ்வையும் மரணத்தையும் அனுபவிக்கும் விதமாய் நீங்கள் இங்கு இருக்கவேண்டும்.

நான் விரும்புவது, உங்கள் தீவிரத்தையும் ஈடுபாட்டையும் கொண்டு நீங்கள் வாழ்க்கையை அளவிட வேண்டும். 2019 உங்களுக்கு வாழ்க்கையுடன் ஈடுபாடாக இருந்த ஆண்டாக இருந்ததா? அல்லது உங்களை சிக்கிப்போகச் செய்ததா? இவ்வளவுதான் நீங்கள் பார்க்கவேண்டும். ஏனென்றால், அடிப்படையில் உங்களுக்கு முக்கியமான விஷயங்கள் வாழ்வும் சாவும் மட்டும்தான், மற்றவையெல்லாம் எதேச்சையாக நிகழ்பவை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மரணத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல், மிகவும் எதிர்மறையான சொல்லாக மாறிவிட்டது. மக்கள் மரணத்தை மிகக் கொடூரமானது என்று நினைக்கின்றார்கள். நீங்கள் கொடூரமானது என்று நினைக்கும் ஒன்றை உங்களால் அரவணைக்க முடியாது, இல்லையா? இந்த மனப்பான்மையை நீங்கள் மாற்றவேண்டும். மரணம் என்றால் என்ன என்பதை நீங்கள் சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும். அது வாழ்க்கைக்கு எதிரானது அல்ல. வாழ்க்கை நிகழ்வதே மரணம் இருப்பதால்தான். இது உங்களுக்கு சரியாகப் புரிந்தால், இரண்டையும் நீங்கள் அரவணைக்க முடியும்.

இறக்கக்கூடியவர்கள் யாரோ, அவர்கள் மட்டுமே வாழ்வார்கள்.

இந்த பூமி அல்லது படைப்பின் சரித்திரத்தில், நீங்கள் உயிருடன் இருப்பது மிகக் குறுகிய காலத்திற்கே. எஞ்சிய காலம் முழுவதும் நீங்கள் இறந்துதான் இருக்கிறீர்கள். எனவே, உங்கள் ஆயுள் தண்டனை மிக நீண்டது அல்ல. நீங்கள் எவ்வளவு காலம் இறந்து இருக்கிறார்கள் என்பதுடன் ஒப்பிடும்போது, வாழும் காலம் மிக மிகக் குறுகியது. நீங்கள் நீண்டகாலம் இறந்து இருப்பதால்தான், இப்போது பிரகாசமாக ஜொலிக்கிறீர்கள். இந்த ஜொலிப்பு சாத்தியமாக இருப்பது, நீங்கள் மீண்டும் நீண்ட காலத்திற்கு இறந்து இருப்பீர்கள் என்பதால்தான். "இது பெரிதா, அது பெரிதா" எனும் கருத்து மிகவும் அற்பமானது. அடிப்படையில் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், ஆண்தன்மை - பெண்தன்மை, வாழ்வு - சாவு, இருள் - ஒளி, சப்தம் - நிசப்தம், இவையனைத்திலும் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. இவை ஒன்றையொன்று முழுமையாக்குகின்றன, இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.

நீங்கள் இப்போது உயிருடன் இருப்பது குறுகிய காலத்திற்கே, ஆனால் இந்த குறுகிய காலத்தை மட்டும் அரவணைத்து மீதியை அரவணைக்க மறுத்தால், அப்படி வேலை செய்யாது, ஏனென்றால் இது முழுவதும் ஒன்றே. இது வாழும் மரணம். முக்கியமானது என்னவென்றால், ஒரே சமயத்தில் வாழ்வையும் மரணத்தையும் அனுபவிக்கும் விதமாய் நீங்கள் இங்கு இருக்கவேண்டும். வாழும் மரணம் என்றால் இதுதான். உங்கள் வாழ்க்கை மதிப்புள்ளதாக இருப்பது, நீங்கள் இறப்பீர்கள் என்பதால்தான். நீங்கள் இறக்கவே மாட்டீர்கள் என்றால், இந்த வாழ்க்கைக்கு ஏதேனும் கவனம் கொடுப்பீர்களா? இறக்கக்கூடியவர்கள் யாரோ, அவர்கள் மட்டுமே வாழ்வார்கள்.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், எவராவது ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள். இந்தியாவில் இதுதான் கலாச்சாரம், ஒரு இறந்த உடலை எரியூட்டவோ, அடக்கம் செய்யவோ கொண்டுசென்றால், மூன்று அடிகளாவது அந்த ஊர்வலத்தோடு நீங்களும் சேர்ந்து நடக்கவேண்டும். அதன்மூலம் மறைமுகமாக "நான் உங்களுடன் இருக்கிறேன்" என்பதைச் சொல்கிறீர்கள். இது இறந்தவருக்கு மரியாதை, இறந்தவருக்கு நெருக்கமாக வாழ்பவர்களுக்கு பச்சாதாபம்.

யோகா என்ற சொல்லுக்கு சங்கமம் என்று பொருள் - அதாவது உங்களுக்குள் வாழ்வும் மரணமும் ஒன்றாகிவிட்டது.

மரணம் என்பது நீங்கள் தேர்வு செய்வது அல்ல - அது தவிர்க்க முடியாதது. இது படைத்தவனின் விருப்பத்தால் நிகழ்வது. வாழ்க்கை என்பது நாம் தேர்வுசெய்வது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த விரும்பினால், வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் நீங்கள் ஒன்றாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். வாழ்க்கையின் ஜொலிப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, உங்களை உருவாக்கியது எதுவோ, உங்களுக்கு அடிப்படையானது எதுவோ, அதை ஏற்க மறுத்தால், உங்கள்முன் வாய்ப்புகள் எதுவும் இருக்காது. அப்போது நிர்ப்பந்தத்தால் செயல்படும் சக்தியாக நீங்கள் மாறிவிடுவீர்கள்; வாழ்வையும் மரணம் போல வாழ்வீர்கள் - வேறுவழியின்றி, விழிப்புணர்வின்றி வாழ்வீர்கள், உங்கள் தேர்வினால் வாழமாட்டீர்கள். இந்த வாய்ப்பினை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனைத்தையும் அரவணைத்துக்கொள்ள வேண்டும் - வாழ்வை அரவணைப்பது போலவே, மரணத்தையும் அரவணைக்க வேண்டும்; அனைத்தையும் அரவணைக்க வேண்டும்.

யோகாவில் ஒவ்வொரு சுவாசத்தையும் கூட இப்படித்தான் பார்க்கிறோம் - உள்மூச்சு என்பது வாழ்க்கை அல்லது பிறப்பு; வெளிமூச்சு என்பது மரணம். ஒரே சுவாசத்தில், ஒரே சமயத்தில், வாழ்வும் மரணமும் எப்போதும் ஒருசேர நிகழ்ந்தபடி உள்ளது - இதுதான் யோகாவின் இலக்கு. யோகா என்ற சொல்லுக்கு சங்கமம் என்று பொருள் - அதாவது உங்களுக்குள் வாழ்வும் மரணமும் ஒன்றாகிவிட்டது. இவ்விரண்டும் உங்களுக்குள் வெவ்வேறாக இல்லை, நீங்கள் வாழும் மரணமாக இருக்கிறீர்கள். நீங்கள் வாழும் மரணமாக இருந்தால், அதன் விளைவு, ஒரு அற்புதமான வாழ்க்கை. ஏனென்றால், மண்ணை கவனிக்காமல் ஒரு மரத்தால் வளர முடியுமா? நீங்கள் உண்மையாகவே உயிர்ப்பாக இருக்க விரும்பினால், உங்கள் இருப்பின் தன்மையையே நீங்கள் நிர்ணயிக்கும் அளவு உயிர்ப்பாக இருக்க விரும்பினால், நீங்கள் வாழும் மரணமாக இருப்பது முக்கியம், நீங்கள் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது முக்கியம். இதை நீங்கள் பிரிக்கப் பார்த்தால், இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் நீங்கள் நிற்பதற்கு அடித்தளம் இல்லாமல் போய்விடும். காலங்களைக் கடந்த மரணத்தின் அடித்தளம் இல்லாவிட்டால், நீங்கள் தற்போது உயிர் வாழ்வதிலுள்ள ஜொலிப்பு சாத்தியமாகாது.

விழிப்புணர்வாக இரண்டையும் அரவணைத்தால் மட்டுமே, வியக்கத்தக்க விதங்களில் நீங்கள் உயிர்ப்பாக மாறுவீர்கள், அது இந்த உயிரை பிரகாசமான இருப்பாக மாற்றும். நீங்கள் செய்யும் செயல்களால் அல்ல, நீங்கள் இருக்கும் விதத்தாலேயே பிரகாசமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களுக்குள் இருக்கும் விதமே பிரகாசமாக மாறமுடியும்.

இந்த 2020ம் ஆண்டு அனைவருக்கும் பிரகாசமான அனுபவமாக இருக்கட்டும்.

அன்பும் அருளும்,