நோய் வருவதன் சூட்சும காரணங்களும், தீர்வும்!
நோயில்லா வாழ்க்கை வாழ்வதே பெரிய வரமாக கருதப்படுகிறது! ஒருவருக்கு நோய் வருவதற்கான சூட்சும காரணங்கள் என்னென்ன என்பதை அலசும் சத்குருவின் இந்த உரை, ஆரோக்கியம் வழங்குவதில் கோயில்களும் யோகாவும் எப்படி துணை நிற்கின்றன என்பதை புரியவைக்கிறது!
நோயில்லா வாழ்க்கை வாழ்வதே பெரிய வரமாக கருதப்படுகிறது! ஒருவருக்கு நோய் வருவதற்கான சூட்சும காரணங்கள் என்னென்ன என்பதை அலசும் சத்குருவின் இந்த உரை, ஆரோக்கியம் வழங்குவதில் கோயில்களும் யோகாவும் எப்படி துணை நிற்கின்றன என்பதை புரியவைக்கிறது!
அவைகள் நமது மனதின் உருவாக்கமா?
சத்குரு:
“நோய்” என்று கூறும்போது, முதலில் நாம் அவற்றை இரண்டு அடிப்படையான பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டியுள்ளது. ஒருசில வகை நோய்கள் தொற்றும் தன்மையுடையவை. அவற்றை நீங்கள் வெளியிலிருந்து பெறுகிறீர்கள். ஏதோ ஒரு நாள் அலட்சியத்தின் விளைவாக, சுகாதாரமற்ற ஏதோ ஒன்றை அருந்தியதாலோ அல்லது சாப்பிட்டதாலோ அல்லது தொற்றுக் காய்ச்சல் உள்ளவருக்கு அருகில் இருந்ததாலோ, நீங்கள் கிருமித் தாக்குதலுக்கு உள்ளாகலாம். இதற்குத் தக்க மருந்துகளும், மருத்துவர்களும் உண்டு. ஆனால் நாள்பட்ட நோய்கள் என்ற வேறொரு வகை இருக்கிறது. இந்தவகை நோய்களை உடல் தானாகவே உருவாக்குகிறது.
Subscribe
அடிப்படையாகவே, இந்த உடல், தான் பிழைத்திருக்க வேண்டும் என்றும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறது. இந்தப் பொருள் தன்மையான உடலுக்கு, அது ஒரு மிக ஆழமாக வேரூன்றிய விருப்பமாக உள்ளது; அது தன்னைத்தானே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புகிறது. இருப்பினும் அது தனக்குத்தானே நோய்களை உருவாக்கிக் கொள்கிறதென்றால், ஏதோ தவறாகிப் போய்விட்டது. ஏனென்றால், நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலே வாழ்கிறோம். ஒரு காரணம், நிச்சயமாக மனது. அதனால்தான் மனோரீதியான நோய்கள் (சைக்கொசொமடிக்) உருவாகின்றன.
25 வருடங்களாக ஆஸ்த்துமா நோயுடன் இருந்தவர்கள், ஈஷா யோகா வகுப்பிற்கு வருகின்றனர். வந்த இரண்டாவது அல்லது மூன்றாவது நாளிலேயே நோய் இல்லாமல் போகிறது. வகுப்பின் காரணமாக, அவர்களது மனப்போக்கில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்தவுடன் நோய் குணமடைந்துவிடுகிறது. இத்தனை காலமாக, அவர்கள் தமக்குத்தாமே இந்தத் துன்பத்தை உருவாக்கி வந்திருக்கின்றனர். ஆனால் அவரிடம், “நீங்கள்தான் உங்கள் ஆஸ்த்துமா உருவாகக் காரணமாக இருக்கிறீர்கள்” என நீங்கள் கூறினால், அவர் உங்களைத்தான் பைத்தியம் என்று நினைப்பார். ஏனென்றால் அவரது கருத்தின்படி, “நானே எனக்கு ஏன் ஆஸ்த்துமா உருவாக்கிக்கொள்ள வேண்டும்? நானே ஏன் இந்தத் துன்பத்தை எனக்கு உண்டாக்கிக்கொள்ள வேண்டும்? முட்டாள்தனமாகப் பேசுகிறீர்கள். எனக்கே நான் எப்படி நோய் ஏற்படுத்திக்கொள்ள முடியும்? எனக்கு இதிலிருந்து விடுபடவேண்டும்”, என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் பல தருணங்களில், 7 நாள் வகுப்பு முடிவதற்குள் அவர்கள் வெறுமனே நோயிலிருந்து விடுபட்டு விடுகின்றனர்.
சிலர், தொடர்ந்து கிரியா பயிற்சி செய்வதால் நோயிலிருந்து குணமடைகின்றனர். ஆனால், வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதே அதிகமானோர் நோயிலிருந்து விடுபடுகின்றனர். ஏழு நாட்களுக்குள் அவர்களுக்கு நோய் குணமாகிறதென்றால் அதற்குக் காரணம், நோயை குணப்படுத்துமளவிற்கு அவர்கள் செய்யும் கிரியாவின் சக்தி அதிகமாகவில்லை, பதிலாக அவர்களது மனோபாவம் மாறியதுதான். தங்களது கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகளிலிருந்து அவர்கள் விடுபட்டதும், உடனே நோயும் குணமாகிறது.
மனதின் இயக்கமானது ஒரு குறிப்பிட்டவிதமாக இருந்தால் அது சக்தியின் இயக்கத்தைத் தடை செய்கிறது. உடலின் பல்வேறு செயல்பாடுகளான உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற எந்தச் செயலாக இருந்தாலும், அது உங்கள் உடலில் உங்கள் சக்தி எப்படி இயங்குகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. உங்களது சக்தி ஏதோ ஒரு காரணத்தினால் தவறாக இயங்கினால், அப்போது நோய் தானாகவே உருவாகக்கூடும். உங்களுக்குள் அது ஒருவித நோயாக உருவெடுக்கும். அதே நேரத்தில் அது இன்னொருவருக்கு வேறு நோயாக உருவெடுக்கலாம். ஒவ்வொரு மனிதருக்கும் இது வெவ்வேறு நோயாக உருவெடுக்கிறது. உங்கள் பெற்றோரின் உடலில் பலவீனமாக இருந்த ஏதோ ஒரு பகுதி, பரம்பரையாக, உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியிலும் அதே பலவீனத்தை உண்டாக்கக்கூடும். ஒருவிதமான சமநிலையற்ற தன்மை நிகழ்ந்தால், அவரவர் பரம்பரைக் குறைபாட்டை ஒட்டி, ஒரு மனிதருக்கு ஆஸ்த்துமா ஏற்படலாம், மற்றவருக்கு நீரிழிவு நோய் ஏற்படலாம். எப்படிப்பட்ட சமநிலையற்ற தன்மைக்கு நீங்கள் ஆட்பட்டிருக்கிறீர்கள் என்பது மிக ஆழமான கர்மவினையோடு தொடர்புடையது. ஏனென்றால் கர்மா என்பது ஒருவிதமான மென்பொருள் (Software).
நமக்குள்ளே பெருமளவில் பதிவுகளாகச் சேர்ந்திருப்பவை அனைத்தும், ஒரு மென்பொருளாக உருவாகின்றன. இந்த மென்பொருள் சில உந்துதல்கள் அல்லது இயல்புகளை உருவாக்கி, நம்மை ஒரு குறிப்பிட்ட வழியில் செல்லத் தூண்டுகின்றன. பொதுவாக நமது பாரம்பரியத்தில், இதை வாசனைகள் என்று கூறுகிறோம். “வாசனை” என்றால் “மணம்” என்பது பொருள். உங்களிடமிருந்து என்ன விதமான மணம் வருகிறது என்பது, உங்களுக்குள் எந்தவிதமான குப்பையைச் சேகரித்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது, இல்லையா? உங்களிடம் ஒரு அழுகிய மீன் வைத்திருந்தால், அது ஒருவிதமான வாசனையைத் தருகிறது. இந்த விதமான வாசனையை நீங்கள் உங்களைச் சுற்றிலும் பரவவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட சிலவற்றை ஈர்க்கிறீர்கள். வேறொரு நாளில் நீங்கள் வேறுஏதோ ஒரு வாசனையுடன் இருந்தால், வேறுவிதமான விஷயங்களை நீங்கள் ஈர்ப்பீர்கள். உங்களுடைய வாசனையின் தன்மையைப் பொறுத்து, குறிப்பிட்ட சில வழிகளில் நீங்கள் நகர்ந்து செல்ல முற்படுகிறீர்கள். மேலும், அதற்கேற்றவாறு உலகத்தின் சில அம்சங்கள், குறிப்பிட்ட வழியில் உங்களை நோக்கி வரவும் செய்கின்றன.
இது தன்னிச்சையான ஒன்றா? இல்லை, இது தன்னிச்சையானதல்ல. நீங்கள் விழிப்புணர்வு பெற்றால், உங்களது வாசனை ஒரு குறிப்பிட்டவிதமாக இருந்தாலும், அதற்கு மாறான வேறுவழியில் நீங்கள் செல்ல முடியும். ஆனால், நீங்கள் விழிப்புணர்வு இல்லாமலிருந்தால், இயல்பாகவே உங்களுடைய உந்துதல்களுக்கு ஏற்ப நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள். உடலில் இத்தகைய உந்துதல்களின் ஒருவித வெளிப்பாடு நோயாக மாறக்கூடும். சில உந்துதல்களின் காரணமாக, உடலின் குறிப்பிட்ட பகுதிகளில், சக்தியானது சரிவர இயங்கவில்லையென்றாலும் நோய் ஏற்பட முடியும்.
அல்லது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றின் தாக்கத்தில் இருந்தால், அப்போதும் நோய் ஏற்படக்கூடும். உங்களுடைய கர்ம கட்டமைப்பு நன்றாக இருந்து, சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் சிறந்த உந்துதல் இருக்கும் நிலையில், உங்களுடைய உடல் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தாலும், இத்தனைக்கும் அப்பால், உங்களை மோசமான ஒரு நோய் தாக்கமுடியும். ஏனென்றால் நீங்கள் வேறு ஏதோ ஒன்றின் தாக்கத்தில் இருக்கிறீர்கள். இந்த ஒரு மறைமுகமான அம்சமும் முக்கியமான பங்காற்றுவதன் காரணத்தால், பண்டைய நாட்களில், இந்தக் கலாச்சாரத்தில், ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும் ஒரு கோவிலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மையில், கோவில்கள் பிரார்த்தனைக்கான இடமாகவோ அல்லது வணங்குவதற்கான இடமாகவோ கட்டப்படவில்லை. தேவாலயங்களில் நடத்தப்படுவதைப் போல், கோவிலில் உங்களை யாரும் பிரார்த்தனைக்கு வழிநடத்துவதில்லை. நீங்கள் கோவிலில் தனிமையாகவே விடப்படுகிறீர்கள். அங்கே சென்று நீங்கள் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கவேண்டும், அவ்வளவுதான். வெளிச் சூழல்களிலிருந்து, உங்கள் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் சில பரிமாணங்களைக் கையாள்வதற்கான சக்திமையங்களாக கோவில்கள் இருக்கின்றன.
இத்தகைய பாதிப்புகள் ஒரு தொற்று போன்றவை. ஆனால் வைரஸ்களோ அல்லது பாக்டீரியாக்களோ காரணம் அல்ல. வேறுசில உந்துதல்கள் உங்கள் வாழ்வின் போக்கை பாதிக்கின்றன. அது ஒரு மனிதராக இருக்கலாம். சில சூழல்களாக இருக்கலாம், சில வெளிகளாகவோ (Spaces) அல்லது மனிதர்களின் தீய நோக்கமாகவோ இருக்கலாம். ஆகவே, தினமும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று உங்களையே சிறிது சிறிதாக சுத்திகரிப்பு செய்துகொள்கிறீர்கள். உங்களுக்குள் நீங்கள் விழிப்புணர்வு பெற்று, உள்நிலையில் சுத்தி செய்யக்கூடிய வழிகளை நீங்களே உருவாக்கினால் தவிர, கோவிலுக்குச் செல்வது அவசியம். உங்கள் கட்டமைப்பை சுத்திகரிப்பு செய்வதற்கான உள்நிலைவழிகளை நீங்கள் உருவாக்க வில்லையென்றால், எதிர்மறைத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு, கோவில் ஒரு வழியாக இருக்கிறது. கோவில் என்பது எப்போதும் நீங்கள் செல்லக்கூடிய ஒரு பொதுவான சுத்திகரிக்கும் இடமாக இருந்து வந்துள்ளது. உங்களுடைய எல்லாப் பிரச்சனைகளையும் அது தீர்த்துவிடாது. ஆனால், வெளியிலிருந்து உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் எதிர்மறைத் தன்மையை, கோவிலின் சக்தி மையம் நீக்கிவிடுகிறது.
உங்களின் சக்திகட்டமைப்பானது பல்வேறுவழிகளில் பலவீனமடைகிறது. உங்களுக்கேயுரிய கர்மக் கட்டமைப்பினாலோ, தவறான உணவு முறைகளாலோ, தவறான மனோபாவங்கள் அல்லது உங்கள் மனம் செயல்படும் விதத்தினால், அழுத்தம், பரபரப்பு, உங்களது உணர்ச்சிகள் அல்லது மற்ற வெளிப்புறத் தாக்கங்கள் இவையனைத்தும், உடலமைப்பின் சக்தி ஓட்டத்தை பலவீனமடையச் செய்யும். கிரியாவை முறைப்படியாகப் பிரயோகித்து நீங்கள் செய்தால், மேற்கூறிய அம்சங்கள் அனைத்தையும் சரியாகக் கையாளமுடியும்.
யோகாவில் பலவிதமான அம்சங்கள் உள்ளன. யோகாவின் சில குறிப்பிட்ட அம்சங்கள், ஆரோக்கியத்துடன் தொடர்பற்றவையாக இருக்கின்றன. அந்த அம்சங்கள் உயர்ந்த நிலை அனுபவங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வதாக மட்டுமே இருக்கின்றன. யோகாவில், ஆரோக்கியத்தோடு மட்டும் தொடர்புடைய சில குறிப்பிட்ட அம்சங்களும் உள்ளன. ஈஷா யோகாவின் அடிப்படைப் பயிற்சியாக நீங்கள் கற்பதில், ஒரு பகுதி ஆரோக்கியத்திற்கென்றும், மற்றொரு பகுதி ஆன்மீக நலனுக்கென்றும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அது ஒரு நல்ல சமநிலையான அமைப்பு. குறிப்பாக குடும்பம் மற்றும் சமூக சூழல்களில் வாழும் மக்களுக்கு இதை நாம் கற்றுக்கொடுக்கும் காரணத்தால், இந்த விதமாக வடிவமைத்திருக்கிறோம்.
அமெரிக்காவில், யோக மையங்கள் அனைத்தும் ஆரோக்கிய மையங்களாக மாறிவிட்டன. இது நல்லதல்ல. ஆரோக்கியம் என்பது மக்களை கவர்வதற்காகக் கூறப்படுவது. யோகாவின் ஒரு சிறு பகுதியாகவே ஆரோக்கியம் இருக்கிறது. ஆனால், யோகாவின் இலக்கு மற்றும் நோக்கம் அது அல்ல. குறிப்பாக மேற்கு நாடுகளில், மக்கள் ஆரோக்கியம்தான் வாழ்க்கையின் நோக்கம் என்பது போல நடந்து கொள்கின்றனர். வாழ்வின் இலக்கு ஆரோக்கியம் அல்ல. ஆரோக்கியமின்றி துன்பப்படுகின்றவர்களை விட, ஆரோக்கியத்துடன் துன்பப்படுகிறவர்கள் இந்த பூமியில் பலர் உண்டு. குறைந்தபட்சம் நீங்கள் ஆரோக்கியமின்றி இருந்தாலாவது, உங்களுடைய துன்பத்திற்கு ஒரு நல்ல மன்னிப்பு உண்டு. ஆரோக்கியத்துடன், அதே நேரம் துன்பத்திலும் இருப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அது மேலும் அதிகமான துன்பத்தைத் தருகிறது.