முக்தியை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்? ஞானோதயம் எப்படி நிகழ்கிறது? ஞானோதயம் நிகழும்போது கர்மா இருக்குமா? ஞானோதயம் அடைந்த பின்னர் உடலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக இந்தப் பகுதி அமைகிறது.

சத்குரு:

முக்தி என்றால்...

இப்படியே இந்த வாழ்க்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது ஏதோ ஒரு தண்டனை போலவோ அல்லது பரிசு போலவோ கிடையாது. இயற்கையின் சுழற்சி இப்படித்தான் இருக்கிறது. உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு எழுவதன் காரணம், நீங்கள் எதையோ படித்ததால் அல்ல, பிறப்பு, இறப்பு சுழற்சியின் அர்த்தமற்ற தன்மையை நீங்கள் உணர்ந்து கொண்டதால்தான். பிறப்பு, இறப்பு சுழற்சியின் அர்த்தமற்ற தன்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் நீங்கள் முக்தி பற்றிப் பேச ஆரம்பிக்கிறீர்கள். ‘முக்தி’ என்றால் பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட விரும்புவது. துன்பப்படுவதால் இந்த விருப்பம் வரவில்லை, பிறப்பு-இறப்பிலிருந்தே விடுபட நினைக்கிறீர்கள். துன்பத்தில் இருக்கும் மக்கள் முக்தியை அடைய முடியாது. நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்கள், ஆனந்தமாகத்தான் இருக்கிறீர்கள், ஆனால் ஆரம்பப்பள்ளியை விட்டு தாண்டிப்போக நினைக்கிறீர்கள். ஆரம்பப்பள்ளி வாழ்க்கை எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் நீங்கள் கல்லூரிக்குப் போக விரும்புவீர்களா மாட்டீர்களா? ஆரம்பப்பள்ளியை அனுபவித்து விட்டோம். இப்போது நீங்கள் அதிலிருந்து நகர விரும்புகிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கர்மா உங்கள் எதிரியல்ல. கர்மா இருப்பதால்தான் நீங்கள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

‘நான்’ என்று நீங்கள் அழைத்துக் கொள்கிற இந்த உயிரை நான் எப்போதும் எதிர்மறைச் சொல்லால்தான் அழைக்கிறேன். அப்போதுதான் உங்கள் கற்பனை கொடிகட்டிப் பறக்காது- வெற்றிடம் அல்லது இருட்டு என அழைப்போம். அதை விடுத்து நான் ஒளி என்றோ அல்லது கடவுள் என்றோ சொன்னால் நீங்கள் கற்பனையில் மிதக்கக்கூடும்.

முக்தி, ஞானோதயம் என்றால்...

உங்களுக்குள் உள்ள வெற்றிடம் ஒரு காற்றுக்குமிழ் போல இருக்கிறது. கர்மா அந்த காற்றுக்குமிழியின் சுவராக இருக்கிறது. கர்மா இல்லாமல் உங்கள் இருப்பே இங்கு இருக்கமுடியாது. கர்மா உங்கள் எதிரியல்ல. கர்மா இருப்பதால்தான் நீங்கள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்மாவும் நீக்கப்பட்டுவிட்டால், நீங்கள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. அது ஒரு காற்றுக்குமிழ். நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கினாலும் இந்த காற்றுக்குமிழ் இருக்கிறது. அது தன் அதிர்வை இழந்தவுடன் இயற்கையாகவே அது வேறு உடலை எடுத்துக் கொள்ளும். எனவே இப்போது அந்த காற்றுக்குமிழியை துளையிட விரும்புகிறோம். முக்தி என்பது எதைக் குறிக்கிறது என்றால், உங்களுள் உள்ள குமிழியில் துளையிடுவதன் மூலம், அதிலுள்ள காற்று வெளிவந்து எல்லாவற்றின் பகுதியாக மாற விரும்புவதைத்தான் குறிக்கிறது.

ஞானோதயம் என்பதும் இதைத்தான் குறிக்கிறது. பெரும்பாலானோருக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விட்டுச் செல்லும் நேரமும் ஒன்றாக இருக்கிறது. உடலின் அடிப்படை செயல்தன்மையை அறிந்த சிலர் மட்டும், உடலின் தந்திரங்கள் அறிந்த சிலர் மட்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடலை தக்கவைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விட்டு செல்லும் நேரமும் ஒன்றாக இருக்கிறது.

உயிர்சக்தியின் தீவிரம்...

உயிர்சக்தி அதிகத் தீவிரத்துடன் இருந்தாலும் நீங்கள் உடலைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. உயிர்சக்தி தளர்வடைந்து போனாலும் நீங்கள் உடலைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. உயிர்சக்தி ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்கும்போதுதான் நீங்கள் உடலைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன் தீவிரத்தை ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி உயர்த்தினீர்கள் என்றால் நீங்கள் உடலைவிட்டுப் போய்விட நேரும். எனவே உலகில் இரண்டு வகையான யோகாவைத்தான் நீங்கள் பார்க்கமுடியும். ஒரு வகை, விலகிக்கொண்டே செல்வதன் மூலம் கடைசியில் உயிர்சக்தியை தளர்வடையச் செய்து உடலை விட்டு நீங்குவது; மற்றொரு வகை உயிர்சக்தியின் தீவிரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வருவதன் மூலம் மேற்கொண்டு உடலைத் தாங்கமுடியாமல் உடலைவிட்டு நீங்குவது. எனவே உயிர்சக்தி மிகவும் தீவிரமடைந்தாலும் சரி, மிகவும் தளர்ந்தாலும் சரி, உடல்தன்மை உங்களைப் பிடித்துவைத்திருக்க முடியாது.

சமூகத்தில் உயிர்சக்தியை தீவிரமடையச் செய்யும் முறைக்கு மிகுந்த வரவேற்பு இருக்கலாம், ஆனால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்கள் உயிர்த்தன்மைக்கு முக்கியமில்லாத விஷயம். அதற்கு சமூகரீதியில் முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் உங்களைப்பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பதிலோ அல்லது நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதிலோ, உங்கள் இருப்பைப் பொறுத்தவரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆன்மீகம் என்று சொல்லும்போது உயிர்த்தன்மையளவில் எப்படி வளர்ச்சியடையவது என்று பார்க்கிறீர்கள். சமூக அளவிலோ, உணர்ச்சி ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எப்படி வளர்ச்சியடைவது என்று பார்ப்பதில்லை. உண்மையில் நீங்கள் வேறெங்கோ போக விரும்புகிறீர்கள், ஏனெனில் உங்கள் உணர்ச்சி, உங்கள் சமூகம், உங்கள் உளவியல் எல்லாம் உங்களது கற்பனைதான். இல்லையா? வேண்டுமானால் அவை சில நேரங்களில் இன்பம்தரும் கற்பனையாக இருக்கலாம், ஆனாலும் அவை கற்பனைதான், இல்லையா?

உயிர்சக்தி மிகவும் தீவிரமடைந்தாலும் சரி, மிகவும் தளர்ந்தாலும் சரி, உடல்தன்மை உங்களைப் பிடித்துவைத்திருக்க முடியாது.

ஒரு உயிரின் உடல்தன்மையைக் கடந்த வளர்ச்சியானது, அவர் இந்த உலகில் என்னவாக இருக்கிறார், அவர் தன்னைப்பற்றி என்ன எண்ணம் வைத்திருக்கிறார், மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. அவர் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார், எந்த அளவு பொருள்தன்மையைக் கடந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எனவே ஒருவர் இந்த எல்லா செயல்முறைகளிலிருந்தும் உண்மையாகவே விடுதலை பெற விரும்பினால், அந்த நோக்கத்தின் அருகில் செல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் காற்றுக் குமிழியை உடைத்துக் கொண்டால் விழிப்புணர்வுடன் செயல்பட முடியாது, ஏனெனில் பகுத்துப்பார்க்கும் தன்மை உங்களிடமிருந்து நீக்கப்பட்டு விடுகிறது.

மனிதப் பிறவியின் முக்கியத்துவம்...

இதனால்தான் மனிதப்பிறவி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மனிதப்பிறவியில் மட்டும்தான் பகுத்துப் பார்க்கும் தன்மையை பயன்படுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். இந்த நிமிடம் வரை நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் இப்போது இந்த வினாடி நீங்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற முடியும், இல்லையா? இதுவரை நீங்கள் மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், அது ஒரு பொருட்டல்ல. இந்த வினாடி நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். அந்த சுதந்திரமும், பகுத்துப் பார்க்கும் தன்மையும் எப்போதும் உங்களிடம் இருக்கிறது.

விழிப்புணர்வு ஒரு தீவிரத்திற்கு வந்து விட்டாலோ, அல்லது தீவிரம் குறைந்து விட்டாலோ உடலில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் ஆகிறீர்கள். அந்த நிலையில், குமிழியை முழுவதுமாக உடைத்துவிடக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. குமிழியை உடைத்த பிறகும் உடலில் தங்கியிருக்க வேண்டுமானால் அதற்கு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எல்லாத் தந்திரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது உடலைத் தக்க வைத்துக் கொள்ள நாமாகவே சில கர்மாக்களைச் செய்ய வேண்டும். இதற்கு மக்கள் பல செயல்களைச் செய்கிறார்கள். நான் என்னைப் பற்றி பேச விரும்பவில்லை. ஏனெனில் பல செயல்கள் எனக்குள் நடந்து கொண்டிருக்கின்றன.

ராமகிருஷ்ணரின் உணவுப் பற்று...

உதாரணத்திற்கு ராமகிருஷ்ண பரமஹம்சரை எடுத்துக் கொள்வோம். அவர் வாழ்ந்த காலத்திலேயே மக்கள் அவரை ஒரு கடவுளாகப் பார்த்தார்கள். ஆனால் ராமகிருஷ்ணர் உண்ணும் விஷயத்தில் வெறி பிடித்தது போலிருந்தார். இது உங்களுக்கு தெரியுமா? அவர் உணவு விஷயத்தில் பைத்தியமாக இருந்தார். சீடர்களுடன் பேசிக் கொண்டிருப்பார், திடீரென அவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று, சாரதாவைப் பார்த்து “இன்று என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்பார். உணவு விஷத்தில் அவ்வளவு பைத்தியமாக இருந்தார். சாரதா, ராமகிருஷ்ணரைப் பார்த்து “நாங்கள் உங்களை கடவுள் போல பார்க்கிறோம், ஆனால் நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்களே, என்ன இது?” என்று கேட்பார். “அது சரி, இன்று என்ன சமையல்?” என்று ராமகிருஷ்ணர் திருப்பிக் கேட்பார்.

ஒரு நாள் சாரதாவிற்கு இது மிகவும் அவமானமாக இருந்ததால், கோபத்துடன் ராமகிருஷ்ணரைப் பார்த்து திட்டிவிட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், “ஏதாவது ஒரு நாள் நீ தாளியை கொண்டுவரும் போது (தாளி என்பது உணவுகள் பரிமாறப்பட்ட தட்டு), அன்று உணவில் அக்கறை காட்டாமல் இருந்தால் அன்றிலிருந்து மூன்று நாட்கள் மட்டுமே நான் இருப்பேன் என்பதைத் தெரிந்துகொள்” என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன ஆறு வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் சாரதா உணவெடுத்துச் சென்றபோது, அவர் முகம் திரும்பிக் கொண்டார். ராமகிருஷ்ணர் முன்பு சொன்னது, திடீரென சாரதாவின் நினைவிற்கு வர அவர் கதறி அழுதார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுவதில் பயனில்லை, காலம் வந்துவிட்டது” என்று. ராமகிருஷ்ணர் உணவின் மீது ஆசை வைத்து விழிப்புணர்வுடன் கர்மா உருவாக்கிக் கொண்டார். உடலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு நாளைக்கு 10 தடவையாவது உணவின் மீது ஆசையை உருவாக்கிக் கொள்வார். மற்றபடி சாதாரணமாக அமர்ந்திருந்தாலே உடலை விட்டு விடுவார். அவர் தனக்கென சில வேலைகளை வைத்திருந்ததால் மேலும் சில காலத்திற்கு உடலில் இருக்க தீர்மானித்திருந்தார். இது போல வெவ்வேறு யோகிகள் பல வழிகளைக் கையாண்டார்கள். சில எளிமையானவை, சில சிக்கலானவை. குமிழ் ஒருமுறை வெடித்து, பிறகும் விழிப்புணர்வுடன் நீங்கள் உடலைக் கொண்டிருந்தால், பல வழிகளில், இருப்பு ரீதியாக உங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.