“குறுத்தோலையும் ஒருநாள் சறுகுதானே?!” என்று ஊர்ப்பக்கம் சொல்வதுண்டு! முதுமை என்பது அனைவருக்கும் வரக்கூடியதுதான். ஆனால், முதியோர்கள் நமக்குத் தேவையற்றவர்கள் என ஓரம்கட்டும் நிலையை இன்றைய வீடுகளில் பார்க்கமுடிகிறது. தனது தந்தை சுயநலமாக நடந்துகொள்வது குறித்து புகார்கூறும் ஒரு மகனுக்கு சத்குரு சொல்லும் பதில்களின் தொகுப்பு, முதியவர்களுக்கு உண்மையில் தேவை எது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

Question: என் அப்பாவுக்கு எழுபது வயது, நடமாட்டம் குறைந்து விட்டது. 24 மணி நேரமும் தனக்குத் தேவையானது பற்றியேதான் கவலைப்படுகிறார். வயதானால் சுயநலம் மிகுந்துவிடுமா? 'முதுமை கற்றுத் தருவதெல்லாம் ஒட்டுண்ணியாக மாறிவிடும் தந்திரம்' என்று அண்மையில் நான் படித்த கவிதை உண்மைதானோ?

சத்குரு:

உங்களை மூப்பும், தள்ளாமையும் தாக்கும்போது, நீங்கள் எப்பேர்ப்பட்ட ஒட்டுண்ணியாக இருக்க போகிறீர்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஏதோ ஒரு கவிஞர் சொன்னாலும் சரி, நீங்கள் சொன்னாலும் சரி... முதியவர்களை ஒட்டுண்ணிகள் என்று நினைக்கும் சிந்தனையே மகா கேவலமானது.

பாதுகாப்பின்மை உணர்வு வந்தால்தான், சுயநலம் வரும். உங்கள் மீது முழு நம்பிக்கை இருந்தால், அப்படிப்பட்ட உணர்வு அவர்களுக்கு ஏன் வரப்போகிறது?

வயதானவர்களுக்கான தேவைகள் பற்றி உங்களுக்குத் தெரியாதபோது, அவர்கள் அதைக் குறிப்பிட்டுக் கேட்கிறார்கள்.

இளமை காரணமாக இன்றைக்கு நீங்கள் யாரையும் சார்ந்திருக்க அவசியம் இல்லாமல் இருக்கலாம். இயலாமையும், தள்ளாமையும் முடக்கி வைத்துவிட்டதால், உங்கள் அப்பாவால் உடல்ரீதியாக உங்களுடன் போட்டி போட முடியாது. அதற்காக?

ஓர் அரசன் தன் நாட்டில் வசிக்கும் முதியவர்களால் எந்த உதவியும் இல்லை என்பதால், 60 வயது நிறைந்தவர்கள் அனைவரையும் கண் காணாத தீவில் கொண்டுவிடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்களின் கண்ணீருக்கு இடையில் உத்தரவு நிறைவேற்றப்பட்டது.

சில மாதங்கள் கழித்து, திடீரென்று நாட்டில் கடும் மழை. ஊர் வெள்ளத்தில் மிதந்தது. நிலைமையைச் சமாளிக்கச் சரியான தீர்வு கொடுப்பவருக்குப் பெரும் பரிசு வழங்குவதாக மன்னன் அறிவித்தான்.

குமரன் என்பவன் கொடுத்த யோசனை, மற்ற எல்லா யோசனைகளையும் விட மிகச் சிறப்பாக இருந்தது. அதை அமல்படுத்தி, வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினான் அரசன்.

அடுத்த வருடம், நாட்டில் கடும் தொற்று நோய் பரவியபோதும், குமரன் சொன்ன யோசனைதான் பயனுள்ளதாக அமைந்தது. அதற்கடுத்த வருடம் பஞ்சம் தாக்கியபோதும், குமரனின் ஆலோசனைதான் நாட்டைக் காப்பாற்றியது.

குமரனால் மட்டும் எப்படிச் சரியான தீர்வு கொடுக்க முடிகிறது என்று அரசன் திகைத்துக் கேட்டான்.

"அரசே, முதியவர்களை நீங்கள் நாடு கடத்தினீர்கள். ஆனால், நான் என் தந்தையைப் பிரிய இஷ்டமில்லாமல், அவரை என் வீட்டுப் பரணியில் ஒளித்து வைத்து, யாருக்கும் தெரியாமல் பராமரித்து வருகிறேன். உடலால் இயலாமல் போனாலும், அவருடைய பழுத்த அனுபவம்தான் நம் நாட்டில் ஒவ்வொரு முறை பிரச்சனை வந்தபோதும் தீர்வு சொன்னது" என்றான் குமரன்.

அரசன் தன் தவறை உணர்ந்து, நாடு கடத்திய முதியவர்களைச் சகல மரியாதைகளோடு தன் நாட்டுக்கு மீட்டு வந்தான்.

உண்மைதான். வயதானவர்கள் மொத்தமாகப் பயனற்றவர்கள் அல்ல!

நீங்கள் இந்த பூமியில் அடியெடுத்து வைத்த கணத்தில், உங்களுக்கான உணவைத் தேடிக்கொள்ளக்கூட உங்களிடம் எந்தத் திறனும் இல்லை. முற்றிலும் கையாலாகாமல் கிடந்த உங்களை உங்கள் அம்மா எடுத்து மார்போடு அணைத்துப் பாலூட்டவில்லை என்றால், என்னவாகி இருப்பீர்கள்? உணவு மட்டுமல்ல... மொத்த உலகமே உங்களுக்கு அவள்தானே?

என்றைக்காவது கடவுளை நேரில் சந்தித்து இருக்கிறீர்களா? கடவுள் தன்மைக்கு நெருக்கமாக நீங்கள் உணர்ந்த ஒரே நபர் உங்கள் அம்மாவாகத்தானே இருக்க முடியும்?

இன்றைக்கு நீங்கள் ஏதோ ஒரு நிலையில் இருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் இளமைக் காலத்தை உங்கள் பெற்றோர் பராமரித்துத் தந்ததால்தானே?

வேர்களைக் கத்தரித்துவிட்டுப் பூக்கள் செழிக்க வேண்டும் என்றால், எப்படி நடக்கும்?

Question: நானும் என் மனைவியும் வேலைக்குப் போகிறோம். குழந்தைகள் கல்லூரிக்குப் போகிறார்கள். இருந்தாலும், என் கடமையிலிருந்து தவறாமல், அப்பாவை வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறேன். இன்னும் என்னதான் செய்யமுடியும்?

சத்குரு:

உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கவனித்துக் கொள்வதை ஒரு கடமையாக மட்டுமே நினைத்தீர்கள் என்றால், அது அவர்களை இழிவுபடுத்துவதற்குச் சமம்.

குழந்தையுடன் தினம் 15 நிமிடங்கள் செலவு செய்வதை உங்கள் கடமை என்று நினைத்துச் செய்தால், நீங்கள் ஒரு மோசமான தந்தை. மனைவியிடம் கடமை உணர்வோடு காதல் வார்த்தைகளை உதிர்ப்பவரானால், நீங்கள் மோசமான கணவர். வயது முதிர்ந்த அப்பாவைக் கவனித்துக் கொள்வதைக் கடமையாக நினைத்தால், நீங்கள் மோசமான மகன்.

கடமையைச் செய்வதில் பாதியளவு இருந்தால்கூட, அன்பினால் செய்வதே மேன்மையானது. எந்தக் கட்டத்திலும் கடமை என்பது அன்புக்கு ஒரு மாற்றாக மாறமுடியாது.

இழப்பினாலோ, வருத்தத்தினாலோ வரும் குடம் குடமான கண்ணீரைவிட, அன்பினால் வெளிப்படும் ஒற்றைத் துளி கண்ணீருக்கு மதிப்பு அதிகம்.

இதயத்தில் அன்பு இல்லாமல், கடமை உணர்வோடு உங்கள் கைகள் வழங்கும் எதையும், அடுத்தவர் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வது இல்லை. ஒரு குற்ற உணர்வுடன்தான் ஏற்கிறார்கள். இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோமே என்று அது அவர்களுக்கு வேதனையைத்தான் தருகிறது.

உறவுகள் கசந்து போவதற்கு முக்கியக் காரணமே, அன்பை வற்றிப்போக விட்டுவிட்டு, வெறும் கடமை உணர்வோடு செய்யப்படும் செயல்கள்தாம்.

அன்பு என்பது பூரணமானது. உண்மையான அன்பில் எதிர்பார்ப்புகள் கிடையாது. ஏமாற்றங்கள் கிடையாது.

செய்வதைக் கடமையாக நினைத்து எரிச்சலுடன் செய்யாமல், அன்பு உணர்வோடு செய்து பாருங்கள். உறவுகள் அமுதமாகும்!