முதுமை என்றாலே ஒருவித பயம், சலிப்பு, இயலாமை போன்ற உணர்வுகள் வந்துவிடுகின்றன. முதுமை எப்படி ஏற்படுகிறது, முதுமையில் வரும் பிரச்சனைகள், வேகமாக வயதாவதை தடுக்கும் வழிமுறைகள், முதுமையில் யோகா எப்படி உதவும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

வயதாகுதல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இந்த மாற்றங்கள் நமது உடம்பில் பிறந்ததிலிருந்து தொடங்கி இறக்கும் வரை நடக்கிறது. இதற்கான மாற்றங்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படுகின்றன. எதனால் வயதாகிறோம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பிருந்தே இந்த மாற்றங்கள் தொடங்கி விடுவதாக கருதலாம். வயது அதிகரிக்க அதிகரிக்க இயல்பாகவே உடலின் பல்வேறு இயக்கம் மற்றும் செயல்பாடுகள் மெதுவாக வலுவிழக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் பொதுவாக 50 வயது ஆகும்வரை இது நமது கவனத்திற்கு வருவதில்லை.

வயதாவதன் மாற்றம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் நடப்பதில்லை. வயதாகுவது என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியும் நடப்பதில்லை.

மனித குல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது வயதான மக்கள் அதிகமாக வாழ்வதாகக் கூறப்படுகிறது. நவீன மருத்துவ வசதிகள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை வயதானவர்களாக மருத்துவம் கருதுகிறது.

வயதாகும்போது ஏற்படும் பிரச்சனைகள்

ஊட்டச்சத்து பற்றாக்குறை: பற்களில் பெரும்பாலும் தொந்தரவு ஏற்படுவதாலும், மற்ற காரணங்களாலும், சரியான உணவு சாப்பிடாததாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் உடலில் அசதி மற்றும் பலவித நோய்கள் ஏற்படலாம். தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பேரில் விட்டமின் மற்றும் மினரல் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடை: வயதாவதைக் காரணம் காட்டி பலர் உடலுக்கு தரும் பயிற்சி குறைத்துக் கொள்கின்றனர். இது தவிர மூட்டு வலி, இதய நோய்களாலும் உடற்பயிற்சி குறைந்துவிடுகிறது. இதனுடன் சேர்ந்து உணவில் கவனமின்மையும் எடையை அதிகரிக்கும். எடை அதிகரித்தல் மீண்டும் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல் ஓய்வு: சிலர் மேற்கூறியதற்கு எதிர்முறை. ஓய்வின்றி மிக அதிகமாக உழைப்பார்கள். தகுந்த ஓய்வும் உடலுக்கு தரவேண்டி இருக்கிறது.

தூக்கம்: பெரும்பாலும் வயதானவர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மருத்துவ ஆலோசனை பேரில் மட்டுமே தூக்க மருந்து எடுத்துக்கொள்ளவும்.

எலும்பு மற்றும் மூட்டு: வயதாகும்போது பல்வேறு வளர்சிதை மாற்றங்களால் எலும்புகளின் உருவத்திலும், கால்சியம் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் மூட்டுகள் சரிவர இயங்க முடியாமல் போய்விடுகின்றன. எலும்புகள் எளிதில் முறியும் தன்மை அடைகின்றன. கூன் விழுதல் ஏற்படுகிறது. ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ போரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும், உயரம் குறையலாம். தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையின் பேரில் கால்சியம் மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

பார்வை: கண்களின் லென்சுகளில் ஏற்படும் மாற்றத்தால் மூக்கு கண்ணாடி அணிதலும், காட்ராக்ட் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சில சமயம் கண்களின் பிரசர் அதிகமாகும் போது பார்வையை பாதிக்கும் ‘க்ளா கோமா’ என்னும் நோய் ஏற்படலாம். திடீரென தாங்க முடியாத தலை வலி, பார்வையில் மாற்றம், கண்ணிலிருந்து நீர் ஏற்பட்டால் தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகவும். வருடம் ஒருமுறை கண் பரிசோதனை அவசியம்.

கேட்கும் திறன்: காதில் ஒலி அலைகளை பரப்பும் உறுப்புகளின் செயல் திறன் குறைவதால் காது சரிவர கேளாத நிலைமை ஏற்படும். தேவைப்பட்டால் காது கேட்கும் கருவி உபயோகிக்கலாம்.

பல் பிரச்சினைகள்: வயதாகும்போது பல் விழுதல், ஈறுகளில் தொற்று, வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படும். இதற்கு தகுந்த பல் பரிசோதனை செய்து சரிசெய்து கொள்வது அவசியம். ஏனெனில் பற்களில் தொந்தரவு உங்கள் உணவு உட்கொள்ளும் அளவை பாதித்து, உடலையும் மறைமுகமாக பாதிக்கிறது.

மூச்சுக் கோளாறுகள்: வயது ஆக ஆக நுரையீரல் திறன் குறைகிறது. குறிப்பாக நிமோனியா போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். குளிர்காலத்தில் உடல் சூடு தணியாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

இதய நோய்கள்: சரியான வாழ்க்கை முறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் அதிரோஸ்கிலிரோஸிஸ் (இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்தல்) போன்ற நோய்கள் ஏற்படும். இதனால் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஜீரண மண்டலம்: பல்வேறு மாற்றங்கள் ஜீரண மண்டலத்தில் ஏற்படுகின்றன. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வயிறு எரிச்சல், ஏப்பம் போன்றவை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. தேவைப்பட்டால் மருத்துவ உதவியும் நாடலாம்.

சிறுநீரகம்: சிறுநீரகத்தின் அணுக்கள் குறைவதால் சரிவர செயல்பட முடியாமல், குறைந்த அளவு சிறுநீர் மட்டுமே உற்பத்தியாகிறது. சிறுநீரக ப்ளாடர் தசைகளில் மாற்றம் ஏற்படுவதால் முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாமல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. ப்ராஸ்டேட் (Prostate) பிரச்சினைகளும் ஏற்படும்.

நரம்பு மண்டலம்: ஞாபக மறதி அதிகமாகி, பதில் வினை நேரம் அதிகரிக்கும். பலவகையான நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். ஆல்சைமர்ஸ், பார்க்கின்சென்ஸ் போன்ற மூளையை பாதிக்கும் நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். காரணம் ஏதுமின்றி கீழே விழும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால் கவனம் தேவை.

சருமம்: சருமம் மெல்லியதாகி உலர்ந்து அதன் ஜவ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால் தோல் தொங்கிப் போவதுடன் சுருங்கிவிடுகிறது. முடி உதிர்தலும் ஏற்படுகிறது.

மனநோய்: பொதுவாக மனச்சோர்வு அதிகமாக ஏற்படும். 2 வாரத்திற்குமேல் காரணமற்ற சோகம் அல்லது துக்கம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல், சோர்வு இருந்தால் மருத்துவரை அணுகவும்.

கேன்சர்: வழக்கத்திற்கு மாறாக உடல் இயக்கத்தில் எந்த மாற்றங்கள் சிலநாட்கள் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. எந்தவிதமான கட்டி இருந்தாலும், எவ்வளவு சிறிய அளவில் எந்த பாகத்தில் இருந்தாலும், அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகவும்.

வயதாவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மனிதரை வெளி சூழ்நிலைகள், மாத்திரைகளின் தாக்கங்கள், மற்றும் சிகிச்சைகளுக்கு எளிதில் பாதிப்படைய வைக்கின்றன. அதனால் இவற்றில் கவனம் தேவை.

மேலே கூறியுள்ள மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் சரியான வாழ்க்கை முறை மூலம் அவற்றின் வீரியத்தையும், வேகத்தையும் கட்டுப்படுத்த முடியும். ஏன் சில நேரங்களில் முழுமையாக தடுக்கவும் முடியும்.

வேகமாக வயதாகுதலைத் தவிர்க்கும் வழிகள்:

வாழ்க்கை முறை மாற்றங்கள்: குறைந்த கொழுப்புள்ள உணவு வகைகள், தொடர் உடற்பயிற்சி, யோகப் பயிற்சிகள் போன்றவற்றால் வயது அதிகரிப்பதால் உடம்பிலுள்ள செல்களில் (Cell) ஏற்படும் மாற்றங்களை சரிப்படுத்த முடியும். ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. மது, புகைப் பழக்கம், போதைப் பழக்கம், போன்றவை எளிதில் வயதாகச் செய்யும். எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உணவு: வயதான பலர் தங்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை. தவறான உணவு வகைகளை உட்கொண்டு பல வியாதிகளால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் அதிக கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். காய், பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

தூக்கம்: போதுமான நேரம் தூங்க வேண்டும். கடும் வேலை அல்லது மனக்கவலை போன்ற காரணங்களால் தொடர்ந்து குறைந்த நேரமே தூங்கி வருபவர்களுக்கு எளிதில் வயதாகுதல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

உடற்பயிற்சி: உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். இது, உடலுக்கு வலுவைத் தந்து, பல நோய்கள் வராமல் தடுக்கிறது. குறைந்தபட்சம் தினசரி குறிப்பிட்ட தூரம் நடப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி.

வருடாந்திர பரிசோதனை: மருத்துவரிடம் வருடாந்திர பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்கப்) செய்து கொள்ளவும்.

பல மருத்துவமனைகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என பிரத்தியேகமான மருத்துவர்கள் உள்ளனர். ஜீரியாட்டிரிஷன்ஸ் எனப்படும் அவர்கள் வயதாகுதல் மற்றும் அது சம்பந்தமான நோய்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தடுப்பூசி

 • வயதானவர்கள் இதுவரை நிமோனியோ தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் எடுத்துக் கொள்ளலாம்.
 • இன்ஃப்ளூயென்ஸா (Influenza) தடுப்பூசி - ஒவ்வொரு வருடமும் இதை எடுத்துக் கொள்வது நல்லது. இதை ஃப்ளூ தடுப்பூசி என்றும் கூறுவர்.
 • ஒவ்வொரு 10 வருடத்திற்கும் டெட்டனஸ் தடுப்பூசி தேவைப்படும்.
 • மற்ற தடுப்பூசி தேவையா என மருத்துவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
 • எப்போதும் மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

 • ஆரோக்கியமாக மற்றும் நீண்ட நாட்கள் வாழ யோகா பெருமளவு உதவுகிறது. யோகப் பயிற்சி செய்யும் பலர் புத்துணர்வுடன் இளமையாக உணர்வதாகக் கூறுகின்றனர். மற்றவர்களாலும்கூட யோகப்பயிற்சி செய்பவர்களிடம் இந்த மாற்றத்தை எளிதில் பார்க்க முடிகிறது. யோகப் பயிற்சிகள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்வு அளிக்கிறது.
 • நன்றாகக் குனிந்து நிமிர முடிகிறது. கூன் விழுவதைத் தடுக்கிறது.
 • மூட்டுகள் இறுகிப் போவதை தவிர்க்கின்றன. இறுகிய மூட்டுகளையும் இலகுவாக செய்கின்றன.
 • உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எளிதில் சளி, ஜுரம் ஏற்படுவது குறைகிறது.
 • சருமத்தின் ஜவ்வுத் தன்மையை பாதுகாக்கிறது.
 • வயதானவர்கள் தியானம் செய்து வரும்போது ஞாபக சக்தி குறைவது தடுக்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் திறனும் அதிகமாகிறது. மேலும் வயதானவர்கள் புதிய சூழ்நிலைகளுக்கு எளிதாக ஒத்துப் போவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • யோகப் பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
 • இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
 • மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
 • மனநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
 • நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.