சோம்நாத் - சிவனின் இந்த ரூபத்தின் தனிச்சிறப்பு என்ன? (Somnath in Tamil)
2019-ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தி நன்னாளில் குஜராத் சோம்நாத் கோவில் அறக்கட்டளையில் சத்குரு பேசியதன் தொகுப்பு இது. ஆதியோகி திருமுகத்தின் தோற்றம், அதன் பின்னணியில் உள்ள தத்துவம் மற்றும் 'சோம சூத்திரம்' எனப்படும் உள்நிலை ரசாயன மேலாண்மை குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது. மனிதன் தன் வாழ்வை முழுதிறனுடன் வாழ தேவையான நிச்சலனம், உற்சாகம் மற்றும் போதை ஆகிய மூன்று நிலைகளின் முக்கியத்துவத்தை சத்குருவின் இந்த உரை எடுத்துரைக்கிறது.

அனைவருக்கும் நமஸ்காரம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு மீண்டும் ஒரு வித்தியாசமான விதத்தில் புதுப்பிக்கப்படும். இந்த மகர சங்கராந்தி நன்னாளில், நாம் இங்கே சோம்நாத் கோவிலில் இருப்பது நமது பாக்கியம். இன்று இங்கு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்கு பல அம்சங்கள் உள்ளன, ஆனால் அவர் ஆதியோகியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
ஆதியோகியின் முகம் பிரதிபலிக்கும் மூன்று நிலைகள்
நான் இந்த முகத்தை உருவாக்க நினைத்தபோது.., இன்று இது உலகின் மிகப் பெரிய முகமாக அறியப்படுகிறது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த முகத்தை உருவாக்க விரும்பியபோது, நாங்கள் பல மாதிரிகளை உருவாக்கினோம். இந்த முகத்தை வடிவமைப்பதில் நானே நேரடியாக ஈடுபட்டேன். இந்த முகத்தை வடிவமைக்க இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலானது.
Subscribe
என் மனதில் இருந்த ஒன்றை நிஜத்தில் கொண்டுவர சிறிது காலம் ஆனது. எனக்கு வேண்டியது என்னவென்றால், அசைவில்லாத நிலை, உற்சாகம் மற்றும் போதை நிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு முகம்.

அசைவில்லாத நிலை எதற்காக என்றால், இந்த நிலைதான் படைப்புகளின் மூலத்தினுடைய இயல்பு. சிவா என்பதன் அர்த்தம் அதுதான் - அசைவில்லாத நிலை. உற்சாகம் எதற்காக என்றால் அதுதான் உயிரின் இயல்பு! போதை இல்லையென்றால்... இது வறட்சியான மாநிலம் என்று எனக்குத் தெரியும். நான் மது அருந்துவதைப் பற்றி பேசவில்லை, நான் உணர்வுரீதியான போதையைப் பற்றி பேசுகிறேன். போதை இல்லை என்றால், ஒரு மனிதனால் எதையும் சோர்வின்றி தொடர முடியாது. உங்களுக்குள் கொஞ்சம் போதை இருக்க வேண்டும். 'போதை' என்ற சொல்லை மக்கள் பாட்டிலுடன் சம்பந்தப்படுத்தி புரிந்துகொள்கிறார்கள்.
சோம்நாத் - தனிச்சிறப்பு என்ன?
இந்த பூமியிலேயே மிகச் சிறந்த, மிகவும் அதிநவீன ரசாயன தொழிற்சாலை நமக்குள் இருக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த தொழிற்சாலையை நீங்கள் சரியாக நிர்வகித்தால், உங்களை ஆனந்தத்திலும் பரவசத்திலும் வைத்திருக்கக்கூடிய ரசாயனத்தை உங்களால் உருவாக்க முடியும். நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தால், நீங்கள் பதற்றம், துயரம் மற்றும் பயத்தை உருவாக்குவீர்கள். யோகாவில் 'சோம சூத்திரம்' என்று ஒன்று உண்டு - ரசாயனங்களை உட்கொள்ளாமல், இந்த உடல் அமைப்பை எப்போதும் இனிமையின் உச்சநிலையில் இருக்கும்படி நிர்வகிப்பதன் மூலம் போதையில் இருப்பது போன்ற நிலையில் இருப்பது எப்படி என்பதே அது.
எனவே சோமேஸ்வரர் அல்லது சோம்நாத் என்பது சிவனின் அந்த பரிமாணத்தை குறிக்கிறது, அந்த நிலையில் மக்கள் அவரைப் பார்த்து அவர் மது அருந்துகிறார் என்று நினைத்தார்கள். இல்லை, அவர் இந்த ரசாயன ஆலையை மிக சிறப்பாக நிர்வகித்தார். இது தான் யோகா என்பதன் பொருள். எனவே, ஒரே முகத்தில் இந்த மூன்று பரிமாணங்களும் வெளிப்பட வேண்டும் என்று விரும்பினோம். நீங்கள் அதை உன்னிப்பாக கவனித்து சொல்லுங்கள், அந்த மூன்று பரிமாணங்களையும் அது பிரதிபலிக்கிறதா? அதில் அசைவில்லாத நிலை இருக்கிறது, உற்சாகம் இருக்கிறது, போதை நிலையும் இருக்கிறது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிப்பதே இதன் நோக்கம்... நாம் இங்கே அறநெறிகளைப் பற்றியோ மதிப்பீடுகள் அல்லது ஒழுக்க நெறிகளைப் பற்றியோ பேசவில்லை - இந்த உயிரை அதன் சிறப்பான நிலையில் இயங்க செய்யும் அதன் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பேசுகிறோம்.
உங்கள் முழுத்திறனையும் அடைய...
வாழ்க்கையிலும் கூட, கேள்வி என்னவென்றால் ஒரு தனிமனிதராக, இந்த உலகில் உங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்கிறீர்களா? இந்த உலகில் நீங்கள் உண்மையிலேயே எதை விரும்புகிறீர்களோ, அதை உருவாக்குவதில் இந்த வாழ்வை செலவிடுகிறீர்களா? அல்லது செய்யாமல் விட்டுவிடுவீர்களா? துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் இருந்தால், நீங்கள் அதை செய்யமாட்டீர்கள். "எனக்கு என்ன ஆகும்?" என்ற இந்த ஒரு கேள்வி உங்கள் மனதில் இருந்தால், உங்களால் உண்மையிலேயே செய்ய முடிந்ததை கூட செய்யமாட்டீர்கள். நம் வாழ்க்கையில், நம்மால் செய்ய முடியாததை செய்யவில்லை என்றால் அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால், நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யவில்லை என்றால், நாம் ஒரு பேரழிவு தான்.
இதுதான் துன்பம் பற்றிய பயம் என்பதன் அர்த்தம். "என் வாழ்க்கையில், என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், நான் இப்படித்தான் இருப்பேன்" என்ற உறுதி உங்களுக்குள் வரும் வரை, உங்களால் முழுவீச்சில் நடக்க முடியாது. இதுதான் சோம சூத்திரத்தின் அர்த்தம், உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் நீங்கள் போதையில் இருப்பது போன்ற நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் அதிகமாக செயல் செய்யும்போது பல விஷயங்கள் தவறாகப் போகலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக செயல் செய்கிறீர்களோ, அதற்கு ஏற்றார் போல் விஷயங்கள் தவறாக போகும், தெரியுமா? ஆனால் என்ன நடந்தாலும், நான் இப்படித்தான் இருப்பேன் - என்ற உறுதி இருந்தால், நீங்கள் முழுவீச்சில் நடப்பீர்கள், உங்கள் முழுத்திறனையும் அடைவீர்கள். துன்பம் பற்றிய பயம் இருந்தால், ஒவ்வொரு அடியும் அரைகுறையான அடியாகவே இருக்கும். எனவே சோமேஸ்வரர் அல்லது சோம்நாத் என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உண்மையாகவே அக்கறை கொள்ளும் விஷயங்களை செய்வதிலிருந்து உங்களை எவற்றாலும் தடுக்க முடியாத அளவுக்கு நீங்கள் போதையில் இருப்பது போல் இருப்பீர்கள். இதற்கு உங்களுக்கு அதுபோன்ற ஒரு போதை நிலை தேவை.
கர்மாவும் வாழ்வின் உள்நிலை தீர்மானமும்
ஆனால் நீங்கள் வெளியிலிருந்து ரசாயனங்களை உட்கொண்டால், அவை உங்களை செயலிழக்க செய்யும். அதுவே உங்களுக்குள் சரியான ரசாயனத்தை உருவாக்கினால், அது ஒரு மிகப் பெரிய ஆற்றல் அளிக்கும் செயலாக இருக்கும். இதைத்தான் சிவனின் அம்சம் குறிக்கிறது. இது தான் சோமா என்பதன் அம்சம். இந்த மகர சங்கராந்தியில் நாம் சோமநாத்தில் இருக்கிறோம். இது சூரியனுக்குரிய நாள், ஆனால் சந்திரனைப் பிரதிபலிக்கும் ஒரு பரிமாணத்துடன் இங்கே இருக்கிறோம். இது மிகவும் அற்புதமானது, ஏனென்றால் இந்த இரண்டு பரிமாணங்கள் இல்லாமல் நாம் பிறந்திருக்க மாட்டோம். நம்மால் இங்கு இருந்திருக்க முடியாது. நாம் அனைவரும் சூரிய சக்தியால் இயங்குபவர்கள். அப்படித்தானே?
இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் சூரிய சக்தியால் இயங்குகின்றன, இல்லையா? எனவே இதைப் புரிந்துகொண்டு, நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் நம் வாழ்க்கையில் செய்திட இந்த சுழற்சிகளுடன் நம்மை எப்படி இணக்கமாக வைத்துக்கொள்வது என்பதற்காக பல்வேறு முறைகளை உருவாக்கினோம். நாம் பாதி உயிராக இல்லாமல் ஒரு முழுமையான உயிராக இருப்போம். நீங்கள் ஒரு முழுமையான உயிராக இருப்பதே முக்கியமானது.
இது நீங்கள் சொர்க்கத்துக்கு செல்வீர்கள் என வாக்களிக்கும் தேசமோ, அங்கு சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லும் தேசமோ அல்ல. உங்கள் வாழ்க்கை உங்கள் 'கர்மா' என்று சொல்லும் தேசம் இது - நீங்கள் அதை எப்படி உருவாக்குகிறீர்களோ அப்படி தான் அது அமையும். ஆனால் அதை செய்வதற்கு, உங்களுக்கு சில அடிப்படை அம்சங்கள் தேவை - யாராலும் நிறுத்தி வைக்க முடியாத ஒரு உற்சாகம் உங்களுக்கு தேவை, யாராலும் கலைக்க முடியாத அசைவில்லாத தன்மை உங்களுக்குத் தேவை, எதைப் பற்றியும் கவலைப்படாத போதையில் இருப்பது போன்ற நிலை உங்களுக்குத் தேவை. உங்கள் வாழ்க்கையின் அனுபவம் வெளிசூழ்நிலைகளால் இல்லாமல் உள்ளிருந்து தீர்மானிக்கப்படுவதால், உங்களைச் சுற்றி நடப்பவை உங்களை திசை திருப்பாது, அதனால் உங்கள் இலக்கை விட்டு திசை திரும்ப மாட்டீர்கள். இது தான் சோம்நாத் பிரதிபலிக்கும் அம்சம். இந்த சங்கராந்தி நன்னாளில் நாம் இங்கு இருப்பது நமது பாக்கியம். இங்கு வந்தமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி.


