சத்குரு: நான் புத்தர் என்று கூறினால், புத்தராக இருந்த கௌதமரை மட்டும் நான் குறிப்பிடுவதாக பெரும்பாலான மக்களும் இன்றைக்கு நினைத்துக்கொள்கின்றனர். கௌதமர் மட்டும்தான் புத்தராக இருந்தார் என்பது இல்லை. அவருக்கு முன்னால் பலர் இருந்தனர், அவரது சமகாலத்திலும் பலர் இருந்தனர், அவருக்குப் பிறகும் பலர் புத்தராக இருந்தனர். புத்தர் என்பது அவரது பெயர் அல்ல. புத்தரின் இயற்பெயர் கௌதம சித்தார்த்தன் என்பதுதான். அவர் ஒரு புத்தனாக உருவெடுத்தார். 'பு' என்ற சொல்லுக்கு புத்தி அல்லது காரண அறிவு என்பது பொருள். தனது காரண அறிவைக் கடந்திருக்கும் ஒருவர் புத்தராகிறார்.

கௌதமர், "இதிலெல்லாம் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?" இந்த உடல் முதுமை அடையப்போகிறது, இது நோய்வாய்ப்படக் கூடும், மேலும் இது நிச்சயமாக இறந்துவிடும். "என் வாழ்க்கை முழுவதையும் நான் இதில் ஏன் முதலீடு செய்கிறேன்?" என்று சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினார்.

கௌதமரின் பெயரைக் கேள்விப்படாதவர் அனேகமாக இவ்வுலகில் எவரும் இருக்கமாட்டார்கள். புத்தராக பலர் இருந்துள்ளார்கள் என்றாலும், இவரது பெயரே நீடித்து நிலைத்துள்ளது. அவர் மாபெரும் ஆன்மீக அலைகளுள் ஒருவராக இருந்துள்ளார் என்பதுடன், இந்த பூமியின் மிக வெற்றிகரமான ஆன்மீக குருவாகவும் இருந்துள்ளார். அவர் வாழும் காலத்திலேயே, அவருடன் 40,000 துறவிகள் இருந்தனர். அவரது இந்த துறவிகளின் படைகள் எல்லா இடங்களுக்கும் சென்று ஒரு ஆன்மீக அலையை உருவாக்கினார்கள். அவர் மிகவும் புதியதாக எதையும் செய்யவில்லை. ஆனால் சமூகத்திற்கு செயல்படும் விதத்தில் அவர் ஆன்மீகத்தை வழங்கினார். உலகின் அந்தப் பகுதியில், அதுவரைக்கும் ஆன்மீக செயல்முறைகள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே வழங்கப்பட்டன என்பதுடன், சமஸ்கிருத மொழி ஒரு குறிப்பிட்ட மக்கள் சமுதாயத்துக்கு மட்டுமே கிடைக்கும்படி இருந்தது. மற்றவர்கள் அதைக் கற்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இந்த மொழி தெய்வீகத்தின் திறவுகோலாகப் பார்க்கப்பட்டது. முதல்முறையாக கௌதமர் அக்காலத்தின் வழக்குமொழியாக இருந்த பாலி மொழியில் பேசினார். அவர் அனைத்து விதமான மக்களுக்கும் ஆன்மீகத்தை மடை திறந்த வெள்ளமெனத் திறந்தார்.

#1. புத்தராகிய கௌதமரின் இளம்பிராய வாழ்க்கை

buddha tamil story,  புத்தர் கதை

கௌதமர் ஒரு சிறிய ராஜாங்கத்தின் இளவரசனாக இருந்தார். அவர் பிறந்தபோது, ஒரு யோகியின் கணிப்பின்படி, கௌதமர் ஒரு சிறந்த பேரரசனாகவோ அல்லது ஒரு மகத்தான துறவியாகவோ வருவார் என்று கூறப்பட்டது. இந்தக் கணிப்பினால், கௌதமரின் தந்தை சற்றே பரபரப்புக்கு உள்ளானார். கௌதமர் ஒரு துறவியாவதை அவரது தந்தை விரும்பவில்லை. அவர் ஒரு மாபெரும் பேரரசராக ஆகவேண்டும் என்றே விரும்பினார். ஏதேனும் துன்பம் அல்லது துயரத்தைக் காண நேர்ந்தால் அவர் ஒரு துறவியாக மாறக்கூடும் என்று நினைத்தார். எனவே கௌதமர் முழுமையான இன்பத்தில் திளைத்திருக்குபடி - சிறந்த உணவு, உடை மற்றும் உல்லாசங்களின் பிடியில் அவரை வைத்திருந்தார். அவருக்கு பத்தொன்பது வயது ஆகும்போது, மிக அழகான ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்வித்து, சமூகத்தின் சந்தடிகளிலிருந்து விலகியிருந்த ஒரு அரண்மனையில் கௌதமரைத் தனியாக வைத்திருந்தார், அங்கு அவர் இன்பமுடன், எந்தவகையான துன்பங்களையும் காணாதவராக வாழ்ந்தார். ஒருநாள் கௌதமர் தன்னை நகர்வலம் அழைத்துச் செல்லுமாறு தேரோட்டியிடம் கேட்டார். 

அவர் நகர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, முதுமையடைந்த ஒரு மனிதரை கண்டார். அதுவரையிலும் அவர் வாழ்வில் முதுமையடைந்த ஒரு மனிதரை ஒருபோதும் கண்டதில்லை. அவரது தந்தை இவை எல்லாவற்றிலிருந்தும் அவரைப் பாதுகாத்து வைத்திருந்தார். கௌதமர், "அவருக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார். தேரோட்டி கூறினார், "ஓ, அவர் வயதான ஒருவர்," என்றார். "இது எப்படி நேர்கிறது?" என்று கௌதமர் கேட்டார். தேரோட்டி, "எல்லோருக்கும் ஒருநாள் முதுமை ஏற்படும்," என்றார். கௌதமர் தன்னைத்தானே பார்த்துக்கொண்டார்; அவர் ஒரு இளைஞராக இருந்தார். "என்ன, எனக்கும் கூடவா?" என்று வினவினார். தேரோட்டி கூறினார், "ஆமாம், அனைவருக்கும் முதுமை வருகிறது. அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் அவர்களுக்கு முதுமை ஏற்படுகிறது." "நான் இப்படி ஆகிவிடுவேன்" என்று அறிந்துகொண்டது, கௌதமருக்கு ஒரு மாபெரும் உணர்தலாக இருந்தது.

நகர்வலத்தின் போக்கில், பின்னர் அவர் ஒரு நோய்வாய்ப்பட்ட நபரைக் காண நேர்ந்தது. நோயின் பாதிப்பினால் மிகுந்த துன்பத்தில் எழுந்திருக்க முடியாமல் ஒருவர் வீதியில் படுத்துக்கிடப்பதை கௌதமர் கண்டார். உடனே அவர், "தேரை நிறுத்து! இந்த மனிதருக்கு என்ன?" "அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்," என்று கேட்டார். தேரோட்டி, "ஓ, இவரா, துரதிருஷ்டவசமாக இவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார்," என்று பதில் கூறினார்.கௌதமர் ஏதும் புரியாதவராக, "அப்படி என்றால் என்ன?" என்று வினவினார். தேரோட்டி, "உடல் சிலசமயம் நோய்வாய்ப்படும், இது அனைவருக்கும் ஏற்படும்" என்றார். கௌதமர், "எனக்குக் கூடவா, நான் ஒரு இளவரசன், இது எனக்கு நிகழ முடியுமா?" என்று கேட்டார். தேரோட்டி, "இது யாருக்கும் ஏற்படலாம்" என்றார். அப்போது கௌதமர், "ஓ, நானும் இப்படி ஆகமுடியும்," என்று புரிந்துகொண்டார். ஆயினும், இந்த அறிதல்களால் அவர் முற்றிலும் குழம்பிப் போனார். பின்னர் அவர்கள் மேலும் சற்றுதூரம் சென்றவுடன், ஒரு இடத்தில் இறுதி யாத்திரை செல்வதை கௌதமர் கண்டார். அவர்கள் ஒரு மனிதனின் சடலத்தைச் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். கௌதமர், "அந்த மனிதருக்கு என்ன நிகழ்ந்தது?" என்றார். தேரோட்டி, "அவர் இறந்துவிட்டார்" என்றார். கௌதமர், "அப்படியென்றால் என்ன அர்த்தம்?" தேரோட்டி, "விதிவிலக்கு இல்லாமல் இது அனைவருக்கும் நடக்கும்" என்றார். கௌதமர், "நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? உண்பது, இன்பம் அனுபவிப்பது என்று எல்லா முட்டாள்தனத்தையும் மட்டும் செய்கிறேன்! என்னுடன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?" கௌதமர் தனக்குள் கலக்கமடைந்தார். சட்டென்று, தான் ஒரு இளவரசனாக இருப்பதும், இந்த அரண்மனை வாழ்வின் இன்பங்களும் அவரிடமிருந்து விலகிச் செல்வதை உணர்ந்தார்.

கௌதமர், "இதிலெல்லாம் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?" இந்த உடல் முதுமை அடையப்போகிறது, இது நோய்வாய்ப்படக் கூடும், மேலும் இது நிச்சயமாக இறந்துவிடும். "என் வாழ்க்கை முழுவதையும் நான் இதில் ஏன் முதலீடு செய்கிறேன்?" என்று சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினார். ஆனால் இதற்குள் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவரால் இந்த அன்பான மனைவியையும், அழகான சிறுகுழந்தையையும் விட்டு வெளியேற முடியவில்லை. அவர் தன் சிந்தனையுடன் போராடினார்.

இந்த இடைவெளியில், சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கடந்துவிட்டிருந்தது. சிறுவனுக்கு ஒன்றரை வயது இருக்கும்போது, கௌதமரால் அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒரு நள்ளிரவில் யாரிடமும் சொல்லாமல் ஒரு திருடனைப் போல, அரண்மனையில் இருந்து நழுவி, திரும்ப வரும் எண்ணமின்றிப் புறப்பட்டார். "இந்த வாழ்வைப் பற்றிய உண்மையை நான் அறிய விரும்புகிறேன்" என்ற தேடலில் அவர் நடக்கலானார்.

ஞானோதயம் அடைவதற்கான புத்தரின் பாதை

அப்போது இந்தியாவில் பல்வேறு பயிலகங்கள் நிறுவப்பட்டிருந்த ஒரு காலகட்டமாக இருந்தது. ஒரு கட்டத்தில் 1800 க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஆன்மீக வழிமுறைகள், 1800 மாறுபட்ட வகையான யோக முறைகள் செயல்படுத்தப்பட்டன. இன்று மருத்துவ அறிவியல் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறதோ அதைப்போல அன்று ஆன்மீக முறைகள் இருந்தன. அதாவது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்ய விரும்பினால், உங்களது குடும்ப மருத்துவர் மட்டுமே தேவைப்பட்டார். ஆனால் இன்றைக்கு, உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார்.

அதைப்போலவே யோக முறைக்கும் நிகழ்ந்தது. யோகாவின் வெவ்வேறு சிறிய அம்சங்களில் மக்கள் நிபுணத்துவம் பெறத்தொடங்கினர். ஒரு குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கும்போது, நிபுணத்துவம் அடைவதென்பது, நகைப்புக்குரியதாகிறது. இது யோகாவுக்கு நிகழ்ந்தது. தனித்துவமான 1800 விதமான யோக முறைகள் நிகழ்ந்தபோது, அது அந்தப் புள்ளியைக் கடந்தது. அப்போதுதான் பதஞ்சலி வந்தார். முடிவில்லாமல் வளர்ந்து வந்த இந்த விரிவாக்கத்தைக் குறைப்பதற்காக, அனைத்தையும் ஒருவிதமான யோக சூத்திரங்களாக ஒருங்கிணைத்தார்.

பதஞ்சலிக்குப் பிந்தையதொரு காலத்தில் கௌதமர் வந்தார், ஆனால் அப்போதும் நிறைய விஷயங்கள் இருந்தன. அவர் யோகாவின் ஒவ்வொரு பயிலகமாகச் சென்று எட்டு வெவ்வேறு வகையான சமாதிகளைப் பின்பற்றினார். அவை அனைத்தும் அற்புதமான அனுபவங்களாக இருப்பதை அவர் கண்டார், ஆயினும், எதுவும் அவருக்கு விடுதலை அளிக்கவில்லை. இந்த நிலையில், அவர் ஒரு சமனாவாக நடக்க ஆரம்பித்தார், இந்த ஒரு குறிப்பிட்ட முறையில், அவர்கள் தங்களுக்கு உணவு தேவை என்று ஒருபோதும் கேட்கமாட்டார்கள். இதுவே அவர்களது அடிப்படையான பயிற்சி. அவர்கள் உணவைத் தேடி செல்வதில்லை, ஏனென்றால் பிழைத்திருத்தலின் மிக அடிப்படையான உள்ளுணர்வை வெல்வதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.

சமனாக்கள் வெறுமனே நடந்துகொண்டே இருப்பார்கள், ஒருபோதும் உணவு கேட்கமாட்டார்கள். ஆனால் இந்தக் கலாச்சாரம் உணர்ச்சிமிக்கதாக இருந்தது. ஆன்மீகத்தன்மை வாய்ந்த ஒரு நபர் நடந்துசெல்வதை அவர்கள் கண்டால், மக்கள் வீட்டில் சமைத்து, அவருக்குப் பின்னால் ஓடி, அவர் எங்கிருந்தாலும், அவருக்கு உணவளிப்பார்கள், ஏனென்றால் அவர் உணவு கேட்கமாட்டார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இன்றைக்கு, நீங்கள் ஒரு சமனாவாக இருந்தால், நடந்து நடந்து உயிர் துறந்துவிடுவீர்கள்! அந்த நாட்களில் மக்கள் அவரது சாதனாவை உணர்ந்து, அங்கீகரித்தனர். எனவே ஆயிரக்கணக்கான சமனாக்கள் நாடெங்கிலும் நடந்துகொண்டே இருந்தார்கள். கௌதமர், ஒரு சமனா ஆனார். நீங்கள் உணவு கேட்காவிட்டாலும், உணவு கிடைப்பதற்காக நீங்கள் ஒரு ஊருக்கு அருகில் நடக்கலாம். ஆனால் கௌதமர் மிகவும் தீவிரமானவராக, எங்கும் நிற்காமல் நடந்துகொண்டே இருந்தார். இதனால் அவர் வெறும் எலும்பும், தோலுமாக உருமாறிவிட்டார்.

பின்னர் அவர், நிரஞ்சனா என்றழைக்கப்பட்ட நதிக்கு அருகில் வந்தார். சுமார் பதினெட்டு முதல் இருபது அங்குல ஆழத்திற்கு நீர் இருந்த அந்த நதியில் அவர் அடியெடுத்து வைத்தார். ஆற்றில் பாதி தூரம் வந்தவுடன், அதைக் கடக்கும் சக்தி அவருக்கு இல்லாமல் போனது. அங்கே இருந்த ஒரு காய்ந்த மரக்கிளையை அவர் ஆதரவாகப் பற்றிக்கொண்டார். அடுத்த அடி எடுத்து வைக்கும் வலிமை அவருக்கு இல்லை, ஆனால் அவர் அப்படி விட்டுவிடக்கூடிய மனிதர் அல்ல. அவர் நின்றுகொண்டே இருந்தார். எவ்வளவு நேரம் நின்றிருந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம். மிகவும் பலவீனமாக உணரும்போது, அந்த இரண்டு நிமிடங்கள் பல ஆண்டுகள் போலத் தோன்றியிருக்கலாம். பின்னர், நின்ற நிலையிலேயே இருந்தபோதுதான், அவர் உணர்ந்தார் "நான் எதற்காக முயற்சி செய்கிறேன்? நான் எதற்காக நாடு முழுவதிலும் அலைந்து கொண்டிருக்கிறேன்? ஒவ்வொரு பயிலகமாகச் சென்று, இதைக் கற்றுக்கொள்வதும் அதைக் கற்றுக்கொள்வதுமாக நான் என்ன தேடுகிறேன்?" சிந்தனையின் முடிவில் அவர் உணர்ந்தார், "உண்மையில் இங்கு எதுவும் இல்லை. இந்த வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் செய்ய வேண்டியதெல்லாம், இந்த வாழ்வை உணர்வதற்கு அனுமதிக்காத தடைகளை அகற்றுவதுதான்.”

கௌதமர் எப்படி புத்தரானார்

எல்லாமே தனக்குள்ளேயே இருப்பதையும், வேறு எங்கும் தேட அவசியம் இல்லை என்பதையும் அவர் உணர்ந்தபோது, திடீரென்று அவருக்கு அடுத்த அடி, மேலும் அடுத்த அடி எடுத்து வைக்கும் சக்தி பிறந்தது. அவர் ஆற்றைக் கடந்து, இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் போதி மரத்தின் கீழ் அமர்ந்தார். அது ஒரு பௌர்ணமி இரவு. இந்த உறுதியுடன் அவர் அங்கு அமர்ந்தார்." என் இருப்பின் தன்மையை இப்போது நான் உணரவேண்டும் அல்லது நான் இங்கேயே அமர்ந்து இறந்துவிடுவேன். இதை நான் அறியும் வரை என் கண்களைத் திறக்கமாட்டேன்."

அவர் அந்தத் தீர்மானத்தை எடுத்தவுடன், உள்நிலையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது, ஒரு கணத்தில் நடக்கலாம். உணர்தலுக்காக பிரத்யேகமாக, தான் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதை உணர்ந்தபோது, அவர் முழுமையாக ஞானோதயம் அடைந்தார். சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர் பல ஆண்டுகளாகவே சரியாகச் சாப்பிடவில்லை. நான்கு ஆண்டுகளாக ஒரு சமனாவாக இருந்தார். அவருடன் ஐந்து சீடர்கள் இருந்தனர். அவர்கள், "இவர் உண்மையானவர், இவர் சாப்பிடாததால், உண்மையிலேயே உறுதியானவர்," என்று நினைத்திருந்தனர். இப்போது அவர் ஏதோ உற்சாகமான நிலையில் இருப்பதையும், அவர் முகத்தில் ஒரு ஒளியையும் கண்டனர். அவர் கண்களைத் திறந்து போதனை வழங்குவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். அவர் கண்களைத் திறந்து அவர்களைப் பார்த்து, புன்னகைத்து, "நாம் ஏதாவது சமைத்து, சாப்பிடலாம்" என்றார். அவர்கள் முற்றிலும் ஏமாற்றமடைந்தனர். "அவர் உறுதி இழந்துவிட்டார்" என்று அவர்கள் நினைத்தனர். அவர்கள் அவருடன் நான்கு ஆண்டுகள் நடந்தார்கள், அப்போது அவரிடம் சித்திரவதையைத் தவிர வேறொன்றும் இருந்ததில்லை, ஆனால் அவர் ஞானோதயம் பெற்றபோது, அவர்கள் அவரைவிட்டு வெளியேறினார்கள். ஏனென்றால் அவர்கள் தீவிரமான ஏதோ ஒன்றைக் கேட்க விரும்பியிருந்தனர். ஆனால் அவர், "ஏதாவது சமைக்கவும், நாம் சாப்பிடுவோம். நாம் நம் நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

#2. புத்தரும் ஜோதிடரும்

buddha tamil story,  புத்தர் கதை

ஒருநாள், அவர் புத்தராக ஆனபிறகு, கௌதமர் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருந்தார். உட்காருவதற்கு ஒரு மரத்தடிதான் சிறந்த இடம் என்பதால் அல்ல, ஏனெனில் அந்தக் காலங்களில் காலிமனையாக இருந்த இடம் அது ஒன்றுதான். அப்போது எல்லா இடங்களிலும் இவ்வளவு கட்டிடங்கள் இல்லை. உட்கார்ந்து கொள்வதற்கான இனிமையான இடம், ஒரு மரத்தடியாகவே இருந்தது. ஜோதிடத் தொழிலில் பெரும் தேர்ச்சிபெற்ற ஒருவர் ஆற்றில் குளிக்க வந்தபோது ஆற்றங்கரையில் ஒரு காலடித்தடம் இருப்பதைக் கண்டார். ஒருவரின் பாதங்களின் அமைப்பைப் பார்த்து, அவர் என்ன செய்வார் என்பதை ஜோதிடத்தில் சரியாகக் கணிக்கமுடியும்.

இந்தக் கால்தடம் உலகை ஆளவேண்டிய ஒரு பேரரசரின் தடம் என்பதை அவர் கண்டார். பின்னர் அவர், அத்தகையதொரு நபர், இந்தக் கண்காணாத இடத்தில் உள்ள ஒரு காட்டுக்கு அருகில் ஏன் இருக்கவேண்டும்? என்று ஆச்சரியப்பட்டார்.ஒரு பேரரசரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில், அவர் அந்தக் காலடித்தடத்தைப் பின்தொடர்ந்தார். கால்தடத்தின் முடிவில் அவர், கௌதமர் என்ற இந்தத் துறவி, ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார். கௌதமரைப் பார்த்த ஜோதிடர், "ஒன்று என் ஜோதிடம் அனைத்தும் தவறாகிவிட்டது அல்லது நான் முட்டாளாக்கப் படுகிறேன் அல்லது நான் ஒருவித மாயத்தோற்றத்தில் இருக்கிறேன். இங்கே என்ன நிகழ்கிறது?" என்று எண்ணியவாராக, கௌதமரிடம் சென்று, "நீங்கள் யார்?” என்றார். கௌதமர், "நான் யாரும் இல்லை, நான் என்ற ஒருவராகவே இல்லை" என்றார். ஜோதிடர், "ஆனால் உங்களின் பாதம் ஒரு பேரரசரின் கால்கள் போல உள்ளன, நீங்கள் உலகை வெல்ல வேண்டியவர்!" கௌதமர், "அதை நான் செய்வேன், ஆனால் வீழ்த்தி வெல்வதன் மூலம் அல்ல," என்றார்.

இந்த உலகை உங்கள் வசமாக்க இரண்டு வழிகள் உள்ளன – வீழ்த்தி வெற்றிகொள்வதன் மூலம் அல்லது இணைத்துக்கொள்வதன் மூலம். இரண்டு வழிகளிலும் யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று உங்களுடையதாகிறது. ஆனால் நீங்கள் வீழ்த்தும் வழியில் சென்றால், அது எப்போதும் உங்கள் தோள்களில் ஒரு சுமையாக இருக்கும். நீங்கள் இணைத்துக்கொண்டால், இது உங்கள் வாழ்வின் மாபெரும் வளமாக இருக்கும். "நான் உலகத்தின் பேரரசன்" என்று கௌதமர் கூறினார். ஜோதிடர், "நீங்கள் ஒரு துறவி, உங்களுக்கு எதுவும் சொந்தமில்லை" என்று கூறினார். "எனக்கு எதுவும் சொந்தமில்லை, நான் என்பதே இல்லை” என்ற கௌதமர், "அதனால்தான் எல்லாம் என்னுடையது," என்று பதிலளித்தார்.

 

ஒன்றுமில்லாத ஒருவராக இருப்பது என்றால், நீங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர் என்று பொருள் அல்ல, நீங்கள் ஏதுமற்ற ஒருவராக இருக்கும்போது, நீங்கள் முழுமையாக அனைத்தையும் இணைத்துக் கொண்டவராக இருக்கிறீர்கள் என்பது பொருள். நீங்கள் ஏதோ ஒன்றாக இருந்தால் நீங்கள் அதுவாக மட்டுமே இருக்க முடியும் என்பது பொருள். நீங்கள் ஒன்றுமில்லாதவராக இருந்தால் நீங்கள் விரும்பும் எந்த வகையிலும் இருக்கமுடியும். ஜோதிடர் கௌதமருக்குக் கீழ் அமர்ந்துகொண்டு, "நீங்கள் ஒரு துறவி, உங்களிடம் எதுவும் இல்லை, அதற்குமேல் 'நான் யாரும் இல்லை, எல்லாம் என்னுடையது,” என்று சொல்கிறீர்கள். இது என்ன?" என்றார். கௌதமர், “நீங்கள் வாருங்கள், என்னிடம் உங்களுக்கான ஒரு வழி உள்ளது. வாழ்க்கையைக் கணித்து சொல்வதில் நீங்கள் மும்முரமாக இருக்கிறீர்கள், என்னிடம் ஒரு திட்டம் உள்ளது.” நீங்கள் திட்டமிடும் திறனில்லாமல் இருப்பதால், நீங்கள் வாழ்வைக் கணிக்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் கணிப்புகளின் பின் செல்கிறீர்கள். நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கி அதைச் செயல்படுத்தும் திறன்கொண்டவராக இருந்தால், நீங்கள் கணிப்புகளின் பின் செல்லமாட்டீர்கள். கௌதமர், "நீங்கள் கணிப்புகளைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறீர்கள். நான் இங்கே இருக்கிறேன், என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. வாருங்கள், எனது திட்டத்தின் ஒரு பகுதியாகிவிடுங்கள், நாம் வேறொன்றை நிகழச்செய்வோம்!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

#3. ஒருவரது தந்தையை, புத்தர் சொர்க்கத்திற்கு அனுப்பியபோது

buddha tamil story,  புத்தர் கதை

இந்தியாவில், உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி இறந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு, ஒரு விரிவான வழிமுறை உள்ளது. ஒருமுறை, ஒரு மனிதர் இறந்துவிட நேர்ந்ததில், அவரது மகனுக்குத் தனது தந்தை சொர்க்கம் செல்வதை உறுதி செய்துகொள்ள விருப்பம் எழுந்தது. நகரத்தில், சொர்க்கத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயண முகவர்கள் பலர் உள்ளனர். இறந்தவருடைய மகன் ஒவ்வொரு முகவராகச் சென்று பார்த்தார், எல்லோரும் முன்பதிவு செய்யத் தயாராக இருந்தனர், ஆனால் யாரிடமும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இல்லை. ஆனால் அவர் தனது தந்தைக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை விரும்பினார். அன்றைய தினம் கௌதம புத்தர் நகரத்தில் இருப்பதை அந்த மகன் கண்டுபிடித்தார்.

ஞானோதயம் அடைந்தவர் என்றால் அவர் கடவுளுடன் ஒரு நேரலை வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அவரே உங்கள் தந்தையைப் பரிந்துரைத்தால், உங்கள் தந்தை வாயில்களில் நிறுத்தப்படாமல் நேராக சொர்க்கத்திற்குச் செல்கிறார். எனவே அவரைத் தேடிச் சென்றார்.

கௌதமர், ஊருக்கு வெளியே ஒரு பெரிய ஏரிக்கு எதிரில் இருந்த ஒரு மரத்தடியின் கீழே அமர்ந்திருந்தார். இவர் அங்கே சென்று அவரது காலடியில் விழுந்து ஒரு முதலை போல அவரது கால்களைப் பிடித்துக்கொண்டு, "என் தந்தை ஒரு நல்ல மனிதராக இருந்தார், இப்போது அவர் காலமாகிவிட்டார். அவர் சொர்க்கத்திற்குச் செல்வதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் மேலே செல்லவேண்டும், கீழே அல்ல. கௌதமர் வாய் திறப்பதற்கு முன்பு, "நீங்கள் முடியாது என்று சொல்லக்கூடாது" என்றும் கூறினார். இந்தியாவில் ஒரு பாரம்பரியம் உள்ளது, அதாவது யாராவது உங்களிடம் வந்து, "நான் உங்களிடம் ஒன்று கேட்கப்போகிறேன், நீங்கள் முடியாது என்று சொல்லக்கூடாது" என்று இறைஞ்சினால், அதற்கு என்ன பொருள் என்றால் நீங்கள் இல்லை என்று கூறமுடியாது, ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு மிகவும் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளார். உங்களுக்கு வேறு வழியில்லை. எனவே கௌதமரும், "இப்போது நான் என்ன செய்யமுடியும், நீங்கள் ஏற்கனவே என்மீது கட்டுப்பாடு விதித்துவிட்டீர்கள். என்னால் முடியாது என்று சொல்லமுடியாது. சரி, நீங்கள் ஒரு விஷயம் செய்யுங்கள், வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள், காலை நான்கு மணிக்கு ஆற்றில் நீராடிவிட்டு, ஒரு மண்பானையை எடுத்து, அதில் பாதியளவுக்குப் பாறைகளையும், மறுபாதியளவுக்கு வெண்ணெயும் நிரப்பி, அதை ஒரு துணியால் கட்டி, இங்கே கொண்டுவாருங்கள், உங்கள் தந்தைக்கு நாம் என்ன செய்யமுடியும் என்று பார்ப்போம்," என்று கூறி அனுப்பினார்.

அந்த மகனும் சென்றுவிட்டார். உங்கள் தந்தை சொர்க்கத்திற்குச் செல்கிறார் என்றால், நீங்கள் ஒரு சிறிய பானை எடுக்க முடியுமா? அவர் ஊரில் கிடைக்கக்கூடிய இருப்பதிலேயே மிகப்பெரிய பானையை வாங்கி, அதில் பாதியை பாறையாலும், இன்னொரு பாதியை வெண்ணெயாலும் நிரப்பி, பானையை இறுகக் கட்டினார். பிறகு அவர், மிகவும் கனமான இந்தப் பானையை மிகுந்த சிரமத்துடன் சுமந்து கொண்டு வந்து கௌதமர் முன்னால் நின்றார். கௌதமர் அவரைப் பார்த்து, "ஏரியைச் சுற்றி மூன்று முறை வலம் செய்துவிட்டு வாருங்கள்" என்றார். இது பிரதக்ஷணம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னால் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது, ஆனால் இப்போது மக்கள் அனைத்தையும் மூன்று முறை வலம் வந்து அதைக் கேலிக்குரியதாகச் செய்கிறார்கள். "மூன்று முறை ஏரியை வலம் செய்துவிட்டு வாருங்கள்" என்றார் கௌதமர். இவ்வளவு கனமான பானையை சுமந்துகொண்டு அந்த மகன் மூன்று முறை ஏரியைச் சுற்றி நடந்தான். பின்னர் வந்து கௌதமரின் முன் நின்றபோது பாதி உயிர்தான் அவரிடம் இருந்தது. கௌதமர் அவரது நிலைமையையும், மன உறுதியையும் பார்த்தார். அவர் தொடர்ந்து, "உங்கள் மார்பளவுக்குத் தண்ணீர் வரும்வரை தண்ணீருக்குள் நடந்து செல்லுங்கள்" என்று கூறினார். அந்த மகனும் நீரில் இறங்கினார்.

பின்னர் கௌதமர், "பானையை மெதுவாக நீருக்குள் விடுங்கள்" என்றார். மகனும் அப்படியே செய்ய, பானை உள்ளே சென்று மூழ்கியது. கௌதமர் ஒரு தடிமனான குச்சியை எடுத்து, அவரிடம் எறிந்து, "குச்சியை எடுத்து இப்போது ஒரே அடியில், நீங்கள் பானையை உடைக்கவேண்டும்" என்றார். பானை தண்ணீருக்கு அடியில் இருந்தது, அந்த மகனும் சோர்வாக இருந்தான். ஒற்றை அடியில் இதை உடைப்பது கடினமான பணி. ஆனால் உங்கள் தந்தை சொர்க்கத்திற்குச் செல்கிறார், நீங்கள் விட்டுவிட முடியுமா? மகன் உறுதியாக நின்று, அதற்குத் தயாரானார். தனக்குத் தெரிந்த எல்லாக் கடவுள்களையும் நினைத்துகொண்டு மூச்சை நன்றாக பிடித்துக்கொண்டான். இப்போது கௌதமர், "நீங்கள் அதை ஒரே ஒரு அடியில் உடைத்தால், கற்கள் மேற்பரப்பில் வந்து மிதக்கும், வெண்ணெய் மூழ்கிவிடும். அப்படியென்றால் உங்கள் தந்தை சொர்க்கத்தை அடைந்துவிட்டார் என்று அர்த்தம்", என்றார். மகனின் ஒரு பலமான அடியில், பானை உடைந்து, வெண்ணெய் மேலே வந்தது. இந்தப் பாவச் செயலைப் பார்த்த மகன், "வெண்ணெய் மேலே வந்துவிட்டது, இப்போது என்ன செய்வது?" என்று கௌதமரைப் பார்த்தான். கௌதமர், “உங்கள் தந்தை சொர்க்கத்தை அடையவில்லை” என்றார். கற்கள் வரவேண்டியதற்கு பதில் வெண்ணெய் மேலே வந்ததால், அந்த மகன் முற்றிலும் ஏமாற்றமும், மனத்தளர்வும் அடைந்தான். பின்னர் அவர் திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தார்.

அவர் தண்ணீரிலிருந்து வெளியே வரத்தொடங்கியதும், அவரது மூளை வேலை செய்யத் தொடங்கியது. அவர் கௌதமரிடம் வந்து, "வெண்ணெய் மூழ்கிவிடும், கற்கள் மிதக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எப்படி சாத்தியம்? இயற்கை விதிகளின்படி கற்களால் மூழ்க மட்டுமே முடியும், வெண்ணெய் மட்டுமே மிதக்க முடியும். நீங்கள் என்னை ஏமாற்றினீர்களா?" என்று கேட்டார். கௌதமர், "ஓ, இப்போது இயற்கையின் விதிகளைப் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திருக்கும் நிலையில், இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? உங்கள் தந்தை வெண்ணெய் போன்றவராக இருந்தால், அவர் மேலே செல்வார்; அவர் ஒரு கல்லைப் போன்றவர் என்றால், அவர் கீழே செல்வார். இது குறித்து நான் என்ன செய்யமுடியும்? மேலும் நீங்கள்தான் என்ன செய்யமுடியும்? நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள். வீட்டிற்குச் சென்று உறங்குங்கள்" என்றார்.

#4. புத்தர் மற்றும் அங்குலிமாலா

buddha tamil story,  புத்தர் கதை

ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு மக்கள் கொடுத்த பெயர், அங்குலிமாலா. அவருக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டதில், சமூகம் தன்னிடத்தில் அநியாயமாக நடந்துகொண்டதாக உணர்ந்து, அவர் ஒரு கோபமான மனிதராக மாறிப்போனார். நீங்கள் இளமையாக இருக்கும்போது, அனைத்தும் உங்களுக்கு அநியாயமாக இருப்பதாக நினைக்கிறீர்கள். எனவே அவர் சமூகத்தின் மீது மிகுந்த கோபமடைந்து ஒரு சபதம் எடுத்தார். தன்னிடத்தில் நியாயமில்லாமல் நடந்துகொண்ட இந்த ஊரில், அவர் 101 பேரைக் கொன்று, அவர்களின் விரல்களில் ஒன்றை வெட்டி கழுத்தைச் சுற்றி ஜெபமாலையாக அணிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். 

அவர், தனது எண்ணத்தைச் செயல்படுத்தியவாறு இருந்தார். அவர் ஒரு காட்டில் தங்கியிருந்தார். ஆனால் அந்தக் குறிப்பிட்ட இடம், பல்வேறு இடங்களுக்கும் செல்லும் இடைவழிப் பாதையாக இருந்தது. மக்கள் இந்த வழியாகச் செல்வதற்கு அச்சமடைந்தனர். சில ஆண்டுகளில், அவர் நூறு பேரைக் கொன்றார். அவர் தனது தீராத ஆசையை பூர்த்திசெய்ய இன்னும் ஒன்றுதான் பாக்கி இருந்தது. ஒருநாள், புத்தராகிய கௌதமர் அந்த ஊருக்கு வந்தார். இதற்குள், அந்த மனிதர், பலரையும் கொன்று, அவர்களது விரல்களினாலான மாலையை அணிந்திருந்ததால், மக்கள் அவரை அங்குலிமாலா என்று அழைக்கத் தொடங்கியிருந்தனர் – அதாவது விரல்களைக் கோர்த்து, தனது மாலையாக அணிந்தவர் என்பது அர்த்தம். அவரது சபதத்தை முடிக்க இன்னும் ஒரே ஒரு விரல் தேவைப்பட்டபோது, கௌதமர் அங்கு வந்தார், அவர் அந்த வழியில் செல்வதற்கு இருந்தார். மக்கள், “இந்த வழியில் செல்லவேண்டாம். இவர் ஒரு மனிதன் அல்ல, ஒரு விலங்கு. இவர், நீங்கள் சென்று போதனை கொடுப்பதற்கோ அல்லது தியானத்தன்மையை உருவாக்குவதற்கான ஒருவரோ அல்ல. போகவேண்டாம், ஏனென்றால் அவருக்கு இன்னொரு உயிர் மட்டுமே தேவை. அது உங்களுடையதாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர். அப்போது கௌதமர், “நான் போகவில்லை என்றால் யார் போவார்கள்? அவர் ஆசை நிறைவேறாமல் போகும். அவருக்கு இன்னும் ஒரே ஒரு விரல் தேவை, என்னை விடுங்கள்” என்றவராக, அங்கு சென்றார். அங்குலிமாலா ஒரு பாறையில் அமர்ந்திருந்து, இந்த துறவி அமைதியாக வருவதைக் கண்டார்.

இத்தனை காலமும், அங்குலிமாலா தனது புகழ் குறித்து மகிழ்ச்சியாக உணர்ந்திருந்தார். மக்கள் அவரைக் கண்டு அஞ்சுவதை அவர் விரும்பினார். அவரது பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்கினர். ஆகவே, பாறை மீது அமர்ந்தபடியே, “நான் இங்கே இருக்கிறேன். உங்களுக்கு முடிவு நெருங்கிவிட்டது,” என்று அந்தத் துறவிக்குத் தெரியப்படுத்துவதற்காகவே ஒரு உறுமலை வெளியிட்டான். கௌதமர் அவரைப் பார்த்துவிட்டு, முகத்தில் புன்னகையுடன் அமைதியாக நடந்தவாறு இருந்தார். இதை அங்குலிமாலா விரும்பவில்லை. வழக்கமாக, மக்கள் அவரைக் கண்டாலும், அவர் பெயரைக் கேட்டாலும், தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அங்குமிங்கும் ஓடி ஒளிந்தார்கள். அவர் அதை விரும்பினார். ஆனால், இந்த மனிதர் நடந்துகொண்டிருக்கிறார்! அங்குலிமாலா பாறையிலிருந்து குதித்து வந்து, கௌதமர் முன்பு நின்று, “நீங்கள் யார்? நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கோபமாகக் கேட்டுவிட்டு, தனது மாலையைக் காட்டினார், அதில் முழுவதும் விரல்கள். கௌதமர், “நான் உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அதைப் பற்றி என்ன?” என்றவாறு மேற்கொண்டு நடந்துகொண்டே இருந்தார். “நீங்கள் எங்கே செல்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நீங்கள் சென்றுகொண்டே இருக்கிறீர்களா?” என்ற அங்குலிமாலாவுக்கு, கௌதமர் பதில் கூறினார், “நான் செல்வது நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது. நான் வந்து சேர்ந்துவிட்டேன். நீங்கள்தான் எங்கேயோ செல்ல முயற்சிக்கிறீர்கள்” என்று.

அங்குலிமாலா சிரித்தார். அவர் சொன்னார், “வீண் பேச்சு, நீங்கள் நிச்சயம் ஒரு பைத்தியக்கார மனிதர்தான். நான் அசையாமல் நிற்கிறேன், ஆனால் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் எங்கும் போகவில்லை என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு என்ன ஆயிற்று?" கௌதமர், “நான் நீண்ட காலத்திற்கு முன்பே வந்துவிட்டேன். நான் எங்கும் செல்லவில்லை. நீங்கள் எங்கோ செல்ல முயற்சிக்கிறீர்கள். ஆனால் அங்கு எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு என் விரல் வேண்டுமா அல்லது என் கழுத்து வேண்டுமா? ஏற்கனவே நீங்கள் விரல்களைப் பெற்றுள்ளீர்கள். அதனால் என் தலையை எடுத்தால், கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம், அது உங்கள் மாலைக்கு ஒரு நல்ல பதக்கமாக இருக்கும். ஏனெனில் நான் முடித்துவிட்டேன். நான் வந்து சேர்ந்துவிட்டேன். நான் உடல்ரீதியாக இங்கே இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்ளலாம்.”

கொலைக்கு ஆளாகப் பயந்து, அவர்கள் இறக்க விரும்பாதபோதுதான் கொலை செய்வதில் இன்பம் கிடைக்கிறது. யாராவது இறக்க விரும்பி, அவர்கள் கவலைப்படாதபோது, அந்த நபரைக் கொல்வதால் என்ன பயன்? இப்படிப்பட்டவரைக் கொன்றாலும், 101 உயிர்களைக் கொல்லவேண்டும் என்ற தீராத ஆசை நிறைவேறாது என்றே தோன்றுகிறது, ஏனெனில் இந்த மனிதரைக் கொல்வது இன்பத்தைத் தருவதாக இல்லை. பின்னர் அங்குலிமாலா, “சற்று நில்லுங்கள், இது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்? நீங்கள் நடந்துகொண்டே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் வந்துவிட்டதாகவும், நடக்கவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் நகராமல் அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் நகர்வதாக நீங்கள் கூறுகிறீர்கள்.” "உங்களுக்கே உரிய வழியில் நீங்கள் முழுமையைத் தேடுகிறீர்கள் – அதாவது 101 உயிர்களைக் கொல்வது. ஆனால் நான் நிறைவடைந்துவிட்டேன் என்றும் கூறுகிறீர்கள்”, என்று கேட்டார். கௌதமர், “இதுதான் பெரிய வித்தியாசம். நீங்கள் என் உயிரை எடுக்கமுடியும். நீங்கள் முழுமையடையப் போகிறீர்கள் என்று நினைத்தால், அதைச் செய்யுங்கள், ஏனென்றால் மக்களை முழுமையடையச் செய்வதுதான் எனது பணி. என் கழுத்தை வெட்டுவதன் மூலம், எந்த போதனையும் இல்லாமல் இது அவ்வளவு எளிதாக நடக்கப்போகிறது, நீங்கள் முழுமை பெறப் போகிறீர்கள் என்றால், அதைச் செய்துவிடுங்கள், என்ன பிரச்சனை?” என்றார் அமைதி மாறாத குரலில்.

பிறகு அங்குலிமாலா கௌதமருடைய சீடரானார். கௌதமர், “நீங்கள் எந்த ஊரிலிருந்து நூறு பேரைக் கொன்றீர்களோ, அந்த ஊருக்குள் செல்லவேண்டும்” என்றார். கௌதமரின் துறவிகள் பிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். பிக்கு என்றால் பிச்சைக்காரன் என்பது பொருள். கௌதமர் ஒரு மஞ்சள் வஸ்திரத்தையும், பிச்சைப் பாத்திரத்தையும் அங்குலிமாலாவுக்குக் கொடுத்தார். மேலும் அவர், “ஊருக்குள் சென்று ஏதாவது உணவு கிடைக்கிறதா என்று பாருங்கள்” என்றார். ஒரு சிறிய நகரத்தில், நூறு பேர் இறந்துள்ளனர் என்றால், கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் இந்த மனிதனிடம் ஒருவரை இழந்துவிட்டது என்பதாகும். இப்போது அங்குலிமாலா ஒரு துறவியாக நகரத்துக்குள் வந்தார். மக்கள் இதைப் பார்த்து பயந்தார்கள். அவர் ஏன் வந்தார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் என்ன செய்வார் என்று பயந்ததால் அவர்கள் அனைவரும் சென்று தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் நின்றார்கள். அவர் அடக்க ஒடுக்கமாகிவிட்டார், அவர் அதே கடுமையான மனிதர் அல்ல என்பதை அவர்கள் கண்டபோது அவர்மீது கற்களை வீசத்தொடங்கினர். ஏனென்றால் ஒவ்வொரு குடும்பமும் அவரிடம் ஒருவரை இழந்துவிட்டிருந்தது. அவர் தொடர்ந்து நடந்தார், கற்கள் அவரைத் தாக்கின. அவர் உடலெங்கும் இரத்தம் வழிந்தது. அதற்குப் பிறகும், கல் எறிவது சற்றே அதிகரித்தபோது, கௌதமர் வந்து மக்கள் கல்லெறிவதை நிறுத்துமாறு கூறி, “இவர் அதே மனிதர் அல்ல. இந்த மனிதன் எனது நீட்டிப்பு. நீங்கள் இவர் மீது அல்ல, என் மீதுதான் கற்களை வீசுகிறீர்கள். நிறுத்துங்கள், இந்த மனிதனைக் கொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனெனில் இந்த மனிதன் மிகவும் கடினமான வழியில் உணர்தலுக்கு வந்துள்ளார். இப்போது இந்த மனிதரைக் கொல்வதன் மூலம் நீங்கள் இவரை வீணடிக்க முடியாது.” அங்குலிமாலா ஒரு நட்சத்திர சீடரானார், புத்தரின் வாழ்க்கை முறையையும் ஞானத்தையும் பரப்பியவாறு நாடு முழுவதும் சென்றார். ஆனால் அந்த விரல்களை அவர் கழுத்தை சுற்றி அணிந்ததால் அவரை, அதற்குப் பிறகும் தொடர்ந்து அங்குலிமாலா என்றே அழைத்தனர்.

#5. புத்தர் மற்றும் ஆனந்தரின் கதை

buddha tamil story,  புத்தர் கதை

உறவு முறையில் ஆனந்தர், கௌதமரின் ஒன்றுவிட்ட சகோதரராக இருந்தார். கௌதமர், மக்களுக்கு துறவறத்திற்கான தீட்சை வழங்கத் தொடங்கியபோது, ஆனந்தர் வந்து, “நானும் ஒரு துறவியாகிவிடுகிறேன், ஆனால் நான் உங்கள் சீடராகிவிட்டால், உங்களிடம் ஒரு நிபந்தனையை வைக்கப்போகிறேன், நான் உங்கள் மூத்த சகோதரர் என்பதால் நீங்கள் நான் கூறுவதைக் கேட்கவேண்டும். நான் உங்கள் சீடராகப் போகிறேன், ஆனால் நான் எப்போதும் உங்களுடன் இருக்கப்போகிறேன். நீங்கள் தூது அனுப்ப எந்த பிரயாணத்துக்கும் என்னை அனுப்பக்கூடாது. நான் எப்போதும் உங்கள் நிழலாகவே இருக்கப்போகிறேன்.” கௌதமர் நிமிர்ந்து பார்த்து, “அது உங்களைப் பொறுத்தது, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார். நீங்கள் ஒரு சீடராக விரும்பி, ஒரு நிபந்தனை இடுவதற்கும் விரும்பினால், நீங்கள் ஒருபோதும் சீடராக இருப்பதன் சுவையைப் பெறமாட்டீர்கள். நீங்கள் இப்படி ஒரு நிபந்தனையிட்ட தருணத்திலேயே, வாழ்க்கையின் எல்லா சாத்தியங்களையும் அழித்துவிட்டீர்கள். கௌதமர் சிரித்துக்கொண்டே, “சரி” என்றார். அவருக்கு இந்த நிபந்தனை இருந்தபோது, அவர் அந்த நிபந்தனையை நிறைவேற்றினார். இதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஒருமுறை கௌதமர், தான் எட்டு வருடங்களுக்கும் மேலாகப் பார்க்காமல் இருந்த தனது மனைவியைப் பார்க்க முடிவுசெய்தார். தனது மகன் மிகச் சிறிய குழந்தையாக இருந்தபோது அவர் நள்ளிரவில் வெளியேறியிருந்தார். யசோதா மிகவும் பெருமை பாராட்டும் ஒரு பெண்ணாக இருந்தார். அவர் ஒரு வார்த்தையும் சொல்லாமல் நள்ளிரவில் வெளியேறியதால் அவள் மிகவும் காயப்பட்டிருந்தாள். அவர் ராஜ்ஜியத்தையும், மகனையும், மனைவியையும் விட்டு எதுவும் சொல்லாமல் வெளியேறினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கௌதமர் அவளைப் பார்க்கச் சென்றார், ஏனென்றால் அவர் உணர்ந்திருந்த இந்த சாத்தியத்தை அவளுக்கும் சாத்தியமாக்க விரும்பினார். கௌதமர் ஆனந்தரிடம், “இப்போது, நான் என் மனைவியைச் சந்திக்கப் போகிறேன். தயவுசெய்து விலகி இருங்கள், நீங்கள் இப்போது தேவைப்படவில்லை. ஏற்கனவே நான் நள்ளிரவில் கிளம்பினேன் என்று அவள் மிகவும் புண்பட்டும் கோபமாகவும் இருக்கிறாள். இப்போது நான் உன்னை ஒரு தோழனாக அழைத்துக்கொண்டு என் மனைவியைச் சந்திக்க அங்கே சென்றால், அவள் அதைச் சரியாக எடுத்துக்கொள்ள மாட்டாள். நீங்கள் இங்கேயே இருங்கள்” என்றார். ஆனந்தர், “உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுங்கள்” என்றார்.

அது மிகவும் சங்கடமான சூழ்நிலையாக இருந்தது. கௌதமர் அவரது வார்த்தையைத் தவறவிடும் வகையானவர் அல்ல. அவர் “சரி” என்று, தனது மனைவியைச் சந்திக்க ஆனந்தரையும் அழைத்துச் சென்றார். அவள் மிகுந்த சீற்றத்தில் இருந்தாள், அவள் வெடித்தெழுந்து அவரை நோக்கி, கத்தி, சண்டையிட்டு, அவரை ஒரு கோழை என்று அழைத்தாள். கௌதமர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் அவளிடம், “உன்னை மணந்தவன் இப்போது இல்லை, அந்த மனிதன் போய்விட்டான். ஆனால் நான் இங்கே இருக்கிறேன், இப்போது நான் புத்தனாக இருக்கிறேன், நான் ஞானோதயம் அடைந்த ஒரு மனிதன். அந்த மனிதன் இருந்திருந்தால் மேலும் சில குழந்தைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால் இப்போது மிகப் பிரம்மாண்டமான ஒரு சாத்தியம் இருக்கிறது. இந்த மனிதன் முற்றிலும் வித்தியாசமானவன். தயவுசெய்து என்னைப் பார், நான் அதே நபர் அல்ல.”

அவள், “வாய்ப்பேயில்லை, நீங்கள் என் கணவர்” என்றாள். இவை அனைத்தும் ஆனந்தர் போன்ற உறவுகளின் மீதான நிபந்தனைகள். “நீங்கள் ஒரு கோழை, இந்தச் சிறிய மகனை விட்டுவிட்டீர்கள். அவனது தந்தை யார் என்றுகூட அவனுக்குத் தெரியாது, நீங்கள் ஓடிவிட்டீர்கள்” என்றெல்லாம் சொல்வதற்கு அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவள் சொல்ல விரும்பிய அனைத்தையும் சொன்னாள். கௌதமர், “எல்லாம் சரி” என்றார். பின்னர் யசோதா வழக்கமான தந்திரத்தை உபயோகம் செய்தாள், "நீங்கள் உங்கள் மகனுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்?" அவள் தன் மகனை அழைத்து வந்து, “உன் தந்தையிடம் அவர் உனக்கு என்ன கொடுக்கப் போகிறார் என்று கேள்” என்றாள். கௌதமர் தயாராக வந்திருந்தார். அவர் ஆனந்தரை அழைத்து, “தயவுசெய்து என் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டுவாருங்கள்” என்றார். ஆனந்தர் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டுவந்தார். கௌதமர் தனது மகனை அழைத்து, “நீ ஒரு அரசனாகத் துன்பப்படுவதை நான் விரும்பவில்லை, எனவே நான் உனக்கு உச்சபட்ச விடுதலை தருகிறேன். என் சொத்து எனது இந்த பிச்சைப் பாத்திரம்." அவரது பிச்சைப் பாத்திரத்தை தனது எட்டு வயது மகனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் ஒரு சன்னியாசி ஆனார்.

ஆனந்தர் ஒரே ஒரு நிபந்தனையால் தனது சாத்தியத்தை அழித்துக்கொண்டார். எல்லாவற்றையும் தவறவிட்டார். கௌதமர் மரணப்படுக்கையில் இருந்தபோது, ஞானோதயம் அடைந்த சீடர்கள் மட்டுமே உள்ளே சென்றார்கள். மற்றவர்கள் அனைவரும் வெளியே விடப்பட்டனர். ஆனந்தர் அழுதபடி, “நான் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன், ஆனால் நான் அவருடைய வட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன், ஏன்? அது எனக்கு ஏன் நடக்கவில்லை?” என்றார். இதே கேள்வியை மக்கள் கௌதமரிடம் கேட்டபோது, “ஒரு ஸ்பூன் எப்படி சூப்பை சுவைக்க முடியும்?” என்று கேட்டார். நீங்கள் சூப்பை ருசிக்க விரும்பினால், உங்களுக்கு நாக்கின் உணர்வு தேவை. நீங்கள் வாழ்க்கையில் நிபந்தனைகள் விதிக்கும் அந்தக் கணமே, நீங்கள் உயிரற்றவராகிறீர்கள். நீங்கள் ஒரு பொருளாக, உயிரற்ற ஒன்றாக குறைக்கப்படுகிறீர்கள், மேலும் நீங்கள் மற்றொன்றைக் குறைப்பதற்கு முயற்சிக்கிறீர்கள். ஆனால் அந்த மற்றொன்று உங்களிடமிருந்து விலகியுள்ளது. அதுதான் ஆனந்தரின் துரதிருஷ்டம்.

#6. கடவுள் இருக்கிறாரா?

buddha tamil story,  புத்தர் கதை

 

புத்தராகிய கௌதமரின் வாழ்க்கையில் ஒரு மிக அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு குறிப்பிட்ட நாளின் காலை வேளையில், அவர் தம்முடைய சபையில் சீடர்களுடன் அமர்ந்திருந்தார், அப்போது ஒருவர் வந்தார். அவர் ஒரு ராம பக்தர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் “ராம, ராம, ராம” மட்டுமே செய்துவருகிறார், அவர் கோவிலுக்கு செல்வது மட்டுமில்லாமல், பல கோயில்களையும் கட்டியுள்ளார். அவர் ஒரு மாபெரும் பக்தர். அவருக்கு வேகமாக வயதாகிக் கொண்டிருந்த நிலையில், ஒரு சிறிய சந்தேகம் வந்தது. “என் வாழ்நாள் முழுவதும் நான் 'ராம, ராம, ராம' மட்டுமே செய்துவருகிறேன். கடவுளை நம்பாத பலர் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் இன்னமும் உலகில் எல்லாவற்றையும் நன்றாக அனுபவித்து வருகின்றனர். கடவுளின் பெயரை உச்சரிப்பதற்காக மட்டுமே நான் எல்லாவற்றையும் தவறவிட்டிருக்கிறேன். மற்றவர்கள் சொல்வது போல் ஒருவேளை கடவுள் இல்லை என்று வைத்துக்கொள்வோம், நான் என் வாழ்நாள் முழுவதையும் இழந்துவிடுவேன்.” கடவுள் இருக்கிறார் என்று அவருக்கு தெரியும், ஆனால் அவருக்கு ஒரு சிறு சந்தேகம் இருந்தது.

"எப்படியிருந்தாலும், இங்கே ஒரு ஞானோதயம் அடைந்தவர் உள்ளார், அவருக்குத் தெரிந்திருக்கும்" என்றவாறு, அவர் கௌதமரிடம் சென்றார். அதிகாலையில், சூரியன் வருவதற்கு முன்பு, அவர் மறைவாக நின்று, “கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்டார். கௌதமர் அந்த மனிதரைப் பார்த்து “இல்லை” என்றார். முதல்முறையாக, அவர் தெளிவான “இல்லை” என்றொரு பதிலைத் தந்தார். அங்குள்ள எல்லா சீடர்களுக்கும், அவர்களுக்குள் எப்பொழுதும் இது ஒரு போராட்டமாக இருந்தது – கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இது ஒரு மிகப்பெரிய போராட்டம், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்த பூமியின் மீது மனிதன் வாழத் தொடங்கியதிலிருந்து, இந்தப் போராட்டம் அவனுக்குள் இருந்துவருகிறது. கடவுள் நம்பிக்கையாளர்கள் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள், என இரண்டு சாராருக்கும் இப்போராட்டம் இருந்து கொண்டிருக்கிறது. முதல்முறையாக, கௌதமர் ஒரு அழுத்தமான பதிலாக, “இல்லை” என்று சொன்னார், அங்கே ஒரு பெரும் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. இனி நீங்கள் போராட வேண்டியதில்லை. கடவுள் இல்லை. யாரும் உங்களை வேவு பார்க்கப்போவதில்லை, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் வந்த மகிழ்ச்சி! ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது.

மாலையில் மற்றொரு மனிதர் வந்தார். இவர் ஒரு சார்வாகர். இவர்கள் முழுக்க முழுக்க லோகாதாயர்கள் மற்றும் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். நாட்டில் அந்தக் காலங்களில், தொழில்முறை சார்வாகர்கள் இருந்தனர். அவர்கள் உங்கள் ஊருக்கு வந்து சவாலுக்கு அழைப்பார்கள். “கடவுள் இல்லை என்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன். கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் எனக்கு நிரூபித்தால், நான் உங்களுக்கு இவ்வளவு பணம் தருவேன், ஆனால் கடவுள் இல்லை என்று நான் உங்களுக்கு நிரூபித்தால், நீங்கள் எனக்கு இவ்வளவு பணத்தைக் கொடுக்கவேண்டும்.” இது அவர்களின் தொழில். அவர் ஒரு கைதேர்ந்த சார்வாகர். நீங்கள் ஐம்பது ஆண்டுகளாக கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் அவருடன் பதினைந்து நிமிடங்கள் பேசினால், கடவுள் இல்லை என்பதை அவர் உங்களுக்கு நிரூபித்துவிடுவார். கடவுள் இல்லை என்பதை அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரூபித்துள்ளார். அவரது வயது கடந்து கொண்டிருந்தது, ஒரு சிறிய சந்தேகம் வந்தது. “கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 'கடவுள் இல்லை' என்று இவ்வளவு காலமாக நிரூபித்த பிறகு, நான் அங்கு செல்லும்போது, அவர் என்னை விடுவாரா? ஏற்கனவே இந்த கடவுள் நம்பிக்கையாளர்கள், கடவுள் அதிகம் பழிவாங்குவார் என்று சொல்கிறார்கள் - அவர் என்னை விட்டுவிடுவாரா?” அவருக்கு சிறிது பயம் வந்தது. நிச்சயமாக கடவுள் இல்லை என்று அவருக்கு தெரியும், ஆனால் ஒரு சிறிய சந்தேகம் வந்தது

சூரியன் மறைந்தபின் மாலை வேளையில் கௌதமரிடம் வந்த அவர், தொலைவில் நின்று, “கடவுள் இருக்கிறாரா?” என்ற அதே கேள்வியைக் கேட்டார். கௌதமர் அந்த மனிதனைப் பார்த்து, “ஆம்” என்றார். சீடர்களிடம் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடவுள் இல்லை என்று காலையில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். மாலையில், கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். கௌதமர் எதைக் குறித்து விளையாடுகிறார்? இது என்னதான் விளையாட்டு? அவர் குழப்பத்தை உருவாக்கத்தான் முயற்சிக்கிறாரா? இப்போது இந்த முழுவிளையாட்டும் என்னவென்றால், அனைத்து நம்பிக்கையையும் அகற்றிவிட்டு, உங்களை உண்மையைத் தேடச்செய்வது. நம்பிக்கை கொள்வதுடன் நீங்கள் தேடுதலைத்தான் அழித்திருக்கிறீர்கள்.

#7. புத்தர் ஜென் தொடங்கியது எப்படி

buddha tamil story,  புத்தர் கதை

ஒரு குறிப்பிட்ட நாளில், கௌதமர் வந்து மேடையில் அமர்ந்தார். அவர் பேசுவதற்காக நூற்றுக்கணக்கான சீடர்கள் காத்திருந்தனர். இந்த குழுவில் மகாகஷ்யபர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் இருந்தார். புத்தரின் பேச்சுகளை அவர் ஒருபோதும் கேட்காததாலும், தியானம் செய்யாமலும் அல்லது வேறு எதையும் செய்யாமலும் இருந்ததால் அவர் பித்துப்பிடித்தவர் என்று அங்குள்ள மற்றவர்கள் முடிவு செய்திருந்தனர், அவர் முட்டாளை போல ஒரு மரத்தின்கீழ் வெறுமனே அமர்ந்திருப்பார். அவர் ஒரு புத்திசாலியான ஆன்மீகவாதி அல்ல, அவர் வெறுமனே அங்கே அமர்ந்திருப்பார். எல்லோரும் அவரை ஒரு முட்டாள் என்றும், அவருக்கு எதையும் கற்பிக்க முடியாது என்றும் விட்டுவிட்டார்கள். ஒரு நாள், கௌதமர் வந்து அமர்ந்தார். அவர் கையில் ஒரு பூ இருந்தது. அவர் அந்தப் பூவைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் பேசுவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் அவர் அந்த பூவில் மூழ்கியிருந்ததால், அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. நிமிடங்கள் மணிக்கணக்கில் நீண்டுகொண்டே சென்றது. ஆனால் அவர் வெறுமனே பூவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேசுவதற்கு சிறிதும் கவனம் செலுத்தவில்லை. திடீரென்று மகாகஷ்யபர் அடக்கமாட்டாமல் சிரித்தார். அவர் பெருங்குரலில் சிரித்தார். பின்னர் கௌதமர், மகாகஷ்யபரையும் கூட்டத்தில் உள்ள மற்றவர்களையும் பார்த்து, "நான் வார்த்தைகளால் கொடுக்க முடிந்ததை உங்களுக்குக் கொடுத்துள்ளேன்; வார்த்தைகளில் கொடுக்க முடியாததை மகாகஷ்யபருக்கு கொடுத்துள்ளேன்," என்றார். அதுதான் ஜென்னின் ஆரம்பம். இதில் அறிவியல், கற்பித்தல், வேதம், முறை அல்லது பயிற்சி என்று எதுவும் இல்லை. நீங்கள் வெறுமனே உட்கார்ந்து காத்திருங்கள். அது நிகழும்போது, உங்களுக்கு அது நிகழ்கிறது.

ஜென் ஒரு கிறுக்குத்தனமான (வினோதமான) வழி, ஆனால் மிக அருமையான வழி, ஏனெனில் எந்தவிதமான அடிமைத்தனமும் இல்லை. ஆனால் ஜென் நிகழ வேண்டுமானால், ஒரு மகாகஷ்யபர் இருக்கவேண்டும், அந்த அளவுக்கான புரிதலில் உள்ள யாரோ ஒருவர் இருக்கவேண்டும்; இல்லையெனில் அது நிகழ்வதில்லை.

புத்தருக்கும் மகாகஷ்யபருக்கும் இடையில் என்ன நிகழ்ந்ததோ, அதுதான் உலகில் ஜென் பதிவு செய்யப்பட்ட முதல் கணம். இது அதற்கு முன்பு பலமுறை நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அதுவே ஒரு ஆன்மீகப் பாதையாக மாறவில்லை.

#8. புத்தர் "அதைக் கைவிடுங்கள்" என்று கூறுகிறார்

buddha tamil story,  புத்தர் கதை

ஒரு குறிப்பிட்ட நாளில், கௌதமர் என்ற புத்தரைக் காண ஒரு மனிதர் வந்தார். கௌதமர் ஓரிடத்தில் தனியாக அமர்ந்திருந்தார், அந்த மனிதர் இரண்டு கைகள் நிறைய பூக்களுடன் வந்திருந்தார், ஏனெனில் இந்தியாவில், உங்கள் குருவை வணங்குவதற்கு இது ஒரு வழக்கமான முறையாக இருக்கிறது. அந்த நபர் கௌதமரை நோக்கி வருகையில், கௌதமர் அவரைப் பார்த்து, “அதைக் கைவிடுங்கள்” என்றார். அவர் இதைச் சொன்னபோது, அவருக்கு அர்ப்பணிக்கக் கொண்டுவந்த இந்த பூக்களைத்தான் ‘அதை விட்டுவிடு’ என்று கௌதமர் சொல்கிறார் என்று நினைத்தார். "ஒருவேளை நான் அதை என் இடது கையில் வைத்திருப்பதால் அது அமங்கலமானதாக இருக்கலாம்," என்று மேலும் அவர் எண்ணினார். இதுவும் இந்தக் கலாச்சாரத்தில் உண்டு, அதாவது உங்கள் இடது கையால் ஒருவருக்கு ஏதாவது கொடுத்தால், அது அமங்கலமானது என்று கருதப்படுகிறது. எனவே அவர் தனது இடது கையில் இருந்த பூக்களைக் கைவிட்டு, மரியாதைக்குரிய ஒரு முறையில் சென்றார். கௌதமர் மீண்டும் அவரைப் பார்த்து, “அதை விடுங்கள்” என்றார். இப்போது அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பூக்களில் என்ன தவறு இருக்கிறது என்ற சிந்தனையுடன் மீதமுள்ள பூக்களையும் அவர் கைவிட்டார். பின்னர் கௌதமர், “பூக்களை அல்ல, அதை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன்” என்றார். பூக்களைக் கொண்டுவந்த அந்த ஒருவர், நீங்கள் அதைக் கைவிடவேண்டும், இல்லையெனில் நீங்கள் புத்தரை அறியமாட்டீர்கள். நீங்கள் வருவீர்கள், நீங்கள் தலைவணங்குவீர்கள், நீங்கள் அவர் கூறுவதைக் கேட்பீர்கள், பிறகு நீங்கள் சென்றுவிடுவீர்கள், ஆனால் ஞானமடைந்த ஒருவருடன் இருப்பதென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்கள். அந்த சாத்தியத்தை நீங்கள் முற்றிலும் இழந்துவிடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை நீங்கள் இணைத்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் அதைக் கைவிடவேண்டும், அது வேறு ஏதேதோ அல்ல. உங்கள் வேலை, குடும்பம் மற்றும் எதையெல்லாமோ கைவிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தற்போது, நீங்கள் "நான்" என்று அழைப்பது, உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், கருத்துகள், அபிப்ராயங்கள் மற்றும் நம்பிக்கை முறைகளின் குவியலாகத்தான் இருக்கிறது. நீங்கள் அதைக் கைவிடவில்லை என்றால், புதியதொரு சாத்தியம் எங்கே இருக்கிறது? கூடுதலான சிலவற்றுடன் பழைய விஷயங்களை அலங்கரிப்பதற்குத்தான் நீங்கள் முயற்சிக்கிறீர்களா? அது உதவப்போவதில்லை; அது விஷயங்களை மேலும் கடினமாக்கப் போகிறது. ஆனால் “அதை விடுங்கள்” என்று மட்டும் நீங்கள் சொன்னால் அது விழுந்துவிடுவது கிடையாது. எனவே அதற்கான சில வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை உங்களுக்குள் எடுத்துவருவதால், இந்தக் கைவிடல் தானாகவே நிகழ்கிறது.

#9. புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார்

buddha tamil story,  புத்தர் கதை

கௌதமரும் அவருடைய சீடர்களும் தொடர்ந்து ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கும், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும் இடையறாமல் சென்றுகொண்டிருந்தனர். அவர் எங்கு சென்றாலும், அவருடன் குறைந்தது 2000 முதல் 3000 துறவிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் உணவுக்காக பிச்சை எடுத்து உண்பவர்களாக இருந்தனர். இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து உணவுகேட்டால், உங்கள் சொந்த குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தாலும், முதலில் அவருக்கு உணவை வழங்கவேண்டும். மக்கள் இப்படி இருந்தபோது, ஒவ்வொரு முறையும் அவர் 2000-3000 துறவிகளுடன் ஒரு நகரத்துக்குள் திடீரென்று நுழையும்போது, கிராமவாசிகளுக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, கௌதமர், மக்களுக்கு சுமை ஏற்படாதபடி, அவர்கள் மூன்று நாட்களுக்குமேல் எந்த இடத்திலும் தங்கக்கூடாது என்று ஒரு விதி செய்தார்.

மழைக்காலங்களில் மட்டும், காடுகளின் வழியாக கால்நடையாகப் பயணம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பலத்த மழை பெய்வது வழக்கம். காடுகளின் வழியாக நடந்து செல்வது ஆபத்தானதாக இருந்திருப்பதுடன், பலரும் உயிர் இழந்திருக்கவும் கூடும். எனவே, அவர்கள் ஒரு பெரிய நகரத்தில் முகாமிட்டபோது, பல வீடுகளில் பரவலாக தங்கியிருந்த ஒரு காலமாக இது இருந்தது.

பகலில், துறவிகள் யாசிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனந்ததீர்த்தர் ஒரு விபச்சாரியை சந்தித்தார். அவள் அவருக்கு யாசகம் அளித்தாள். அவர் உயரமும், அழகுமான இளைஞனாக இருப்பதைக் கண்டதும், அவரிடம், “துறவிகள் தங்குமிடம் தேடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் என் வீட்டில் வந்து தங்கக்கூடாது?” என்று கேட்டாள். ஆனந்ததீர்த்தர், “நான் எங்கு தங்கவேண்டும் என்று புத்தரிடம் கேட்கவேண்டும்” என்றார். அவள் கேலி செய்தாள், “ஓ, உங்கள் குருவிடம் கேட்க விரும்புகிறீர்களா? போய் அவரிடம் கேளுங்கள். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.” ஆனந்தர், கௌதமரிடம் சென்று தான் சேகரித்ததை அவர் காலடியில் வைத்தார். ஒவ்வொருவரும் எங்கு சென்றாலும் உணவு மற்றும் தங்குமிடத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே ஆனந்தர், “இந்தப் பெண் என்னை அழைக்கிறாள். நான் அங்கே தங்கமுடியுமா?” என்று கேட்டார். கௌதமர், “அவள் உன்னை அழைக்கிறாள் என்றால், நீ சென்று அங்கே தங்கவேண்டும்,” என்றார். அதைக் கேள்விப்பட்டதும், சுற்றிலும் இருந்த நகரமக்கள் கோபமடைந்தனர். அவர்கள், “என்ன? ஒரு துறவியானவர், விபச்சாரியின் வீட்டில் தங்கப் போகிறாரா? இதுதான்! இந்த ஆன்மீக செயல்முறை ஊழல் நிறைந்ததாகிவிட்டது” என்று பேசினர். கௌதமர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள்? அந்த பெண்மணி அவரை அழைக்கிறார். அவர் அங்கேயே இருக்கட்டும். இதில் என்ன பிரச்சனை?" என்றார்.

மக்கள் அவரிடமிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தனர். கௌதமர், “பொறுங்கள், நான் இந்த பாதையில் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், வாழ்க்கையை வாழ இது மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த வழி என்பதை நான் காண்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் என்னிடம், அவளுடைய வழிகள் என்னுடையதைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறீர்களே? அது உண்மை என்றால், நான் சென்று அவளுடன் இணையவேண்டும். உண்மையாகவே தேடுதலில் இருப்பவர் என்ற வகையில், அது அப்படித்தான் இருக்கவேண்டும் - மிக உயர்ந்த ஒன்றை நீங்கள் கண்டால், அதை நீங்கள் நாடிச் செல்லவேண்டும்” என்றார். மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர், அங்கிருந்து பலர் வெளியேறிவிட்டனர். ஆனந்தர் அவளுடன் சென்று தங்கினார். மழையின் காரணத்தால், குளிர் அதிகமானது. அவர் ஒரு மெல்லிய அங்கியை மட்டுமே அணிந்திருந்தார், எனவே அவள் அவருக்கு ஒரு நல்ல பட்டு மேலாடை கொடுத்தாள். அவர் அதைத் தன் உடல் மீது போர்த்திக்கொண்டார். மக்கள் இதைப் பார்த்தபோது, அவர் வழி தவறிச் சென்றதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொண்டனர். அவள் அவருக்கு நல்ல உணவைச் சமைத்துத் தந்தாள். அதனை அவர் உண்டார். மாலையில், அவள் அவருக்காக நடனமாடினாள். அதைக் கூர்மையான கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். மக்கள் இசையைக் கேட்டதும், அவர் அவளிடம் மயங்கிவிட்டதாக நினைத்தார்கள். நேரம் சென்றது. மழை நின்று, செல்ல வேண்டிய நேரம் வந்தபோது, ஆனந்தர் ஒரு பெண் துறவியுடன் கௌதமரிடம் வந்தார். இதுதான் உண்மையின் பாதையில் இருப்பதன் ஆற்றல்.

#10. ஒரு தாய், தனது இறந்த மகனை உயிர்ப்பிக்குமாறு புத்தரிடம் கேட்கிறார்

buddha tamil story,  புத்தர் கதை

ஒருநாள், மூன்று சிறுவர்களின் தாயான ஒரு பெண் தன் கணவனை இழந்துவிட்டு, அந்தத் துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். இயல்பாகவே, இதற்குப் பிறகு, அவள் மூன்று குழந்தைகளையும் தன் உயிராகவே பற்றுதல் கொண்டு வாழ்ந்து வந்தாள். ஆனால் மூத்த பையனும் ஒரு வருடம் கழித்து இறந்துவிட்டான், வெகுவிரைவில், இரண்டாவது பையனும் காலமாகிவிட்டான். இப்போது அவள் தன் ஒரே குழந்தையை தன் வாழ்க்கையின் பற்றுக்கோடாக எண்ணி இருந்தாள். ஆனால் இந்த பையனும் சிறிதுகாலத்தில் இறந்துவிட்டான். இதைத் தாங்கமுடியாமல், அந்தச் சிறுவனின் உடலை எடுத்துக்கொண்டு கௌதமர் என்ற புத்தரிடம் சென்றாள். அவள், “நீங்களும் உங்கள் ஆன்மீகமும். இந்த பையனை உயிர்ப்பித்தால் தவிர, நீங்கள் என்ன பேசினாலும், அது அர்த்தமற்றதுதான். என் கணவர் இறந்துவிட்டார், நான் எப்படியோ அதைத் தாங்கினேன். என் முதல் பையன் இறந்துவிட்டான், பின்னர் இரண்டாவது பையனும் இறந்துவிட்டான்; இருப்பினும் நான் தாங்கிக்கொண்டேன். இப்போது கடைசி மகனும் இல்லாமல் போய்விட்டான். நீங்கள் உண்மையானவராக இருந்தால், இந்த சிறுவனை உயிர்ப்பிப்பதன் மூலம் அதை இப்போது நிரூபியுங்கள்” என்று கேட்டாள்.

கௌதமர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும், அவள் கொந்தளிக்கும் உணர்ச்சி நிலையில் இருப்பதையும், அவர் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் இப்போது அவளுக்கு புரியாது என்பதையும் அறிந்துகொண்டார். எனவே அவர், “நான் உங்கள் மகனை மீண்டும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் சென்று, மரணத்தை ஒருபோதும் சந்தித்தறியாத ஒரு வீட்டிலிருந்து சில எள் விதைகளை கொண்டுவாருங்கள்" என்றார். சிறுவனின் உடலைச் சுமந்துகொண்டு, அந்தப் பெண்மணி, வீடு வீடாகச் சென்று, மரணத்தை அறியாத வீடு ஒன்றைத் தேடினாள். நகரம் முழுவதிலும் தேடியபிறகும், இதுபோன்ற ஒரு வீடுகூட இல்லை என்று அவள் உணர்ந்தாள். பின்னர் மேற்கொண்டு தேடுவதை நிறுத்திவிட்டு, அவள், உடலுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தாள், திரும்பி வந்து கௌதமரின் முன் அமர்ந்தாள். அவள் வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்தாள்.

#11. புத்தர் எப்படி இறந்தார்

buddha tamil story,  புத்தர் கதை

கௌதம புத்தர் விஷம் கொடுக்கப்பட்டதால் இறந்தார்.அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது, இதனை அவர் சாப்பிட்ட பிறகு உணர்ந்தார், அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது அவருக்கு தெரிந்தது. விருந்தளித்தவர் முதலில் புத்தருக்கு உணவளித்தார், அவருடன் இருந்த அனைத்து துறவிகளுக்கும் அவர்கள் உணவைத் தயார்செய்திருந்தார்கள். எனவே அவர், "நீங்கள் எனக்கு அருமையான உணவைக் கொடுத்தீர்கள், நான் அதை சாப்பிட்டுவிட்டேன், ஆனால் என் சீடர்களால் இந்த உணவை ஜீரணிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் சாப்பிட்டதுடன் உங்கள் விருந்தோம்பலில் நீங்கள் திருப்தியடைய வேண்டும். என் மக்களுக்கு அந்த உணவை அளிக்கவேண்டாம்." ஆகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவர் இன்னமும் உயிர் பிரியாமல் இருந்தார், ஆனால் உடல்நிலை சரியில்லாமல் கிடந்தார். சீடர்கள் கூடினர், இப்படி ஒரு எதிர்பாராத முடிவு ஏற்பட்டதால், சில வழிகாட்டுதல்களை வழங்கி, இந்த இயக்கத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அவர் அவர்களுடன் பேசவேண்டியிருந்தது, அவர் இன்னும் ஒருசில ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். ஆனால் இப்போது, அவரால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. அவரால் படுத்துக்கொண்டு பேச முடியவில்லை, அதனால் அவர் தலைக்கு ஆதாரவாக ஒரு முட்டுக் கொடுத்துக்கொண்டு பேசினார். அந்த நிலைதான் கௌதமரின் மஹாபரி நிர்வாணா என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அந்த நிலைத்தோற்றம் புத்த மதத்தவர்களுக்கு மிகவும் புனிதமானதாக ஆனது. புத்தர் படுத்த நிலையில் இருக்கும் உருவச்சிலைகள் பல உள்ளன, ஏனெனில் இந்த இயக்கம் எப்படி செல்லவேண்டும் என்ற அடிப்படையான வழிகாட்டுதலை, கடைசி செய்தியாக அந்த நேரத்தில் அவர் கொடுத்திருந்தார். பல புத்த மதத்தவர்கள் இதைப்போலவே படுத்துக்கொள்ளத் தொடங்கினர். அது ஒரு கலாச்சாரம். நீங்கள் கௌதமரைப் போல் படுத்திருக்கும் நிலையைப் பின்பற்றலாம், ஆனால் நீங்கள் ஒரு புத்தராக முடியாது.

கேள்வியாளர்: சத்குரு, அப்படியென்றால் என்னால் புத்தராக முடியாது என்று அர்த்தமா?

சத்குரு:

கௌதமர் புத்தராக முடியுமென்றால், நீங்கள் ஏன் புத்தராக முடியாது? புத்தர் என்றால் அவரது காரண அறிவுக்கு மேலானவர் என்று பொருள். (இன்னர் இன்ஜினியரிங்) ஈஷா யோகாவின் எல்லா முயற்சியும் உங்களை ஒரு புத்தராக மாற்றுவதுதான். சில கணங்களுக்கு, நாங்கள் உங்களை புத்தராக்கியுள்ளோம், ஏனென்றால் நீங்கள் சில கணங்கள் உங்கள் காரண அறிவைக் கடந்து இருந்தீர்கள். இப்போது ஒட்டுமொத்த உபாயமும், அங்கேயே எப்படி நீடித்திருப்பது என்பதுதான்; அங்கேயே நீடித்திருப்பதற்குத் தேவையான விழிப்புணர்வை உருவாக்குவதுதான்.

ஆசிரியர் குறிப்பு: “ஆசையை விட சொன்னார் புத்தர். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்பட சொல்கிறீர்கள். இரண்டில் எது சரி?”திரைப்பட இயக்குனர் திரு. S.A.சந்திரசேகர் அவர்களின் கேள்விக்கு சத்குரு அளித்த பதிலைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

இறந்த நபருக்கு அவரின் மரணம் சார்ந்த சடங்குகளை நடத்துபவர்களைக் குறிப்பிடுவது.