தாய்மையின் அழகு

குடும்பத்தோடு ஒத்துப் போக இயலாமல் சிலர் ஆசிரமத்திற்கு இடம் பெயர நினைக்கிறார்கள். "மூன்று பேருடன் வாழ்வதே உங்களுக்கு சவாலாக இருந்தால் 1000 பேரோடு வாழ நீங்கள் தகுதி இல்லாதவர்" என்று இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு அவர்கள் கூறுகிறார். மேலும் குடும்பம் ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல என்றும், விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி உயர்வதற்கான ஒரு பயிற்சிக்களமாக அது இருக்கிறது என்றும் சத்குரு அவர்கள் விவரிக்கின்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கையை நடத்துவதற்கு பலவிதமான இணைப்புகளை நாம் ஏற்படுத்துகிறோம் - தொழில், தேசம், சமூகம் என பலவிதமான இணைப்புகள். இவை அனைத்திலும் அடிப்படையான இணைப்பே குடும்பம்தான். குடும்பம் என்பதை, அது என்னவோ, அதே ரீதியில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதே ரீதியில்தான் அதை நடத்தவும் வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் உணர்ச்சியின் தாக்கத்தால் அதை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தி விடுகிறோம். அது என்னவாக இல்லையோ அது மாதிரியான தளத்திற்கு உயர்த்திவிடுகிறோம். என் தாயார் எந்த வகையிலும் எங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததில்லை. அதனாலேயே அவர் ஒரு மிகப் பெரிய தாக்கமாக இருந்தார். மனிதர்கள் உங்களுக்கு அளிக்க முடிவது, நீங்கள் அவர்களுக்கு அளிக்க முடிவது - இவைகளை நசுக்கக் கூடாது. ஆனால் அவர்களைச் சுற்றி நாம் உருவாக்கும் பொய் தோற்றத்தை நிச்சயம் நசுக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் ஒன்று கூடுவதில், பகிர்வதில் இருக்கும் அழகை நாம் தவற விட்டு விடுவோம்.

பல்வேறு வகையில் குடும்பம் என்பது ஒரு "நெருக்கமான கூட்டமைப்பு". இப்படியிருக்கும்போது அடிக்கடி ஒருவர் காலை மற்றவர் மிதித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் நீங்கள் ஒரே இடத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதனால் ஒரு விதமான புரிதலும், பக்குவமும் ஏற்படுகிறது. உங்களுக்கு ஒரு ஃபேஸ்புக் குடும்பம் இருந்தால் 10000 நபர்கள்கூட அதில் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் வெறும் புகைப்படங்களை தவிர எதையும் அதில் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. அது உங்களுக்கு சவாலாக இருப்பதில்லை. ஃபேஸ்புக்கில் யாரையாவது பிடிக்கவில்லையென்றால், ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும். அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் குடும்பம் அப்படி அல்ல. அவர்கள் செய்யும் ஏதோ ஒரு காரியத்தால் அவர்களை வெறுத்தாலும் அவர்களை க்ளிக் செய்து அனுப்பி விட முடியாது.

விருப்பத்தினாலோ, பந்தத்தினாலோ மக்கள் ஒன்றாக இருக்கும்பொழுது அவர்களுக்கு ஒரு பக்குவம் ஏற்படுகிறது. விருப்பு, வெறுப்பு தாண்டி நீங்கள் உயர்வதால் இந்தப் பக்குவம் ஏற்படுகிறது. உங்கள் பெற்றோரிடம், குழந்தைகளிடம், கணவனிடம், மனைவியிடம் பல அம்சங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆரம்பத்தில் உங்களுக்கு இதனால் எரிச்சல் ஏற்படலாம். ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு அதை கடந்து உயர்கிறீர்கள். "எப்படியோ போகட்டும்" என்ற உணர்வினால் கடந்தால் அதனால் பயன் இல்லை. ஆனால் விழிப்புணர்வுடன் கடந்தால் நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பீர்கள். ஒரு நோக்கமே இல்லாமல் உங்களுக்கு ஆன்மீகம் நிகழும். அதனை நிகழச் செய்வதற்கு இது மிகவும் அழகான வழி.

குடும்பம் என்பது உங்களுடைய விருப்பு, வெறுப்புக்களைத் தாண்டி உயர்வதற்கான ஒரு பயிற்சிக் களம். குடும்பத்தோடு ஒத்துப் போக இயலாமல் சிலர் ஆசிரமத்திற்கு இடம் பெயர நினைக்கிறார்கள். "மூன்று பேருடன் வாழ்வதே உங்களுக்கு சவாலாக இருந்தால் 1000 பேரோடு வாழ நீங்கள் தகுதி இல்லாதவர்" என்று நான் அவர்களிடம் சொல்வதுண்டு. குடும்பத்தோடு சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இங்கே வர நினைத்தால் அது மிக உயர்வானது. ஆனால் ஒரு சிலரோடு வாழ முடியவில்லையென்றால் 1000 பேரோடு எப்படி உங்களால் வாழ முடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் உடல், உணர்வு, பொருளாதார சமூக தேவைகளை பூர்த்தி செய்ய குடும்பம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். இதை மறந்துவிட வேண்டாம். திடீரென அன்னை தெரேசா போல மாறி "நான் உங்களுக்காக இவ்வளவு செய்திருக்கிறேனே" என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் குடும்பத்தில், தற்போது ஒரு பலி ஆடு போல உங்களை நீங்கள் உணரலாம். ஆனால் அவர்களை உங்களுடையவர்கள் என்று நீங்கள் நினைப்பதால் மட்டுமே குடும்பத்தில் நீங்கள் செய்யும் எல்லாமே பலன் அளிக்கும் என்று நினைக்காதீர்கள். இது வெறும் எண்ணம்தான். நீங்கள் உங்களை முழுவதுமாக அவர்களுக்கு அளித்து அவர்கள் வாழ்வை அழகாக்கினால் சில விஷயங்களுக்கு அவர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.

இரு பகை நாடுகளுக்கு இடையே இருப்பதை விட, ஒரு கோபத்தால், வெறுப்பினால், போராட்டத்தினால் கொடுமையான விஷயங்கள் குடும்பத்திற்குள் நடக்கின்றன. நான் இதை சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள குடும்பத்தை உருவாக்கினீர்கள். இப்பொழுது குடும்பத்தில் எல்லாம் நீங்கள் நினைத்த வண்ணம் நிகழ வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அனைவரும் நீங்கள் நினைத்தபடி இருக்க வேண்டும் என்றால் அது நடக்காது. ஒரு நன்றி உணர்வுடன் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். "ஆனால் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்களே, அவர்கள் துன்பப்படக் கூடாதே" என்பது உங்கள் எண்ணம். ஆம் அவர்கள் துன்பப்படக் கூடாதுதான். அவர்கள் உங்கள் குடும்பம் என்பதால் துன்பப்படக்கூடாது என்பது அல்ல, நமக்கு யாருமே துன்பப்படக்கூடாது. உங்கள் விருப்பத்தை, "யாருமே துன்பப்படக்கூடாது" என்று நீங்கள் அனைவருக்கும் விரிவு படுத்தும் நேரம் இது.

1920களில், 40களில், ஏன் 60களில் கூட அமெரிக்காவில் குடும்பம் என்றால் ஒரு குற்றம். ஏன் இப்பொழுதும் கூட அப்படிதான். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் தீமை என்று நீங்கள் நினைப்பது எல்லாம் ஏதோ சாத்தானிடம் இருந்து வரவில்லை. மனிதர்கள்தான், "இந்த மூவர் மட்டும் எனக்கு சொந்தம் மற்றவர்கள் எனக்கு சொந்தம் இல்லை" என்று நினைக்கிறார்கள். இந்த மூன்று பேரின் நலன் என்று அவர்கள் நினைப்பது சுற்றி இருக்கும் அனைத்துக்கும் தீங்காக முடிகிறது. இது குடும்பமாக, சமூகமாக, இனமாக, மதமாக, தேசமாக இருக்கலாம். இந்த குறுகிய கண்ணோட்டம்தான் இந்த பூமியில் அனைத்து தீமைகளையும் விளைவிக்கிறது. மேலும் இது குடும்பத்தில் ஆரம்பமாகிறது. குடும்பம் குறித்த உங்கள் கருத்தை தயவு செய்து விரிவுபடுத்துங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களிடம் இருந்து ஒரு அணுவை எடுத்திருக்கலாம். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இருந்து நீங்கள் எவ்வளவு எடுத்து இருக்கிறீர்கள்? எத்தனை, எத்தனை அணுக்கள்? உங்கள் உடலைக் கடந்து இதை யோசிக்க முடியாவிட்டாலும் அனைத்தையும் எடுத்திருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் உங்களிடம் இருந்து ஒரே ஒரு அணுவை கொண்டிருப்பவரை விட உண்மையில் இந்த உலகமும் அதிலிருந்து வருவதும்தானே உங்கள் குடும்பம். குறிப்பாக அன்னையர் தினத்திற்கு பிறகு இப்படி நான் சொல்வது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் தாய்மையின் அழகு இனப் பெருக்கத்தில் இல்லை. தாய்மையின் அழகு இணைத்துக் கொள்வதில்தான் உள்ளது. உங்கள் தாய் உங்களை உருவாக்கியதால், சுமந்ததால், பெற்றதால் அவர் உயர்வானவர் என்பதில்லை. பலவகையில் அவர் உங்களை தன் அங்கமாக பார்ப்பதால்தான் அவரை உயர்வாக மதிக்கிறீர்கள். உயிரியல் செயல்முறை நடந்ததினால் அவர் உயர்வானவர் ஆகவில்லை, இணைத்துக் கொண்டதால் இந்த உயர்வு. உங்கள் அம்மா உங்களை பெற்றதோடு முடித்துவிட்டு அதன்பிறகு உங்களை பற்றி கவலைப்படாவிட்டால் அவர்தான் உங்களின் மிகப் பெரிய எதிரியாக இருப்பார். இன்னொரு உயிரை தன்னில் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ளும் விருப்பம்தான் அழகானதாகிறது. இந்த அழகைதான் அன்னையர் தினமாக கொண்டாட முயற்சி செய்கிறோம்.

Love & Grace